Tuesday, December 06, 2016

முதலமைச்சர் செயலலிதா காலத்தில் எனக்கு மிரட்டல்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
 1994 தையில் தஞ்சாவூரில் நடைபெறுவதான எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகள் தொடங்கின. அறிவிப்புகள் வெளியாயின. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்புமாறு உலகெங்கும் வாழும் தமிழாராய்ச்சியாளரைக் கோரினர்.
இலங்கைத் தமிழ் அறிஞர்கள் விண்ணப்பித்தனர். மாநாட்டு நுழைவுக் கட்டணம் செலுத்தினர். தோராயமாக 200 அறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரா. க. இராசாராம். இலங்கைத் தமிழறிஞர் சார்பில் தஞ்சாவூருக்கு இரண்டு முறை போய் வந்தேன். அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவராக இருந்தேன்.
1994இல் இலங்கையில் குழப்ப நிலை; போர்ச் சூழல். தமிழ்ப் பகுதிகளில் இருந்து பயணிப்பது எளிதல்ல. எனினும் கட்டுரைகள் குறைவின்றி வந்தன. தமிழர் நிலப்பகுதியார் நுழைவனுமதிக்கு விண்ணப்பிக்க, பயணச் சீட்டு வாங்க, பயணிக்கக் கொழும்பு வரவேண்டும்.
1994 மார்கழித் தொடக்கத்திலேயே பயண ஏற்பாடுகளை மேற்கொண்ட பலர், தமிழ் நிலங்களிலிருந்து  துன்பங்களைத் தாண்டிப் பயணித்துக் கொழும்பு வந்திருந்தனர். எனினும் கொழும்பில் இந்தியத் தூதரகம் அவர்களுக்கு நுழைவனுமதி வழங்கவில்லை. உரிய ஆணை தில்லியிலிருந்து வரவில்லை எனத் தூதரகத்தினர் கூறினர்.
தமிழக அரசு முறையாகத் தில்லிக்கு எடுத்துச் சொல்லி, தில்லி கொழும்புக்குச் சொல்லி, அங்கு நுழைவனுமதி கொடுக்கவேண்டும். நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தமிழக அரசின் மூத்த அமைச்சர்களிடம் சென்றேன். அப்போதைய தலைமைச் செயலாளர் அரி பாசுக்கரிடம் சென்றேன். அனைவரும் ஒரே திசையைக் காட்டினர். முதலமைச்சரைப் பாருங்கள் என்றனர்.
முதலமைச்சர் செயலலிதாவை அணுகவே முடியவில்லை. 1991க்குப் பின்னர் அவர் ஈழத் தமிழர் மீது கொண்ட மனோநிலை வழமையானதல்ல. திசம்பர் 15 வரை அரசு அலுவலகப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த நான், களையாய்க் களைத்தேன். 
என்மீது அளவற்ற பாசம் கொண்ட மூத்த வழக்குரைஞர் இரா. காந்தியிடம் விவரம் சொன்னேன். வழக்கு வைக்கலாம். அதிமுகவினர் தாக்குவர். தயாரா? எனக் கேட்டார். வழக்குத் தொடர்வதானால் திசம்பர் 20ஆம் நாளுக்கு முன் தொடரவேண்டும். பின்னர் கிறித்துமசு விடுமுறை, என்றார்.
பெருங்கவிக்கே வா. மு. சேதுராமன் ஒரு வழக்கு, நான் ஒரு வழக்கு. மூத்த வழக்குரைஞர் காந்தியின் வழக்குரைஞர் குழாமில் இருந்த திரு. சிவஞானம் வழக்கு வாதங்களை, முறைப்பாடுகளை எழுதினார். விண்ணப்பத்தில் ஒப்பமிட்ட மறுநாளே சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குப் பயணமானார் பெருங்கவிக்கே வா. மு. சேதுராமன்.
 ‘தஞ்சாவூரில் நடைபெறவுள்ள எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குப் பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழ் அறிஞர்களுக்கு இந்திய நுழைவனுமதி வழங்கவேண்டும்எனச் சென்னை உயர்நீதி மன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு 1994 திசம்பர் 20ஆம் நாள் விசாரணைக்கு வந்தது. நான் நீதிமன்றம் போயிருந்தேன்.
1994 திசம்பர் 21ஆம் நாள் காலை ‘தினமணி’ நாளிதழில் “செயலலிதா மீது சச்சிதானந்தன் வழக்கு” என்ற தலைப்பில் தவறான செய்தி வநதிருந்தது. அதுவே மிரட்டலுக்குக் காரணமானது. 
அன்றிரவு 2000 மணி. தொலைப்பேசி மணி அடித்தது. என் மூத்த மகன் (முருகவேள், 20 வயது) அழைப்பைக் கேட்டார். பதில் ஏதும் சொல்லாமல் கேட்டபடியே இருந்தார். இடையில் தொலைப்பேசியை என்னிடம் தந்தார்.
“என்னடா அம்மா மீது வழக்கா? உன் தலை சென்றல் நிலையத்தில். . கால் எழும்பூர் நிலையத்தில்…. ” தொடர்ந்து தகாத சொற்கள். ‘அடிப்போம்… உடைப்போம்… எரிப்போம்…. ‘ என்ற தொடர்கள். ‘கோடம்பாக்கம் குமார் பேசுகிறேன்’ என்று தொடர்ந்தது. நானும் பதில் சொல்லவில்லை. தொலைப்பேசியை வைத்தேன்.
சிறிது நேரத்தில் மீண்டும் மணி; எடுத்தேன். காந்தளகத்தில் இருந்து என் உதவியாளர் சரவணண் பேசினார். “ஐயா, முன் தடுப்புக் கண்ணாடியை யாரோ உடைக்க வந்தாங்க, ‘வாங்கடா பார்ப்போம்’ என மிரட்டினேன், ஓடிட்டாங்க“ என்றார்.
என் மகனும் நானுமே வீட்டில் இருந்தோம். மனைவி, மக்கள் சிங்கப்பூர் போயிருந்தனர். அப்பொழுதான் இரவு உணவு முடித்திருந்தோம்.
அன்று என் வீட்டில் விருந்தினர் இருந்தனர். மூத்தக்கா என அனைவரும் அழைக்கும் சி. கதிரவேற்பிள்ளையின் அக்கா, அவர் கணவர் சண்முகநாயகம் இருவரும் இருந்தனர். சென்னைக்கு வந்தால் எனதில்லத்தில் தங்குவார்கள்.
தொலைப்பேசி அழைப்புச் செய்தியைச் சொன்னதும் அவர்கள் பெட்டிகளை அடுக்கினார்கள். வண்டிக்குச் சொன்னார்கள். கிளம்பினார்கள். என் நிலையை அவர்கள் புரிந்துகொண்டனர்.
என் வண்டியில் நானும் முருகவேளும் 400 மீ. தொலைவில் இருந்த காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்றோம். இணை ஆணையர் ஒருவர் இருந்தார். செய்தியைச் சொன்னேன். கையை விரித்தார். ‘நான் எதுவும் செய்ய முடியாது. உங்கள் வண்டி எண்ணை மாற்றும் தகடுகள் தருகிறேன். நேரே பங்களூர் செல்லுங்கள்’ என்றார்.
அங்கிருந்தே மூத்த வழக்குரைஞர் இரா. காந்திக்குப் பேசினேன். ‘ஆணையரிடம் பேசுகிறேன், அதுவரை அங்கேயே இருங்கள்’ என்றார். காத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் அழைத்தார். ‘உங்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் காவலர் போயுள்ளனர், நீங்கள் நிம்மதியாக வீட்டுக்குப் போங்கள்’ என்றார் இரா. காந்தி.
நானும் மகனும் வீடு திரும்ப முன் அண்ணா சாலையில் உள்ள ‘காந்தளகம்’ சென்றோம். அக்காலத்தில் மூன்று வேளை பணிக் காலம். இரவு 2200 மணி தொடக்கம் விடிய 0600 மணி வரை, மூன்றாவது பணி வேளைக்கு வந்து பணி புரியும் ஊழியர் நால்வர் வந்திருந்தனர். வெளியே காவலர் இருவர் இருந்தனர். சரவணன் இருந்தார். ‘ஐயா, நான் பார்க்கிறேன், நீங்கள் போங்கள்’ என்றார் சரவணன்.
வீட்டுக்கு வந்தேன். காவலர் இருவர் வாயிலில். சிரித்தவாறு வரவேற்றனர். ‘நாங்கள் இருக்கிறோம், நன்றாகத் தூங்குங்கள்’ என்றனர்.
மறுநாள் காலை கோடம்பாக்கத்தில் ‘முரசொலி’ அலுவலகத்திற்குச் சென்றேன். கலைஞர் கருணாநிதி அவர்களைப் பார்த்தேன். ‘செய்தி அறிந்தேன். நீதி மன்றத்தில் சொல்லுங்கள். நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்கிறோம்’ என்றார்.
1994 திசம்பர் 22ஆம் நாள் நடந்த விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் எனக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் இரா. காந்தி இந்தத் தகவலை நீதிபதியிடம் கூறினார். முறைப்பாட்டாளருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி சிவராசர் பட்டேல் உடனே ஆணையிட்டார்.
இது குறித்து 23. 12. 1994 ‘தினமணி’ நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘வழக்கைத் தொடர்ந்துள்ள தமிழறிஞர்கள் தொலைபேசியில் மிரட்டப்படுகின்றனர். மனுதாரர் சச்சிதானந்தனைச் செவ்வாயன்று அதிமுக பிரமுகர் தொலைபேசியில் மிரட்டினார். ‘உங்கள் வீடு இன்னும் 15 நிமிடத்தில் தகர்க்கப்படும்எனச் சச்சிதானந்தனை அந்தப் பிரமுகர் மிரட்டினார்.”
எனக்காக வாதாடிய மூத்த வழக்கறிர் இரா. காந்தி, இது குறித்து அன்றிரவே காவல்துறை ஆணையருக்குத் தெரிவித்தேன்’ என நீதிபதியிடம் கூறினார். முறைப்பாட்டளரின் வீட்டுக்குக் காவலர் பாதுகாப்பு அளிக்க நீதிபதி ஆணயிட்டார். வழக்குத் தொடர்பவர்களுக்கு மிரட்டல் வரும் மோசமான நிலை தமிழகத்தில் நிலவுகிறது என என் வழக்குரைஞர் இரா. காந்தி நீதிபதியிடம் கூறினார்.
நீதிபதி சிவராசர் பட்டேல் கூறியதாவது: “வழக்கறிஞர் காந்தி கூறும் நிகழ்ச்சி, வேதனை அளிக்கிறது. முறைப்பாட்டாளர் வழக்குத் தொடர்ந்ததைத் தவிர, எந்தக் குற்றமும் செய்யவில்லை. வழக்குத் தொடர எவருக்கும் உரிமை உண்டு.
ஒவ்வொரு குடிமகனின் உயிரும் உடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முறைப்பாட்டாளருக்குப் போதிய காவலர் பாதுகாப்பு அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு வழக்கறிஞர் ஆர். கிருட்டிணமூர்த்தி செய்ய வேண்டும். தமிழகக் காவல்துறைத் தலைவர் வழியோ அல்லது தொடர்புள்ள அதிகாரிகள் மூலமோ அரச வழக்குரைஞர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்” என்றார் நீதிபதி சிவராசர் பட்டேல்.
தி இந்துநாளேடு பின்வருமாறு எழுதியது. ‘‘Earlier, Mr. Gandhi told the Judge that one of the petitioners received threatening telephone calls. The caller claiming to be an office-bearer of AIADMK. He told one of the petitioners that his (petitioner’s) movements were being watched and he also knew where the petitioner parked his car. The petitioner’s office at Anna Salai would be smashed and his car would be burnt. In respect of another petitioner, a few persons visited his house and had asked the petitioner’s wife about the whereabouts of the petitioner. Later they threatened the family. ’’
இச்சம்பவம் குறித்து நீதிபதி சிவராசர் பட்டேல் தெரிவித்தவற்றுக்குப் பதில் அளித்த அரசின் தலைமை வழக்குரைஞர், முறைப்பாட்டாளருக்குப் பாதுகாப்பு வழங்கும் கருத்தைத் தான் ஏற்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தினமணிநாளேடு பின்வருமாறு எழுதியது. 1994 திசம்பர் 22ஆம் நாள் வழக்கை விசாரித்தனர். உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக, அரசுக்கு உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு அரசின் சார்பில் வியாழனன்று பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஹரி பாஸ்கர், உள்துறைச் செயலாளர் பி. வி. ராஜாராமன் ஆகியோரின் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தஞ்சையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு மனுதாரர்களைப் போன்ற தமிழறிஞர்களை அழைத்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. மேலும் தமிழறிஞர்களை மாநாட்டுக்கு அழைப்பது குறித்து மாநாட்டின் புலமைக் குழு (Academic Committee) முடிவு செய்ய வேண்டும். மனுதாரரோ அல்லது வேறு எவருமோ தங்களை அழைக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க முடியாது. தமிழறிஞர்களை அழைக்க வேண்டியது அரசின் கடமை என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
“அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் மாநாட்டு நிதியிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவின் கட் - அவுட்டுகள் வைக்கப்படவில்லை என்று அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறப்பட்டுள்ளது. ’’
‘கதிரவன்’ நாளிதழில் வந்த செய்தி: ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதி உள்ள பாடல் அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகத் தமிழ் மாநாட்டிற்கு அழைப்புக் கொடுப்பதிலும் வேண்டியவர், வேண்டாதவர் என்ற நிலை இருக்கிறது என்று ஆர். காந்தி வாதிடும்போது சுட்டிக் காட்டினார். ’’
‘தி இந்து’ நாளிதழில் வந்த செய்தி: ‘‘Referring to the statement in the counter affidavit of the Home Secretary, that the presence of scholars was a not a “must” or obligatory for the conference, Mr. Gandhi, said the statement reflected the “arrogance” of the Home Secretary. This would only mean that except AIADMK party men nobody else need to attend the conference. He said even today the Chief Minister had issued a statement in newspapers inviting all her party men to attend the conference and make it a success,
Mr. Gandhi said the conference was being conducted not for the participation of AIADMK party men alone. The aim was to conduct research for the growth of the Tamil language. Various scholars who had served as ladders for the development of the Tamil language had been sidelined and still the conference was given international colour.
The counsel said the Supreme Court had given a wider meaning to the scope of Article 226 of the Constitution (writ jurisdiction of High Courts) and said the authority need not necessarily be an instrumentality of the State as contemplated under Article 12 of the Constitution. If injustice was apparent, a writ could lie even against an individual or a society. In this case as everything was done in the name of the Chief Minister and other departmental secretaries, a mandamus could be issued, he said and sought postponement of the conference so that all Tamil Scholars could participate. ’’
மாநாட்டுப் பங்கேற்புக் குறித்த வழக்கு விசாரணை ஒருபக்கம் நடைபெறுகையில் மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்என்ற பெருங்கவிக்கே வா. மு. சேதுராமனின் கோரிக்கை, என் பெயரிலும் வெளிவந்தது.
சேதுராமனின் முறைப்பாட்டில் ருந்த பல கருத்துகள் எம் இருவர் பெயரிலுமாக வெளியாயின. இரண்டு வழக்குகள் என்ற நிலை பிறழ்ந்து ஒரே வழக்காகவே ஊடகங்களில் பதிவாயிற்று. இக்குழப்பத்தைப் போக்க, என் சார்பில் பின்வரும் மறுப்பு ஒன்றினை 23. 12. 1994 தினமணி’ வெளியிட்டது.
‘‘தஞ்சையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குப் பற்றி கடந்த 21ஆம் தேதி தினமணியில் வெளியான செய்தி தொடர்பாக, சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (இலங்கைப் பிரிவு) துணைத் தலைவர் கே. சச்சிதானந்தன் சில விளக்கங்களைத் தெரிவித்திருக்கிறார்.
‘‘ஆளுங்கட்சியைப் பற்றியோ, வளர்ச்சிப் பணிகளைப் பற்றியோ, கட்-அவுட்கள் பற்றியோ நான் (சச்சிதானந்தன்) ஏதும் கூறவில்லை. இலங்கை அறிஞர்களை அழைப்பது தொடர்பாக மட்டுமே நான் கோரியுள்ளேன்’’ என்று கே. சச்சிதானந்தன் விளக்கம் அளித்துள்ளார். ’’
22ஆம் தேதியே தீர்ப்புகள் வழங்கப்படுவதாக இருந்த இந்த வழக்குகள், இத்தேதியின் வாதப் பிரதிவாதங்கள் மாலை 4-45 வரை நீடித்ததால் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி சிவராசர் பட்டேல் அறிவித்தார்.

அன்று தொடக்கம் அடுத்த 20 நாள்களுக்கு 4 மணி நேரத்துக்கு இருவர் இருவராக, என் வீட்டுக்கு இருவர், என் அலுவலகத்துக்கு இருவர் எனக் காவலர் பணியிலிருந்தனர். எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிந்து அடுத்த 10 நாள்களுக்கும் அவர்கள் பாதுகாப்புத் தந்தனர். 

No comments: