ஆத்திரேலியத் தொல்குடிகளை 1971இல் நேரில் பார்த்தேன். என்
உறவுக்காரராக இருப்பரோ என்ற ஐயம்? 2008 தொடக்கம் வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம்
நூல்களைப் படித்து வருகிறேன். சிட்னிப் பல்கலைக்கழக கூரி மொழி நிலையம் சென்றேன். நூலகர்
உமா மகேசன். ஆகா.. தமிழ்ப் பெண் இருக்கிறாரே என மகிழ்ந்தேன். தொல்குடி மொழிகளுக்கும்
தமிழுக்கும் உள்ள தொடர்புகளைத் தேடுகிறேன் என்றேன்.
அந்த மேசையில் அவர் ஒவ்வொரு நூலாக எடுத்து வைத்தார். 10 -
15 நூல்கள். அங்கு அடிக்கடி போய், அவற்றைப் படிப்பேன், தகவல் தேடுவேன். அந்நிலையக்
கூரிமொழியியல் புலமையாளர் இருவருடன் உமா வழி பழக்கமாயிற்று. தமிழ் அரிச்சுவடியைக் காட்டினேன்.
தமிழின் 30 எழுத்துகளும் கூரி மொழியில் உள்ள எழுத்துகள். அதற்கு மேலும் அம் மொழியில்
சில எழுத்துகள் என அவர் கூறினர்.
மொழியியலாளர் Robert Caldwell (1856), W. H. Bleek (1872), R. M. W. Dixon (1980), சமூகவியலளர் Robert Lawler (1991), Per Hage
(2001), N. J. Allen, மரபணுவியலாளர் Spencer Wells (1969), Ramasamy Pitchappan, Josephine Flood (2006), Alan Redd, Mark
Stoneking, Pellekaan, அத்தேடலில் தெளிந்தவையாக,
ஆகியோரின்
ஆய்வு ஆக்கங்களில் கிடைத்த செய்திகளைத் தொகுத்தேன்.
சென்னைக்கு
மீள்கையில் என் பயணப் பொதிக்குள் நான் வாங்கிய 10-15 நூல்களும் குறுந்தட்டுகளும் இருந்தன.
மீண்டதும்
தேடியதில் Simon Casie Chetty இலிருந்து Na. Si. Kanthaia Pillai வரை, பின்னர்
Maraimalai Adikal, Neelakanta Sastri, K. K.Pillai ஆகியோரின் குமரிக் கண்டக் கருத்தோட்டத்தில்
கூறியன தொகுத்தேன்.
ஆழமாக
அகலமாக ஆய வேண்டிய கருத்தியல் எனக் கருதினேன். எவ்வாறு ஆய்வை முன்னெடுக்கலாம் எனக்
கூறும் செயல் திட்டம் ஒன்றை எழுதினேன். செம்மொழித் திட்ட அலுவலகம் சென்றேன். அப்பொழுது
மொழியியலாளர் பேரா. இராமசாமி பொறுப்புத் தலைவர். என் அறிக்கையை ஏற்று, 3 இலட்சம் ரூபாய்
நிதி ஒதுக்கினர். பயணச்சீட்டுகள் வாங்கவோ, வெளிநாட்டு அறிஞர்களுக்கு ஊதியம் கொடுக்கவோ
அத்தொகையில் எடுக்கமுடியாது என்றார் அவரின் கணக்காளர். ஒரு கருத்தரங்குக்காக நான் அழைக்க
விழைந்தோரில் சென்னையில் பேரா. மதிவாணன், இராமநாதன், மதுரையில் இராமசாமி பிச்சப்பன்
மூவரைத் தவிர, மற்றவர்கள் ஆத்திரேலியாவில் இருந்தனர். அத்திட்டம் அப்படியே கிடப்பிலாயது.
2011இல் அடிலாயிட்டுப் பல்கலைக்கழகத் தொல்குடிநிலையத்தில்
மொழியியலாளரைச் சந்தித்தேன். தொல்குடி மொழிகளின்
வரிவடிவங்கள் முழுமை பெறவில்லை. ஞ, ங, ந, ன, ண, ற, ர, மெய் ஒலிகளுக்கான பொருத்தமான
உரோம வரிவடிவங்களில் மேற்குறிகள் சேர்த்தே எழுதவேண்டியுளது. காலத்துக்குக் காலம் ஆய்வாளர்
புதிய ஒலிகளைக் கண்டு பிடிக்கின்றனர் என்ற செய்தியைச் சொன்னார். அதனால் அந்த மொழிகளின்
பாடநூல்கள் காலத்துக்கு காலம் வேறாகும் அகர முதலிகளைக் கொண்டுள்ளன, என்றார். அவர் காட்டிய
தொல்குடி அகரமுதலிக்குக் கிரந்த அல்லது தமிழ் வரிவடிவங்களே பொருத்தமானயைக எனக்குத்
தோன்றியது.
பசிபிக் கடலில் ஈசுரர் தீவுகளில் Easter Islands தமிழ் சார்ந்த
தொல் கல்வெட்டு உளதாகவும், மு Mu இனத்தவரே தமிழரின் பண்டைய முன்னோர்கள் எனவும் செய்திகள்
கொண்ட ஆங்கில நூலொன்றை பொள்ளாச்சி நா. மகாலிங்கம் என்னிடம் தந்தார். அந்தச் செய்திகளையும்
உள்வாங்கினேன்.
யேர்மனி, மார்சு பிளாங்கு ஆய்வக மானுடக் கூர்மையியல் அறிஞர்
Dr Irina Pugach, 2016இல் Nature ஆய்விதழில் எழுதிய கட்டுரையையும் படித்தேன்.
R. H. Mathews (1841-1918), மற்றும் இந்த நூற்றாண்டின் புகழ்பூத்த
மொழியியலாளர் Jonathan Harrington ஆகியோரின் ஆக்கங்களைப் நேற்றுப் படித்தேன்.
Jonathan Harrington ஆத்திரேலிய Macquarie University இதழில்
எழுதிய கட்டுரையில் தொல்குடிகளின் மொழிகளின் அகரமுதலியை International Phonetic
Alphabets வடிவங்களில் பட்டியலாக்கியதைப் பார்த்தேன். 2009இல் மொழியியலாளர் புனல் க.
முருகையன் என் வேண்டுகோளை ஏற்றுப் பன்னிரு திருமுறை ஒலிபெயர்ப்பு என்ற நூலை ஆக்கினார்.
தமிழின் 31 வரிவடிங்களில் 100 தமிழ் ஒலிகள்,
அவ்வொலிகளுக்கான International Phonetic Alphabets வரிவடிவங்களாக் தந்திருந்தார்.
Jonathan Harringtonனின் பட்டியலைப் புனல் க. முருகையனின்
பட்டியலுடன் ஒப்பிட்டேன். தமிழின் ஐந்து உயிர் எழுத்து, அவற்றுக்கான நெடில் எழுத்து,
வல்லின, இடையின, மெல்லினமாக18 மெய்யெழுத்து யாவும் அப்படியே தொல்குடிகள் வரிவடிவங்கள்.
தொல்குடிகளுக்கு 20 மெய்கள்.
பட்டியலாக்கினேன், படங்கள் பார்க்க.
No comments:
Post a Comment