Thursday, December 15, 2016

இராமேச்சரம் யாழ்ப்பாண மடம்

13.12.2014 சனிக்கிழமை நண்பகல்.
இராமேச்சரம் வடக்குத் தேர் வீதி, வடக்குக் கோபுர வாயில் எதிரே.
யாழ்ப்பாண மடம்.
பொன்னம்பலம் இராமநாதன் காலத்தைய மடம்.
யாழ்ப்பாணத்தார் சார்பில் சிவத்திரு கோடிலிங்க சாத்திரியார் பொறுப்பாக இருந்தார்.
வழக்கு நடந்தது.
இப்பொழுது இந்து அறநிலையத்துறை ஆட்சியில் யாழ்ப்பாண மடம்.
 இராமேச்சரம் திருக்கோயில் ஊழியர் சிலர் குடியிருந்த கட்டடம்.
இக்காலத்தில் வசிக்கத் தக்க கட்டடம் அன்று என்பதால் எவரும் வசிப்பதில்லை.
திருக்கோயில் ஊழியர் வசிப்பிடமாகப் புதிதாகக் கட்டடம் அமையப் போவதாகத் திருக்கோயில் ஆட்சி அலுவலகத்தில் கூறினர்.
இராமேச்சரத்தில்
காசிவாசிகள் திருமடம் இயங்குகிறது.
குசராத்திகள் திருமடம் இயங்குகிறது.
மராத்தியர் திருமடம் இயங்குகிறது.
இவைபோன்று பலதரப்பினர் மட்ங்கள் இயங்குகின்றன.
அவரவர் மடங்களை அவரவர்களே ஆட்சி செய்கின்றனர்.
யாழ்ப்பாண மடம் திருக்கோயிலின் ஆட்சியில்.
ஈழத்தவர் வரவும் தங்கவும் வழிபடவும் அமைந்த கட்டடம்.
யாழ்ப்பாண மடத்தை மீட்டெடுப்பதும் கட்டடம் அமைப்பதும் ஈழத்தவர் இராமேச்சரம் வந்தால் தங்கித் திருக்கோயிலில் வழிபட வழிசமைப்பதும் ஈழத் தமிழர் கடன்.





அப்துல் கலாம் கனகசுந்தரம்பிள்ளை

13.12.2014 மாலை 1600 மணி.
இராமேச்சரம் நடுத்தேரு, 14ஏ எண் இல்லம்.
சிவத்திரு பட்சி வேங்கடசுப்பிரமணிய சாத்திரியார் இல்லம்.
அப்துல் கலாமின் உடன் வகுப்பு மாணவர் பட்சி சாத்திரியார்.
அப்துல் கலாமுக்குக் கணிதம் கற்பித்த யாழ்ப்பாணத்தவர் கனகசுந்தரம்பிள்ளை பற்றிய விவரங்களைக் கேட்க அவரிடம் சென்றேன்.
நடுத்தெருவின் மேற்கே கோடிலிங்க சாத்திரியார் இல்லத்தில் அக்காலத்தில் சாமியார் பள்ளி என்ற தனிவகுப்புப் பள்ளியை நடத்தியவர் கனகசுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணத்தவர்.
முழுக்கைச் சட்டை அணிந்திருப்பார், வேட்டி கட்டியிருப்பார்.
உச்சி பிரித்துத் தலைவாரி இருப்பார். திருமணமாகாதவர்.
புலர் காலை கணித வகுப்புகள் நடத்துவார். அந்த வகுப்புகளில் அப்துல் கலாம் மாணவர். சாத்திரியார் வேதம் படிக்கப் போனதால் அப்துல் கலாமுடன் கணக்கு வகுப்புகளுக்குப் போவதில்லை.
நடுத்தர வயது கடந்து 50 வயதளவில் காவி தரிக்கத் தொடங்கிய கனகசுந்தரம்பிள்ளை, சாமியாராகி வடக்கே போனதால் சாமியார் பள்ளியும் மூடப்பட்டது.
கனகசுந்தரம்பிள்ளையைப் பற்றிய தகவல்களைத் தரக்கூடியவர் இப்பொழுது உயிரோடு அப்துல் கலாம் மற்றும் தன்னைத் தவிர வேறு எவரும் இல்லை என்றார் சாத்திரியார்.
கனகசுந்தரம்பிள்ளை பள்ளி நடத்திய கோடிலிங்க சாத்திரியார் இல்லத்தில் தவமணிதேவி வாழ்ந்தவர். 1941இல் திரையான வனமோகினி திரைப்படமே இணுவில் சிவாச்சாரியார் பரம்பரையினரான தவமணிதேவிக்குப் புகழைத் தேடித்தந்தது.
கனகசுந்தரம்பிள்ளையும் இணுவிலைச் சேர்ந்தவரோ? வேறெந்த ஊரவரோ?

நடனங்களுக்குத் தமிழ்ப் பாடல் வரிகள் தேர்ந்தேன்

13.12.12 வியாழக்கிழமை காலை, 0915 மணி,
தொலைப்பேசி அழைப்பு,
திருவெம்பாவை
முதலாவது பாட்டு வரிகள் சொல்க,
பொருள் சொல்க.
கேட்டவர் காந்தளகம் பொறுப்பாளர் சசிரேகா.
நாட்டிய வகுப்பில் இருந்து
அழைக்கிறேன் என்றார்.

50 ஆண்டு கால மனப்பாட வரிகள்.
பொறுமையுடன் வரிகளைச் சொன்னேன்,
அந்த முனையில் இருந்து எழுதிக்கொண்டார். ஒவ்வொரு வரிக்குப் பொருளும்
எனக்குப் புரிந்தவாறு சொன்னேன்.
குறித்துக் கொண்டார்.

இன்று, ஞாயிறு,
மார்கழி முதலாவது நாள்.
சென்னை நாரத கான சபா.
மதியம் 1400 மணி.
சம்பவம், சாம்பவம்
என்ற தலைப்பில் நாட்டிய நிகழ்ச்சி.

நடனமாமணி
பிரியா முரளியின் Priya Murle பரத நாட்டியம்.
நட்டுவாங்கம் சசிரேகா.
குரலிசை நந்தினி ஆனந்தன்,
வயலின் விசயராகவன்,
மத்தளம் தனஞ்செயன்,
புல்லாங்குழல் சுருதிசாகர்.
யாவரும் வல்லுநர்கள்.
ஆதியும் அந்தமும் இல்லா எனத் தொடங்கி
நந்தினி ஆனந்தன் பௌளி இராகத்தில் பாட
தாளங்களுடன் ஆதி தாளத்தில் சசிரேகா நட்டுவராக,
இசைக்கருவியாளர் தாளத்துக்கு அமைய ஒத்திசைக்க, தில்லைக் கூத்தனையும்
துயிலெழுப்பும் பாவையரையும்
போதார் அமளியையும்
புரளும் தோழியையும்
பரதத்தின் அடவுகளால்,
காலடிகளின் அளந்தமைப்பால்,
கண்ணசைவின் காந்தத்தால்,
கழுத்தசைவின் சிறுமருவால்,
காத்திரம் பிசகா மாத்திரையில்
மாணிக்கவாசகரின் வரிகளை
நாட்டிய வண்ணமாக்கினார்
பிரியா முரளி.

தொடர்ந்து ராகமாலிகையில் சிவனாருக்குப் போற்றிசெய, பிரியா முரளி நயந்து நடனமாடினார்.
தஞ்சை நால்வரின் பாடலுக்குச்
சுதாராணி இரகுபதியின் வடிவமைப்பு
அனிருத்தரின் சொற்கட்டு,
சசிரேகா நட்டுவாங்கம்,
நந்தினி ஆனந்தன் குரலிசை,
கருவிகளின் ஒத்திசை,
கமாசு இராகம் ஆதி தாளம் எனத் தொடர,
பிரியா முரளி வர்ணமாக
அரை மணி நேர அபிநயமா முகபாவமா,
அடவுகளின் கடலா,
கைமுத்திரை வழி கண்ணசைவா,
பிண்டியாகிப் பிணையலாகிய விரலசைவுகளா,
காலடிகளின் கட்டமைப்பா,
பெண்மையின் நளினமா,
என அசத்தினார்.

சுருதி இராகத்தில் ஆதிதாளத்தில்
சிவனுக்கு நிந்தாஸ்துதி தொடர்ந்தது.
பத்து நிமிடங்களும் பறந்ததே தெரியவில்லை.
பிரியா முரளியும் நந்தினி ஆனந்தும் ஒத்திசைத்தோரும்
பார்வையாளரின் ஐந்து அறிவுகளையும் அரங்கமே ஆட்கொள்ளுமாறு ஈர்த்தனர்.

முகாரி இராகத்தில் ஆதி தாளத்துக்குக்குப்
பாபநாசம் சிவனின்
சிவகாமசுந்தரிப் போற்றியை
அரங்கத்தில் அனைவருமாய்க் கட்டிய
கலைக்கோயில், பரதக் கோயில்
பார்வையாளரின் நரம்பு நுனிகளைத் தைத்தன,
கைகள் தாமாகவே கூப்பின,
சத்தியை வியந்தன.

புல்லாங்குழலார்
தேஷ் இராகத்தை இசைக்கத் தொடங்கியதும்
கேட்டோர் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
அதே இராகத்தில்
தில்லானாவுக்குப் பிரியா முரளி
மெல்லென மிதந்த பூங்காற்றாய்,
மெருகுடன் அடியெடுத்து
அரங்கத்தில் வளைந்து வளைந்து
விடைபெற்ற நிகழ்வாக்கினார்.

வள்ளாலாரின் பாடலுக்குரிய பாவங்களுடன்
நிகழ்ச்சி நிறைவெய்தியது.

சென்னையின் மார்கழி இசை விழாவுக்கு
அவ்வப்போ தேவையான பங்களிப்பை
நல்கி வந்த நான்,
இந்த ஆண்டு
இந்த நிகழ்ச்சியின் தோற்றுவாய்க்குத்
திருவெம்பாவைப் பாடல் வரிகளை எடுத்துக் கூறி
என் சிறிய பங்களிப்பைச் செய்ததால் மகிழ்ந்தேன்.
வழமைபோலச் சசிரேகா என்னை ஈடுபடுத்தினார். முன்பும் அவரே கேட்பார்,

சிலப்பதிகாரமாயினென்,
கம்பராமாயணமாயினென்,
பிள்ளையார் கதை ஆயினென்,
திருமந்திரம் ஆயினென்,
வேறு வரிகள் ஆயினெ,
எடுத்துக் கொடுத்த வரிகளை
அரங்கில் ஆடலாகக் காண்கையில்
அவ்வரிகளை எடுத்துக் கொடுத்தேன்
என்ற செய்தியை
ஆடலாரே பதிவாக்கையில்
மகிழ்ச்சியடைவது இயல்பல்லவா?

Yes. We sought the help of Dr. Raama Kausalya and Maravanpulava K Sachithananthan to translate and further research the epic. எனப் பேராசிரியர் பத்மசிறீ சுதாராணி இரகுபதி ஒரு பேட்டியில் சொன்னார்கள். (2003 மார்கழி இசை விழா)

http://www.narthaki.com/info/intervw/intrvw57.html

Wednesday, December 07, 2016

செயலலிதாவின் இறுதி நிகழ்வில் நான்

கார்த்திகை 21, 2047 (06.12.2016) சென்னை, இராசாசி மண்டபம்.
காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் மாண்புமிகு செயலலிதா அவர்களுக்கு ஈழத் தமிழர் சார்பில் நேரில் அஞ்சலி.
அம்மையாரின் உடல் இருந்த இடம் அடைந்தேன். அவர்களின் கால்கள் இருந்த பக்கத்தில் நின்று வணங்கி அஞ்சலித்தேன். பால்நினைந்தூட்டும் திருவாசக வரிகள் சொன்னேன்.
துணை சபாநாயகர் தம்பித்துரை, அமைச்சர் செயகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயன், அமைச்சர் பாண்டியராசன், மேனாள் அமைச்சர் பொன்னையன், வைகைச் செல்வன் என எனக்கு அறிமுகமான நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் சென்றேன்.
ஈழத் தமிழ் மக்களின் நெஞ்சார்ந்த துயரத்தைத் தெரிவித்தேன். துயரமான இப்பொழுதில் ஈழத் தமிழர் யாவரும் தமிழக மக்களோடு இருக்கிறார்கள் எனத் தெரிவித்தேன்.
வெளியேறும் வழியில் அமைச்சர் வெங்கையா நாயுடு, அமைச்சர் இராசா, நாடாளுமன்ற உறுப்பினர் இல கணேசன், பாசக தமிழகப் பொறுப்பாளர் முரளீதர ராவ், திண்டிவனம் இராமமூர்த்தி, குமரி அனந்தன், அம்மையாரின் ஆலோசகரும் தமிழகத்தின் மேனாள் காவல்துறைத் தலைவருமான இராமானுசம், என எனக்கு நன்கு அறிமுகமான அன்பர்கள் யாவரிடமும் ஒவ்வொருவராகச் சென்று ஈழத் தமிழர் துயரத்தை எடுத்துரைத்தேன்.
ஊடகத்தார் அரங்கில் நான்கு மணித்துளிகள் கருத்துரைத்தேன். ஒவ்வோர் ஈழத் தமிழர் நெஞ்சமும் கனத்திருப்பது, கண்கள் குளங்களாகி இருப்பது, செயலலிதா அம்மையார் சட்டசபையில் அண்மைக் காலங்களில், ஐநா மனித உரிமை, பொது வாக்கெடுப்பு, தமிழீழம் அமைதல் தொடர்பான தீர்மானங்களை இயற்றிமைக்கு நன்றியும் கடப்பாடும் உடையராய் இருப்பது என விளக்கினேன். அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் நலம் பேணிய வரலாறு சொன்னேன். தொடர்ந்தும் அதிமுக ஈழத் தமிழர் நலம் பேணும் எனவும் கூறினேன்.

அப்பர் கூறிய கோயிலா நகுலேச்சுரம்?

கார்த்திகை 23, 2047 (22.12.2016)
அன்பு நிறை மறவன்புலவு க. சச்சிதானந்தன் மற்றும்  'சைவம்' இணையதள குழுவினருக்கு
இணைய உலாவின்பொது கண்டெடுத்த, ஈழத்து  மிக்க வடக்காக  யாழ்ப்பாணப் பகுதியில் உள்ள கடற்கரையில் அமைந்த தேவாரத் (வைப்பு) தலமாவைது நகுலேசுவரம் ஆகும்
ஓலைச் சுவடியில்  நாகலேசுவரம்  என வருவது  இசைப்பாடலுக்காக, வடமொழி வழி, விளியில் நீண்ட திரிபு  ஆகும். கபாலம் ஏந்தியவன் கபாலி - பாடலில் நீண்டு காபாலி எனவும் வருவதுபோல், நகுலம் = கீரி; நகுல + ஈசுரம் = நகுலேசுவரம்; வடமொழி புணர்ப்பு விதிகளில் வழி  அ ஆ  பி ன் இ ஈ வரின் இரண்டும் கெட ஏ தோன்றும். 
கீரிமலை எனும் இடத்தில் உள்ள மிக மிகப் பழம்பெரும் தலமே நகுலேசுவரம். சோழ + ஈச்சுரம் = சோழேச்சுரம் ஆவதுபோல், நகுலேசுவரம் நாகேசுவரம் என்றதன் திரிபு ஆகாது ஏனெனில் 'லகரம்' கூடி வந்துள்ளது.
மேலும், நகுலேசுவரம் முன் நாகேசுவரம் (நாக + ஈச்சுரம்) எனும் மற்றோர் தலமும்  பிரித்துக்காட்டும் குறிப்புடன் வந்துள்ளதால், அப்பரடிகளி ன்  பொதுப்பதிகமாம் அடைவு திருத்தாண்டகத்தில்  போற்றப்பெற்றுள்ள கோயில் நாகலேச்சுரமே
நாடகமாடிடம் நந்திகேச்சுரம் மாகாளேச்சுரம் நாகேச்சுரம்  *நாகலேச்சுரம்* நன்கானல் கோடீச்சுரம் / கொண்டீச்சுரம் / திண்டீச்சுரம் / குக்குடேச்சுரம் / அக்கீச் சுரம் /  கூறுங்கால், ஆடகேச்சுரம் / அகத்தீச்சுரம்/ அயனீச்சுரம் /அத்தீச்சுரம் / சித்தீச்சுரம் அம்தண்கானல்ஈடுதிரை /இராமேச்சுரம் / என்றென்று ஏத்தி இறைவனுறை சுரம் உலவும் இயம்பு வோமே ( 6.71.8) என வரும் எட்டாவது பாடலில்  நகு லேச்சுவரம்  என்பதாகும்
விக்கியின் ஓர் பக்கம்; historically known also as the Thirutambaleswaram Kovil of Keerimalai, is a famous Hindu temple in Keerimalai, located north of Jaffna, Northern Province, Sri Lanka near the ancient port of Kankesanthurai.
தம்பலம் + ஈசுரம் தம்பலேசுவரம் பிரமனும் திருமாலும் அடிமுடி காணாது  ஈசுவரன் தம்பமாக நிற்கும்  அம்பலம், இப்பெயர் நகுலேசுவரம் என்பதன் பின்வந்த வழக்கு மாற்றம்  எனல் வேண்டும் காண்க
https://en.wikipedia.org/wiki/Naguleswaram_temple
நூ த லோ சு
மயிலை

அன்புநிறை உலோகசுந்தரம் அவர்களுக்கு,
இலங்கையில் தொன்மை வாய்ந்த ஐந்து ஈச்சரங்கள் உள. வடக்கே நகுலேச்சுரம், கிழக்கே திருகோணச்சுரம், மேற்கே 1. திருக்கேதீச்சுரம், 2. முன்னேச்சுரம், தெற்கே தொண்டடீச்சரம்.
இவற்றுள் தொண்டீச்சரம் சிதைந்து போயுளது. மற்ற நான்கிலும் ஆகம வழிப் பூசனை, வழிபாடு நடைபெற்று வருகின்றன. இவை ஐந்தும் 5000 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாட்டில் இருந்து வருகின்றன.
இபன் பற்றுற்றா (1304-1369) தொண்டடீச்சரத்தைக் கண்டு அங்கு ஓராயிரம் தேவரடியார் நடனமாடியதாக எழுதினார். 
He was a guest of the Jaffna King Marthanda Singai Aryan Pararajasegaram ( Arya Chakravarty) circa 1344. Ibn Battuta reached Adam's Peak traveling via the hilly part of the country and discovered that gems are found in abundance in this part of the island. From Adam's Peak he took a southern route to Dondra (Dinewar), a southern coastal town, where he found a Hindu temple which had a gold statue of the size of a man with eyes fashioned by two large rubies. (This may be the same temple Admiral Zheng Hee's trilingual inscription refers to and which was later pillaged and destroyed by the Portuguese.) From there he went to Galle (Qali), thence to Colombo ( Calenbu) and from there back to Puttalam. From here he sailed to the Tamil Nadu coast.
1371- 1435 காலப் பகுதியில் சீனரின் முதலாவது கப்பற் படைக் கப்பல் தொண்டீச்சுரம் வந்தது. இரண்டாவது முறை வரும்பொழுது கல்வெட்டு ஒன்றை விட்டுச் சென்றது. ஒரே செய்தி சீனம், தமிழ், பாரசீகம், ஆகிய மூன்று மொழிகளில் உள.
The historically significant inscription confirming Chinese presence in the late medieval Sri Lanka is now kept in the National Museum in Colombo. The three languages used in this inscription were Chinese, Tamil and Persian. Indeed, Persian was more widespread than Arabic among Muslim traders in Asia, Tamil was an international trade language, too. The inscription left by Zheng He, though he himself was a Chinese Muslim, praises the Buddha and mentions donations to the Hindu temple of Tondeswaram at Sri Lanka’s southernmost point, Dondra Head.
திருக்கேதீச்சரம், (பதிகங்கள்: விருதுகுன்ற -2 -107 திருஞானசம்பந்தர் நத்தார்படை -7 -80; சுந்தரர்)
திருக்கோணேச்சரம் (பதிகம்: நிரைகழலரவ -3 -123 திருஞானசம்பந்தர்) 
இரண்டும் தேவாரப் பாடல் பெற்றவை.
அப்பரின் 06071008 பாடலில் நாகளேச்சுரம் என உளதே அன்றி நாகலேச்சுரம் என்றில்லை. எனினும் பாடபேதமாக இருக்கலாம். நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அயனீச்சுரம். அத்தீச்சுரம் இவை வைப்புத் தலங்கள் என்ற குறிப்புரை www.thevaaram.org தளத்தில் உண்டு. எந்த நாட்டில் எந்தப் பகுதியில் இவை உள என்ற குறிப்பு அங்கில்லை.
அப்பர் கூறும் நாகளேச்சுரம் = நகுலேச்சரம் எனில் ஈழத்துச் சைவ உலகம் திருவருளை மேன்மேலும் போற்றும்.
நன்றி
க. சச்சிதானந்தன்https://ssl.gstatic.com/ui/v1/icons/mail/images/cleardot.gif

அன்புநிறை திரு சச்சிதானந்தம் அய்யா,
அப்பர் திருத்தாண்டகத்தில் வரும் நாகளேச்சுரம் இப்போது நகுலேச்சுரமாக் இருப்பதுடன் அன்றும் நகுலேச்சரமாகவே இருந்துள்ளது எனபதுதான் கருத்து
ஓலைச் சுவடி கள் மாற்றுப்பதிவு செய்யுங்கால் பாடபேதம் வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் எப்போதும் எங்கும்  உண்டு இதனிலெவ ருக்கும் ஐயமில்லை
அவ்வடிதான் (அ ப்படிதான்), கண்>> வாய்>> செவி >> கை  வழி (PHONETIC ERROR) படி மாற்றம் நிகழுங்கால் லகர ளக ர திரிபும் ககர குகர திரிபும் நுழைந்துள்ளது. மற்றப்படி நாகலேச்சுரம் என நகரம் நாகாரமாக் நீண்டலுக்கு விளியில் கபாலி, காபலியாகும் நேரான வடமொழி இயல் (இலக்கண) முறை காட்டினேன்.
மேலும் அடிப்படையில் உள்ள நகுல + ஈச்சுரம்  எப்படி நகுலேச்சுரம் ஆகும் என்பதும் நேரான வடமொழி இயல் (இலக்கண) முறை காட்டினேன்.
அவ்வடியிலேயே தற்காலம் வழங்கும் தம்பாலீசுவரர் எனபதன் தலப்பெயர்  புராணங்கள் வழி பிறப்பும் விளக்கியுள்ளேன்.
அதான்று ஓர் நிகர் நிலை காண்க. திருமுறையில் நூற்றுக்கணக்கான வரிகளில் காணும் புராண நிகழ்வாம் திரிபுரம் எரித்தமை தனை…
(1) திரி எனும் சொல்லினை தமிழாகக்க கொண்டு தூங்கு எனவும் உடன் வருவதால் வானத்தில் (பறந்து) திரிகின்ற புரங்கள் எனும் பொருள் காட்டி, கோட்டைகளும் சிறகுகளைக் கொண்டு பறந்து வந்துள்ள நிலையும்,
(2) த்ரி எனும் வடமொழிச் சொல்லாக்க கொண்டு முப்புரங்கள் (மூன்று கோட்டைகள்  )  என கருத்துரை  தொடர்ந்து வழங்கி வந்ததும் காண்கின்றோம்.
மேலும் அப்புராணக் கதையில் துணைப் பண்பாக வரும் தூங்கு எனும் சொல்லினுக்கு உயரத்தில் எனும் பொருளுக்கு இயைய, பறவைகள் போல் சிறகுகளும் அமைத்தனர்.
இப்போதுள்ள அறிவியலின் வழி மூன்று கோட்டை கள் பறவைகள் போல் சிறகுகளுடன் பறந்து இருக்க முடியுமா? அதுவும் ஓர் அம்பினால் எரித்துவிடும் கோட்டைகள்.
தூங்கு எனும் சொல்லினுக்கு மலையின் மேல் உயரத்தில் என நேரான  பொருள் காட்டியிருக்க வேண்டும்.
          மக்களை ஈர்ப்பதற்காக நுழைக்கப்ப்டும் வியப்பு எனும் மெய்ப்பாடு இயல்பாக புராணங்களின் தன்மை வழி வந்துள்ளது அவ்வளவே.
இவை யாவும் ஏடெழுதும்போது வந்துள்ள எழுத்து // பொருள்கோள் இரட்டுற மொழிதல் /  பிழைதனைக் காட்டும் அல்லவா?
அவ்வளவு ஏன் மதிரை எனும் பாண்டிய மன்னனின் தலைநகரின் பெயரை, மதுரை என ஓர் மிகப்பெரிய திட்டமிட்டு முழு மூச்சுடன்  எங்கும் எதிலும் மாற்றிவிட்டனர்  அல்லவா?  ஆனால் ஒருமுறை எழுதினால் மாற்றமுடியாத கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் மதிரை எனும் சொல் இன்றும் நின்று அன்று வழங்கிய மதிரையே இந்நாளைய மதுரை என்று மாற்றத்தின் சான்றுகளாகத் திகழ்கின்றன.
பாட பேதங்கள் யாவும் இயல்பாக மனக்குறையால் மறதியால் மட்டும் வருவதல்ல. ஏடெழுதும் கோலாலர் தன  (ஆணவம்) எண்ணப் போக்கின் வழி மாற்றம் திருத்தம் செய்தவைகளும் ஆகும் என்பதுதான் அறிவுடைமை.
Oru Arizonan : Dec 08 03:48AM -0700
நாகுலேஸ்வரம் பற்றிய இக்கருத்தைபற்றி முதன்முதலாகத் தெரிந்துகொண்டேன், மறவன்புலவு ஐயா அவர்களே.  
இலங்கையில் சைவம் செழிப்புற்றிருந்தது, இன்று தெற்குப்பகுதியில் அது வாடுகிறது என்றும் அறிந்துகொண்டேன். ஆகவே, ஒரு மாணவனாகவே நான் தங்கள் பதிவைப் படித்தேன்.
மேற்கொண்டு கருத்துச்சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதி இல்லை,ஐயா.
*பணிவன்புடன்,*
*ஒரு அரிசோனன் *

"N. Ganesan" : Dec 08 05:37AM -0800
On Wednesday, December 7, 2016 at 5:06:59 PM
நகுலேச்சுரமும், நாகளேச்ச்சுரமும் ஒன்றா என உறுதியாகக் கூற இயலவில்லை என்கிறார் மறவன்புலவு க. சச்சிதானந்தன்.
          ரா. பி. சேதுப்பிள்ளை, தமிழகம்: ஊரும் பேரும் நூலில் கூறுகிறார்: *நாகளேச்சுரம் * தஞ்சை நாட்டு நன்னில வட்டத்தில் குழிக்கரை என்னும் ஊரில் பழைய சிவாலயம் ஒன்று உண்டு. அதன் பெயர் திரு நங்காளீச்சுரம் என்று சாசனம் கூறும்.
திருநாவுக்கரசர் குறித்த நாகளேச்சுரம் இத்திருக்கோயிலாயிருக்கலாம் என்று தோன்றுகின்றது. பழைய பல்லவர், சோழர் காலச் சிவன் கோயில் நாகலாபுரத்தில் உண்டு. சுருட்டப்பள்ளி, சென்னை அருகே கிருஷ்ணதேவ மாராஜனால் பெரிதாகக் கட்டப்பெற்ற
வேதநாராயணப் பெருமாள் கோயில் பிரபலம். ஆனால், பழைய சிவன் கோயிலும் அவ்வூரில் இருக்கிறது. http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1997&Cat=3
”தட்சிணாமூர்த்தி கல்லால மரத்தின்கீழ் அமர்ந்த நிலையில்தான் பொதுவாகத் தரிசித்திருப்போம். ஆனால், நாகலாபுரத்தில் சமபாத ஸ்தானமாக நின்ற நிலையில் வீணை வாசிக்கும் பாவனையில் வீணாதர தட்சிணாமூர்த்தி அருட்காட்சி நல்குகிறார்.
மானும் மழுவும் ஏந்தியுள்ள இவரது பாதத்தின் கீழ் முயலகனும் சனகாதி முனிவர்களும் காட்சி தருகின்றனர்.”
          இது பழைய பல்லவர்கால வடிவம். கல்லில் செய்யப்பட்டுள்ளது. பின்னர் மிக அழகான சோழர் கால வெண்கலப் படிமங்கள் வார்க்கப்பெற்றன. நாகலா+ஈச்சுரம் = நாகலேச்சுரம்/நாகளேச்சுரம்
எனக் கருதலாம். இன்னும் பார்க்கவேண்டும்.
தம்பலேசுவரம்: ”தம்பலம் + ஈசுரம் தம்பலேசுவரம் பிரமனும் திருமாலும் அடிமுடி காணாது ஈசுவரன் தம்பமாக நிற்கும் அம்பலம், இப்பெயர் நகுலேசுவரம் என்பதன் பின்வந்த வழக்கு மாற்றம் எனல் வேண்டும் காண்க”
தம்பலேசுவரம் - தம்பலம் என்ற சொல் சங்க இலக்கியத்தில் காணலாம். தம்பல-காம = தம்பலக் கிராமம். இதே பெயரில் உள்ள ஊரில் உள்ள சிவன் கோயில்:https://www.lanka.com/about/attractions/aathi-koneswaram/. தம்பலேச்சுரம் பற்றி அடுத்த மடலில் எழுதுகிறேன்.

நா. கணேசன்

Tuesday, December 06, 2016

முதலமைச்சர் செயலலிதா காலத்தில் எனக்கு மிரட்டல்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்
 1994 தையில் தஞ்சாவூரில் நடைபெறுவதான எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகள் தொடங்கின. அறிவிப்புகள் வெளியாயின. ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனுப்புமாறு உலகெங்கும் வாழும் தமிழாராய்ச்சியாளரைக் கோரினர்.
இலங்கைத் தமிழ் அறிஞர்கள் விண்ணப்பித்தனர். மாநாட்டு நுழைவுக் கட்டணம் செலுத்தினர். தோராயமாக 200 அறிஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஒருங்கிணைப்பாளர் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேரா. க. இராசாராம். இலங்கைத் தமிழறிஞர் சார்பில் தஞ்சாவூருக்கு இரண்டு முறை போய் வந்தேன். அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவராக இருந்தேன்.
1994இல் இலங்கையில் குழப்ப நிலை; போர்ச் சூழல். தமிழ்ப் பகுதிகளில் இருந்து பயணிப்பது எளிதல்ல. எனினும் கட்டுரைகள் குறைவின்றி வந்தன. தமிழர் நிலப்பகுதியார் நுழைவனுமதிக்கு விண்ணப்பிக்க, பயணச் சீட்டு வாங்க, பயணிக்கக் கொழும்பு வரவேண்டும்.
1994 மார்கழித் தொடக்கத்திலேயே பயண ஏற்பாடுகளை மேற்கொண்ட பலர், தமிழ் நிலங்களிலிருந்து  துன்பங்களைத் தாண்டிப் பயணித்துக் கொழும்பு வந்திருந்தனர். எனினும் கொழும்பில் இந்தியத் தூதரகம் அவர்களுக்கு நுழைவனுமதி வழங்கவில்லை. உரிய ஆணை தில்லியிலிருந்து வரவில்லை எனத் தூதரகத்தினர் கூறினர்.
தமிழக அரசு முறையாகத் தில்லிக்கு எடுத்துச் சொல்லி, தில்லி கொழும்புக்குச் சொல்லி, அங்கு நுழைவனுமதி கொடுக்கவேண்டும். நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தமிழக அரசின் மூத்த அமைச்சர்களிடம் சென்றேன். அப்போதைய தலைமைச் செயலாளர் அரி பாசுக்கரிடம் சென்றேன். அனைவரும் ஒரே திசையைக் காட்டினர். முதலமைச்சரைப் பாருங்கள் என்றனர்.
முதலமைச்சர் செயலலிதாவை அணுகவே முடியவில்லை. 1991க்குப் பின்னர் அவர் ஈழத் தமிழர் மீது கொண்ட மனோநிலை வழமையானதல்ல. திசம்பர் 15 வரை அரசு அலுவலகப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த நான், களையாய்க் களைத்தேன். 
என்மீது அளவற்ற பாசம் கொண்ட மூத்த வழக்குரைஞர் இரா. காந்தியிடம் விவரம் சொன்னேன். வழக்கு வைக்கலாம். அதிமுகவினர் தாக்குவர். தயாரா? எனக் கேட்டார். வழக்குத் தொடர்வதானால் திசம்பர் 20ஆம் நாளுக்கு முன் தொடரவேண்டும். பின்னர் கிறித்துமசு விடுமுறை, என்றார்.
பெருங்கவிக்கே வா. மு. சேதுராமன் ஒரு வழக்கு, நான் ஒரு வழக்கு. மூத்த வழக்குரைஞர் காந்தியின் வழக்குரைஞர் குழாமில் இருந்த திரு. சிவஞானம் வழக்கு வாதங்களை, முறைப்பாடுகளை எழுதினார். விண்ணப்பத்தில் ஒப்பமிட்ட மறுநாளே சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குப் பயணமானார் பெருங்கவிக்கே வா. மு. சேதுராமன்.
 ‘தஞ்சாவூரில் நடைபெறவுள்ள எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குப் பதிவு செய்துள்ள இலங்கைத் தமிழ் அறிஞர்களுக்கு இந்திய நுழைவனுமதி வழங்கவேண்டும்எனச் சென்னை உயர்நீதி மன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கு 1994 திசம்பர் 20ஆம் நாள் விசாரணைக்கு வந்தது. நான் நீதிமன்றம் போயிருந்தேன்.
1994 திசம்பர் 21ஆம் நாள் காலை ‘தினமணி’ நாளிதழில் “செயலலிதா மீது சச்சிதானந்தன் வழக்கு” என்ற தலைப்பில் தவறான செய்தி வநதிருந்தது. அதுவே மிரட்டலுக்குக் காரணமானது. 
அன்றிரவு 2000 மணி. தொலைப்பேசி மணி அடித்தது. என் மூத்த மகன் (முருகவேள், 20 வயது) அழைப்பைக் கேட்டார். பதில் ஏதும் சொல்லாமல் கேட்டபடியே இருந்தார். இடையில் தொலைப்பேசியை என்னிடம் தந்தார்.
“என்னடா அம்மா மீது வழக்கா? உன் தலை சென்றல் நிலையத்தில். . கால் எழும்பூர் நிலையத்தில்…. ” தொடர்ந்து தகாத சொற்கள். ‘அடிப்போம்… உடைப்போம்… எரிப்போம்…. ‘ என்ற தொடர்கள். ‘கோடம்பாக்கம் குமார் பேசுகிறேன்’ என்று தொடர்ந்தது. நானும் பதில் சொல்லவில்லை. தொலைப்பேசியை வைத்தேன்.
சிறிது நேரத்தில் மீண்டும் மணி; எடுத்தேன். காந்தளகத்தில் இருந்து என் உதவியாளர் சரவணண் பேசினார். “ஐயா, முன் தடுப்புக் கண்ணாடியை யாரோ உடைக்க வந்தாங்க, ‘வாங்கடா பார்ப்போம்’ என மிரட்டினேன், ஓடிட்டாங்க“ என்றார்.
என் மகனும் நானுமே வீட்டில் இருந்தோம். மனைவி, மக்கள் சிங்கப்பூர் போயிருந்தனர். அப்பொழுதான் இரவு உணவு முடித்திருந்தோம்.
அன்று என் வீட்டில் விருந்தினர் இருந்தனர். மூத்தக்கா என அனைவரும் அழைக்கும் சி. கதிரவேற்பிள்ளையின் அக்கா, அவர் கணவர் சண்முகநாயகம் இருவரும் இருந்தனர். சென்னைக்கு வந்தால் எனதில்லத்தில் தங்குவார்கள்.
தொலைப்பேசி அழைப்புச் செய்தியைச் சொன்னதும் அவர்கள் பெட்டிகளை அடுக்கினார்கள். வண்டிக்குச் சொன்னார்கள். கிளம்பினார்கள். என் நிலையை அவர்கள் புரிந்துகொண்டனர்.
என் வண்டியில் நானும் முருகவேளும் 400 மீ. தொலைவில் இருந்த காவல்துறை ஆணையர் அலுவலகம் சென்றோம். இணை ஆணையர் ஒருவர் இருந்தார். செய்தியைச் சொன்னேன். கையை விரித்தார். ‘நான் எதுவும் செய்ய முடியாது. உங்கள் வண்டி எண்ணை மாற்றும் தகடுகள் தருகிறேன். நேரே பங்களூர் செல்லுங்கள்’ என்றார்.
அங்கிருந்தே மூத்த வழக்குரைஞர் இரா. காந்திக்குப் பேசினேன். ‘ஆணையரிடம் பேசுகிறேன், அதுவரை அங்கேயே இருங்கள்’ என்றார். காத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் அழைத்தார். ‘உங்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் காவலர் போயுள்ளனர், நீங்கள் நிம்மதியாக வீட்டுக்குப் போங்கள்’ என்றார் இரா. காந்தி.
நானும் மகனும் வீடு திரும்ப முன் அண்ணா சாலையில் உள்ள ‘காந்தளகம்’ சென்றோம். அக்காலத்தில் மூன்று வேளை பணிக் காலம். இரவு 2200 மணி தொடக்கம் விடிய 0600 மணி வரை, மூன்றாவது பணி வேளைக்கு வந்து பணி புரியும் ஊழியர் நால்வர் வந்திருந்தனர். வெளியே காவலர் இருவர் இருந்தனர். சரவணன் இருந்தார். ‘ஐயா, நான் பார்க்கிறேன், நீங்கள் போங்கள்’ என்றார் சரவணன்.
வீட்டுக்கு வந்தேன். காவலர் இருவர் வாயிலில். சிரித்தவாறு வரவேற்றனர். ‘நாங்கள் இருக்கிறோம், நன்றாகத் தூங்குங்கள்’ என்றனர்.
மறுநாள் காலை கோடம்பாக்கத்தில் ‘முரசொலி’ அலுவலகத்திற்குச் சென்றேன். கலைஞர் கருணாநிதி அவர்களைப் பார்த்தேன். ‘செய்தி அறிந்தேன். நீதி மன்றத்தில் சொல்லுங்கள். நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்கிறோம்’ என்றார்.
1994 திசம்பர் 22ஆம் நாள் நடந்த விசாரணையின்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் எனக்காக வாதாடிய மூத்த வழக்குரைஞர் இரா. காந்தி இந்தத் தகவலை நீதிபதியிடம் கூறினார். முறைப்பாட்டாளருக்குப் பாதுகாப்பு வழங்குமாறு நீதிபதி சிவராசர் பட்டேல் உடனே ஆணையிட்டார்.
இது குறித்து 23. 12. 1994 ‘தினமணி’ நாளிதழில் கூறப்பட்டுள்ளதாவது: ‘‘வழக்கைத் தொடர்ந்துள்ள தமிழறிஞர்கள் தொலைபேசியில் மிரட்டப்படுகின்றனர். மனுதாரர் சச்சிதானந்தனைச் செவ்வாயன்று அதிமுக பிரமுகர் தொலைபேசியில் மிரட்டினார். ‘உங்கள் வீடு இன்னும் 15 நிமிடத்தில் தகர்க்கப்படும்எனச் சச்சிதானந்தனை அந்தப் பிரமுகர் மிரட்டினார்.”
எனக்காக வாதாடிய மூத்த வழக்கறிர் இரா. காந்தி, இது குறித்து அன்றிரவே காவல்துறை ஆணையருக்குத் தெரிவித்தேன்’ என நீதிபதியிடம் கூறினார். முறைப்பாட்டளரின் வீட்டுக்குக் காவலர் பாதுகாப்பு அளிக்க நீதிபதி ஆணயிட்டார். வழக்குத் தொடர்பவர்களுக்கு மிரட்டல் வரும் மோசமான நிலை தமிழகத்தில் நிலவுகிறது என என் வழக்குரைஞர் இரா. காந்தி நீதிபதியிடம் கூறினார்.
நீதிபதி சிவராசர் பட்டேல் கூறியதாவது: “வழக்கறிஞர் காந்தி கூறும் நிகழ்ச்சி, வேதனை அளிக்கிறது. முறைப்பாட்டாளர் வழக்குத் தொடர்ந்ததைத் தவிர, எந்தக் குற்றமும் செய்யவில்லை. வழக்குத் தொடர எவருக்கும் உரிமை உண்டு.
ஒவ்வொரு குடிமகனின் உயிரும் உடைமையும் பாதுகாக்கப்பட வேண்டும். எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முறைப்பாட்டாளருக்குப் போதிய காவலர் பாதுகாப்பு அளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு வழக்கறிஞர் ஆர். கிருட்டிணமூர்த்தி செய்ய வேண்டும். தமிழகக் காவல்துறைத் தலைவர் வழியோ அல்லது தொடர்புள்ள அதிகாரிகள் மூலமோ அரச வழக்குரைஞர் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்” என்றார் நீதிபதி சிவராசர் பட்டேல்.
தி இந்துநாளேடு பின்வருமாறு எழுதியது. ‘‘Earlier, Mr. Gandhi told the Judge that one of the petitioners received threatening telephone calls. The caller claiming to be an office-bearer of AIADMK. He told one of the petitioners that his (petitioner’s) movements were being watched and he also knew where the petitioner parked his car. The petitioner’s office at Anna Salai would be smashed and his car would be burnt. In respect of another petitioner, a few persons visited his house and had asked the petitioner’s wife about the whereabouts of the petitioner. Later they threatened the family. ’’
இச்சம்பவம் குறித்து நீதிபதி சிவராசர் பட்டேல் தெரிவித்தவற்றுக்குப் பதில் அளித்த அரசின் தலைமை வழக்குரைஞர், முறைப்பாட்டாளருக்குப் பாதுகாப்பு வழங்கும் கருத்தைத் தான் ஏற்பதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
தினமணிநாளேடு பின்வருமாறு எழுதியது. 1994 திசம்பர் 22ஆம் நாள் வழக்கை விசாரித்தனர். உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக, அரசுக்கு உத்தரவிடக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு அரசின் சார்பில் வியாழனன்று பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஹரி பாஸ்கர், உள்துறைச் செயலாளர் பி. வி. ராஜாராமன் ஆகியோரின் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
தஞ்சையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு மனுதாரர்களைப் போன்ற தமிழறிஞர்களை அழைத்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. மேலும் தமிழறிஞர்களை மாநாட்டுக்கு அழைப்பது குறித்து மாநாட்டின் புலமைக் குழு (Academic Committee) முடிவு செய்ய வேண்டும். மனுதாரரோ அல்லது வேறு எவருமோ தங்களை அழைக்க வேண்டும் என நிர்ப்பந்திக்க முடியாது. தமிழறிஞர்களை அழைக்க வேண்டியது அரசின் கடமை என்ற கோரிக்கையை ஏற்க முடியாது.
“அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் மாநாட்டு நிதியிலிருந்து முதல்வர் ஜெயலலிதாவின் கட் - அவுட்டுகள் வைக்கப்படவில்லை என்று அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறப்பட்டுள்ளது. ’’
‘கதிரவன்’ நாளிதழில் வந்த செய்தி: ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனார் எழுதி உள்ள பாடல் அனைவருக்கும் தெரியும். ஆனால் உலகத் தமிழ் மாநாட்டிற்கு அழைப்புக் கொடுப்பதிலும் வேண்டியவர், வேண்டாதவர் என்ற நிலை இருக்கிறது என்று ஆர். காந்தி வாதிடும்போது சுட்டிக் காட்டினார். ’’
‘தி இந்து’ நாளிதழில் வந்த செய்தி: ‘‘Referring to the statement in the counter affidavit of the Home Secretary, that the presence of scholars was a not a “must” or obligatory for the conference, Mr. Gandhi, said the statement reflected the “arrogance” of the Home Secretary. This would only mean that except AIADMK party men nobody else need to attend the conference. He said even today the Chief Minister had issued a statement in newspapers inviting all her party men to attend the conference and make it a success,
Mr. Gandhi said the conference was being conducted not for the participation of AIADMK party men alone. The aim was to conduct research for the growth of the Tamil language. Various scholars who had served as ladders for the development of the Tamil language had been sidelined and still the conference was given international colour.
The counsel said the Supreme Court had given a wider meaning to the scope of Article 226 of the Constitution (writ jurisdiction of High Courts) and said the authority need not necessarily be an instrumentality of the State as contemplated under Article 12 of the Constitution. If injustice was apparent, a writ could lie even against an individual or a society. In this case as everything was done in the name of the Chief Minister and other departmental secretaries, a mandamus could be issued, he said and sought postponement of the conference so that all Tamil Scholars could participate. ’’
மாநாட்டுப் பங்கேற்புக் குறித்த வழக்கு விசாரணை ஒருபக்கம் நடைபெறுகையில் மாநாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும்என்ற பெருங்கவிக்கே வா. மு. சேதுராமனின் கோரிக்கை, என் பெயரிலும் வெளிவந்தது.
சேதுராமனின் முறைப்பாட்டில் ருந்த பல கருத்துகள் எம் இருவர் பெயரிலுமாக வெளியாயின. இரண்டு வழக்குகள் என்ற நிலை பிறழ்ந்து ஒரே வழக்காகவே ஊடகங்களில் பதிவாயிற்று. இக்குழப்பத்தைப் போக்க, என் சார்பில் பின்வரும் மறுப்பு ஒன்றினை 23. 12. 1994 தினமணி’ வெளியிட்டது.
‘‘தஞ்சையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் மாநாடு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குப் பற்றி கடந்த 21ஆம் தேதி தினமணியில் வெளியான செய்தி தொடர்பாக, சர்வதேச தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (இலங்கைப் பிரிவு) துணைத் தலைவர் கே. சச்சிதானந்தன் சில விளக்கங்களைத் தெரிவித்திருக்கிறார்.
‘‘ஆளுங்கட்சியைப் பற்றியோ, வளர்ச்சிப் பணிகளைப் பற்றியோ, கட்-அவுட்கள் பற்றியோ நான் (சச்சிதானந்தன்) ஏதும் கூறவில்லை. இலங்கை அறிஞர்களை அழைப்பது தொடர்பாக மட்டுமே நான் கோரியுள்ளேன்’’ என்று கே. சச்சிதானந்தன் விளக்கம் அளித்துள்ளார். ’’
22ஆம் தேதியே தீர்ப்புகள் வழங்கப்படுவதாக இருந்த இந்த வழக்குகள், இத்தேதியின் வாதப் பிரதிவாதங்கள் மாலை 4-45 வரை நீடித்ததால் 23ஆம் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி சிவராசர் பட்டேல் அறிவித்தார்.

அன்று தொடக்கம் அடுத்த 20 நாள்களுக்கு 4 மணி நேரத்துக்கு இருவர் இருவராக, என் வீட்டுக்கு இருவர், என் அலுவலகத்துக்கு இருவர் எனக் காவலர் பணியிலிருந்தனர். எட்டாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு முடிந்து அடுத்த 10 நாள்களுக்கும் அவர்கள் பாதுகாப்புத் தந்தனர்.