Sunday, November 27, 2016

மொரிசியசு அரசுடன் தொடர்பு

1973ஆம் ஆண்டு. இலங்கை இந்து இளைஞர் பேரவையின் ஆண்டுப் பொதுக்கூட்டம். தோராயமாக 75 இந்து இளைஞர் அமைப்புகளின் சார்பாளர் வருவர். மட்டக்களப்பு ம. சிவநேசராசா தலைவர். நான் தலைமைச் செயலாளர்.

மொரிசியசுப் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். இந்து இளைஞர் பேரவையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மொரிசியசுப் பேராளரைப் பார்வையாளராக அனுப்புமாறு. பிரதமரின் செயலாளரிடமிருந்து பதில் வந்தது. இருவரை அனுப்புகிறோம் என. செயலாளரின் பெயர் பொன்னுசாமி.

மொரிசியசில் இருந்து பேராளர் இருவர் வந்தனர். இருவரும் இந்தி பேசுபவர்கள். தமிழ் தெரியாதவர்கள். பிசித் தீவு தென் இந்திய சன்மார்க்க சங்கப் பேராளராக என் நண்பர் நாயுடு வந்திருந்தார். மலேசிய இந்து இளைஞர் அமைப்பிலிருந்து இருவர் வந்திருந்தனர். சிங்கப்பூரிலிருந்து ஒருவர் வருவதாக எழுதியிருந்தார், ஆனால் வரவில்லை.

மாநாடு முடிந்ததும் வெளிநாட்டுப் பேராளர்களை இலங்கை முழுவதும் அழைத்துச் சென்றோம். அங்கங்கே இந்து இளைஞர் அமைப்புகள் வரவேற்றன. இந்துக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள்.

அதன் பின்னர் பொன்னுசாமிக்கு நன்றிக் கடிதம் எழுதினேன். அத்தொடர்பு உறைந்திருந்தது.

1977 ஆவணி. கொழும்பில் அகதி முகாமில் நானும் இல்லத்தவரும் தஞ்சமடைந்திருந்தோம். பொன்னுசாமியைத் தொலைப்பேசியில் அழைத்தேன். இந்துக்களின் நிலையை விளக்கினேன்.

சிங்கப்பூர் அமைச்சர் இராசரத்தினத்துடன் பேசினேன். சென்னையில் என் நண்பர் துரைமுருகனுடன் பேசினேன். ஐநாவில் அப்பொழுது துணைத் தலைமைச் செயலாளராக இருந்த நரசிம்மனுடன் பேசினேன். பிசிக்கு அழைத்து நாயுடுவிடம் விவரம் சொன்னேன். மலேசியாவில் இந்து இளைஞர் அமைப்புச் செயலர் இராசரத்தினத்துடன் பேசினேன். இந்துக்களின் அவல நிலையை எடுத்துச் சொன்னேன்.

இப்பொழுதுபோல அப்பொழுது நேரடித் தொலைப்பேசி இல்லை. இரவு நேரம். தொடர் ஊரடங்கு நாள்கள். பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத் தொலைப்பேசியில் இருந்து மாற்றகத்தை அழைத்தேன். மாற்றகத்துள் ஊரடங்கால் சிக்கிக் கொண்ட இந்து இளைஞர் என்னிடம் பேசினார். என்னை நன்கறிந்தவராக இருந்தார். எவருடைய எண்களும் என்னிடம் இல்லை. நாட்டையும் பேரையும் சொன்னேன். கருவியை வையுங்கள் அழைக்கிறேன் என்றார். ஒவ்வொருவராக இணைப்பு எடுத்துத் தந்தார். பேசினேன், விளக்கினேன்.

மறுநாள் தமிழிதழ்களில் தலைப்புச் செய்தி. இலங்கையில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு மொரிசியசுப் பிரதமர் கேட்டிருந்தார்.

No comments: