06.11.2016 ஞாயிறு
சென்னை, இந்து தமிழ் நாளிதழ்.
சென்னை, இந்து தமிழ் நாளிதழ்.
"பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தன்னையும், முரசொலி மாறனையும் கடைசிக் கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, “விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத்தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இந்தியா முழு வாக்குறுதி தருகிறது” என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார்.
"அது உண்மைதான். ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம்.
"முரசொலி மாறன் இப்போது இல்லை. நான் கேட்டவன் மட்டுமே. கலைஞர்தான் கலந்துகொண்டவர்."
பொதுவுடைமைக் கட்சியின் திரு. தா. பாண்டியன் அவர்கள் கூறியதாக 6.11 தி இந்து தமிழ் நாளிதழில் செய்தி. http://m.tamil.thehindu.com/…/%E0%AE%95%…/article9311731.ece
தில்லியில் 05 மார்ச்சு 1991 சந்திப்பில் கவிஞர் காசி ஆனந்தனிடம் இதையே இராஜீவ் காந்தி தெரிவித்தார்.
இராஜீவ் இல்லம் வரை கவிஞருடன் சென்றேன், சந்திப்பின் பின் வந்த கவிஞர் மகிழ்வுடன் இச்செய்தியை என்னிடம் பகிர்ந்தார்.
உடனே இலண்டனுக்குக் கவிஞர் தொலைப்பேசியில் பேசினார் கிட்டுவிடமும் நேரடியாகத் தெரிவித்தார்.
மீண்டும் தன்னைச் சந்திக்க மார்ச்சு 28 அன்று வருமாறு இராஜீவ் கவிஞரிடம் சொல்லியிருந்தார்.
இராஜீவ் கேட்ட வினாக்களுக்கான பதில் பிரபாகரனிடமிருந்து வராததால் மார்ச்சு 28 சந்திப்பு நடைபெறவில்லை.
இராஜீவ் - காசி ஆனந்தன் சந்திப்பை ஏற்பாடு செய்த இந்து நாளிதழ் ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதிக்கும் உடனே கவிஞர் பேச்சின் முழு விவரத்தையும் தெரிவித்தார். 1991 மே 23 அல்லது 24 இந்து இதழில் இச்சந்திப்பில் நிகழ்ந்ததைப் பதிந்துள்ளார். விவரம் அவரே எழுதியுள்ளார்.
அச்சந்திப்பு நிகழேவேயில்லை என அப்பொழுது பிரணாப் முகர்ஜி மறுத்திருந்தார். எனினும் மாலினி விடாது நிகழ்ந்ததை உறுதி செய்தார். 1991 மே 19க்குப் பிந்தைய இந்து இதழ்கள் பார்க்க.
அவர் எழுதும் வரை அச்சந்திப்பு இராஜீவின் வேண்டுகோளுக்கமைய மிகவும் இரகசியமாக இருந்தது,
கவிஞர் காசி ஆனந்தன் இராஜீவுக்கு எழுதிய கடிதத்தைத் தயாரிப்பதில் உதவினேன். தமிழீழமே தீர்வு என அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
என்னையும் சந்திப்புக்கு அழைத்துச் சென்றார் கவிஞர். விடுதலைப்புலிகள் தரப்பில் அவர் சந்திக்கப் போனார். நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லை. எனவே சந்திக்க வரமாட்டேன் என மறுத்துவிட்டேன். இராஜீவ் இல்ல வரவேற்பறையில் காத்து இருந்தேன்.
இராஜீவின் உதவியாளர் ஜோர்ஜ் உடன் நான் தொடர்பில் இருந்தேன். மாலினியுடன் தொடர்பில் இருந்தேன். இணைப்பாளராக இருந்தேனே அன்றிப் பங்காளனாக அல்ல.
இச்சந்திப்புத் தொடர்பாக மல்லிகையில் புலனாய்வுக்குழு பலமுறை என்னைத் துருவித் துருவி விசாரித்தது. காரத்திகேயன் மற்றும் இரகோத்தமனின் நூலில் விவரங்கள் உள.
ஜெயின் ஆணைக்குழு முன் கவிஞர் தில்லியில் 1997 கடைசியில் சாட்சியம் அளித்தார். அப்பொழுதும் அவருடன் நான் தில்லி சென்றிருந்தேன்.
சென்னையில் 2000 ஏப்பிரல் 5இல் என் வீட்டையும் காந்தளகத்தையும் முற்றுகையிட்ட எம்டிஎம்ஏ (Multi-Disciplinary Monitoring Agency) குழு, என்னிடம் ஆவணங்களைக் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைத்தது. என் கடவுச் சீட்டு அந்த ஆவணங்களுள் ஒன்று.
கடந்த 16 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் நீதி மன்றத்தில் கடவுச்சீட்டைக் கேட்பேன்.ஒவ்வொரு முறையும் எம்டிஎம்ஏ (Multi-Disciplinary Monitoring Agency) வழக்குரைஞர் கொடுக்கக் கூடாது எனக் கடுமையாக வாதிடுவார். எனக்காக நானே வாதாடுவேன். நீதிபதி என் வாதங்களை ஏற்பார். கடும் நிபந்தனைகளுடன் கடவுச் சீட்டைத் தருவார். உரிய காலக்கெடுவுக்குள் இந்தியா திரும்பியதும் நீதிமன்றில் கடவுச் சீட்டை ஒப்படைப்பேன்.
கவிஞரோ தன் தாயின் இறப்புக்குக்கூட மட்டக்களப்புக்குப் போகமுடியவில்லை. அவருக்கு அநுமதி வழங்க எம்டிஎம்ஏ மறுத்தது. கவிஞர் நீதிமன்றத்தை நாடவில்லை.
No comments:
Post a Comment