Sunday, March 19, 2017

பண்பாட்டுப் பேழைகள், ஞானத்தின் ஈர்ப்புகள்

வடக்கு வீடு
கண்டி மேயராக, பின் அமைச்சராக இருந்தவர் ஈ. எல். சேனநாயக்கா. கண்டிச் சிங்களவருள் பண்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தாரின் பண்பாட்டில் மோகம். யாழ்ப்பாணத்தில் தனக்கு உறவுகள் இருப்பதாகக் கூறிக் கொள்வதில் பெருமை கொள்பவர்கள்.
கோப்பாய் நாடாளுமன்ற உறுப்பினர் சி. கதிரவேற்பிள்ளை தன் உறவினர்களுள் ஒருவர் என ஒருமுறை ஈ. எல். சேனநாயக்கா பெருமையுடன் கூறிக்கொண்டார். கதிரவேற்பிள்ளை அண்ணரிடம் இச்செய்தியைக் கூறி, விவரம் கேட்டேன். தனக்கு அத்தொடர்பு தெரியாதென்றவர், கண்டியில் செல்வாக்கோடு வாழ்ந்த இருபாலையின் அதிகார் நாகநாதன் இல்லத்தாரும் ஈ. எல். சேனநாயக்காவின் தந்தை கேட்முதலியார் யேம்சு சேனநாயக்கா இல்லத்தாரும் நல்ல நண்பர்கள் என்றார்.
யாழ்ப்பாணத்தின் பண்பாட்டு முகங்களாகச் சிங்கள மேட்டுக்குடிக்கு இருபாலையார் தெரிந்தனர். இதனாலேயே அவர்களோடு உறவு எனச் சொல்லிப் பெருமை அடைந்தனர், வேறில்லை.
கண்டியில் முந்தைய தலைமுறையில் அதிகார் நாகநாதன் வாழ்ந்து காட்டிய யாழ்ப்பாணப் பண்பாட்டுக் கோலங்களைக் கொழும்பில் என் தலைமுறையில் வாழ்ந்து காட்டியவர் விசுவநாதர் கயிலாயபிள்ளை.
நாகநாதர் இருபாலையார். கயிலாயபிள்ளை அராலியார். தெற்கு அராலியில் வடக்கு வீட்டார் என்றாலே பண்பாட்டுப் பேழைகளின் வாழ்விடத்தார் என்ற கருத்து மேலோங்கும்.
சொல்லிலும் செயலிலும் எவருக்கும் தீங்கு தரா உள்ளங்கள். சைவத்திலும் தமிழிலும் தோய்ந்த நெஞ்சங்கள். வேளாண் தொழிலுண்டு, வழிபடக் கோயிலுண்டு, பகிரச் செல்வமுண்டு, பண்பட்ட வாழ்வுண்டு, கல்வியில் தேடலுண்டு, புலமையில் நாட்டமுண்டு, ஞானத்தில் ஈர்ப்புண்டு என மகிழ்ந்த மனங்கள்.
புலமைக் களன்
தஞ்சாவூரின் புலமைக் களன், சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் அவருக்கு மதிப்பார்ந்த முதுமுனைவர் பட்டம் வழங்கியதன் காரணமே அன்னாரின் கற்றுத்துறைபோகிய செம்மையும் புலத்துறை முற்றிய பெற்றியுமே.
அவர் ஒருமுறை என்னிடம் கேட்டார், யார் அந்த அறிவியல் பட்டதாரி? அப்புனை பெயரில் சிவஞான போதத்துக்கு அவர் எழுதிய விளக்கத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன், பெற்றுத் தரமுடியுமா?
ஓ, எனக்குத் தெரியுமே, பெற்றுத் தருகிறேன் எனக் கூறினேன். அந்த நூலைத் தேடிக் கொடுத்தேன். அந்த அறிவியல் பட்டதாரி வேறு யாருமல்ல, அராலி வடக்கு வீட்டின் ஞான ஈர்ப்பு வடிவம். தன் பெயரையே வெளிக்காட்டாத அறிவுக் களஞ்சியம். தன்னடக்கத்தின் புறத்தோற்றம். அவர் அ. விசுவநாதர்.
வடக்கு வீட்டாருக்கு நெருங்கிய உறவுகள் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில், நீராவியடிப் பிள்ளையார் கோயிலைச் சுற்றி வாழ்ந்தவர்கள். அராலிக்கு மேற்கே கொட்டைக்காட்டிலும் உறவுகள்.
இந்த மூன்று ஊர்களுக்கும் புறத்தே இவர்களுக்குத் திருமண பந்தங்கள் மிகமிகக் குறைவு. அவ்வப்போ இருபாலை, மறவன்புலவு, கந்தரோடை, புலோலி, பருத்தித்துறை, கருகம்பானை என நீளும் சொந்தங்களுள்ளும் திருமண உறவுகள் கொண்டவர்கள்.
கண்டிச் சேனநாயக்கா தொடக்கம் தஞ்சாவூர் இராமச்சந்திரன் வரை நான் அறிய மதித்துப் போற்றிய பண்பாட்டுப் பேழைகள், ஞான ஈர்ப்புகள், உழைப்பின் உயரங்கள், வடக்கு வீட்டாரும் அவர் சார்ந்த உறவுகளும்.
நீராவியடி
கயிலாயபிள்ளையையும் அம்பலவாணரையும் ஈன்ற பெருமக்கள் விசுவநாதரும் பார்வதியாரும். சிறுவனாகத் தன் தந்தையை இழந்தவர்கள் கயிலாயபிள்ளையும் அம்பலவாணரும். உறவுகளின் சங்கமத்தில் வாழ்ந்தாலும், தந்தையின் இழப்பால் காயங்களைச் சுமந்தனர். தம் தாய் வழிப் பெயரர் செல்லப்பா வழிகாட்டலில் அராலி சரசுவதி பாடசாலையில் பயின்றனர்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தொடக்க வகுப்புகளில் நான் சேர்ந்த காலத்தில் இவர்கள் இருவரும் மேல் வகுப்புகளில் பயின்றுகொண்டிருந்தனர்.
ஆசைப்பிள்ளை, சபாரத்தினம், வயித்தியலிங்கம் எனக் கணித ஆசான்கள், இலங்கையைப் புரட்டிய கணித மாணவர்களைத் தயாரித்த காலங்கள். ஆசைப்பிள்ளை இலண்டனில் கற்று மீண்டவர். அ. வயித்தியலிங்கம் கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகக் கணித மூவியல் திறன் பட்டதாரி. கயிலாயபிள்ளைக்கும் அம்பலவாணருக்கும் தாய் மாமன் முறையானவர். பொதுவுடைமைக் கட்சியின் மூத்த உறுப்பினர்.
வகுப்பறைகளுக்கு அப்பால் கயிலாயபிள்ளையையும் அம்பலவாணரையும் வீட்டிலேயே காணலாம். புற நாட்டம் இல்லாதவர்கள். இவர்களுடன் அ. அம்பலவாணர், வை. இரகுநாதமுதலியார், பொ. விசுவநாதன், குமாரலிங்கம், நெல்லைலிங்கம், அ. சேனாதிராசா என மாணவர் குழாம். இவர்கள் யாவருக்கும் பொதுமை, தன்னடக்கமும் எளிமையும் இனிமையும் புலமையும் தெளிவும்.
இதே காலத்தில் என் தமக்கையார் இந்து மகளிர் கல்லூரியில் பயின்றார். அவர் அடிக்கடி வீட்டில் உச்சரிக்கும் தோழியின் பெயர் அபிராமி. வடக்கு வீட்டாரின் உற்சாக மாணவி. குமாரலிங்கமும் சேனாதிராசாவும் என் வகுப்பில் பயின்றவர்கள். அக்காலங்களில் அ. வயித்திலிங்கம் எனக்கு இயற்பியல் ஆசான்.
வடக்கு வீட்டாரின் மற்றொரு மாணவன் கோபால் சங்கரப்பிள்ளை. அ. வயித்திங்கத்தின் மகன். வயதால் எனக்கு இளையவர். இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில் என் தந்தையாரின் மாணவன். என் தந்தையார் மீது மாறிலா மதிப்புக் கொண்டதால் பிற்காலத்தில் என் மீதும் அன்பும் பாசமும் காட்டியவர்.
உறவுப் பாலம்
1956ஆம் ஆண்டு. ஈருருளியில் காலை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குச் செல்கிறேன். தட்டாதெருச் சந்திப்பு. தெற்கே இருந்து வந்த கார் மீது மோதினேன். ஈருருளி கீழே விழ, நான் காரின் முகப்பில் ஏறிப் படுத்திருந்தேன். அந்தக் காருள் இருந்தவர்கள் நீராவியடியின் வடக்கு வீட்டார்.
கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் நாகலிங்கம், அவர் உறவுகள், கொக்குவிலுக்குக் காரில் போய்க்கொண்டிருந்தனர். காரை விட்டு இறங்கினர். என்னைத் திட்டுவர், என்மீது சினப்பர் என நான் அஞ்சினேன். அன்பு மேவத் தலையைக் கோதி, கடுமையான தாக்கமா? எனக் கேட்டு, எனக்கு ஆறுதல் கூறி, என் ஈருருளியை மீட்டுத் தந்து, கவனமாகப் போகவும் எனக் கூறிய பெருமக்கள் அவர்கள். இப்படி ஒரு பண்பா, இப்படி ஒரு கருணையா, இப்படி ஒரு பெருந்தன்மையா என என் வாழ்நாள் முழுவதும் சுமக்கும் நினைவு நிகழ்வு அது.
என் தந்தையார் 1957இல் வதிரிக்கும் நீராவியடிக்கும் பலமுறை பயணித்தார். வதிரித் தியாகராசா மாமாவின் மகன் சண்முகராசாவுக்கும் நீராவியடி நாகலிங்கம் ஆசிரியர் இல்லத்து யாழைப்பழித்தமொழியாளுக்கும் திருமண ஏற்பாட்டுக்காக வதிரிக்கும் நீராவியடிக்கும் பலமுறை பயணித்ததைச் தெரிந்திருந்தேன். நானும் அவருடன் சென்று வந்துண்டு.
என் தந்தையாருக்கும் வதிரித் தியாகராசா மாமாவுக்கும் அப்படி ஒரு உறவு. அதற்கப்பால் நெருங்கிய நட்பு. ஒருவர் சொல்வதை மற்றவர் கேட்டு நடக்கும் மதிப்பு.
எனக்கு விவரம் தெரிந்த நாள்களில் இருந்தே வதிரியில் இருந்து தியாராசா மாமா மறவன்புலவில் எங்கள் வீட்டிற்கு வருவதும் உழவு, விதைப்பு, களைபிடுங்கல், அறுவடை என அவரது வயற் பணிக் காலங்களில் என் பெயர்த்தியாரொடு தங்குவதும் வழமை.
நான் பிறந்த புலர் காலை எம் வீட்டிலிருந்ததால் அவரே கூரையில் தட்டி என்னை வரவேற்றாராம். அவர் மகன் சண்முகராசாவும் அதே இயல்புடையவர். எங்களோடு ஈடுபட்டு உறவாடுபவர்.
சண்முகராசா - யாழைப்பழித்தமொழியாள் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
நீராவியடிப் பிள்ளையார் கோயில் அறங்காவலர் வை. இரகுநாத முதலியாரை 1965இல் என் தங்கை சாந்தா தேவி மணந்ததால் வடக்கு வீட்டாரோடு எம் உறவுகள் மேலும் நெருக்கமாயின.
இரகுநாத முதலியாரின் தாயார் செல்லம்மா, என்மீது சொரிந்த அன்பு, என் நலம் பேணுவதில் அவர் கொண்டிருந்த அக்கறை நான் பெற்ற பேறு.
சைவ பரிபாலன சபையில் சொற்பொழிவுகள் செல்லம்மாவின் வினாத் தொடுத்தாலால் பொலிவுறும். சைவ சித்தாந்த நூல்களில் ஊறித் திளைப்பவர். பல செய்யுள்கள் அவருக்கு மனப்பாடம். முதிர்ந்த வயதிலும் எப்பொழுதும் புத்தகமும் கையுமாக இருப்பவர்.
ஒல்லிய உருவம். வெள்ளை வெளேரென்ற உடை. தோளில் சால்வை. புன்னகைத்த முகம், கனிந்த குரல், இனிமை இயல்பு, மனிதப் பண்பாட்டுப் பேழை இவரோ என நான் வியந்த பெருமகனார் ஆசிரியர் அம்மையப்பர். வடக்கு வீட்டார் உறவுகளில் இவரின் இயல்புச் சாயல் இல்லாதவர் இல்லை.
கிருலப்பனை
கொழும்பில் கிருலப்பனையில் வடக்கு வீட்டார் வாங்கிய தென்னந் தோட்டம், அதனை அவர்களுக்குள்ளே பகிர்ந்து வீடுகள் கட்டி வாழ்ந்தமை, அந்த வீடுகளில் ஒன்றில் சண்முகராசா அண்ணன் வாழ்ந்தமை, யாவும் என்னை வடக்கு வீட்டுப் பண்பாளர்களுடன் 1967 தொடக்கம் நெருங்கிப் பழகும் பேற்றைத் தந்தன.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பயின்றவர், இலங்கைப் பல்கலைக் கழகத்துள் நுழைந்தார். கணிதத்தில் பட்டம் பெற்றார். கணக்காளர் தேர்வுகளில் வெற்றி பெற்றார். பட்டயக் கணக்காளரானார். திருமணத்தின் பின் கயிலாயபிள்ளையும் அபிராமியும் கிருலப்பனையில் வாழ்ந்தனர். கயிலாயபிள்ளை கொழும்பு கொமேர்சல் கம்பனியில் பணிபுரிந்த காலங்களில் அவரை நெருக்கமாக அறியத் தொடங்கினேன். 
அன்பைக் குழைத்த சொற்களை அளவோடு பேசுபவர் கயிலாயபிள்ளை. பாசத்தையும் உரிமையையும் கலகலப்பாகக் கொட்டுபவர் அபிராமி.  ஒஸ்றின் கேம்பிறிட்சுக் கார் வைத்திருந்தனர். கயிலாயபிள்ளையும் ஓட்டுவார், அபிராமியும் ஓட்டுவார். அரவிந்தன், அருந்ததி என நன்மக்கள்.
அபிராமி நடத்திய நெசவாலையைக் கண்டு நான் வியந்த காலங்கள். பலருக்கு வேலை வாய்ப்பு வழங்கி வந்தனர். மாதச் சம்பளமே பெரிது, வணிகமோ, தொழிலோ ஏற்றதல்ல என்ற பொதுவான, வழமையான யாழ்ப்பாணத்து மனப்பாங்கை உடைத்து, தொழில் நடத்தி வெற்றி காணலாம் என்ற அவ் இணையரின் வினையூக்கத்தை வியந்தேன்.
1967 தொடக்கம் கொழும்பில் பணிபுரிந்தேன். திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, இந்து இளைஞர் மன்றங்கள், அனைத்துலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் அகதிகள் மறுவாழ்வுக் கழகம் என 1967 தொடக்கம் 1977 வரை என்னை அழைத்துப் பணி செய்யுமாறு கேட்டன பொது அமைப்புகள்.
1963 தொடக்கம் திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபையில் தொண்டன். 1967இல் என் ஆய்வுப் பணிக் களங்களுள் ஒன்று மன்னார். அக்காலங்களில் வழிபாட்டிடம் தொண்டிடம், உணவிடம், தங்குமிடம் திருக்கேதீச்சரம். விழாக்கள், நிகழ்வுகள் காலங்களில் அங்கு என் தொண்டுகள் விரிந்தன.
1974இல் கிருலப்பனைக்கு நானும் இடம் மாறினேன். வடக்கு வீட்டாரின் கிருலப்பனைப் பரப்பு மனைகளுள் ஒன்றை எனக்காக்கியவர் சண்முகராசா அண்ணர்.
பொது வாழ்வு
1975ஆம் ஆண்டளவில் போலும். நமசிவாயத்தார், சண்முகராசா அண்ணர், அண்ணியார், கயிலாயபிள்ளை, அபிராமி என ஐவரையும் திருக்கேதீச்சரத்தில் மகாசிவராத்திரி நாள்களில் அலுவலக அறைகளில் காணத் தொடங்கினேன். பொது வாழ்வில் கயிலாயபிள்ளை இணையரை நான் காணத் தொடங்கிய காலங்கள் அவை.
1977 இனக்கலவரத்துக்குப் பின்னர் கொழும்பை விட்டு நீங்கினனாதலால், இவர்கள் தொடர்புகள் குன்றின. கொழும்பு கொமர்சல் கம்பனியை விட்டு நீங்கினார் கயிலாயபிள்ளை. யோன் கீல்சுக் கம்பனியில் சேர்ந்தார்.
1983 ஆவணிக் கலவரங்கள் கொழும்பின் தமிழ் முகத்தை மாற்றின. சண்முகராசா என் அருமை அண்ணர், என் இல்ல நிலைகளைப் புரிந்து உதவியவர், அவர் மகன் நிருத்தன், அவர் மைத்துணர் மணிவாசகன், அம்மையப்பர் மகன் சிவநேசன் நால்வரையும் ஆவணிக் கறுப்பு வெள்ளிக்கிழமையன்று கொன்றார்கள். அவர்கள் மட்டுமல்ல, பல்லாயிரக்கணக்கான தமிழர்களுக்கு அந்தக் காலம் கடுமையான சோதனைக் காலம்.
வெறிச்சோடிய நிலையில், தமிழ் உணர்வாளர்களுக்குக் கடும் பஞ்சமான காலமாக, 1980களின் பிற்பகுதி அமைந்தது.  அந்தக் கடுமையான காலத்தில் தமிழ், சைவ அமைப்புகளைத் தோள் கொடுத்துச் சுமக்கத் தொடங்கியவர்களுள் கயிலாய பிள்ளையும் அபிராமியும் சிறப்பிடம் பெறுவர்.
தொண்டர்கள் நிறைந்த காலத்தில் அவர்களே செய்யட்டுமே என இருந்தவர்கள், துன்பமும் துயரமும் கொடுமையும் சூழ்ந்த காலத்தில் ஆற்றல், திறன், வலிமை, சாணக்கியம், தெளிவு, ஈடாடாமை, வழிகாட்டல் ஆகிய நல்லியல்புகளின் பெட்டகமாய் வடக்கு வீட்டாரின் பண்பட்ட முகங்களாய், கயிலாயபிள்ளையும் அபிராமியும் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய பணிகள் அளப்பில.
குழும ஆட்சி
யோன் கீல்சு நிறுவனத்தாரின் துரித வளர்ச்சிக்காகக் கயிலாயபிள்ளை உழைத்தார். பங்குச் சந்தையில் அக் கம்பனியின் பங்குகள் போட்டியிட்டன. பங்குதாரருக்கு வரி நீக்கிய வருவாய் பெருகியது. கயிலாயபிள்ளையே கொழும்பு பங்குச் சந்தை அமைப்பின் தலைவரானார்.
அரசின் கொள்கைகள், வரி விலக்கு முடிபுகள், தொழில் விரிக்கும் அறிவிப்புகள் யாவும் கயிலாயபிள்ளைக்கு, அவர் கணிணித் திறன் கண்ணோட்டத்துக்குத் தீனி போட்டன. கயிலாயபிள்ளையின் திட்டமிடல், செயலாக்கம், திறன் பெருக்கல், மாற்றுச் சந்தைகள், துறைகளின் பெருக்கம், நுகர்வோரின் மன நிறைவு, யாவும் யோன் கீல்சு நிறுவனத்தைத் துரிதமாக வளர்த்தன.
நிறுவனம் வளர்ந்தால் போதுமா? இவரின் பங்களிப்பை ஏற்கும் நிலை வேண்டுமே? கணக்காளராகச் சேர்ந்தவர், இயக்குநரானார், உயர்ந்து உயர்ந்து துணைத் தலைவரானார். நிறுவனமே இவர் ஆட்சிக்குள் வந்தது.
நிறுவனத் தலைவராகும் நிலைக்கு வந்தார். புலால் மறுத்தலும், கள்ளுண்ணாமையும், தன்னடக்கமும், எளிமையான அணுகுமுறையும் இவரின் வடக்கு வீட்டு முதுசங்கள். பெயரர் செல்லப்பாவின் ஊட்டங்கள். இல்லக் கிழத்தி அபிராமியின் எல்லைக்கோடுகள். விலகுவாரா? விட்டுக் கொடுப்பாரா? இம்மியளவும் பிறழ்வாரா? எனவே அவர் நிறுவனத் தலைவராக மறுத்தார்.
சிவனடியார், மனித நேயர்
திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, கொழும்பு விவேகானந்த சபை ஆகியன இவரின் தலைமையை ஏற்றன. 1992இல் அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவராகி, இலங்கை இந்துக்களின் வழிகாட்டியானார். அகில இலங்கைக் கம்பன் கழகமும் இவரின் துணை பெற்றது.
அக்காலத்தில் தலைவர் கயிலாயபிள்ளையும் செயலாளர் நீலகண்டனும் அனுப்பும் செய்திகளை, இந்தியாவின் இந்து அமைப்புகளுக்கும் அரசியலாருக்கும் எடுத்துரைக்கும் பணி என்னதாயிற்று.
இலங்கையில் இந்துக்கள் கதறினால் இந்தியா பதறுமாறு செயலாற்றினேன். விசுவ இந்து பரிசத்து, சிவ சேனை போன்ற அமைப்புகள், இந்திய நடுவண் அரசு, தமிழக மாநில அரசு என யாவருக்கும், இந்து மாமன்றச் செய்திகளை, கண்டனங்களை, குற்றச்சாட்டுகளை சென்னையில் இருந்தவாறு எடுத்துக் கூறினேன்.
இலங்கை அரசுடன் உராய்ந்து மோதினாலும் இசைந்து இணங்கி இந்துக்களின் நலன் பேணுவதில் கயிலாயபிள்ளையின் சாணக்கியம், நீலகண்டனின் அணுகுமுறை, யாவும் தமிழரின் பண்பாட்டு எல்லைகளைக் காத்தன, மற்றவர்களைக் கவர்ந்தன. இணங்காத தமிழ் அரசியல் கட்சிகளை இணைத்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கியதில், கயிலாயபிள்ளை இல்லத்தார் பங்கும் உண்டு. அவர் வீடே இசைவுக் களமாயிற்று.
இருபாலை அதிகார் நாகநாதனின் வழிவந்தவர் இரமேசர். என் மூத்த மகள் கயல்விழியை அவர் திருமணம் செய்யும் தள ஏற்படுகளைக் கயிலாய பிள்ளையும் அபிராமியுமே ஆற்றினர். இணைப்புப் பாலமாயினர். நுணுகிய கூறுகளுள் நுழைந்தனர். விரிந்த பரப்பை அமைத்தனர். அவர்களின் நுண்மா நுழைபுலத் தெளிவும் வடக்கு வீட்டுப் பொறுமை இயல்பும் இத்திருமணத்தை நடாத்தின. அவ்வாறே என் இரண்டாவது மகன் பிஞ்ஞகனின் திருமண ஏற்பாடுகளையும் அவர்களே முன்னின்று கவனித்தமையால் என் சுமையைக் குறைத்தனர்.
30 ஆண்டு காலப் போர். தோற்றவர் தமிழர். தோல்வியின் விளைவு அவலங்கள். அவலங்களைப் போக்கக் கயிலாயபிள்ளையும் அபிராமியும் அவர்கள் மக்களுமாய் உறவுகளுடன் சேர்ந்து அமைத்ததே மனிதநேயம் அறநிலை. போரின் அவலங்களைக் குறைத்துத் துடைக்கும் நிறுவனாமாக, பிறப்பு முதல் சுடுகாடு வரை, இந்துக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பக் கயிலாயபிள்ளை கடுமையாக உழைத்த தளம் மனிதநேயம் அறநிலை.
கோயில் திருப்பணி அடியவர்களின் கனவு. இறைவனின் ஒப்படைப்பு. தமிழகத்து நாயன்மார் இருவரைத் தன்னைப் பாடுமாறு பணித்த கேதீச்சரப் பெருமான், தமிழகத்துக் கருங்கற்களால் தன் திருக்கோயில் அமையப் பணித்தான்.
இந்தியத் தூரகம், இந்திய அரசு, இலங்கை அரசு யாவும் ஒருங்கிணைந்து கணக்கிலடங்காத் தொகைகளை இந்தியா கொடுத்துத் திருக்கோயிலை எழுப்பக் கேதீச்சரப் பெருமான் கயிலாயபிள்ளையைத் தேர்ந்தான். பேறுற்றவர் வேறெவர்?
யோன் கீல்சு நிறுவனத்தின் தலைமைப் பதவியை விழையாதவர். தன் வாழ்நாளிலேயே தன் சைவத் தமிழ்ப் பணிகளுக்கு வாரிசுகளைத் தேர்ந்தார். இந்து மாமன்றத்துக்கு நீலகண்டனைத் தலைவராக்கி, திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபைக்கும் அவரையே தலைவராக்கித் தனக்குப் பின்னரும் இலங்கை இந்துக்கள், அன்பு, அறம், அருள் பெருக்கும் அடித்தளத்தை அமைத்தார்.
அரசியல், வணிகம், தொழில், சட்டம் எனப் பல் துறைச் சிங்களவர் கயிலாயபிள்ளையை நேசித்தனர். கொஞ்சம் அசந்தால் ஈ. எல். சேனநாயக்கா முன்பு சொன்னது போல, சிங்கள மேட்டுக் குடியார், நாங்கள் கயிலாயபிள்ளையின் உறவினர்கள் என்பரோ?
தமிழரின் பண்பாட்டு முகமாக, ஆற்றல் முகமாக, திறமை முகமாக, ஒழுக்க முகமாக, செறிவு முகமாக, அமைதி முகமாகக் கயிலாயபிள்ளை வெளிப்பட்டார். அவர் மறைவு காலத்தால் மீளப்பெற முடியாத இழப்பு. ஈடு செய்வார் யார்?
கண்ணீர் நிறை துயரத்துடன் நெஞ்சார இரங்குகிறேன். அபிராமி, அரவிந்தன், அருந்ததி சார்ந்தோர் யாவரது துயரத்திலும் பங்கு கொள்கிறேன்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
மாசி 2048 (மார்ச்சு 2017)
ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே
    அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே
    உருகு வித்தால் ஆரொருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே
    பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே
    காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.
அப்பர், தி06095003


1 comment:

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT TO KNOW THIS HISTORY! THANKS!WRITE MORE PLEASE!