Friday, December 02, 2016

கவிஞர் இன்குலாப் காலமானார்

கார்த்திகை 17, 2047 (02.12.2016) வெள்ளிக்கிழமை காலை.
சென்னை, ஊரப்பாக்கம், அய்யனசேரி, கவிஞர் இன்குலாப் இல்லம்.


என் அருமை நண்பர், ஈழ மக்களின் போராட்ட உணர்வுப் பங்காளி, கவிஞர் இன்குலாப் காலமானார் என்ற செய்தி அறிந்ததும் அவர் இல்லம் விரைந்தேன்.
ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அஞ்சலி செலுத்தினேன்.
இராயப்பேட்டை, சானிசான்கான் தெரு, ஒரு மாடி மனையில் அவரது இல்லத்துக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். புதுக் கல்லூரியில் பலமுறை பார்த்துப் பேசியுள்ளேன். பொது நிகழ்ச்சிகள் பலவற்றில் அவருடன் இருந்திருக்கிறேன்.
இன்று அவரது உடல் கண்டு விம்மினேன். அவரது மக்களான, செல்வம், ஆமினா, இன்குலாப் மூவருடனும் அவர் ஒன்றுவிட்ட தம்பியுடனும் ஈழத் தமிழரின் இரங்கலை, துயரைத் தெரிவித்தேன்.
சென்னை, அருங்காட்சிய அரங்கில், அவரது அவ்வை நாடகத்தைப் பார்த்திருக்கிறேன், அவ்வை என்றால் முதியவர் என்ற பொதுக் கருத்தைத் தாண்டி, இளமையும் எழிலும் கொஞ்சும் அழகியாய், பெண்ணியப் பெருந்தகையாய், சங்கத் தமிழாளராய் அவரைக் காட்டியவர்களுள் இன்குலாப் தலையானவர்.
பேரா. அரசு, போர. மங்கை, கவிஞர் அறிவுமதி, பொதுவுடைமையாளர் மணியரசன், எழுத்தாளர் செ. கணேசலிங்கன், ஓவியர் சந்தானம், தமிழ்ச் சங்க இளந்திரையன், எழுத்தாளர் வைகறை என என் நண்பர்கள், அன்பர்கள் பலர் அங்கிருந்தனர். ஒவ்வொருவரிடமும் துயரம் பகிர்ந்தேன்.
கீழக்கரையில் பிறந்து, இராமநாதபுரம் சேதுபதி கல்லூரியில் பயின்று, சென்னை புதுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய், உலகம் போற்றும் தமிழ்க் கவிஞராய், சிறந்த பேச்சாளராய், நாடக ஆசிரியராய் 76 வயது வரை வாழ்ந்தவர்.

No comments: