Sunday, November 27, 2016

சிங்கப்பூர் அரசின் ஆதரவு

1963 தொடக்கம் இலங்கை இந்து இயக்கங்களில் இருந்து வருகிறேன்.

1963ஆம் ஆண்டு, கார்த்திகையில் காரைநகரைச் சேர்ந்த திரு. கதிரவேலு, எழுதுமட்டுவாளைச் சேர்ந்த திரு. அ. தில்லைநாதன், ஏழாலையைச் சேர்ந்த திரு. கந்தசாமி, மானிப்பாயைச் சேர்ந்த திரு. சீவரத்தினம் கொழும்புத்துறையைச் சேர்ந்த திரு. மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தன், இலங்கை வானொலியில் பமியாற்றிய மயிலிட்டி அருள் தியாகராசா, புண்ணியமூர்த்தி, ஆகியோருடன் கொழும்பில் அறிமுகமானேன்.

கொழும்பு, பம்பலப்பிட்டி, மெல்போர்ண் அவனியு 29ஆம் எண் இல்லத்தில் முனைவர் ஆ. கந்தையா அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அக்காலத்தில் அங்கு வரும் திரு. கதிரவேலு என்னை அழைத்தார். கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக்கினார். இந்து இளைஞன் இதழில் எழுதச் சொன்னார். தொடர்ந்து எழுதினேன். அதனால் இவர்கள் அறிமுகமாயினர்.

இலங்கை முழுவதும் பரந்த இந்து இளைஞர் அமைப்புகளை ஒரே குடையின் கீழ்க் கொணர்க, பணிகளை ஒருங்கிணைக்க என்ற அழைப்புத் தொனியில், பேராறு பெருங்கழகம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை, மேற்கூறியோரையும் சார்ந்தோரையும் என்பால் ஈர்த்தது.

1966ஆம் ஆண்டு ஐப்பசியில் அமைச்சர் மாண்புமிகு மு. திருச்செல்வம் அவர்களின் தனிச் செயலாளராகக் கொழும்பு வந்தேன். தந்தை செல்வநாயகம், திரு. மு. திருச்செல்வம் இருவரது இல்லங்களுக்கும் வருவோர்களுள் ஒருவராக ஐ. தி. சம்பந்தனை மீண்டும் சந்திக்கத் தொடங்கினேன். 1971இன்பின் திருமணமாகி, வெள்ளவத்தை, 344/1 காலி வீதி, மாடியில் குடியிருந்தார். நான் அங்கு அவரிடம் செல்வேன்.

1967 தை தொடக்கம் கொழும்பு, கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணி. கொழும்பின் வடக்கே கதிர்காமத் தொண்டர் சபை, விவேகானந்த சபை, நடுவே கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச் சங்கம், தெற்கே அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வாலிபர் சங்கம், சைவ மங்கையர் கழகம், கொழும்புத் தமிழச் சங்கம், வெள்ளவத்தை இராமக்கிருட்டிண மிசன் என எங்கும் ஐ. தி. சம்பந்தனின் தொண்டு துலங்கும், என்பணி பெருகும், என் குரல் ஒலிக்கும். அந்த அமைப்புகள் வேறு, ஐ. தி. சம்பந்தன் வேறு நான் வேறு எனவாகா.

1971இன் பிற்பகுதியில் கொழும்பில் இலங்கை இந்து இளைஞர் பேரவையைத் தொடக்க கே. சி. நித்தியானந்தா, ஐ. தி. சம்பந்தன் இருவரும் எனக்குப் பெரிதும் உதவினர். இலங்கையில் உள்ள அனைத்து இந்து இளைஞர் அமைப்புகளையும் ஒரே அணியாக இணைத்தேன்.

சிங்கப்பூர் மேனாள் பிரதமர் லீ குவான் யூ பின்வருமாறு 2009இல் சிங்களப் படையின் வெற்றியைக் கூறுகையில், “Sri Lanka is not a happy, united country. Yes, they have beaten the Tamil Tigers this time, but the Sinhalese who are less capable are putting down a minority of Jaffna Tamils who are more capable. They were squeezing them out. That’s why the Tamils rebelled. But I do not see them ethnic cleansing all two million-plus Jaffna Tamils. The Jaffna Tamils have been in Sri Lanka as long as the Sinhalese.”
1970களில் இருந்து தொடர்ச்சியாக லீ குவான் யூ இத்தகைய கருத்துகளைக் கூறி வந்தவர்.

இலங்கைத் தமிழர் தொடர்பான அரசியல் கருத்துருவாக்கத்தை லீ குவான் யூக்குக் கொடுத்தவர் அவரது வெளியுறவு அமைச்சராக இருந்த சின்னத்தம்பி இராசரத்தினம்.

1973 தொடக்க காலத்தில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் சின்னத்தம்பி இராசரத்தினம் கொழும்பு வந்தார். இந்துவான அவர் வரப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவரை இந்துக்கள் வரவேற்க வேண்டும் என்ற கருத்தை நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றச் செயலாளர் இ. பேரின்பநாயகத்திடம் சொன்னேன். அவர் உடன்பட்டார். 

விமான நிலையத்தில் வரவேற்றோம். விமானத்தில் இருந்து இறங்கியதும், நிறைகுடம், குத்துவிளக்கு, தவில், நாகசுரம், பூமாலைகள் என இந்து முறைப்படி வரவேற்றோம். 20க்கும் கூடுதலானோர் வேட்டி, சட்டை, சால்வையுடன் வரவேற்றோம். அக்கால வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் இலட்சுமன் செயக்கொடி அரசு சார்பில் வரவேற்க வந்திருந்தார். அவருக்கு வியப்பு. வரவேற்புக்குப் பின் இராசரத்தினத்துடன் இலங்கை இந்துக்கள் தொடர்பான நிலையை விளக்கினோம். 

1973 ஆவணியில் சிங்கப்பூரில் அவரை மீண்டும் சந்தித்தேன். அவரது அறையில் என்னோடு மிக விவரமாகப் பேசினார். பிரதமரிடம் எடுத்துச் சொல்வதாகச் சொன்னார்.

சிங்கப்பூரில் நிகழ்ந்ததைப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கதிரவேற்பிள்ளைக்குக் கூறினேன். திரு. கதிரைவேற்பிள்ளை தொலைப்பேசியில் இராசரத்தினத்துடன் பேசுவார். நெடுங்காலம் இருவரும் தொடர்பாக இருந்தனர். 

நானும் இராசரத்தினத்துடன் பேசிக்கொண்டு இருந்தேன். 

லீ குவான் யூ இலங்கைத் தமிழருக்கு ஆதரவான நிலையை எடுத்தமைக்கு 1973இல் என் வேண்டுகோளை ஏற்ற நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் கட்டுநாயக்கா விமான நிலைத்தில் இந்து முறையாக இராசரத்தினத்தை வரவேற்றுத் தொடங்கிய உறவே தலையாய காரணம்.

No comments: