Wednesday, May 10, 2017

உமையாள்புரத்தார்.

சித்திரை 27, 2048 (09.05.2017) 

பாரத இரத்தினா விருது. இந்தியாவின் ஆக உச்சமான அரச விருது. அதற்கு அடுத்த விருது பத்ம விபூசணர் விருது. மிகச் சிறந்த விற்பன்னர்களான இந்தியர்கள் மட்டுமே பத்ம விபூசணராவர். நூற்றிருபது கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், விடுதலைக்குப்பின்னரான 70 ஆண்டுகளில் சில நூறு பெயர்களே பத்ம விபூசணர்கள். அவர்களுள் ஒருவர், 80 வயதான உமையாள்புரம் சிவராமனார். 
அவர் 2010இல் பத்ம விபூசணர். மிருதங்க விற்பன்னராதலால் அவருக்கு விருது. அவருடைய மிருதங்க வாசிப்பு உலகப் புகழ் பெற்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உலகின் பலநாடுகளிலும் அவருக்குச் சுவைஞர் உளர்.
தில்லியின் சங்கீத நாடக அகதமிப் புலமைப் பரிசாளர் (2011). கேரளப் பல்கலைக் கழக மதிப்பார்ந்த முதுமுனைவர் (2010). பத்ம விபூசணுக்கு முந்தைய பத்ம பூசணர் (இந்திய அரசு 2003), அதற்கும் முந்தைய பத்ம சிறீயினர் (இந்திய அரசு,1988). தமிழக அரசின் கலைமாமணியினர் (1992). தென்னாட்டின் தலைநகரங்களில் உள்ள புகழ்பூத்த இசை, நடன, நாடகச் சபைகளின் விருகளின் பட்டியலை இங்கு இணைக்கின் இப்பக்கமே கொள்ளாது.
விருதுகள், பாராட்டுகள், போற்றுதல்கள், வாழ்த்துகள் என வாழ்வாங்கு வாழ்பவர் என்னிடம் சொன்னார், எனக்குக் கணிணி தெரியாது, கைப்பேசி தெரியாது, ஆனால் கொஞ்சமூண்டு மிருதங்கம் தெரியும் என. அத்தைகய தன்னடக்கத்தின் சொந்தக்காரர். இயல்பில் இனியவர். பழகுவதற்கு எளியவர்.
2015 ஆனியில் ஒருநாள். சென்னை, தியாகராய நகர், கிருட்டின கான சபையில் உமையாள்புரத்தார் தயாரித்த நாட்டிய நிகழ்ச்சி. முன் வரிசையில் இருந்து பார்த்துக் கேட்டுச் சுவைத்தேன். பல் வகைக் கலைஞர்கள் உமையாள்புரத்தாரின் மிருதங்கத்துக்கு இசைந்த நிகழ்ச்சி. வீட்டுக்கு வந்ததும் என் உள்ளம் மிதந்திருந்தது. என் மனத்தின் இனிமையை அப்பொழுதே சொற்களாக்கினேன். ஆங்கிலத்தில் எழுதினேன். முகநூலில் குறித்தேன். 
படித்த பலருள் மயிலாப்பூர் இரைம்சு இதழ் ஆசிரியர் என்னை அழைத்துப் பாராட்டினார். தன் இதழில் வெளியிட விரும்பினார். தொடர்ந்து இசை நடன நிகழ்ச்சிகளை ஆங்கிலத்தில் விமர்சிக்கக் கேட்டார். தன் இதழுக்கு எழுதமுடியுமா என வினவினார். என் குறிப்பை எடுத்துச் சென்று உமையாள்புரத்தாரிடம் கொடுத்துக் காலில் வீழ்ந்து வணங்கினேன். என்னை வாழ்த்தினார்.
ஈழத்தின் புகழ்பூத்த தவில் கலைஞர் கணேசபிள்ளை. அவருக்கு மானசீகக் குரு உமையாள்புரம் சிவராமனார். கணேசபிள்ளையின் மகனின் பெயர் சிவராமன். உமையாள்புரத்தாரை நேரில் சந்தித்துப் பழகாமல் அவரின் மிருதங்க இலயத்தில் மூழ்கிய கலைஞர் கணேசபிள்ளை, தன் மகனுக்குச் சிவராமன் எனப் பெயரிட்டவர். பிற்காலத்தில் சிவராமனரிடம் மகனை அழைத்து வந்து வாழ்த்துப் பெற்றவர்.
உமையாள்புரத்தாருக்கு இலங்கையில் நேரடி மாணவர் பலர். கடந்த 30 ஆண்டுப் போர்ச் சூழலால் அம் மாணவர்களுட் பலருடன் தொடர்புகள் அற்றன. எனினும் கணேச சர்மாவின் மகன் சுவாமிநாதன் இப்பொழுதும் கொழும்பில் உள்ளார். அவ்வாறே மேனாள் தேர்தல் துறை மூத்தவர் இரட்டினதுரையின் மகன் பிரகலாதன் மேற்கு நாடு ஒன்றில் உள்ளார். 80 வயதான உமையாள்புரத்தாருக்கு நினைவுகளில் இவர்களே தெரிகின்றனர்.
மகாராசபுரம் சந்தானத்தார் குரலிசை. உமையாள்புரம் சிவராமனார் மிருதங்கம். இளம் கலைஞனாகத் தம்புரா வாசித்துப் பிற்பாட்டாளராக இருந்தவர், இன்றைய மூத்த கலைஞர் கருணாகரனார். உமையாளபுரத்தாருடன் மேடையைப் பகிர்ந்த நினைவுகளுடன் வாழ்பவர் கொழும்புக் கலைஞர் கருணாகரனார்.
மகாராசபுரம் சந்தானத்தார் யாழ்ப்பாணத்திற்குச் சு. நடேசபிள்ளையார் அழைப்பை ஏற்று வந்தவர். சுண்ணாகம் இராமநாதன் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் இசை கற்பித்தவர். உமையாள்புரத்தார் இந்தச் செய்தியை என்னிடம் பகிர்வார். யாழ்ப்பாணம் வரவேண்டும், தங்கவேண்டும், கலைஞர்களுக்குப் பயிற்சி கொடுக்கவேண்டும் என என்னிடம் அடிக்கடி கூறுவார். ஈழத் தமிழருக்குக் கோயில் என்றாலே சிதம்பரம் என என்னிடம் தெரிவிப்பார். ஈழத் தமிழர் மீது அத்துணை ஈடுபாடும் அன்பும் பாசமும் உமையாள்புரத்தாருக்கு.
கடந்த ஓராண்டு காலமாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தாருடன் உமையாள்புரத்தாரின் கலை ஈகை / நல்கை வாய்ப்புப் பற்றிப் பேசி வருகிறேன். இந்தியத் துணைத் தூதரக்த்துடனும் பேசி வருகிறேன். 
உமையாள்புரத்தாருக்கு ஆண்மக்கள் இருவர். திருமணமாகிச் சிறந்த பணியாற்றுவோர். இளைய மகன், மருமகள், பெயர்த்தி, உமையாளபுரத்தார், இல்லக் கிழத்தியார் ஐவரும் ஆறு நாள்கள் இலங்கைக்குச் சுற்றுலா வருகின்றனர். 
சென்னைக் கோடையின் வெம்மையைத் தணிக்க இலங்கையின் மலையகத்தை நாடும் தன் மக்களிடம் யாழ்ப்பாணம் போகவேண்டும், இராமநாதன் கல்லூரியைப் பார்க்கவேண்டும், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைப் பார்க்கவேண்டும் என்ற விருப்பத்தை வெளியிட்டார். 
கண்டி, நுவரெலியா, வெந்தோட்டை எனச் சுற்றுலா மையங்களைக் கூறிய பயண முகவர், யாழ்ப்பாணமா? நெடுந்தொலைவில் உள்ள ஊர், அனல் காற்று வீசும் ஊர், குண்டும் குழியுமான சாலையில் நெடும் பயணம், பாதுகாப்புக் குறைவு என்றெல்லாம் கூறியதால் உமையாள்புரத்தார் சோர்வடைந்தார்.
என்னைத் தொலைப்பேசியில் அழைத்தார். உங்கள் ஊருக்கு நான் போகவேண்டும். யாழ்ப்பாணத்தில் மிகச் சிறந்த கலைஞர் உளர், அறிஞர் உளர், புலமையாளர் உளர், அவர்களைச் சந்திக்காமல் என்ன இலங்கைக்குப் பயணம்? என்றார். இந்தப் பயண முகவர் அச்சுறுத்துகிறாரே, நிலைமை அப்படியா? எனக் கேட்டார்.
வெயில் எறித்தாலும் கலைஞர், புலமையாளர் உங்களைக் குளிர்விப்பர் என்றேன். பல்கலைக்கழகமும் இராமாநாதன் இசைப் புலமும் உங்களை மகிழ்விக்கும் என்றேன்.
கொழும்பில் மூத்த மேனாள் ஆட்சியர் தயாபரன் நீலா இணையர், கலைஞர் கருணாகரனார், ஊடகத்தின் தனபாலசிங்கத்தார் என அன்பர்களின் உமையாள்புரத்தாரின் கொழும்பு வருகை (15.5, 16.5) ஒழுங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலர் வேதநாயகன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. விக்கினேசுவரன், நீர்வேலி மயூரகிரிசர்மா ஆகியோரின் யாழ்ப்பாண வருகை (13.5, 14.5) ஒழுங்கு. 
கொழும்பில் கலைஞர் வரவேற்பு, யாழ்ப்பாணத்தில் கலைஞர் வரவேற்பு இவை கண்டி, நுவரெலியாக் குளிர்மையை விடக் கூடுதலான இதமான இனிமையான குளிரூட்டலை உமையாள்புரத்தாருக்கும் துணைவியாருக்கும் தரும். வெந்தோட்டையின் நெய்தல் மென்மையைவிடக் கூடுதலான மென்மையையும் இனிமையையும் உமையாள்புரத்தாருக்குத் தரும். 
10.5 புதன்கிழமை நண்பகல் கொழும்பை வந்தடைகிறார். 11.5, 12.5 கண்டியிலும் நுவரெலியாவிலும் மக்களுடன் தங்குகிறார். 13.5, 14.5 யாழ்ப்பாணத்தில் இருப்பார். அவரது மக்கள் வெந்தோட்டை செல்வர். 80 வயதானாலும் யாழ்ப்பாணத்தின் ஈர்ப்புக்கு முன் மற்றவை தூசு எனத் துணைவியாருடன் யாழ்ப்பாணம் செல்கிறார். 15.5, 16.5 இரு நாள்களும் கொழும்பில். 16.5 பிற்பகல் சென்னைக்குப் புறப்படுகிறார். 
இசைக் கருவி எதையும் கொண்டு வராததால் இசை நிகழ்ச்சி எதிலும் பங்கேற்கமாட்டார். இசை நிகழ்ச்சிக்காக, கலைஞர்களைப் பயிற்றுவிக்க விரைவில் இலங்கைக்கு மீண்டும் வருவேன், யாழ்ப்பாணத்தில் தங்குவேன் என்கிறார், 80 வயதிலும் இளமை துள்ளும் இனிய உள்ளத்தார் உமையாள்புரத்தார்.
இலங்கையில் இசை, நடன, நாடகக் கலைஞர்கள் வரவேற்பு நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டும். கொழும்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர் கலைஞர் கருணாகரனார் + 94 779548039. யாழ்ப்பாண நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வோர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. முனைவர் விக்கினேசுவரன் +94 21 2222294, யாழ்ப்பாண மாவட்டப் பிரதேசச் செயலர் / அரசாங்க அதிபர் திரு. வேதநாயகன். கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஒளி, ஒலி, அச்சு ஊடகங்களார் வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தத்தம் ஊடகங்களில் பதிவார்களாக, கலைஞர்களையும் சுவைஞர்களான மக்களையும் ஊக்குவிப்பார்களாக.

No comments: