கரவெட்டி, தச்சன்தோப்பில் விழா. ஊடகத்தார் உச்சிமேல் உவக்கும் வீரகத்தி தனபாலசிங்கத்தாருக்கு
ஊரவர் பாரட்டிய விழா. நிகழ்வு இறுதி வரை நின்றேன். மணி 0800 ஆயிருக்கும். புறப்பட்டேன்.
நெல்லியடிச் சந்தியில் எரிபொருள் நிரப்பினேன். வண்டியை ஓட்டியவாறு சிறிது தூரம்
சென்றிருப்பேன். என வலது பக்கத்தில் ஊதல் ஒலி. என் மீது பாயும் கையொளி. ஈருருளியுந்தில்
காவலர் இருவர். வண்டியை ஓரமிடக் கைகாட்டினர். ஓரமானேன்.
சிங்களத்தில் ஏதோ கேட்டனர். சிரித்தேன். சிங்களம் தெரியாதென்றேன். ஏன் நிப்பாட்டேல்லை? நாங்க மறிச்சம். நிப்பாட்டாமல்
போறாய்? என்றார் வண்டியை ஓட்டியவர். ஒளி தெறிக்கும் அங்கியுடன் நின்றார். மற்றவர்
இளைஞர். ஒளி தெறிக்கும் அங்கியற்றவர்.
எங்கே மறித்தீர்கள்? என் வினா.
நெல்லியடிக் காவல் நிலையமருகே. அவர்கள் பதில்.
நான் பார்க்கவில்லை என் பதில்.
தெருவைப் பார்த்து வண்டி ஓட்டுவதில்லையா? கையொளி பாய்ச்சினோம்,
ஊதினோம் ஏன் நிற்கவில்லை? அவர்கள் வினா.
நான் பார்க்கவில்லையே! சட்டத்தை மீறும் நோக்கம் எனக்கில்லை. ஊதல் கேட்கவில்லை. கையொளிக்கு நிற்கவேண்டும் என
எனக்குத் தெரியாது. இப்பொழுது நிறுத்தச் சொன்னதும் நிற்கவில்லையா? என் பதில்.
எடு ஆவணங்களை. இஃது அவர்கள் ஆணை.
எடுத்தேன், கொடுத்தேன். பார்த்தனர். யாவும் செம்மையாக இருந்தன.
மறித்தபோது நிற்காததற்குத் தண்டம் கட்டு. இது அவர்கள் இருவருமாய்.
நான் சட்டத்தை மீறவில்லை. ஆவணங்கள் முறையாக உள. இருக்கைப்
பட்டி கட்டியுள்ளேன். முன் பின் விளக்குகள் எரிகின்றன. மறித்ததை அறியேன். பின்னர் மறித்தபொழுது
நின்றேன். நீங்கள் குறை காணும் நோக்குடன் வந்திருக்கிறீர்கள். காவலர் பயணிகளுக்கு உதவவேண்டும்,
தொந்தரவு கொடுக்கக் கூடாது. சட்டத்தை மீறும் நோக்கம் எனக்கு இல்லை. நான் சொன்னேன்.
அவர்களுள் ஒருவர் ஆவணங்களைத் திருப்பித் தர முயல, இளைஞரான மற்றவர் இடை மறித்தார்.
நாங்க மறித்த போது நிற்கவில்லை. தண்டம் கேள்.
சட்டத்தை மீறவில்லை. தண்டம் தரேன். தெருவில் பயணிகளைத் தொந்தரவு
செய்ய வந்தீர்களா? போக்குவரத்துக்கு உதவ வந்தீர்களா? காவலர் உடை அணிந்தாலே சட்டத்தைக்
கையில் எடுக்கலாமா? என் வயதென்ன? உங்கள் வயதென்ன? தொந்தரவு செய்யாதீர்கள், நான் விரைந்து
வீடு திரும்ப வேண்டும். என் பதில்.
ஒருவரை ஒருவர் பார்த்தனர். என் ஆவணங்களைத் திருப்பித் தந்தனர். மறித்தால் நிற்கவேண்டும், சரியா? இளைஞர் மிரட்டும்
தொனியில் கூறினார்.
நான் சட்டத்தை மதித்து நடப்பேன். சட்டத்தை மீறுவதானால் சொல்லிவிட்டு
மீறுவேன். என்னை மிரட்டக்கூடாது. என் பதில்.
என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
நள்ளிரவை நெருங்கும் நேரம். தாவடிச் சந்தி. காவலர் மறிக்கின்றனர். ஈருருளியுந்துச்
சத்தத்துக்கு ஓட்டிக்கு ஊதல் கேட்க வாய்ப்பில்லை. தலைமூடி காதை மறைத்தது. கையொளிச்
சைகையை வெள்ளை வண்டிக் கடத்தாலாரும் இருட்டில் காட்டலாம். மாணவர் இருவரும் காவலர் மறித்ததைத்
தெரியாமலே வண்டியை ஓட்டினர்.
தாவடிக் காவலர் சினங்கொண்டனர். நெல்லியடிக் காவலர் போல் சினமுற்றனர். குளப்பிட்டிக்
காவலருக்கு அலைவரிசைச் செய்தி அனுப்பினர். மறித்தோம்
நிற்கவில்லை, பொடியள் வருகிறார்கள். மறியுங்கோ என்று செய்தி சொல்லியிருக்கலாம்.
கொஞ்சம் கூடுதலாக பயங்கரவாதிகள் போலத் தெரிகிறது
என்றும் சொல்லியிருக்கலாம்.
குளப்பிட்டிக் காவலர் சுறுசுறுப்பாயினர். கையில் சன்னம் ஏற்றிய துப்பாக்கி இருந்து.
தாவடியில் இருந்து வரும் ஈருருளியுந்து அவர்களின் இலக்கு. ஒளி பாய்ச்சி வரும் ஈருருளியுந்தைக்
கண்டனர். ஆகா.. தாவடிக்காரன் சொன்னது சரி. உவங்கள்
பயங்கரவாதிகள் போலத்தான் தெரியுது. வேகமாக வாறாங்கள்.
குளப்பிட்டிச் சந்தி. ஆடியபாதம் வீதியால் திருநெல்வேலிப் பக்கம் திரும்புமுன்னே
துப்பாக்கியைக் காவலர் விரல்கள் இயக்கின. ஓட்டுநரின் நெஞ்சில் குண்டுகள் தைத்தன, ஆறு
குண்டுகள் இமைப்பொழுதில் பாய்ந்தன. ஒரு குண்டு மார்பைத் துளைத்து முதுகு வழி வெளியேறியது.
பின்னால் இருந்தவர் நெஞ்சுள் புகுந்து தங்கியது.
இப்படித்தான் நடந்திருக்கவேண்டும். இவ்வாறு என் எண்ண ஓட்டம் தொடர்ந்தது.
காவலர் தாவடியில் மறித்ததை மாணவர் அறியார். நேரம் பிந்தியதால் வீடுதி சென்று
தூங்கும் அவசரம் அவர்களுக்கு. மனம் மறுநாள் பாடங்களோடு கலந்திருக்கவேண்டும். தெருவால்
வழமை போல வந்தனர்.
சட்டமீறல் என்றால், தப்பி ஓட முயன்றால் காவலர் நடவடிக்கை எடுக்கலாம். என்னைப்
போல அவர்களுக்கும் வீதி தெரிந்தது. காவலர் தெரியவில்லை. சட்டத்தை மீற அவர்கள் முயலவே
இல்லை.
மாணவர் ஆடியபாதம் வீதிக்குத் திரும்பி வேகத்தை முடுக்கினால், காவலரிடம் இருந்த
வண்டியில் துரத்தியிருக்கலாம். நெல்லியடியில் என்னைத் துரத்தி வந்தது போல.
ஆடியபாதம் வீதிக்குத் திரும்பியபின் சுட்டிருந்தால் முதலில் பின்னால் இருந்தவர்
பட்டிருப்பார். முதுகில் காயங்கள் இருந்திருக்கும். ஓட்டுநர் நெஞ்சிலல்லவா சன்னங்கள்
பாய்ந்தன. குளப்பிட்டிச் சந்தியில் அல்லவா வண்டியுடன் காவலர் நின்றுகொண்டிருந்தனர்?
அப்பாவி மாணவர் இருவர். தம் நிலத்தில், தம் மக்களிடை, படைக் கருவி இல்லாமல்,
படிப்பு நோக்குடன் பல்கலை விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
உலகெங்கும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறுதான் இயல்பாக இரவு தாண்டமுன்
விடுதிக்கும் திரும்பும் நோக்குடன் செல்வர்.
நெல்லியடியில் என்னை மறித்த காவலர் என்னிடம் வினவிய மொழி சிங்களம். மொழி தெரியவில்லை
என நான் சொன்ன பின்பு, கொச்சையும் குதறலுமாய்த் தமிழைப் பேசினர். அச்சுறுத்தினர், மிரட்டினர்.
படைக் கருவி கடத்துபவனாகவோ, கொலைசெய்து தப்பிப்பவனாகவோ, கொள்ளையடித்துத் தப்பிப்பவனாகவோ,
கற்பளித்துத் தப்பிப்பவனாகவோ, கேரளக் கஞ்சா கடத்துபவனாகவோ என்னைப் பார்த்தனர், ஐயம்கொண்டனர்.
ஒவ்வொரு தமிழனையும் அவ்வாறே பார்க்கும் பார்வை, வட மாகாணம், கிழக்கு மாகாணம்,
மலையகம் முழுவதும் உள்ள சிங்களக் காவலருக்கு உண்டோ என ஐயுறவேண்டி உளது.
நள்ளிரவைத் தாண்டமுன் விடுதி போகும் மாணவர். இரவலாக ஈருருளியுந்தை வாங்கி விரையும்
மாணவர். வறுமைக் கோட்டின் கீழுள்ள பெற்றோரின் மக்களான மாணவர். மூன்றாமாண்டு மாணவர்.
இதோ வெளியேறுவோம். வேலைவாய்ப்புச் சந்தைக்குள் புகுந்து மிதப்போம். வருவாய் பெருக்குவோம்.
பெற்றாரின் கடனை மீட்போம். உடன் பிறப்புகளைக் கரை சேர்ப்பபோம் என்ற கனவுகளை நனவுகளாக்கக்
காத்திருந்த மாணவர்.
தமிழர் கனவுகளைக் கலைப்பதே காக்கி உடையின் அறம். தமிழர் எண்ணிக்கையைக் குறைப்பதே
காக்கி உடையின் அறம். அச்சத்தோடு வாழுங்கள், அடிமைகளாகத் தொடருங்கள், வெருட்டுவோம்,
மிரட்டுவோம், அடிப்போம் உதைப்போம், உயிர் போகச் சுடுவோம்; இவையே காவலர்ச் சீருடைக்கு
அறம் என்ற மேலாதிக்க உணர்வுடன் தமிழரைப் பார்க்கும் காவலர்.
பொல்லா ஆட்சியாயிலென் நல்லாட்சியாயிலென், மேலாதிக்கத்தின் நீட்சியாகத் தமிழரிடை
நிலைகொண்ட சிங்களக் காவலர், நெல்லியடியில் என்னை மறித்தனர். குளப்பிட்டிச் சந்தியில்
மாணவர்களைச் சுட்டனர். ஏனிந்தக் கொலைவெறி?
1 comment:
ஒரு தமிழனுக்குத் தீங்கென்றால் ஓராயிரம் எதிர்ப்புக்குரல்கள் ஒலிக்கவேண்டும்.
இன்றைக்கு உனக்கென்றால் நாளைக்கு எனக்கும் இந்தத் துன்பம் வரும் என்று கருதும்போக்கு வேண்டும்.சூடு,சுரணை,சுயமரியாதை வேண்டும்.இவையெல்லாம் தமிழரிடை இல்லையென்பதால் நாம் சாகத்தான் வேண்டும்.
Post a Comment