Monday, December 05, 2016

சிங்களப் படையை வெளியேற்றுக, 1998இல் கோரிய செயலலிதா

மறவன்புலவு. . சச்சிதானந்தன்
1.   சிங்களக் கொடுங்கோன்மை அரசின் ஈழத்தமிழின அழிப்புக் கொள்கையை இந்திய அரசு கவனத்தில் எடுக்குமாயின்;
2.   சிங்களக் கொடுங்கோன்மை அரசின் படை வலிமையைக் கட்டுக்குள் வைக்க இந்திய அரசு முயலுமாயின்;
3.   சிங்களப் புத்தப் பேரினவாதப் படைகளை ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து வெளியேற்ற முயலுமாயின்
அதுவே பிரதமர் வாச்பாய் ஈழத்தமிழர்களுக்குச் செய்யக் கூடிய பேருதவியாக இருக்கும். இவ்வாறு நான் எண்ணிக் கொண்டிருந்த காலங்கள்.
தமிழகத்தில் உள்ள உள்ளார்ந்த உணர்வு உள்ளவர்கள் அனைவரும் ஈழத்தமிழருக்காகக் குரல்கொடுக்க எப்பொழுதும் தயங்கியதே இல்லை. இந்திய அரசு இவர்களின் கோரிக்கையை உள்வாங்கும். தனது கருத்துக்கேற்பவும் உலக நடைமுறைகளை எடுத்துநோக்கியும் மாற்றும். ஆறுதலாக அமைதியாக நடவடிக்கை எடுக்கும்.
தமிழகத்தின் உரத்த ஆதரவுக் குரலும், அதைத் தொடர்ந்து இந்தியா நடவடிக்கை எடுக்குமோ என்ற அச்சமும் இலங்கை அரசுக்குச் சிம்ம சொப்பனமாகவே என்றும் இருக்கும். அதே சமயம் தமிழகத்தில் எழுகின்ற ஆதரவுக் குரல், உயிரச்சம் நிறைந்து, பாதுகாப்பற்ற சூழலில், தமிழ் ஈழத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்தையும் குளிர்விக்கும். அங்கு உற்சாகத்தைப் பெருக்கும். எதிர்பார்ப்பை அதிகரிக்கும். நம்பிக்கை ஒளியை ஊட்டும்.
அதுமட்டுமல்ல இனவெறிக் கொடுமைக்கும் இன ஒழிப்புக்கும் எதிராகப் போராடுகின்ற விடுதலைப் போராளிகளுக்குத் தமிழகக் குரல் ஆதரவுக் குரலாகத் தெரியும். நம்பிக்கைக் குரலாகத் தெரியும். தட்டிக் கொடுக்கிற ஊக்கச் செயலாக அமையும். அவர்களாகவே வெற்றியை ஈட்ட உதவும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மருந்து கடத்த முயற்சித்தேன், சதிசெய்தேன், இந்தியச் சட்டங்களை மீறினேன், என்ற குற்றச்சாட்டுகளும், வழக்கும் சென்னை, சைதாப்பேட்டை, பதினோராவது நீதிமன்றத்தில் 1997 மாசி தொடக்கம் எனக்கெதிராக நடைபெற்று வருகின்றது. ஏறத்தாழ இருவாரங்களுக்கு ஒருமுறை வழக்குத் தவணை வருவதுண்டு.
இத்தகைய குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரைச் சந்திப்பவர்களுக்குத் துன்பம் வருமோ எனக் கருதித் தமிழக அரசியல்வாதிகளைச் சந்திப்பதைத் தவிர்த்து வருபவன். எனது கவனக் குறைவால் தமிழக அரசியல்வாதிகள் துன்புறக்கூடாது என்ற எண்ணம் எப்போதும் என் உள்ளத்தில் மேலோங்கி நிற்கும்.
இந்தச் சூழ்நிலையிலும், பின்னணியிலும், 1998ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் நாள் தொடக்கம், தமிழகத்தின் குரலை எமக்காக்கும் முயற்சியை முன்னெடுப்பதற்காகத் தமிழகத்தில் இருந்து தில்லி அரசில் பங்குபெறும் கட்சி சார்ந்தவர்களைச் சந்தித்துக் கொண்டிருந்தேன்.
தமிழீழ ஆதரவுக் குரல் தமிழகத்தில் இருந்து மீண்டும் எழ வேண்டுமென்ற முயற்சிக்கு வடிவம் கொடுக்க எனக்குத் திருவருள் துணை நின்றது.
மாற்று யோசனைகளை அவர்கள் கேட்டனர். எனக்குப் பின்வரும் நிலைகள் மனத்தில் வந்தன.
1.   சிங்களப் படைகள் தரைவழியும், கடல்வழியும், வான்வழியும் உயிரச்சம் தரும் கொடுமைகளை தமிழர் மீது நிகழ்த்தி வருவதை எடுத்துக்கூறி, ஈழத் தமிழரின் மரபுவழி நிலப்பகுதிகளில் இருந்து அச்சிங்களப் படைகளை முற்று முழுதாக வெளியேற்ற வேண்டுமென்று கொழும்பு அரசை இந்திய அரசு வலியுறுத்தி, அதற்காக இந்திய அரசு உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பெற்ற பொருளாதாரத் தடை, கடல் முற்றுகை, வான் வழி விமானத்தடை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் என்ற அச்சுறுத்தலைக் கொழும்புக்குக் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தேன். இந்தக் கருத்திலுள்ள வீக்க தூக்கங்களை எடுத்து நோக்க இசைந்தார்கள்.
2.   சிங்களப் படைத் தாக்குதல்களுக்கு அஞ்சி, ஒழிந்து, அலைந்து, மரங்களின் கீழ் கூரையின்றியும், உணவின்றியும், மருந்தின்றியும், பாலியல் வன்முறைகளுக்கு நடுவிலும், திடீர் எனக் காணாமல் போகின்ற சூழ்நிலையிலும், நான்கு தமிழருக்கு ஒரு சிங்களப் படைவீரர் என்ற அடக்குமுறைச் சூழ்நிலையிலும் வாழ்கின்ற அல்லது வாழமுயல்கின்ற அல்லது வாழ்ந்து களைத்துப் போய் இருக்கின்ற ஈழத் தமிழ் குடிமக்களின் நிலையை அறிந்து ஆறுதல் கூறி உற்சாகமூட்டத் தமிழகத்திலிருந்து ஒரு குழுவை இந்திய அரசு அனுப்பலாமா எனக் கேட்டேன். அந்தக் கருத்தும் அவர்களின் கவனத்தை ஈர்த்தது.
3.   வரலாற்றுக்கு முற்பட்ட காலம்தொட்டே தெற்கே கொம்புக்கல் (கும்புக்கன்) ஆற்றை எல்லையாகவும், மாவலி கங்கையை மேற்கு எல்லையாகவும் வில்லுப்பற்று வழி வாய்க்கால் ஆறு வரை நீண்டு அகன்ற தமிழரின் மரபு வழி தாயகம் தமிழருக்கே உரியதாக வேண்டும் என்ற கொள்கையில் ஈழத்திலுள்ள ஒவ்வொரு தமிழரும் கருத்து வேறுபாடின்றி இருக்கிறார்கள். இதையும் இந்தியா ராசீவ் - செயவர்த்தனா ஒப்பந்தத்தில் ஒரளவு ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த மூன்று அடிப்படைகளையும் உள்ளடக்குவதுடன், தமிழகத்தின் மீனவர்களைச் சிங்களக் கடற்படை கொன்று அழித்துவரக் காரணமான கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீள ஆய்வு செய்யக் கோரும் நிலையையும் உள்ளடக்கிய கடிதம் ஒன்றைத் தயாரிக்க வேண்டியிருந்தது. என்னிடம் மாதிரிக் கடிதம் ஒன்றைக் கேட்டனர்.
மருத்துவர் இராமதாசர் இந்தக் கடிதத்தை தயாரிக்குமாறு என்னிடம் கேட்டார். தமிழகத்தின் ஏனைய கட்சித் தலைவர்களுடனும் கலந்து ஆலோசித்தேன். பல கட்சிகளின் தலைமை அலுவலகங்கள் சென்று ஆவணங்களைச் சேகரித்தேன்.
இவற்றைத் தொகுத்து ஆத்திரேலியாவிலுள்ள எனது நண்பர், இளைஞர் திரு. அனா பரராசசிங்கம் அவர்களுக்கு மின்னஞ்சலாக அனுப்பினேன். அவர் அதேநாளில் பதிலை அனுப்பினார். அருமையான ஆங்கிலத்தில், தெளிவான, கட்டுக்குலையாச் சொல்லாட்சியுள்ள கடித வரைவு ஒன்றை அனுப்பினார்கள்.
நான்கு குறிப்புக்கள், அதைத் தாங்கிய கடித வரைவைத் திரு. அனா பரராசசிங்கம் தயாரித்திருந்தார். அந்தக் கடித வரவைப் பார்த்த மருத்துவர் இராமதாசர் அவர்கள் அதில் மேலும் சில திருத்தங்களைச் செய்தார்.
சிங்கள புத்த இனவெறிக் கொடுமை என்ற சொல்லாட்சியைப் புகுத்தினார்.
ஈழத்தமிழருக்கும் தமிழகத் தமிழருக்கும் இடையே 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தொடர்புகளை வலியுறுத்த வேண்டுமென்றார். அதற்கான மேற்கோள்களையும் வரிகளையும் அவரே எழுதினார்.
கடிதத்தை முழுதாகத் திருத்தி அமைத்தார்.
திருத்தி அமைத்த கடித வடிவத்தைச் செல்வி செயலலிதாவிற்கு அனுப்பினார். தமிழகத்திலிருந்து தெரிவான தில்லியில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த முப்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்கள் அவைவில் இக்கூட்டணியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் ஆக 37 பேர் கையொப்பமிட்டுப் பிரதமரிடம் கடிதத்தைக் கொடுப்பதாகத்தான் செயலலிதாவுக்கு மருத்துவர் இராமதாசர் அனுப்பிய வரைவு அமைந்திருந்தது.
கடித வரவைப் பார்த்த செல்வி செயலலிதா அதன் அமைப்பையும் கருத்துக்கோவையையும் கொள்கை நிலையையும் பாராட்டினார். அதில் தானே கையொப்பமிட வேண்டும் என்றும், தில்லியில் ஆளும் கூட்டணியிலுள்ள தமிழகக் கட்சித் தலைவர்களும் கையொப்பமிட வேண்டும் என்றும் சார்ந்த சிறு சிறு கட்சிகளும் கையொப்பமிடவேண்டும் என்றும் தீர்மானித்தார். அதற்கு ஏற்ப மீண்டும் மீண்டும் கடித வரைவில் சில மாற்றங்களைச் செய்தார். தனது மூத்த தலைவர்களைக் கலந்து ஆலோசித்த பின் கடித வரைவில் செல்வி செயலலிதா முதல் கையொப்பமிட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக, சனதாக் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக விவசாயிகள் தொழிலாளர் கட்சி, வன்னியர் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி, இந்தியத் தொழிலாளர் கட்சி, பாரதியக் குடியரசுக் கட்சி, தமிழக மீனவர் பேரவை உள்ளிட்ட 14 கட்சித் தலைவர்கள் அக்கோரிக்கை மனுவில் கையொப்பமிட ஏற்பாடு செய்தார்.
1.   செ. செயலலிதா (அஇஅதிமுக),
2.   மருத்துவர் ச. இராமதாசர் (பாமக),
3.   வைகோ (மதிமுக),
4.   முனைவர் சுப்பிரமணியன் சுவாமி (சனதாக் கட்சி),
5.   எசு. ஆண்டித் தேவர் (அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கு),
6.   பொன். குமார் (தமிழ்நாடு பாமரர் உழைப்பாளர் கட்சி),
7.   வன்னிய அடிகளார் (உழைப்போர் காமன் வீல் கட்சி),
8.   எம். தாமோதரம் (இந்திய குடியரசுக் கட்சி),
9.   கு. செல்லமுத்து (இந்திய விவசாயிகள் தொழிலாளர் கட்சி),
10.        வேட்டவளம் க. மணிகண்டன் (இந்திய விவசாயிகள் உழைப்போர் கட்சி),
11.        ஏ. சக்திதாசன் (குடியரசுக் கட்சி கோவை பிரிவு),
12.        பி. வி. கரியமால் (பாரதிய குடியரசுக் கட்சி),
13.        க. கந்தசாமி (சுபாசின் அனைத்திந்திய பார்வர்டு பிளாக்),
14.        இரா. அன்பழகன் (தமிழ்நாடு மீனவர் பேரவை) ஆகிய 14 கட்சித் தலைவர்கள் கையொப்பட்டனர்.
அதுமட்டுமல்ல தமிழகத்தின் 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - தன்னைச் சார்ந்தவர்கள் அதில் கையொப்பமிட செயலலிதா ஏற்பாடு செய்தார்.
1996இல் ஈழத் தமிழர் பிரச்னைக்காக தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துமாறு திராவிட கழகம் அதன் தோழமை அமைப்புகளுடன் சேர்ந்து கோரிய பொழுது, தமிழக பாரதிய சனதா கட்சித் தமிழகப் பொதுச்செயலாளர் திரு. இல. கணேசன் மாற்றுக் கருத்தாக, கடையடைப்பு வேண்டாம், தமிழகத்தின் அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமுகமாகப் பிரதமரைச் சந்தியுங்கள் என்று அப்பொழுதே கேட்டு இருந்தார். அந்தக் கருத்தை இப்பொழுது நிறைவேற்ற அவரும் பெரிதும் ஒத்துழைத்திருக்க வேண்டும்.
மருத்துவர் இராமதாசர் தில்லியில் இக்கடிதத்துடன் தங்கி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தைப் பெற்று வருகின்ற காலத்தில் அவருக்கு முழுமூச்சாகத் துணைநின்று பணிபுரிந்தவர் முனைவர் சுப்பிரமணிய சுவாமி. தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த மருத்துவர் இராமதாசை ஒன்றுக்கு மேற்பட்ட முறை சுவாமி தானாக வந்து பார்த்துப் பேசி உற்சாகித்தார்.
ஏறத்தாழத் தமிழகத்தின் ஒரே குரலாக இந்தக் கடிதம் பிரதமரைச் சென்று அடையவேண்டுமெனக் கூட்டணி தலைவர்கள் விரும்பினர்.
ஏற்கனவே கட்சித் தவைராகக் கையொப்பமிட்ட வைகோ, சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டனர். இதில் பாரதிய சனதாகட்சியை சேர்ந்த அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம் உள்ளிட்ட மூவரில் நாடாளுமன்ற உறுப்பினர் இருவர் கையொப்பமிட்டனர்.
1.   சி. சுவாமிநாதன் (அதிமுக தலைவர் – மாநிலங்கள் அவை),
2.   சேடப்பட்டி ஆர். முத்தையா (அதிமுக தலைவர் மக்களவை, பெரியகுளம்),
3.   எம். தம்பித்துரை (அமைச்சர், அதிமுக, கரூர்),
4.   கடம்பூர் எம். ஆர். சனார்த்தனம் (அமைச்சர், அதிமுக, திருநெல்வேலி),
5.   தலித்து எழில்மலை (அமைச்சர், பாமக, சிதம்பரம்),
6.   தளவாய் சுந்தரம் (அதிமுக, மாநிலங்கள் அவை),
7.   ஓ. எசு. மணியன் (அதிமுக, மாநிலங்கள் அவை),
8.   அரங்கராசன் குமாரமங்கலம் (அமைச்சர், பாசக, திருச்சி),
9.   ஆர். மார்க்கபந்து (அதிமுக, மாநிலங்கள் அவை),
10.        எசு. நிறைகுளத்தான் (அதிமுக, மாநிலங்கள் அவை),
11.        பி. இராசரத்தினம் (அதிமுக, பெரம்பலூர்),
12.        ராசா பரமசிவம் (அதிமுக, புதுக்கோட்டை),
13.        வி. கே. சின்னசாமி (அதிமுக, கோபிச்செட்டிப்பாளையம்),
14.        வி. சத்தியமூர்த்தி (அதிமுக, இராமநாதபுரம்),
15.        கே. வேணுகோபால் (அதிமுக, சிறீபெரும்புதூர்),
16.        காஞ்சி பன்னீர்செல்வம் (அதிமுக, காஞ்சிபுரம்),
17.        கே. பழனிசாமி (அதிமுக, திருச்செங்கோடு),
18.        முனைவர் வி. சரோசா (அதிமுக, இராசிபுரம்),
19.        ஜி. எசு. முருகேசன் (அதிமுக, தென்காசி),
20.        எம். சி. தாமோதரன் (அதிமுக, கடலூர்),
21.        ஆர். ராமராசன் (அதிமுக, திருச்செந்தூர்),
22.        மா. தியாகராசன் (அதிமுக, பொள்ளாச்சி),
23.        பாரி. மோகன் (பாமக, தர்மபுரி),
24.        என். தி. சண்முகம் (பாமக, வேலூர்),
25.        சி. கோபால் (அதிமுக, அரக்கோணம்),
26.        செஞ்சி இராமச்சந்திரன் மதிமுக, திண்டிவனம்),
27.        ஏ. கணேசமூர்த்தி (மதிமுக, பழனி),
28.        சி. சிறீனிவாசன் (அதிமுக, திண்டுக்கல்),
29.        கே. பி. முனுசாமி (அதிமுக, கிருட்டிணகிரி),
30.        சி. பி. இராதாகிருட்டிணன் (பாசக, கோவை)
கடிதத்தில் கையொப்பமிட்டதும் இவர்களுள் பலர் இந்தியப் பிரதமரிடம் நேரில் சென்றனர்.
1998 ஜுன் 8ஆம் நாள் காலை எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. பிரதமருக்கான கடிதத்துடன் மருத்துவர் இராமதாசர் இன்று திங்கள் மாலை புதுதில்லி போகிறார். அங்கு செய்தியாளரையும் சந்திக்கிறார். செய்தியாளர் சந்திப்பில் ஈழத் தமிழர் தொடர்பாக வெளியிட வேண்டிய செய்தி அறிக்கையைத் தயார் செய்து தரமுடியுமா? கேட்கப்படக் கூடிய வினாக்கள், அதற்கான விடைகள் என்பனவற்றைத் தனியாகத் தயாரிக்க முடியுமா? மதியம் ஒரு மணிக்கு முன் தந்துதவ முடியுமா?
காலை 10 மணியிலிருந்து 12 மணிவரை கணிப்பொறி முன் அமர்ந்து தயாரித்து, பிழை சரிபார்த்து, 4 பக்கங்களைத் தயார் செய்தேன். சரியாக ஒரு மணிக்கு அந்த 4 பக்கங்களையும் சேர்ப்பித்தேன். மாலை அவர் விமானத்தில் புறப்பட்டார், கடிதம் மற்றும் செய்தி அறிக்கையுடன் புதுதில்லி போகிறார் எனத் தெரிந்து கொண்டேன்.
செவ்வாய் மாலை 3 மணிக்கு சென்னையிலுள்ள ஆங்கில நாளிதழ் அலுவலகத்திலுள்ள செய்தியாளர் நண்பருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். புதுதில்லியிலிருந்து செய்தி ஏதும் உண்டா எனக் கேட்டேன். அவர் அங்கிருந்து வந்த செய்தித் தலைப்புகளைப் படித்துக் காட்டினார். நான் எதிர்பார்த்த செய்தி இல்லை.
புதன் மாலை மீண்டும் கேட்டேன். பல செய்திகளைப் படித்தார். படித்துக் கொண்டே வந்தவர், என்ன மருத்துவர் இராமதாசர் இப்படிக் கேட்டிருக்கிறாரே? என்றார். என்ன கேட்கிறார்? என்றேன். இலங்கை தொடர்பான இந்தியாவின் கொள்கையில் முழு மாற்றம் தேவை எனப் பிரதமரிடம் பேசியிருக்கிறாரே என்றார். அப்படியா? என்றேன். நண்பர் விரிவாகச் சொல்ல முயன்றார். இடை மறித்தேன். பிற செய்திகள் உண்டா எனக் கேட்டு அவற்றைத் தெரிந்து கொண்டேன். அவரிடமிருந்து விடை பெற்றேன். வேறு நாளிதழ் அலுவலகத்துக்கும் பேசிச் செய்தியை உறுதி செய்தேன்.
நடந்த நிகழ்வுகளைக் கூற வேண்டும் அல்லவா?
1998 சூன் 8ஆம் நாள் திங்கள் மாலை மருத்துவர் இராமதாசர் புதுதில்லி போனார். தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். செவ்வாய்க்கிழமை பகல் முழுவதும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார். ஒவ்வொருவரிடமும் கையொப்பம் வாங்கினார். பலர் அவரை உற்சாகித்தனர். முனைவர் சுப்பிரமணிய சுவாமி மருத்துவர் இராமதாசிடம் தமிழ்நாடு இல்லத்திற்கு மூன்று நான்கு முறை தானாகவே வந்து பேசி உற்சாகித்தார்.
10. 6. 98 புதன்கிழமை காலையில் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாயைத் தமிழகத்தைச் சேர்ந்த 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் இராமதாசர் தலைமையில் சென்று சந்தித்தனர். 45 நிமிடங்களுக்கு ஈழத் தமிழர் சிக்கலைப்பற்றி மட்டும் பிரதமரிடம் பேசினர்.
கடிதத்தின் குறிப்பிட்ட 4 கோரிக்கைகளாவன:
1.   தமிழக நாடாளுமன்ற உறுப்பினர் குழு, இலங்கையின் தமிழர் தாயகம் சென்று அங்கு நடக்கும் உண்மை நிலையைக் கண்டறிந்து வரவேண்டும். அதற்கு இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.
2.   தமிழர் தாயகத்தில் இருந்து உடனடியாக இலங்கை அரசின் படைகள் அனைத்தையும் முழுமையாக விலக்கிக் கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா வற்புறுத்த வேண்டும். படை வெளியேற்றத்தின் முதல் நடவடிக்கையாக இலங்கை அரசின் ஆக்கிரமிப்புப் போரை நிறுத்துமாறு இந்தியா கூற வேண்டும்.
3.   வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்த தொடர்ச்சியான புவிசார் அரசியல் அமைப்பாக தமிழர் தாயகத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
4.   கச்சத் தீவு தொடர்பான இரு ஒப்பந்தங்களையும் மீளாய்வு செய்து கச்சத்தீவின் இறைமையை இந்தியா மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த நான்கு கோரிக்கைகளையும் மருத்துவர் இராமதாசர் தலைமையில் சென்ற 32 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமுகமாக வலியுறுத்தினார்கள். ஆங்கிலமும், இந்தியும் சரளமாகப் பேசத் தெரிந்த முனைவர் சுப்பிரமணியம் சுவாமி மற்றும் அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம் இருவரும் மிகத் தெளிவாகவும் நாவன்மையுடனும் கருத்துக் கோவையாகவும் இந்த நான்கு கோரிக்கைகளையும் அழுத்தம் திருத்தமாகப் பிரதமரிடம் எடுத்துக் கூறினார்கள். திரு. வைகோ மற்றும் தலைவர்களும் பிரதமரிடம் பேசினார்கள். மருத்துவர் இராமதாசர் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று பிரதமரிடம் கேட்டுள்ளார்.
அன்று மத்தியானம் மருத்துவர் இராமதாசர் தில்லியில் 50க்கும் மேற்பட்ட செய்தியாளர், தொலைக்காட்சி மற்றும் வானொலி ஊடகங்களின் நிருபர்கள் யாவருக்கும் மதிய உணவு கொடுத்து வரவேற்றுப் பேசினார். பிரதமரிடம் கொடுத்த கடிதத்தின் நகல்களைச் செய்தியாளரிடம் கொடுத்தார். அது தவிர, செய்தியாளர்களுக்காகத் தனியாகத் தயாரித்த அறிக்கையையும் (என் தயாரிப்பிலான வரைவு) அவர் செய்தியாளரிடம் கொடுத்தார். செய்தியாளர் கூட்டம் மிகச் சிறப்பாக அமைந்தது.
அன்று மாலையே மருத்துவர் இராமதாசர் சென்னை திரும்பினார்.
சென்னைத் தொலைக்காட்சி, சென்னை அகில இந்திய வானொலி மாநிலப் பிரிவு என்பன அன்று மாலையே தமது தமிழ்ச் செய்தியில் மருத்துவர் இராமதாசரின் செவ்வியும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பிரதமர் முன் வைத்த நான்கு கோரிக்கைகளையும் மிக விளக்கமாக எடுத்துக் கூறினர். மாநிலச் செய்தி ஈழத்தில் உள்ளவர்களால் தவறாமல் கேட்கப் பெறுவதாகும். அகில இந்தியத் தொலைக்காட்சியில் ஆங்கிலச் செய்தியில் பிரதமருக்கான கடிதம் பற்றி மிக விரிவாகக் கூறினர்.
மறுநாள் காலை, தில்லி, மும்பாய், கல்கத்தா, ஆகிய நகரங்களில் இருந்து வெளிவரும் இடைம்சு ஆஃப் இந்தியா, இந்துத்தான் இடைம்சு, இசுட்டேட்மன், பயனீர், ஆகிய நாளிதழ்களும், இந்தி இதழ்களும் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக இக்கோரிக்கைகள் பற்றியும் மருத்துவர் இராமதாசரின் செவ்வி பற்றியும் பெரிய அளவில் செய்திகள் வெளியிட்டன. சென்னையில் இந்து நாளிதழ் முதல் பக்க மூலையில் செய்தி வெளியிட்டது.
இந்தியன் எக்சுபிரசோ செயலலிதா மீண்டும் விடுதலைப் புலிகளை நாடுகிறார் என்று அபத்தமாகச் செய்தி வெளியிட்டது. தினமணி, கதிரவன், தினகரன் மற்றும் அனைத்து நாளிதழ்களும் முதல் பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.
மறுநாள் 12. 06. 98 அன்று இந்து நாளிதழில் விடமத்தனமான கட்டுரை ஒன்றைச் செல்வி மாலினி பார்த்தசாரதி எழுதினார். பொருத்தமற்ற நேரத்தில் காலம் கடந்த கோரிக்கைகளையும் பாசகவுக்குத் தூண்டுதல் அளிக்கக்கூடிய இந்துத்துவ சார்பான கோரிக்கைகளையும் செயலலிதா வைத்துள்ளதாகக் கடுமையாகச் சாடி எழுதினார்.
மூப்பனார், சிதம்பரம் ஆகியோர் செயலலிதாவைக் குறை கூறி அறிக்கை வெளியிட்டனர். செயலலிதா இந்தியாவின் இலங்கைக் கொள்கையைத் திசை திருப்ப முயல்வதாகவும், தன்னுடைய அரசியல் சகாக்களைத் திருப்திப்படுத்தப் பிரதமரை நாடுவதாகவும் குறை கூறினர்.
முதலமைச்சர் கலைஞரோ, தி. மு. . தலைவர் எவருமோ பிரதமருக்கு அளித்த கடிதம் பற்றி ஒரு சொல் கூட எதுவும் கூறவில்லை. மூப்பனார் போல் சொல்ல எத்தனை நேரமாகும்? ஈழத் தமிழருக்கு இதனால் நன்மை கிடைக்க வேண்டும் எனக் கலைஞரும் திமுகவினரும் உளமார வாழ்த்திக் கொண்டிருப்பார் என்பதை அறிவேன். அரசியலாக்க அவர்கள் விரும்பவே மாட்டார்கள்.
15. 6. 98 காலை செய்தியாளர்களை அழைத்து பேசிய இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சரும் பா. . . செயலாளருமான தலித்து எழில்மலை, இக்கோரிக்கைகள் தொடர்பாக நாளிதழ்கள் சிலவும் தமிழ் மாநில காங்கிரசின் சிதம்பரமும் தெரிவித்த கருத்துக்களை மறுதலித்தார். விடுதலைப் புலிகள் மீது தடைகள் மட்டுமல்ல எந்த அமைப்பின் மீதும் தடைகள் தேவையற்றது என்றார். இப்பொழுது வைத்துள்ள கோரிக்கைகள் இதற்கு முந்திய இந்திய அரசின் கொள்கைகளுக்கு முரண்பட்டதாக இருப்பின் பழைய கொள்கைகளைக் குப்பையில் போடுங்கள் என அமைச்சர் தலித்து எழில்மலை கூறினார்.
 (09,16, 23. 07. 1998 ஆகிய மூன்று இதழ்களில் பாரிசு ஈழநாடு வெளியிட்ட தொடரின் சுருக்கம்.)






No comments: