ஐயாத்துரை திருஞானசம்பந்தன் அவர்களை யாராவது அறிவீர்களா? ஐயாத்துரை சோமாக்கந்தமூர்த்தியை அறிவீர்களா? காரைநகரார், சைவத் தமிழ்த் தொண்டர், தொழிற்சங்கத் தலைவர், தமிழ் அகதிகளின் காப்பாளர், சிறை சென்றவர், எண்பதாண்டு அகவையைக் கடந்தவர்.
தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன், உலகறிந்த அவர் பெயர் ஐ. தி. சம்பந்தன். இலங்கை, தமிழகம், அரபு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா, ஆத்திரேலியா எனப் பரந்து வாழும் தமிழரின் நெஞ்சங்களில் அன்பராயும் தொண்டராயும் நிறைந்து நிற்பவர்.
1962இல் சிற்பி சரவணபவன், வித்துவான் ஆறுமுகம், புலவர் சிவபாதசுந்தரம் ஆகியோர் கலைச்செல்வி இதழை வெளியிடத் தொடங்கினர். என் தந்தையாரின் ஸ்ரீ காந்தா அச்சகத்தில் முதல் இதழ் அச்சாயிற்று. தொடர்ந்து பல இதழ்கள் அச்சாகின. வித்துவான் ஆறுமுகமும் நண்பர்களும் ஸ்ரீ காந்தா அச்சகப் பகுதியைச் சில மாதங்கள் பொறுப்பேற்று நடத்தி வந்தனர். அக்காலங்களில் ஐ. தி. சம்பந்தன் ஸ்ரீ காந்தா அச்சகத்துக்கு வருவார். மெய்ப்புப் பார்ப்பார். அச்சகப் பணிகளை முடுக்குவார்.
சென்னையில் படித்துக் கொண்டிருந்தேன். விடுமுறைக்கு யாழ்ப்பாணம் வருவேன். ஐ. தி. சம்பந்தன் உள்ளிட்ட கலைச்செல்விக் குழுவைச் சந்திப்பேன். அக்காலங்களில் ஐ. தி. சம்பந்தனை அறிவேன். கடும் உழைப்பாளியாகக் கண்டேன். தமிழ் மொழியில் ஓரளவு புலமை பெற்றிருந்தார். அச்சக நுணுக்கங்களைக் கற்பதில் ஆர்வம் காட்டிவந்தார்.
1963ஆம் ஆண்டு, கார்த்திகையில் காரைநகரைச் சேர்ந்த திரு. கதிரவேலு, எழுதுமட்டுவாளைச் சேர்ந்த திரு. அ. தில்லைநாதன், ஏழாலையைச் சேர்ந்த திரு. கந்தசாமி, மானிப்பாயைச் சேர்ந்த திரு. சீவரத்தினம் கொழும்புத்துறையைச் சேர்ந்த திரு. மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தன், இலங்கை வானொலியில் பமியாற்றிய மயிலிட்டி அருள் தியாகராசா, புண்ணியமூர்த்தி, ஆகியோருடன் கொழும்பில் அறிமுகமானேன்.
கொழும்பு, பம்பலப்பிட்டி, மெல்போர்ண் அவனியு 29ஆம் எண் இல்லத்தில் முனைவர் ஆ. கந்தையா அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அக்காலத்தில் அங்கு வரும் திரு. கதிரவேலு என்னை அழைத்தார். கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக்கினார். இந்து இளைஞன் இதழில் எழுதச் சொன்னார். தொடர்ந்து எழுதினேன். அதனால் இவர்கள் அறிமுகமாயினர்.
இலங்கை முழுவதும் பரந்த இந்து இளைஞர் அமைப்புகளை ஒரே குடையின் கீழ்க் கொணர்க, பணிகளை ஒருங்கிணைக்க என்ற அழைப்புத் தொனியில், பேராறு பெருங்கழகம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை, மேற்கூறியோரையும் சார்ந்தோரையும் என்பால் ஈர்த்தது.
1966ஆம் ஆண்டு ஐப்பசியில் அமைச்சர் மாண்புமிகு மு. திருச்செல்வம் அவர்களின் தனிச் செயலாளராகக் கொழும்பு வந்தேன். தந்தை செல்வநாயகம், திரு. மு. திருச்செல்வம் இருவரது இல்லங்களுக்கும் வருவோர்களுள் ஒருவராக ஐ. தி. சம்பந்தனை மீண்டும் சந்திக்கத் தொடங்கினேன். 1971இன்பின் திருமணமாகி, வெள்ளவத்தை, 344/1 காலி வீதி, மாடியில் குடியிருந்தார். நான் அங்கு அவரிடம் செல்வேன்.
1967 தை தொடக்கம் கொழும்பு, கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணி. கொழும்பின் வடக்கே கதிர்காமத் தொண்டர் சபை, விவேகானந்த சபை, நடுவே கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச் சங்கம், தெற்கே அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வாலிபர் சங்கம், சைவ மங்கையர் கழகம், கொழும்புத் தமிழச் சங்கம், வெள்ளவத்தை இராமக்கிருட்டிண மிசன் என எங்கும் ஐ. தி. சம்பந்தனின் தொண்டு துலங்கும், பணி பெருகும், குரல் ஒலிக்கும். அந்த அமைப்புகள் வேறு, ஐ. தி. சம்பந்தன் வேறு எனவாகா.
1971இன் பிற்பகுதியில் கொழும்பில் இலங்கை இந்து இளைஞர் பேரவையைத் தொடக்க ஐ. தி. சம்பந்தன் எனக்குப் பெரிதும் உதவினார். இலங்கையில் உள்ள அனைத்து இந்து இளைஞர் அமைப்புகளையும் ஒரே அணியாக இணைத்தேன்.
வெள்ளவத்தை, 41ஆவது ஒழுங்கையில் வழக்குரைஞர் திரு. உருத்திரமூர்த்தி அவர்களின் இல்லத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை கூடும். ஞாயிற்றுக்கிழமைகளில் காலை வேளையில் ஐ. தி. சம்பந்தன் அங்கு தவறாது வருவார். நானும் இருப்பேன்.
இவ்வாறாக அவரும் நானும் இணைந்த பணிகள் பலவாயினும் வரலாற்றுத் திருப்புமுனைப் பணிகளில் நாம் இணைந்துள்ளோம். சிலவற்றைக் குறிப்பிடுவேன்.
1971 தொடக்கம் சிறீமாவோ ஆட்சி. 1972இல் இலங்கை குடியரசாகியது. அக்காலத்தில் திரு. குமாரசூரியர், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர்.
அரச அலுவலகங்கள் தோறும் மக்கள் குழுக்கள் அமைந்தன. அவை சிறீமாவோ அரசின் கண்காணிப்புக் குழுக்களாயின.
இதே பாணியில் இந்துக் கோயில்களில் வழிபாட்டாளர் குழுக்களை அமைக்கத் திரு. குமாரசூரியர் விரும்பினார். புத்த, கிறித்தவ, இசுலாமிய வழிபாட்டிடங்களில் இவ்வாறு அமைக்க யாரும் முயலவில்லை. இந்துக் கோயில்களில் அமையும் வழிபாட்டாளர் குழு, கோயில் நடைமுறைகளை ஆட்சி செய்யும் குழுவாக மாறும் நிலையையும் அத்திட்டம் உள்ளடக்கியது.
1973இல் இத்திட்டத்தை மாதிரிச் சட்ட வரைவாக்கி, அகில இலங்கை இந்து மாமன்றத்துக்கு அனுப்பினர். கருத்துக் கேட்டனர்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தில் நான் உறுப்பினனல்லன். எனினும் மாதிரிச் சட்ட வரைவை இந்து மாமன்ற ஆட்சிக் குழு ஏற்றுக் கொள்ளும் என்ற செய்தி அறிந்தேன். கூட்டம் நடைபெற்ற பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்துக்குச் சென்றேன். என் பின்னால் 20 மாணவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள். வரிகள் எழுதிய அட்டைகள் ஒவ்வொருவர் கையிலும். ஆட்சிக் குழுக் கூட்டத்தினரைச் சுற்றி வலம் வந்தோம்.
ஆட்சிக் குழு உறுப்பினராக ஐ. தி. சம்பந்தன் அங்கிருந்தார். எம்மைக் கண்டார். அவர் முகத்தில் மட்டற்ற மகிழச்சி. ஏழாலை கந்தசாமி, வழக்குரைஞர் நமசிவாயம், சண்முகராசா யாவரது முகங்களிலும் மகிழ்ச்சி. இவர்களும் வேறு சிலருமே மாதிரிச் சட்ட வரைவு இந்துக் கோயில்களுக்குத் தேவையில்லை என்ற கருத்துடையோர். ஆட்சிக் குழுவில் இவர்கள் சொல் ஏறவில்லை.
முழக்க வரி அட்டைகளுடன் வலம் வந்தோம். மாதிரிச் சட்ட வரைவை ஆட்சிக் குழுவின் முன் நான் எரித்தேன். ஆட்சிக் குழு கலைந்தது. மறுநாள் மாமன்றத் தலைவர் பதவி விலகினார். சட்ட வரைவின் ‘கதை’ அத்தோடு முடிந்தது.
1973 நடுப் பகுதியில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையினர் கூடத் தொடங்கினர். பம்பலப்பிட்டி மிலாகிரியா நிழற்சாலையில் கே. சி. தங்கராசா அலுவலகத்தில் கூடினோம். புலமையாளர் உறுப்பினராக இருந்த மன்றம். கே. சி. தங்கராசா, திருமதி புனிதம் திருச்செல்வம், மு. சிவசிதம்பரம் போன்ற ஆர்வலர்களும் உறுப்பினராக இருந்தனர்.
1968 தையில் சென்னையில் நடைபெற்ற இரண்டாவது அனைத்துகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படித்தேன். ஆய்வரங்குகளுக்குத் தலைமை தாங்கினேன். எனவே என்னையும் புலமையாளனாகக் கருதினர். மன்றக் கூட்டங்களில் பங்கேற்றேன்.
1974 தையில் யாழ்ப்பாணத்தில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவது மன்றத்தின் கொள்கை. மாநாட்டு நடைமுறைகளைப் புலமையாளரும் ஆர்வலரும் பேசினோம். வண. தனிநாயக அடிகளாரின் நேரடிப் பங்களிப்பும் வழிகாட்டலும் மன்றத்துக்குக் கிடைத்தது.
யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குப் பதிலாகக் கொழும்பில் நடத்தலாம் என அரசு கருத, அரசு சார் புலமையாளர்கள் கைலாசபதி, சிவத்தம்பி, இந்திரபாலா போன்றோரும், கே. சி. தங்கராசா போன்ற ஆர்வலர்களும் அரசின் கருத்தை ஆதரித்து மன்றத்தில் நிலைகொண்டனர். யாழ்ப்பாணத்தில் நடத்துவதில் வண. தனிநாயகம் அடிகளார் முனைப்பாக இருந்தார். எனக்கும் அதே கருத்து. ஆனாலும் அரசு அல்லவா உந்துகிறது. அதுவும் தமிழரை மதிக்காது துன்புறுத்தும் அரசு.
கருத்து மோதலாக மாற, மன்றத்தின் நோக்கம் திசை திரும்புமோ எனக் கருதிய நான், மா. க. ஈழவேந்தன், ஐ. தி. சம்பந்தன், இ. பேரின்பநாயகம் ஆகியோரை யேம்சு இரத்தினத்தின் ஆதரவுடன் மன்றத்தில் ஆர்வலர் உறுப்பினராக்கினேன். மன்றத்தில் எனக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர் இவர்கள். யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டும் என்ற நிலையை மீட்டெடுக்க உதவினர். ஐ. தி. சம்பந்தன் என்னோடு இருந்தார்.
1974 தையில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டு அச்சாணிக் குழுவில் நான் இருந்தேன். ஐ. தி. சம்பந்தன் குழுவுக்கு வெளியே இருந்து என்னை ஊக்குவித்தார்.
ஐ. தி. சம்பந்தனின் சைவத் தமிழ்க் கொள்கைகளும் அரசியல் கொள்கைகளும் என் கொள்கைகளுடன் எப்பொழுதும் ஒரே கோட்டில் இருந்தன.
ஆவணங்கள் அடுக்கிய கைப்பையைத் தூக்கிக்கொள்வார். வீட்டைவிட்டு இறங்கி வெளியே வருவார். நாள் முழுவதும் அலைவார். சைவத்துக்காக அலைவார், தமிழுக்காக அலைவார், அரசியலுக்காக அலைவார்.
நாளிதழ்களுக்கு எழுதுவார். வானொலியில் பேசுவார். கூட்டங்களில் உரையாற்றுவார். சமூக அமைப்புகளில் பங்கேற்பார். ஒத்த கருத்துடையோரிடையே உரசல்கள், தன்முனைப்பு-முரண்கள் வராது காப்பார். எல்லோரையும் எவற்றையும் சமாளிக்க அறிவுரை வழங்குவார். அக்காலத்தில் தமிழருக்கான இரு பெரும் அரசியல் கட்சிகளிடையே இருந்த முரண் நிலை சமூக அமைப்புகளுள்ளும் பரவியது. இரு சாராரையும் சமாளித்துப் பணிகளை முன்னெடுத்தவர் ஐ. தி. சம்பந்தன்.
1976 மார்கழியில், கவிஞர் காசி ஆனந்தன் உள்ளிட்ட நூற்றிற்கும் கூடுதலானோரைச் சிறைகளில் இருந்து சிறீமாவோ அரசு விடுவித்தது. பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் கவிஞர் காசி ஆனந்தனுக்கும் இளைஞர்களுக்கும் வரவேற்பு அளித்த நிகழ்ச்சியின் தொடக்கப் புள்ளி ஐ. தி. சம்பந்தன். நானும் சார்ந்தவர்களும் அவருக்குத் துணை நின்றோம்.
புது லீலா அச்சகம் சின்னத்துரை பெரிதும் வழிகாட்டினார். அரசியல் உரிமை உள்ள அரசு ஊழியன் ஐ. தி. சம்பந்தன். அரசியல் உரிமை இல்லாத அரசு ஊழியன் நான். கவிஞர் காசி ஆனந்தன் எனக்கு நெடுங்கால நண்பர். எனவே என் நிலை மறந்து சிறை மீண்டோரைப் பொது இடத்தில் வரவேற்றுப் பாராரட்டினோம்.
அங்கே சந்தித்த சிறை மீண்ட இளைஞர் பலர் இலங்கை அரசின் கொடுமையில் இருந்து தப்பி வெளிநாடு செல்ல விழைந்தனர். அக்காலத்தில் ஒருவர் கடவுச் சீட்டுப் பெறுவதற்கு வேறொருவர் பிணை நிற்க வேண்டும். என் பதவி மட்டத்து அரச ஊழியர் சம காலத்தில் இருவருக்குப் பிணை நிற்கும் தகுதி உடையர். என்னிடம் ஒவ்வொருவராக வந்த 14 இளைஞருக்குப் பிணை நின்றேன். விதிகளைத் தளர்த்தி என் பிணையில் 14 கடவுச் சீட்டுகள் வழங்க உதவியவர் குடிவரவு குடியகல்வுத் துறையில் பணிபுரிந்த என் நண்பர்.
1977 இன அழிப்புக் கலவர நாள்கள். பம்பலப்பிட்டியில் ஒரு நண்பர் வீட்டில் ஐ. தி. சம்பந்தன் அழைப்பில் அமைந்த கூட்டத்திலேயே தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தோன்றியது. கே. சி. நித்தியானந்தா, வழக்குரைஞர் மாவிட்டபுரம் கந்தசாமி, ஐ. தி. சம்பந்தன், வடிவேற்கரசன், நான் ஆகிய ஐவருமே தொடக்கப் பணிகளில் ஈடுபட்டோம். பின்னர் பலர் சேர்ந்தனர். வழக்குரைஞர் கந்தசாமியின் முழுநேரச் சமூகப் பணிக்கு வித்திட்ட நிகழ்ச்சி. வாழ்நாள் முழுவதும் அவர் முழுநேரத் தொண்டாற்றிய அமைப்பு.
1977 இன அழிப்புக் கலவரத்தை அடுத்துக் கொழும்பில் என் வேலையை உதறித் தள்ளினேன். குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்தேன். அதே போலக் குடும்பத்துடன் யாழ்ப்பாணம் வந்து ஐ. தி. சம்பந்தன் கந்தர்மடத்தில் குடியேறினார். அக்காலத்தில் திருமதி ஐ. தி. சம்பந்தன் என் தந்தையாருக்கு உதவியாகச் சில காலம் ஸ்ரீ காந்தா அச்சகப் பணிகளில் ஈடுபட்டார்.
1979ஆம் ஆண்டு முற்பகுதியில் இந்தியாவில் வாரணாசி என்கிற காசியில் இந்து மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கான அழைப்பை, மும்பையில் விசுவநாதர் ஆப்தே என்னிடம் நேரில் தந்தார். யாழ்ப்பாணம் வந்ததும் விசுவ இந்து பரிசத்தினர் நடத்திய உலக இந்து மாநாட்டுக்கு ஒரு குழுவை அனுப்பினேன். அக்குழுவில் ஐ. தி. சம்பந்தன் இருந்தார். மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தனும் இருந்தார். வேறு சிலரும் இருந்தனர்.
1979 பிற்பகுதியில் இன அழிப்பின் நீட்டமாக, கருத்தியலாளர் பலரை இலங்கைக் காவல்துறை தடுப்பு முகாமுக்கு அழைத்துச் சென்று, 100 நாள்கள் வரை தடுத்து வைத்து விசாரித்தது. ஐ. தி. சம்பந்தனும் கைதாகி, யாழ்ப்பாணம் கச்சேரித் தடுப்பு முகாமுக்குள் இருந்தார். மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தனும் அங்கு இருந்தார். ஐம்பதுக்கும் கூடுதலானோர் அங்கிருந்தனர்.
1979 ஆனியில் நான் வெளிநாடு சென்றேன். முதலில் தென்மார்க்கில் நடைபெற்ற போர் எதிர்ப்பாளர் மாநாட்டில் பங்கேற்றேன். பின்னர் ஐநா ஊழியராகி, உரோமாபுரி, ஏடன், கெய்ரோ ஆகிய நகரங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
Where is that bugger Sachi? He had signed for 14 Tamil
youth to get passports. They have scooted away to Europe. This bugger, Sachi,
wherever he is, we will bring him to inquire, எனக் காவல்துறை தம்மைத் துன்புறுத்திக் கேட்டதாக, ஐ. தி. சம்பந்தன், மா. க. ஈழவேந்தன் ஆகியோர் பின்னர் என்னிடம் கூறினர். விடுதலையானதும் என் தந்தையாரைச் சந்தித்தனர். சச்சியரை இலங்கைக்கு வரவேண்டாம் எனத் தெரிவியுங்கோ என ஐ. தி. சம்பந்தன், மா. க. ஈழவேந்தன் இருவரும் ஆலோசனை கூறியதாகத் தந்தையார் கடிதம் எழுதியிருந்தார்.
1980கள் முழுவதும் நான் இலங்கையில் இருக்கவில்லை. ஐநா பணியில் பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தேன். பின்னர் 1986 தொடக்கம் சென்னையில் தங்கினேன்.
1985இல் ஐ. தி. சம்பந்தன் உயிர் தப்பிச் சென்னைக்குச் சென்றார். அண்ணா நகரில் வீடு எடுத்துத் தங்கினார். பின்னர் குடும்பத்தாரும் சென்றனர். அக்காலத்தில் அவருக்குக் கடுமையான இருதய நோய் பீடித்தது. வேலூர் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவம் செய்ய விழைந்தார். அவரிடம் செலவுக்குப் பணம் இருக்கவில்லை. சீசெல்சு நாட்டில் பணியிலிருந்த என்னிடம் கேட்டார். அவரின் மருத்துவத்துக்கான முழுச் செலவையும் அனுப்பிவைத்தேன்.
அக்காலத்தில் அவர் மனக்குழப்பத்தில் இருந்தார். தாய் மண் தாகம், குடும்பச் சுமைகள், வருவாய்க் குறைவு, பொதுப் பணிகள் யாவும் அவரின் குழப்பங்களுக்குக் காரணம். தாய் மண்ணில் தொடர்ச்சியாக உடன்பிறப்புகள் ஒருவரை ஒருவர் கொன்று வந்தனர். சென்னையிலும் கொலைகள் தொடர்ந்தன. அவரால் இத்துயரங்களை ஒரே நேரத்தில் தாங்க முடியவில்லை.
1986இல் ஐரோப்பாவில் தென்மார்க்கு நாட்டில் உலக சமாதான மாநாடு நடைபெற்றது. அப்பொழுது சென்னையில் இருந்த ஐ. தி. சம்பந்தன் மாநாட்டுக்குச் செல்வதற்குத் தெரிவானார். நுழைவனுமதி பெற்றபின் சென்னையில் என் வீட்டுக்கு வந்தார். விமானப் பயணப் பணம் இல்லை என முறையிட்டார். விமானப் பயணச் சீட்டை வாங்கிக் கொடுத்து தென்மார்க்கு நாட்டுக்கு அவரை அனுப்பிவைத்தேன்.
1987க்குப் பின் கொழும்பு சென்ற ஐ. தி. சம்பந்தன், யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப் படையின் தேடுதலில் இருந்து தப்பினார். 1990இல் மொறிசியசு வழியாக இலண்டன் பயணமானார்.
1997 பெப்புருவரியில் சென்னையில் கைதாகினேன். விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் அனுப்ப முயற்சித்தேன் எனக் குற்றம் சாட்டினர். யாழ்ப்பாணத்தில் இருந்து வந்திருந்த பாண்டியன், ஆத்திரேலியாவில் இருந்து வந்திருந்த மாலினி இராசநாயகம், இந்தியரான சென்னையைச் சேர்ந்த மருத்துவர் சிறீதரன், என் நண்பர் மா. க. ஈழவேந்தன் ஆகியோரும் என்னுடன் கைதாகினர். சென்னைச் சிறையில் அடைத்து வைத்தனர். ஒரு மாதம் சிறையில் இருந்தேன்.
அதன்பின் நீதிமன்றத்தில் பிணை காட்டி, வீடு திரும்பினேனாயினும் என் மீதான கட்டுப்பாடுகளைக் காவல்துறை தளர்த்தவில்லை. என் வீட்டுக்கு வருவோர் கண்காணிப்புக்குள்ளாயினர். அக்காலத்தில் ஐ. தி. சம்பந்தன் இலண்டனிலிருந்து தன் அலுவலாகச் சென்னைக்கு வந்திருந்தார். கண்காணிப்பாளரையும் கட்டுக்காவல்களையும் மீறி என் இல்லம் வந்தார். நலம் விசாரித்தார், ஆறுதல் கூறினார்.
2000ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலண்டன் சென்றேன். அங்கு ஐ. தி. சம்பந்தனின் இல்லத்திற்குச் சென்றிருந்தேன். திருமதி செல்லம்மாவும் சம்பந்தனும் அன்புடன் வரவேற்றனர்.
2003இல் கொழும்பில் சந்தித்தேன். அமைச்சர் மாண்புமிகு மகேசுவரனுக்குப் பொதுசனத் தொடர்பாளராகப் பணியில் இருந்தார். நெடுங்காலம் தமிழரசுக் கட்சியில் இருந்தவர். ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி இரண்டுமே சிங்கள மேலாதிக்கக் கட்சிகள் என்ற கருத்தை முன்னெடுத்தவர். ஐக்கிய தேசியக் கட்சிச் சார்பில் வெற்றிபெற்று, அமைச்சரான மாண்புமிகு மகேசுவரனின் அமைச்சுப் பணியாளரானாரே என்ற ஆதங்கத்தைச் சொன்னேன். அதற்கான காரணங்களைச் சொன்னார். அவரது உழைப்புக்கும் தொண்டுக்கும் கொள்கைப் பிடிப்புக்கும் தியாகத்துக்கும் உரிய இடம் கிடைக்கவில்லையே என வருந்தினார்.
2005இல் இலண்டனில் இருந்து சென்னைக்கு வந்தார். அறிஞர் க. சி. குலரத்தினத்தின் தமிழ் தந்த தாதாக்கள் நூல் அச்சுப் பணியைச் செய்து தரக் கேட்டார். இரா. மதிவாணன் அக்காலத்தில் காந்தளகத்தில் பணிபுரிந்தார். அப்பணியைச் செய்யும் பொறுப்பை அவரிடம் கொடுத்து, ஐ. தி. சம்பந்தனையும் அவருக்கு அறிமுகம் செய்தபின், ஆவணியில் யாழ்ப்பாணம் சென்றேன். திரும்பி வரும் காலத்தில் என்னிடம் சொல்லாமலே இரா. மதிவாணன் காந்தளகத்தை விட்டு விலகியிருந்தார். காந்தளகத்துக்குப் பதிலாக இரா. மதிவாணன் தொடங்கிய உலகத் தமிழர் பதிப்பகத்தில் தமிழ் தந்த தாதாக்கள் நூல் அச்சாகிப் பதிப்பாகி இருந்தது. ஐ. தி. சம்பந்தனும் அவருடன் இருந்தார். சென்னையில் ஐ. தி. சம்பந்தனின் அச்சுப் பணித் தொடர்பாளராகப் பல ஆண்டுகளுக்கு இரா. மதிவாணன் தொடர்ந்தார். சென்னையில் விழாக்களையும் ஐ. தி. சம்பந்தனுக்கு நடத்திக் கொடுத்தார். ஐ. தி. சம்பந்தனின் உதவியுடன் அழைப்புப் பெற்று ஐரோப்பாவுக்கும் இரா. மதிவாணன் சென்றுவந்தார்.
என் ஆற்றல், என் திறமை, எனக்குள்ள அறிவு தமிழ் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என ஐ. தி. சம்பந்தன் என்னிடம் அடிக்கடி கூறுவார். சட்டியில் இருந்தாலன்றோ அகப்பையில் வரும் எனக் கூறுவேன். என் மீது உள்ள அன்பினால் மிகையாக அவர் கூறுவதை நினைவூட்டுவேன். அவர் நினைக்கிற அளவு அவ்வியல்புகள் என்னிடம் இல்லை என்பேன்.
2014இல் யாழ்ப்பாணம் வந்த ஐ. தி. சம்பந்தன், தமிழரசுக் கட்சி அலுவலக ஆட்சியராகக் கடமையாற்றுமாறு என்னைக் கேட்டார். பார்க்கலாம் எனச் சொன்னேன். ஏனெனில் ஐ. தி. சம்பந்தன் சொன்னால் தமிழரசுக் கட்சியினர் கேட்கார் என உணர்ந்தவன். ஐ. தி. சம்பந்தனின் கொள்கைப் பராம்பரியத்தையோ, தியாகத்தையோ, கட்சி ஈடுபாட்டையோ இக்காலத்தில் கட்சிக்குள் இருப்பவர்கள் பொருளாகக் கொள்வதில்லை எனவும் உணர்ந்தேன். எனினும் விடாக் கண்டரான ஐ. தி. சம்பந்தன், கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா இருவரிடமும் சென்றார். தன் கருத்தை வலியுறுத்தியபின் இலண்டன் சென்றார்.
2015 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வேட்பாளராக வேண்டும் எனத் தலைமைக்கு என்னை விதந்துரைத்தார். ஐ. தி. சம்பந்தனைக் கட்சி பயன்படுத்தும், அவரின் சொல்லுக்கு மதிப்பளிக்காது என்பதை முன்னரும் சொல்லியிருந்தேன்.
2016 ஆவணியில் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் அரங்கில் ஐ. தி. சம்பந்தனின் 80ஆவது பிறந்தநாள் விழா நடைபெறுவதை அறிந்தேன். சென்றேன். பார்வையாளர்களுள் ஒருவனாக இருந்து அவருக்கு என் பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்து மகிழ்ந்தேன்.
யாழ்ப்பாணத்தில் 1962இல் ஐ. தி. சம்பந்தனை இளைஞனாக அறியத் தொடங்கினேன். 54 ஆண்டுகள் இடையீடற்று அன்பு பாராட்டினேன். இணைந்து பணிபுரிந்தேன். தேவைக்கு உதவினேன். அன்னாரது 80ஆவது பிறந்த நாள் விழாவில் அவருடனான நினைவுகளை இங்கு அசை போடுகிறேன்.
No comments:
Post a Comment