ஆங்கிலேயர்
தொழிநுட்பக் கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாகச் செய்து புதுப் பெயர்களைச் சூட்டி வருவாராம்.
தமிழர் அப்பெயர்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதிலேயே காலம் கடத்துவராம்,
புதிதாகத் தொழிநுட்பத்தைத் தாமே உருவாக்காராம்
தமிழர்
0 கண்டு பயனாக்கிய காலங்களில் 0 மற்றும் தசம் தெரியத ஐரோப்பியர். உலகம் உருண்டை எனத்
தமிழர் கண்ட காலங்களில் உலகம் தட்டை என்றும் பின்னர் உலகம் உருண்டை என்று சொன்னவரைக்
கொடுஞ் சிறையில் அடைத்த ஐரோப்பியர்.
குறுந்தொகையில்
மலர்களின் பட்டியலைத் தமிழர் அடுக்கிய காலத்தில் தாவர அறிவியல் நாடாத ஐரோப்பியர்.
தமிழரின்
அறிவியல் வளர்ச்சியைத் தடுத்து, செல்வங்களைக் கொள்ளையடித்துத் தம் நாடுகளைக் கட்டி
எழுப்பினர்.
கடலில்
கப்பல் கட்டும் கலையிலாயிலென், நிலத்தில் கட்டடம் கட்டும் கலையிலாயிலென், வானத்தில்
விண் மீன்களைக் கணக்கிடும் கலையிலாயிலென், சூரியனே உணவு உற்பத்தியின் கரு ன்பதால் பொங்கல்
பொங்கிச் சூரியனுக்கு நன்றி கூறுவதிலாயிலென், அறிவியல் சார் தொழிநுட்பத்தில் தமிழரின்
வளர்ச்சி முயற்சி பற்றிய நூல்கள் பல உள.
உலகமயமாக்கல்
என்பது ஐரோப்பிய மயமாக்கலே அன்றி வேறல்ல.
கடந்த
60 ஆண்டுகளில் தமிழர் உருவாக்கிய தொழிநுட்ப வல்லுநர்கள், திருநெல்வேலி மற்றும் மதுரைச்
சிறுமிகள் முதலாகச் சிதம்பரத்துச் சுந்தர் பிச்சை வரை இலட்சக் கணக்கான தமிழரின் தொழிநுட்ப
அறிவு, மேனாட்டுத் தொழிநுட்ப வளர்ச்சிக்குத் தமிழர் இட்ட பிச்சை.
சிலிக்கன்
பள்ளத்தாக்கில் பணியாற்ற உலகெங்கும் உள்ள மூளை வளத்தைக் கொண்டு செல்ல, கீழைத் தேயத்தில்
கொள்ளை கொண்ட செல்வமும் ஆபிரிக்க நாட்டுக் கறுப்பரின் உடல் உழைப்பும் அடித்தளங்கள்.
இத்தகைய
மேனாட்டார் புதிய தொழிநுட்பங்கைளைக் கொனர்ந்தால், அவர்கள் சூட்டும் புதிய பெயர்களைத்
தமிழில் கொள்ளவேண்டுமாம். தமிழ் மொழிபெயர்ப்புகள் தேவை இல்லையாம்.
காலம்
காலமாக அயல் மனிதக் குழுமங்களுடனா தமிழர் தொடர்பில் அங்கிருக்கும் சிறந்த கூறுகளைத்
தமிழுக்குக் கொணர்கையில், தமிழ் தோய்ந்த பெயர்ப்புகளையே காலம் தக்கவைத்தது. இராமாயணத்தைத்
தமிழாக்க முயன்ற பெரியவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள நடையிலான நூலைத் தேடுவார் யார்?
கம்பனைத் தேடாதார் யார்?
கண்ணால் பார்க்கலாம், கண்ணாடி தேவை எனில் அதன் வழி பார்க்கலாம்.
நல்ல மாம்பழம் இருக்க மாங்காயைத் தேடலாமோ?
வேர்ச் சொற்கள் புதைந்து பொலிந்து கிடப்பது தமிழச் சொற் களஞ்சியம்.
ஆயினும் காலத்துக்குக் காலம் பிறமொழிச் சொற்களின்
(பாளி, பிராகிருதம், வடமொழி) ஒலிபெயர்ப்பைத் தமிழ்ச் சொற்களாக்கும் முயற்சி தொடர்ந்துள்ளது.
தொல்காப்பியர் கோட்டிட்டுக் காட்ட, நன்னூலார் சிறிதே விளக்க, வீரசோழியத்தார் ஒலிபெயர்ப்புக்குத்
தற்பவம், தற்சமம் என்ற வழிகாட்டலை விட்டுச் சென்றார். தற்பவம் = வடமொழிக்கே உரிய சிறப்பு எழுத்தாலும்; சிறப்பு, பொது இருவகை எழுத்தாலும் அமைந்து, தமிழுக்கு ஏற்ப மாறுபட்டு (விகாரம் அடைந்து) தமிழில் வழங்கும் வடசொல். தற்சமம் = வடமொழிக்கும் தமிழுக்கும் பொதுவான எழுத்துகளால் அமைந்து மாறுபடாமல் (விகாரம் அடையாமல்) தமிழில் வழங்கும் வடசொல்.
சேர் பொன்னம்பலம் இராமநாதனும் வடமொழி ஒலிகளைத் தமிழுக்குப்
பெயர்க்க ஒரு பட்டியலைத் தன் நூலில் காட்டினார்.
மேனாட்டாரின் மொழிகள் தமிழருக்கு வந்தபின், தமிழ்
ஒலிகளை உரோம வரிவடிவத்துக்கு எடுத்துச் செல்ல, எழுத்துருப் பெயர்ப்பாக, சென்னைப் பல்கலைக்
கழகம் வெளியிட்ட தமிழ் கலைக்களஞ்சியத்தில் Tamil Lexicon ஒரு பட்டிலைத் தர, தமிழ் ஆராய்ச்சியாளர்
அவற்றையே எடுத்தாண்டனர்.
தமிழிலிருந்து உரோம வரிவடிவங்களுக்கான எழுத்துப் பெயரப்புக்கு அனைத்துலகத் தராதர அமைப்பு ஒரு பட்டியலைத் தந்துள்ளது. (ISO 15919)
சுவீடனில்
தமிழ்நெற்றுத் தளத்தினர் தமிழை ஆங்கில வடிவடிவங்களுக்குக் குறிகள் சேர்க்காது கணிணி
விசைப்பலகை வழி எடுத்துச் செல்லும் அரிய முயற்சியால் ஒலிபெயர்ப்புக்கு உரோம வரிவடிவம்
கொடுத்தனர்.
பன்னிரு திருமுறைகளை மற்ற மொழிகளுக்கு ஒலிபெயர்க்கும்
முயற்சியில் ஈடுபட்டேன். பேராசிரியர் முருகையன், என் அழைப்பை ஏற்று அனைத்துலக ஒலியன்களுடன்
IPA தமிழ் ஒலிகளை ஒப்பிட்டு 100 தமிழ் ஒலிகளைத் தமிழில் அடையாளம் கண்டார். அவரது கருத்துரைகளை
நூலாக்கினேன். அவரது மாணவர் பேராசிரியர் தெய்வசுந்தரம் அந்த நூல் வெளியீட்டு விழாவைச்
சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடாத்தினார்.
எழுத்துப் பெயர்ப்புக்கும் transliteration ஒலிபெயர்ப்புக்கு
transcription இவை இக்கால முயற்சிகள்.
பிற மொழிச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவர எழுத்துருப்
பெயர்ப்போ, ஒலிபெயர்ப்போ வேண்டாம், தமிழ்ச் சொற்களாலேயே தரவேண்டும் என்ற தமிழ் ஆர்வலரின்
கருத்துக்கமைந்த அரசுசார், மற்றும் தணியார் முயற்சிகளே கலைச்சொற் தொகுதிகள். இலங்கை
அரசு 44 தொகுதிகளை வெளியிட்டுள்ளதே! தமிழ் நாட்டில் கோவை கலைக் களஞ்சியம் இதழார், மணவை
முசுத்தாபா, தமிழக அரசு, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக் கழகம்
எனவும் பிறவுமாகப் பல்வேறு தொகுதிகளை வெளியிட்டு உள்ளனர்.
1986இல் சென்னையில்
தமிழுக்குப் புதிய தொழிநுட்பம் அறிமுகமாகி, அச்சுக் கோர்வை கணிணிமயமாகியது. நானும்
ஓர் எந்திரத் தொகுதியைத் தமிழ் நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் கடனுதவியுடன் வாங்கினேன்.
நாளுக்கு 16 ஊழியரின் மூன்று காலப் (6-14, 14-22, 22-6 = 3 x 8 =24) பணி. கலைஞர், மணியன்
எனத் தமிழக முன்னணி எழுத்தாளர், தமிழக முன்னணி வார, மாத இதழ்கள் என என் வாடிக்கையாளர்.
கை அச்சுக் கோர்வை பரவலான காலம். Photo-type
setting சொல்லுக்கு ஒளி அச்சுக் கோர்வை என்ற தமிழ்ச் சொல்லை அறிமுகம் செய்தேன். Font
= எழுத்துரு, condensed = குறுங்கு, expanded = விரிவு, point = புள்ளி எனப் பல சொற்களையும்
அச்சு மாதிரிகளையும் கொண்ட விலைப் பட்டியல் தயாரித்தேன்.
சென்னை அச்சகத்தார் சங்கத்துக்காக நூலைப் பக்கமாக்கும் அச்சுத் தொழில் பயிற்சி அளித்தேன்.
தமிழ்ச் சொற்களையே முழுதாகச் சொன்னேன். அண்மையில் யாழ்ப்பாணத்தில் அரிகணணன் அச்சக ஊழியருக்கு
ஒரு வார காலம் அதே முறையில் பயிற்றுவித்தேன். தனித் தமிழ் ஆர்வலர் கிளிநொச்சி இறை பிள்ளை
அவர்களையும் இப்பயிற்சிக்கு அழைத்தேன்.
இன்று தமிழகம் முழுவதும் அச்சொற்கள் பயனில் உள.
தமிழகத்தில் அச்சிட்ட நூல் ஒன்றில், தலைப்புக்கு அடுத்த அச்சுத் தகவல் பக்கத்தில் ஒளி
அச்சு என்ற சொல்லையே காண்பீர்கள். DTPக்கும் அச்சொல்லே வழங்குகிறது.
அட்லஸ் எனப் பயனில் இருந்த சொல். நிலவரை என நான் சொன்னேன். புறநானூற்றுப் பாடல்
(72) வரியில், (புலவர் பாடாது வரைகஎன் நிலவரை) வந்த சொல். நிலவரை நூலின் படி ஒன்றை
முதலமைச்சர் செயலலிதாவுக்கு அனுப்பினேன்.
அதன் பின்னர் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் இலவய நிலவரை கிடைக்கச்
செய்தார். சட்ட சபையில் தன்னுரையில் நிலவரை என்ற சொல்லையே சில ஆண்டுகளாகக் கூறி வந்தார்.
பார்க்க அவரின் நிதிநிலை, கல்வி ஒதுக்கீடுகள் உரை.
ஆக்சுபோர்டு, பிளாக்கி நிறுவனங்கள் என்னிடம் ஒப்புதல் கேட்டு,
நிலவரைக்கு மாறின. யாழ்ப்பாணத்தில் செங்கை ஆழியானும் நிலவரைக்கு மாறினார்.
இவையொத்த பல தொழிநுட்பச் சொற்களைத் தமிழாக்கி, என் 20 ஆண்டு காலச் (1986-2006) சென்னை வாழ்வில் காந்தளகம் பதிப்பகம் வழி அறிமுகம்
செய்தேன். அவ்வாறே என்னையொத்த ஆர்வலர்களின் தமிழாக்கங்களை விரைந்து உள்வாங்கினேன்.
தமிழால் முடியும் என்ற கருத்தை ஊக்குவிப்பதில் தலைநகர்த் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல
அமைப்புகளில் பணிபுரிந்தேன். தமிழகத்தின் பல ஊர்களில் தமிழுக்கான முழக்க ஊர்வலங்களில் பங்குகொண்டேன். விளம்பரத் துண்டுகளைக் கடையாக எறிக் கொடுத்தேன்.
பெயர்ச் சொற்களையுமே கடந்த தலைமுறையில் தமிழாக்கித் தந்தனர். நன்னம்பிக்கை முனை
= Cape of Good Hope. Carrying coal to New Castle = புதுக்கோட்டைக்குக் கரி கொண்டு
செல்வது போல.
முடிந்தவரை தமிழ்ச் சொற்களை ஆளவேண்டும். தேடித் தேடி, துளாவித் துளாவி எடுத்தாள
வேண்டும். கனி இருப்பக் காய் கவரலாமோ? கண் பார்வை உள்ளவருக்குக் கண்ணாடி ஏன்?
No comments:
Post a Comment