Sunday, February 19, 2017

சிட்னியில் நிகழ்ந்த "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலத்திற்கு"



நேற்றைய சனிக்கிழமை மாலைப்பொழுது செந்தமிழும்,சைவமும் கலந்த செவிக்குணவு வாய்த்த மணித்துளிகளோடு கழிந்தது. சனிக்கிழமை மாலை என்பது நம் தமிழர் மரபுப்படி விருந்துண்டு கழித்து இலங்கைப்பிரச்சனையில் இருந்து சூடான் வரைக்கும், சிவாஜியில் இருந்து சிம்பு காலம் வரைக்கும் அலசி ஆராய்ந்து பேசி மகிழ்வது அல்லது அந்த வாரம் வந்த படங்களைச் சூட்டோடு சூடாக இரண்டு டொலர் டிவிடியில் பார்த்து முடிப்பது போன்ற இன்னோரன்ன அரும்பணிகளுக்காக ஒதுக்கப்படுவது. 

இப்படியானதொரு கலாச்சாரச் சூழலில் உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியக் கிளை நிகழ்த்திய "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம் வரை" என்ற நிகழ்வை அமைத்த ஏற்பாட்டாளர்களும் அவ்விதமே எண்ணத்தலைப்பட்டு ஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப்பாடசாலையின் ஒரு சிறு வகுப்புக் கூடத்தை இந்த நிகழ்ச்சிக்காக எடுத்திருந்தனர். ஏற்பாட்டாளர்களின் நம்பிக்கைப்படி ஒரு இருபது பேர் வந்தாலே பெருங்கூட்டம் என்ற நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அன்பர்கள் குழுமி, வகுப்பறையை நெருக்கியவாறு கூட்டம் களைகட்ட, ஏழுமணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்வு சம்பிரதாயப்படி மாலை 7.20 இற்கு ஆரம்பமாகியது. இரவு ஒன்பது மணிக்கு முடியவேண்டிய நிகழ்வு 10.30 மணி வரை ஒரு செல்போன் அழைப்பொலி கேட்டாலே பூகம்பம் வந்தது போன்ற அமைதியோடு, வந்திருந்த அனைத்து அன்பர்களும் தமிழின்பமும், பக்திச் சுவையும் கலந்த அந்த மாலைப்பொழுதைப் பெருவிருப்போடு கழித்தனர்.

உலக சைவப்பேரவை ஆஸ்திரேலியக் கிளை சிட்னியில் இருக்கும் நூற்றுச் சொச்சம் தமிழ் அமைப்புக்களில் மிகவும் சின்னது. ஆனால் என்ன மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது என்பதற்குச் சான்றாக இந்த "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம்" என்ற நிகழ்ச்சியை நேர்த்தியோடு வழங்கிய அவர்களின் செயற்திறனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
செல்வி யாகவி.சோமசுந்தரம் தேவாரத்தோடு நிகழ்வை ஆரம்பிக்க, தொடர்ந்து திரு. கணபதிப்பிள்ளை தம்பதியினர் மங்கல விளக்கேற்றி, கடந்த ஆண்டில் இருந்து சமீபம் வரை தமிழுக்கும் சைவத்துக்கும் உழைத்த ஆன்றோர்களின் மறைவுக்கு அஞ்சலி நிகழ்த்தும் விதமாக எல்லோரும் ஒன்று கூடிக் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" பாடி மனமாரப்பிரார்த்தித்தோம். 

உலக சைவப்பேரவையின் துணைத்தலைவர் திரு.பொ.இளங்கோ வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து மறைந்த சைவப்பெரியார்கள் குறித்த அஞ்சலிப்பகிர்வு அமைந்தது. திரு மா. அருச்சுனமணி அவர்கள் சைவப்பெரியார் கு.வைத்தியநாதன் அவர்கள் பற்றிப் பேசும் போது அவர் வாழும் காலம் முழுதும் சைவத்துக்குச் செய்த பணியைச் சுருக்கமாகவும் அழகாகவும் சொல்லி வைத்தார். கடந்த 2010 ஆம் ஆண்டில் கனடாவில் நிகழ்ந்த உலக சைவப்பேரவை நிகழ்வில் கு.வைத்தியநாதன் அவர்களைச் சந்தித்தபோது கண்டிப்பாக ஆஸ்திரேலியா வருவேன் அழையுங்கள் என்று சொன்ன கு.வைத்தியநாதன் ஐயா அவர்களின் இழப்பைப் பேரிழப்பாகக் கருதுவதோடு, சிட்னியில் சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்துவதற்கு முதலில் கு.வைத்தியநாதன் அவர்களையே அணுகியதாகவும் ஆனால் அப்போது அவரது உடல் நலம் குன்றியிருந்ததால் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார். கு.வைத்தியநாதன் அவர்கள் சைவ சித்தாந்த வகுப்பைக் கொடுக்கும் அனுபவத்தைத் தான் தமிழகம் சென்று பார்த்த போது முன்னூறுக்கும் மேற்பட்ட அன்பர்கள் மாணவர்களாகக் கூடியிருக்க, ஆறேழு மணித்தியாலங்கள் அவர் கொடுக்கும் அழகான பொருள் பொதிந்த விளக்கங்கள் சிறப்பு மிகுந்தவை, பலர் ஆறேழு வருடங்களாக இந்த இனிய அனுபவத்தைப் பெறுவதற்காகவே மீண்டும் மீண்டும் இவ்வகுப்புக்களில் சேர்ந்து கொள்வார்கள் என்றபோது கு.வைத்தியநாதன் அவர்களின் இழப்பின் கனத்தைப் புரிய முடிந்தது.

அடுத்து தூத்துக்குடி சண்முகவேல் என்ற சைவப்பெரியார் குறித்து அதே இடத்தில் இருந்து வந்த அன்பர் திரு மா.நாராயணன் தம் அஞ்சலிப்பகிர்வை வழங்கியிருந்தார். இந்த நிகழ்வின் விழா நாயகர் திரு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள் செய்து கொண்டிருக்கும் பெரும்பணியான இணையத்தில் தேவாரப்பதிகங்களைத் திரட்டும் பணியில் தூத்துக்குடி சண்முகவேல் அவர்களின் முனைப்பும், பங்களிப்பும் பின்னர் இது இசைவடிவத் தளமாக மாறுவதற்கான பணியாக இருந்ததையும் குறிப்பிட்டிருந்தார்.


தருமபுரம் சுவாமிநாதன் அவர்களின் பெயரை அறியாதோர் பலர் இருக்கக் கூடும் ஆனால் அந்தப் பெரியாரின் கணீர்க்குரலில் பதிந்து ஆலயங்கள் தோறும் பரவும் தேவாரப்பாடல்களின் குரலுக்குச் சொந்தக்காரர்.தருமபுரம் சுவாமிநாதன் 
அவர்கள் கடந்த ஆண்டு இறையடி சேர்ந்தார், அவர் குறித்த அஞ்சலியைப் பாடல்களைப் பாடிப் பகிர்ந்தார் திரு வனதேவா அவர்கள்.

அஞ்சலிப் பகிர்வுகளைத் தொடர்ந்து ஹோம்புஷ் சைவப்பாடசாலை இளநிலை மாணவர்கள் வந்து திருமுறை இசைக்கச் சபையோரும் சேர்ந்து பாடிப் பரவசம் கொண்டனர்.
இந்த நிகழ்வின் நாயகர் திரு.மறவன்புலவு சச்சிதானந்தன் ஐயா அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிக்கொண்டிருக்கும் பெரும் பணியைத் தம் கவித்திறத்தால் பாடி அவருக்கு ஒரு வாழ்த்துப் பா இனை சட்டம் இட்டுப் பகிர்ந்து சிறப்பித்திருந்தார் நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் பேரனார் டாக்டர் பாரதி இளமுருகனார்.

தமிழிற்கும் சைவத்திற்கும் அளப்பரிய தொண்டாற்றி 
உயர்ந்த பெரியார்
திரு, மறவன்புலவு க சச்சிதானந்தன் அவர்களுக்கு 
உலக சைவப்பேரவை (அவுஸ்திரேலியா)
சிட்னியில் அளித்த பாராட்டு விழாவின்போது வழங்கப்பெற்ற
வாழ்த்துப்பா - 11 02 2012 

அருட்குணங்கள் அத்தனையும் உன்னிற் பொலிய
அகத்தொழிரும் அழகெல்லாம் முகத்திற் கொண்டோய்!
இருந்ததமிழ்த் திருமறையை நீயும் பிற
இனத்தவரும் பயின்றவற்றின் பயனைப் பெற
தெருட்சியதன் முதிர்ச்சியினால் தடைகள் வென்று
சீர்பொங்கத் திருவருளால் மின்னம் பலத்தில்
திரட்டிவகுத் தேற்றிநின்ற சச்சிதா னந்தா!
சிட்னிசைவப் பேரவையும் வாழ்த்த வாழி!

அந்தமிலெம் மந்திரமாம் திரு மறைகள்
அத்தனைக்கும் இசைகூட்டி வரலா றுடனே
விந்தையென வியனுலகம் விதந்து வக்க
வித்தகனே பலமொழியிற் கேட்க வைத்தாய்!
சுந்தரனே வடிவமைத்து மின்னம்ப லத்திற் 
தொகுத்தளித்தாய்! தூயபணி என்றும் வாழி!
சந்ததமும் சைவருன்னைத் தினமும் போற்றச்
சச்சிதா னந்தாநீ வாழி! வாழி!

எண்ணமதைச் செப்பனிட்டுச் செயலுந் தீட்டி
ஈரைந்து ஆண்டாக அறிஞர் கூட்டிக்
கண்ணனைய பதிணெண்ணா யிரம்பா டல்கள்
களிப்போடு சைவர்கள் இல்லந் தோறும் 
பண்ணமுதாய்த் தினங்கேட்டு மகிழ வைத்தாய்! 
பலன்கருதாச் சேவைக்குக் கைமா றுண்டோ?
தண்ணொளிசேர் பிறையடி வரதஞ் சேர்க்கத்
தகைமைசேர் வித்துவனே வாழி! வாழி!

முறையாக முத்தமிழோ டுயர்சைவ மோங்க
மூபத்து ஆண்டாக இந்தி யாவில்
நிறைவான பதிப்பகமாய்க் ்காந்த ளகத்தை்
நிறுவிநறுஞ் சேவையினால் உயர்ந்தாய்! இந்தத்
துறைதனிலே உனக்கிணையே இல்லை யென்று
தூயபுக ழாரம்பலர் சூட்டக் கண்டோம்
பிறையடி மன்றுளாடி அருளப்பா ரதியும்
பெரிதுவந்து வாழ்த்துவளே வாழி! வாழி!,

"வாழ்க வளமுடன்்"

சிட்னிவாழ் சைவப் பெருமக்கள் 

இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


திரு மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள், "பொன்னம்பலத்தில் இருந்து மின்னம்பலம் வரை" என்ற விழாவின் முத்தாய்ப்பு நிகழ்வை கணினித் திரையைப் பெருந்திரைக்குக் கடத்தியவாறே, தேவாரத் திருப்பதிகங்கள் தோன்றிய காலத்தில் இருந்து பின்னர் நம்பியாண்டார் நம்பி ராஜ ராஜ சோழனிடம் சிதம்பரத்தில் செல்லரித்துக் கிடக்கும் தேவாரப்பதிகங்களைத்திரட்டக் கோரிய வரலாற்றினைக் கதை விளக்கப் படங்களோடுச் சுவையாகப் பகிரத் தொடங்கினார். சிதம்பரத்திலே தீட்சதர்கள் இந்தப் பணிக்கு முட்டுக்கட்டை போட, தனக்கு இருக்கும் அரச பலத்தைப் பிரயோகிக்காமல் புத்தி சாதுர்யத்தால் இந்தப் பணியை நிறைவேற்றிய ராஜராஜ சோழனின் அறிவுத்திறனைச் சொல்லியதோடு தமிழ் மன்னர்களில் இவ்வளவு தூரம் தமிழுக்கும் சைவத்துக்கும் அவன் ஆற்றிய பணி எவ்வளவு உயரியது என்பதைத் தக்க ஆதாரங்களோடு சொன்னார். தொடந்து சேக்கிழார் சுவாமிகளின் பணியை விதந்தது பகிர்ந்து நிறைவாக இணையமூடாகத் தேவாரப் பதிகங்களைத் திரட்டி உலகெங்கும் வாழும் அன்பர்களின் தேவைக்காகக் கொடுக்கும் பணியை விரிவாக விளக்கினார் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள்.

தேவாரம் http://www.thevaaram.org/ என்ற இணையத்தளத்தின் பங்களிப்பைப் பொறுத்தவரையில் தமிழோடு, ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம், பர்மிய, தாய் உள்ளிட்ட மொழிகளோடு பன்னிரு திருமுறைகளைத் திரட்டிச் சேமித்து வைத்திருக்கும் ஒரு அரிய தளம். இது எமது அடுத்த தலைமுறைக்கும், தமிழைத் தாய் மொழியைக் கொண்டிராதவர்களுக்கும், ஏன் நம் எல்லோருக்குமே பண்ணோடு பொருள் அறிந்து பாட வழிவகுக்கின்றது. மேலும் ஆலயங்கள் குறித்த விளக்க உள்ளீடுகளும், தேவாரங்களைத் தேடும் தேடுபொறிகளும் இந்தத் தளத்தில் இருப்பது வெகுசிறப்பு, காலத்தின் தேவைகளுக்கேற்பத் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்தும் மேலும் விரிவாக்கியும் தன் பணியைச் செய்து வருகின்றது இந்தத் தளம். 

தேவாரம் என்ற தளத்தை ஆரம்பித்து வெறுமனே எழுத்துருவில் பன்னிரு பதிகங்களைத் திரட்டி வந்த நிலையில், தூத்துகுடி சைவ சித்தாந்த சபையில் சைவப் பெரியார் திரு. சண்முகவேல் அவர்கள் அறிமுகப்படுத்த திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள், இந்தத் தளம் குறித்து விளக்கிக் கொண்டிருந்த போது இந்தத் தளத்தில் பாடலுண்டு, பொருளுண்டு ஆனால் இசை இல்லையே என்று அங்கு வந்திருந்த பிரபாகர் என்ற அன்பர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினாராம். அதற்குப் பொருளாதாரத் தேவை 

இருக்கும் என்றபோது உடனடியாகவே பிரபாகர் என்ற தூத்துக்குடி உப்பள அதிபர் உடனேயே ரூபா ஐந்தாயிரம் கொடுத்து, குரலிசையைச் சேர்க்கும் பணியைச் செய்ய கால்கோளாக அமைந்ததாம்.
திரு. பிரபாகர் அவரது துணைவியார், மகனோடு உப்பு வணிகர், அவர், அவரது துணைவியார், அவரது திரு மகனார் யாவரது பங்களிப்பால் தேவாரம் தளத்தில் 24 பண்களுக்கும் உரிய மாதிரிப் பாடல்கள் சேர்ந்தன.
இன்று 15,500 திருமுறைப் பாடல்களுக்குக் குரலிசையைத் தேவாரம் தளத்தில் சேர்க்கவும், 18268 பாடல்களைக்கும் குரலிசை சேர்க்குமாறான முயற்சிக்கும், சைவப் பெரியார் திரு. சண்முகவேல் அவர்கள் வழிகாட்டலில் திரு. பிரபாகர் விதைத்தார் என்று சொன்ன மறவன்புலவு சச்சித்தானந்தம் அவர்கள் தொடர்ந்து தருமபுரம் சுவாமிநாதன் அவர்கள் தேவாரம் தளத்துக்குக் கொடுத்த பெரும் பங்களிப்பை விளக்கிச் சொன்னார்.
இந்த நிகழ்வில் அஞ்சலிப்பகிர்வில் பேசப்பட்ட மறைந்த சைவப்பெரியார்களுக்கும் தனக்கும் உள்ள தொடர்பையும், அவர்கள் தமிழுக்கும் சைவத்துக்கும் ஆற்றிய முக்கிய பங்களிப்பைச் சொல்லிவைத்தார். >தேவாரத்திருப்பதிகங்கள் தமிழின் 247 எழுத்துக்களைக் கடந்து எந்தவொரு பிற மொழிச் சொற்களும் ஊடுருவாத சிறப்புக் கொண்டவை. இந்தப் பதிகங்கள் வெறும் சைவ சமயம் சார்ந்த பக்தி இலக்கியங்கள் என்ற எல்லையைக் கடந்து பொதுவான தமிழ் இலக்கியங்களாக எடுத்து நோக்க வேண்டும் என்று உதாரண விளக்கங்களோடு சொன்னார். தேவாரத்திருப்பதிகங்கள் காலத்துக்குக் காலம் எதிர் நோக்கிய சவால்களை வரலாற்று விளக்கங்களோடு எடுத்துச் சொன்னார்.

நம்மை ஆக்கிரமிக்கும் மன அழுத்தத்துக்கு மருந்தாக "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற பதிகம் எவ்வளவு தூரம் அருமருந்தாக அமைகின்றது என்று அவர் சொல்லும் போது அதை உய்த்துணர்ந்து கொள்ள முடிந்தது,



ஹோம்புஷ் சைவப்பாடசாலை முது நிலை மாணவர்களின் பண்ணிசை விருந்து தொடர்ந்தது.

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவ வகை செய்யும் தேவாரம் இணையத் தளத்தின் சிறப்பையும் புலம்பெயர்ந்த நம் வாழ்வில் அதன் தேவை குறித்தும் திரு எஸ்.வேலுப்பிள்ளை 
(ஓபன் தமிழர் கழகம்), முனைவர் பாலு விஜய் (தமிழ் இலக்கியப்பேரவை), திரு அனகன் பாபு (தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம்), திரு அண்ணாமலை சுந்தரம் (பாலர் மலர் தமிழ்க்கல்விக் கழகம்), எழுத்தாளர் மாத்தளை சோமு ஆகியோர் சுருக்கமாகவும் நிறைவாகவும் தம் கருத்துக்களைப் பகிர்ந்து சிறப்பித்திருந்தனர்.

தேவாரம் இணையத்தளம் காலத்துக் காலம் தொழில் நுட்பமும், தேவையும் எழும்போது அவற்றை உள்வாங்கி எழுத்துரு வடிவில் இருந்து ஒலி வடிவாகித் தற்போது செல்லிடப்பேசியில் இருந்து அப்ளிகேசனாக தருவிக்கும் பெரும் பணிக்கான பணத்தேவை குறித்தும் பேசப்பட்டது. இந்த நிகழ்வுக்காக வந்திருந்த அன்பர்கள் தம்மால் இயன்ற
பணத்தொகையைக் கொடுத்துச் சிறப்பித்திருந்தனர்.

திருமதி கலா அனந்த சயனன் நன்றி நவில, சைவ மரபுப்படி தேவாரம், திருப்புராணத்தைச் சபையோர் ஒன்று கூடிப் பாடிப் பிரார்த்தித்து நிறைவாகி செவிக்கும், விழிக்கும் மனத்துக்கும் பெரும் விருந்தாக அமைய, ஆங்கே சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சைவ அமுது படைத்துச் சிறப்பித்தனர். இப்படியான நிறைவானதொரு நிகழ்வு இன்னும் வாய்க்கவேண்டும் என்ற உணர்வோடு கலைந்தோம். உலக சைவப்பேரவை சிட்னிக் கிளையின் அரும்பணி தொடரட்டும்.
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்

No comments: