Wednesday, November 30, 2016

சுமித்திரா இரகுபதே

சுமித்திரா இரகுபதே
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
“பள்ளி மாணவியாக உங்கள் நாவல்களை வாசித்து வருபவள். உங்களின் சுவைஞராகத் தொடர்கிறேன். உங்கள் நாவல்களின் கதை மாந்தர்களாக நான் மாறிவிடுவேன், உங்கள் கதைப் பின்னலில் மூழ்கிவிடுவேன். நெகிழ்ச்சி ஓட்டத்தில் என்னை மறப்பேன்” என ஒரு சிங்களப் பெண்மணி உணர்ச்சி வயப்பட்டுச் சொல்லிக் கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன், செந்தழிப்பான பார்வையுடன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவர்
சுமித்திரா இரகுபதே.
கொழும்பு பண்டாரநாயக்க அனைத்துலக மண்டப வளாகத்தில் அனைத்துலகப் புத்தகக் காட்சி அரங்கு ஒன்றில் சுமித்திரா இரகுபதேயையும் அவரின் எழுத்துகள் ஈர்த்த சுவைஞர் ஒருவரையும் 23.09.2015ஆம் நாள் அருகில் நின்று பார்த்துக் கேட்டு வியந்தேன்.
அரங்கின் ஒரு சுவரில் தொலைக்காட்சிப் பெட்டியில் யப்பானிய + சிங்களத்  திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ‘நிகாத்தா’ என்ற அத்திரைப்படத்தின் கதைக் கரு, சுமித்திரா இரகுபதேயின் நாவல்களுள் ஒன்றான ‘கந்தக சீமா’. யப்பானியர் ஒருவரைத் திருமணம் செய்து யப்பான் நாட்டில் தன் வாழ்வைக் கழித்த சிங்களப் பெண்ணின் கதை. 2010இல் ‘கந்தக சீமா’ என்ற அவரின் இந்தச் சிங்கள நாவலுக்கு ஐந்து வெவ்வேறு விருதுகளை அள்ளிக் கொடுத்துப் பாராட்டின இலங்கை அரசும் சிங்கள இலக்கிய அமைப்புகளும்.
சின்னத் திரைத் தயாரிப்பாளர் தேடித் தேர்வுசெய்யும் பல கதைக் கருக்கள் சுமித்திராவின் நாவல்களில் உள்ளவையே.
1978இல் எழுதத் தொடங்கியவர். இடைவிடாது தொடர்கிறார். முதலாவது நாவல் பூமுதுவுனு (கம்பளம்). சின்னத் திரைத் தொடர்களைத் தொடக்கியதும் இவரது முதலாவது நாவலையே ரூபவாகினி முதலாவது தொடராக்கியது.
இதுவரை 13 நாவல்கள் எழுதியுள்ளார். சிறுகதைத் தொகுப்புகள் பல வெளிவந்துள.
இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பல. சுசீலா நய்யாரின் ‘கஸ்தூரிபா’ இவரது மொழிபெயர்ப்புகளுள் ஒன்று. உருசியத் தலைவர் ஸ்டாலின் மகள் சுவேதலனா அல்லிலுயே எழுதிய ‘ஒரே ஓர் ஆண்டு’ என்ற நூலையும் மொழிபெயர்த்துள்ளார்.  
சுற்றுச் சூழல் பேணும் ஆர்வலரான இவர் அத்துறையிலும் நூல்கள் எழுதியுள்ளார்.
1978இல் இருந்து 2015 வரை 37 ஆண்டு கால இடைவெளியில் 50 நூல்களைச் சிங்கள வாசகருக்கு அள்ளித் தந்துள்ளார் சுமித்திரா.
இத்தனைக்கும் எழுத்து இவரின் முழுநேரப் பணியன்று. பொறுப்புள்ள இலங்கை அரசுப் பதவிகளை வகித்துள்ளார். இலங்கை ஆட்சிச் சேவையில் முழுநேரப் பணிபுரிந்த ஆட்சியராக இருந்துகொண்டே, இல்லத்தரசியாக இருந்துகொண்டே, 50 நூல்களைச் சிங்கள மக்களுக்குத் தந்த அப் பெருமாட்டியைக் கொழும்பில் அனைத்துலகப் புத்தகக் காட்சியில் சந்தித்தைப் பேறாகக் கருதுகிறேன்.

Tuesday, November 29, 2016

புத்த மயமாக்கல், மதமாற்ற முயற்சிகள்

புத்த மயமாக்கலையும் மதமாற்ற முயற்சிகளையும் 1975இல் எதிர்த்தோம்.
மறவன்புலவு. . சச்சிதானந்தன்

காலம் 1975ஆம் ஆண்டு,
இடம் பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை. காலை நேரம்.
அகில இலங்கை இந்து மாமன்றச் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
தலைவராக நீதியரசர் சிவசுப்பிரமணியம். அங்கே, திருவாளர்கள். கே. சி. தங்கராசா, கேணல் சபாநாயகம், . நமசிவாயம், தி. சண்முகராசா, கந்தசாமி, ஐ. தி. சம்பந்தன் எனச் சைவத்தில் காவலர்களா பலர், இந்து சமய சங்கங்களின் பேராளர் பலர் கூடியிருந்தனர்.
விவேகானந்த சபை, கதிர்காமத் தொண்டர் சபை, சைவபரிபாலன சபை, திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச் சபை, இந்து இளைஞர் மன்றங்கள், சைவ முன்னேற்ற மன்றங்கள் முதலியவற்றின் பேராளர் கொழும்பு, நீர்கொழும்பு, வவுனியா, மட்டக்களப்பு, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் இருந்து வந்து கூடியிருந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோவில்களைப் பராமரிக்க, பேண, திருப்பணி செய்ய இந்து அறநிலையச் சட்டம் இருப்பது போல, இலங்கையில் உள்ள கோயில்களைப் பேண, சொத்துக்களைப் பராமரிக்க, இலங்கை அரசும் அத்தகைய சட்டம் இயற்ற வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கிய சட்டவரைவு ஒன்றின் நகலை அங்கு கூட்டத்துக்கு வந்தவர்கள் முன்னதாகவே அஞ்சலில் பெற்றிருந்தனர்.
சிறீமாவோ தலைமையில் நடந்த ஆட்சிக் காலம். சுதந்திரக் கட்சியின் தலைமையில் பல கட்சிகளின் கூட்டணி ஆட்சி பீடத்தில் இருந்தது. தமிழரான குமாரசூரியர் அமைச்சராக இருந்தார்.
மக்கள் குழுக்கள், தொழிலாளர் குழுக்கள் பரவலாக உருவாகின. இக்குழுக்களின் ஆலோசனையே எல்லா மட்டங்களிலும் வலிமை வாய்ந்த ஆலோசனையாகக் கொண்ட காலம்.
இந்து மாமன்றத் கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் கொண்டு வந்த சட்ட வரைவில், ஒவ்வொரு இந்துக் கோயிலுக்கும் வழிபடுவோர் குழு அமைந்து, அந்தக் குழுவே கோயில் நடாத்துவதில் ஆலோசனைகளை வழங்கும் என்ற குறிப்பும் இருந்தது.
சட்டவரைவில் கோயிலின் ஆட்சி தொடர்பான பல நல்ல விதிமுறைகளும் இருந்தன.
நீதியரசர் சிவசுப்பிரமணியம், கே. சி. தங்கராசா. கேணல் சபாநாயகம் போன்றோர் சட்டவரைவு நல்ல முறையில் அமைந்துள்ளது என்றும் இந்து மாமன்றம் அந்த வரைவை அரசுக்கு விதந்துரைக்க வேண்டும் என மற்ற உறுப்பினர்களுக்கு ஆலோசனை கூறிக் கொண்டிருந்தனர்.
அதே நேரம் நானும் இருபது இளைஞர்களும் பக்கத்தில் பம்பலப்பிட்டி இந்து இடைநிலைப் பாடசாலையில் கூடினோம். ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த முழக்க அட்டைகளைக் ஏந்தினோம். சட்ட வரைவுக்கு எதிரான வரிகள் சற்றுக் கடுமையாகவே அட்டைகளில் எழுதப்பட்டிருந்தன.
வரிசையாக நடந்தோம். சரசுவதி மண்டபத்தை அடைந்தோம். கூட்டம் நடந்த இடத்தைச் சுற்றி அட்டைகளை ஏந்தியவாறு நடந்தோம். அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
எம்மைச் சற்றும் எதிர்பார்க்காத கூட்டத்தினர், அலமந்து போய்விட்டனர். எங்களை வேடிக்கை பார்த்தனர். கூட்ட நிகழ்ச்சி தொடரவில்லை. நாங்கள் சுற்றிச் சுற்றி நடந்து கொண்டிருந்தோம்.
வரைவின் நகல் ஒன்றை எடுத்தேன். தலைவரின் பின்பக்கமாக நின்றேன். தீயிட்டுக் கொழுத்தினேன்.
சிறிது நேரத்தின் பின் திரு. சண்முகராசா எம்மிடம் வந்தார். சட்டவரைவுத் தீர்மானம் தோல்வியடையச் செய்வது எமது பொறுப்பு. நீங்கள் கலைந்து செல்லலாம் எனக் கூறினார். விவேகானந்த சபைத் தேர்வுச் செயலாளராக இருந்த திரு. கந்தசாமியும் எம்மிடம் அதையே கூறினார்.
நாம் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தினோம். மண்டபத்தின் மறுமூலையில் அமைதியாக இருந்தோம்.
சட்ட வரைவு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இந்து மாமன்றக் கூட்டம் முடிந்ததும் தலைவராக இருந்த நீதியரசர் சிவசுப்பிரமணியம் தனது பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.
அன்று என்னுடன் வந்த இளைஞர்களுள் பலர் படித்த இளைஞர்கள், பல்கலைக் கழக மாணவர். பொறியியல் கல்லூரி மாணவர்களான ஞானானந்தன், தில்லைநாதன், விஜேந்திரா, கருணாகரன், பாலேந்திரா இராசமனோகரன் சட்டக் கல்லூரி மாணவர் கந்தையா நீலகண்டன் எனப் பலர் இருந்தனர்.
சட்டவரைவை நாம் எதிர்த்தமைக்கு வலுவான காரணங்கள் இருந்தன. தமிழ்ப் பகுதிகளில் உள்ள கோயில் ஆட்சி முறையோ, சொத்து ஆட்சி முறையோ நிறைவாக இருந்தமை காரணங்களல்ல. அங்கு கோயில்கள் பலவற்றில் ஆட்சிச் சீர்கேடுகள் மலிந்திருந்தன.
தமிழ்ப்பகுதிகட்குப் புறத்தே இருந்த கோயில்கள் எமக்குக் கவலையைத் தந்தன. பல நூற்றாண்டுகளூடாகக் கதிர்காமத்தில் நாம் இழந்த உரிமைகளைச் சிந்தித்தோம்.
திருகோணமலைக் கோவில் பகுதியை புனித நகரமாக்கலாமா என ஆராய முனைந்ததால் தமிழ் அமைச்சர் திருச்செல்வம் 1968இல் பதவி துறக்க நேரிட்டதை எண்ணினோம்.
உகந்தை முருகன் கோவில் புத்த பிக்குகளின் பிடிக்குள் வருவதை அறிந்தோம்.
சேருவலைப் பிக்குகள் வேரவிலை, மூதூர், புல்லுமலை ஆகிய இடங்களில் இந்துக் கோவில்களைப் புத்த கோயில்களாக்கும் முயற்சிகளை அறிந்தோம்.
வழிபாட்டுக் குழுக்களை ஆட்சி செய்ய அனுமதித்தால், முன்னேச்சரம் திருக்கோயில் புத்தர் ஆட்சிக்கு மாறிவிடும். ஏனெனில் அங்கு வழிபடுபவர்களுள், புத்தர்களே அதிகம்.
திருக்கேதீச்சரத்தில் பிற மதத்தவரும் ஆட்சிக்குழுவில் அமர்வர். பாலாவிக்கு அப்பால் அடம்பன் சந்தியில் கிறித்தவ உலூர்தம்மன் வளைவு இருந்தது.
திருகோணமலைத் திருக்கோயில் சிங்கள வழிபாட்டாளர் கைக்கு மாறிவிடும். வற்றாப்பளையில் இருந்து உகந்தை வரை உள்ள பல கோயில்களில் புத்த சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்படும். வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் இந்த முறை தொடரும். யாழ்ப்பாணக் குடாநாடு மட்டும் காக்கப்பட்டிருக்கலாம்.
புத்த மதம் (1972 தொடக்கம்) அரச ஆதரவு பெற்ற மதமாக இருக்கும் வரை, புத்த விரிவாக்கம் இந்துக் கோவில்களுக்குள் வழிபாட்டுக் குழுக்கள் மூலம் நடைபெறுவதை நீதிமன்றங்கள் கூடத் தடுத்து நிறுத்தி இருக்கமுடியாது.
மதமாற்றிகளின், மிசனரிமாரின் இலக்கு மாந்தராக, பிற்பட்ட ஏழைச் சைவ மக்கள் இருக்கும் வரை வழிபாட்டுக் குழுக்களுள் மிசனரிமார்கள் எளிதாக ஊடுருவ முடியும். மன உறுதி வளராத, பொருளாதார வளமற்ற, ஆட்சியாளரின், மிசனரிமார்களின் கைப்பொம்மைக்காரரால், இத்தகைய சட்டங்கள் இந்துக் கோயில்களின் ஆட்சித் தலையீடுகள் வழியே, நம்பிக்கையுடன் வழிபடும் அடியவர் உரிமையில் தலையிடுவது ஒரு பக்கம், மதக் கலவரத்துக்கு வழிகோலும் சட்டமாக மாறிவிடக்கூடிய பேராபத்து மறுபக்கம் இருந்தது.
எனவேதான் இந்தச் சட்ட வரைவு நகலை இந்து மாமன்றத்தினர் அரசக்கு விதந்துரைப்பதை எதிர்த்தோம். இந்து மாமன்றம் விதந்துரைத்தால் இந்துக்களின், ஒப்புதலுடன் சட்டத்தைக் கொண்டு வந்தோம் எனச் சிறீமாவோ அரசு மார்தட்டுமல்லவா?
ஏனெனில் இந்துச் சங்கங்கள் அனைத்தும் அனைத்திலங்கை இந்து மாமன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருந்தன.
இத்தகைய ஆதரவின்றியே அரசு சட்டமாக்கியிருக்கக் கூடிய பெரும்பான்மைப் பலம் அரசுக்குப் பாராளுமன்றத்தில் இருந்தது. இந்து மாமன்றம் ஆதரித்ததன் வழியாக, இந்துக்கள் தம் தலையில் தாமே உயிருடன் கொள்ளிக் கட்டையை வைத்திருப்பர். எனவே நாம் சிறீமாவோ ஆட்சியின் முயற்சியை எதிர்த்தோம்.
சட்ட முன் வடிவு நிலையிலேயே அந்தத் திட்டத்தை எரித்தோம். அன்று அரசின் முயற்சி தோற்றது.

-      30 சூலை / 05 ஆகத்து 1993, பாரிசு ஈழநாடு, வாரமலர்

Sunday, November 27, 2016

மொரிசியசு அரசுடன் தொடர்பு

1973ஆம் ஆண்டு. இலங்கை இந்து இளைஞர் பேரவையின் ஆண்டுப் பொதுக்கூட்டம். தோராயமாக 75 இந்து இளைஞர் அமைப்புகளின் சார்பாளர் வருவர். மட்டக்களப்பு ம. சிவநேசராசா தலைவர். நான் தலைமைச் செயலாளர்.

மொரிசியசுப் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். இந்து இளைஞர் பேரவையின் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் மொரிசியசுப் பேராளரைப் பார்வையாளராக அனுப்புமாறு. பிரதமரின் செயலாளரிடமிருந்து பதில் வந்தது. இருவரை அனுப்புகிறோம் என. செயலாளரின் பெயர் பொன்னுசாமி.

மொரிசியசில் இருந்து பேராளர் இருவர் வந்தனர். இருவரும் இந்தி பேசுபவர்கள். தமிழ் தெரியாதவர்கள். பிசித் தீவு தென் இந்திய சன்மார்க்க சங்கப் பேராளராக என் நண்பர் நாயுடு வந்திருந்தார். மலேசிய இந்து இளைஞர் அமைப்பிலிருந்து இருவர் வந்திருந்தனர். சிங்கப்பூரிலிருந்து ஒருவர் வருவதாக எழுதியிருந்தார், ஆனால் வரவில்லை.

மாநாடு முடிந்ததும் வெளிநாட்டுப் பேராளர்களை இலங்கை முழுவதும் அழைத்துச் சென்றோம். அங்கங்கே இந்து இளைஞர் அமைப்புகள் வரவேற்றன. இந்துக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை அவர்கள் நேரில் பார்வையிட்டார்கள்.

அதன் பின்னர் பொன்னுசாமிக்கு நன்றிக் கடிதம் எழுதினேன். அத்தொடர்பு உறைந்திருந்தது.

1977 ஆவணி. கொழும்பில் அகதி முகாமில் நானும் இல்லத்தவரும் தஞ்சமடைந்திருந்தோம். பொன்னுசாமியைத் தொலைப்பேசியில் அழைத்தேன். இந்துக்களின் நிலையை விளக்கினேன்.

சிங்கப்பூர் அமைச்சர் இராசரத்தினத்துடன் பேசினேன். சென்னையில் என் நண்பர் துரைமுருகனுடன் பேசினேன். ஐநாவில் அப்பொழுது துணைத் தலைமைச் செயலாளராக இருந்த நரசிம்மனுடன் பேசினேன். பிசிக்கு அழைத்து நாயுடுவிடம் விவரம் சொன்னேன். மலேசியாவில் இந்து இளைஞர் அமைப்புச் செயலர் இராசரத்தினத்துடன் பேசினேன். இந்துக்களின் அவல நிலையை எடுத்துச் சொன்னேன்.

இப்பொழுதுபோல அப்பொழுது நேரடித் தொலைப்பேசி இல்லை. இரவு நேரம். தொடர் ஊரடங்கு நாள்கள். பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத் தொலைப்பேசியில் இருந்து மாற்றகத்தை அழைத்தேன். மாற்றகத்துள் ஊரடங்கால் சிக்கிக் கொண்ட இந்து இளைஞர் என்னிடம் பேசினார். என்னை நன்கறிந்தவராக இருந்தார். எவருடைய எண்களும் என்னிடம் இல்லை. நாட்டையும் பேரையும் சொன்னேன். கருவியை வையுங்கள் அழைக்கிறேன் என்றார். ஒவ்வொருவராக இணைப்பு எடுத்துத் தந்தார். பேசினேன், விளக்கினேன்.

மறுநாள் தமிழிதழ்களில் தலைப்புச் செய்தி. இலங்கையில் இந்துக்களுக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு மொரிசியசுப் பிரதமர் கேட்டிருந்தார்.

வாஜ்பாயியுடனான தொடக்கத் தொடர்பு

1975 மார்ச்சு 31 தொடக்கம் ஏப்பிரல் 5 வரை. கொழும்பில் உலக நாடாளுமன்ற ஒன்றிய மாநாடு. (Interparliamentary Union Conference, held at Colombo, Sri Lanka, March 31-April 5). மாநாட்டுக்கு வந்த இந்து நாடுகளின் பேராளர்களை நாம் சந்தித்தோம். இலங்கையில் இந்துக்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கூறினோம்.

இந்து இளைஞர் பேரவை சார்பில் திரு. பேரின்பநாயகம், நான் இருவரும் மாலை நேரங்களில் விடுதிகளுக்குச் செல்வோம்.

கயானா, மொரிசியசு இந்தியா நேபாளம் ஆகிய நான்கு நாடுகளின் போராளர்களைச் சந்தித்தோம். வழக்கறிஞர் கந்தசாமி, ஊர்மிளா இருவரும் மற்ற நாடுகளைச் சந்தித்தனர்.

கயானா நாட்டு இந்துப் பேராளர்களைத் தந்தை செல்வாவிடம் அழைத்துச் சென்றோம். அவர் தன் கையாலேயே தேனீர் வழங்கினார். இந்துக்கள் படும் துயரை எடுத்துச் சொன்னார்.

வெளியே வந்ததும் கயானா நாட்டவர் கேட்ட வினா வியப்பில் ஆழ்த்தியது. இந்துக்களுக்குக் கிறித்தவர் தலைமை தாங்குகிராரா? இந்துக்களுக்கு நிகழும் கொடுமைகளைக் கிறித்தவர் சொல்கிறாரா? கயானாவில் கிறித்தவர்களை இந்தியர் என்றே சொல்வதில்லை. இந்துக்களை மட்டுமே இந்திய வம்சாவழியினர் என்போம் என்றனர்.

காலிமுகத் திடலுக்கு எதிரே விடுதி. எந்த வித முன்னறிவிப்புமின்றி நானும் பேரின்பநாயகமும் சென்னோம். தன் அறைக்கு முன்னே நாற்காலியில் அமர்ந்து காற்றுவாங்கியவண்ணம் இருந்தார் அடல் பிகாரி வாச்பாயி. இந்திய சனசங்கத் தலைவர். இந்து இளைஞர் பேரவையில் இருந்து வருகிறோம் என அறிமுகித்துப் பேசினோம். நாம் சொன்னவற்றை அமைதியாகக் கேட்டார். இரவு விருந்துக்கு ஒருநாள் வாருங்கள் மேலும் பேசலாம் என்றோம். ஓத்துக்கொண்டார்.

மு. திருச்செல்வம் அவருக்கு உயர்விடுதி ஒன்றில் விருந்தளித்தார். இலங்கையில் இந்துக்களின் இடர்களை ஒன்றும் விடாமல் பட்டியலிட்டோம். அவர் பிரதமராக இருந்த 2000ஆம் ஆண்டிலும் அவரோடு தொடர்பாக இருந்தேன்.

2000 மே 25ஆம் நாள் சென்னையில் என் வீட்டுக்கு வந்தவர் இன்றைய மேகலாயா ஆளுநர் சண்முகநாதன். வாச்பாயி உங்களை அழைக்கிறார் எனக் கூறினார். உடனே தில்லி போனேன். முக்கிய பணி ஒன்றை எனக்களித்தார் (அப்பணி தொடர்பாக வேறோர் இடத்தில் கூறுவேன்). நானும் நெடுமாறன் ஐயாவும் கவிஞர் காசி ஆனந்தனும் அப்பணியை வெற்றிகரமாக முடித்தோம். அவர் மகிழ்ந்தார். விடுதலைப் புலிகள் தொடர்பான, ஈழத் தமிழர் தொடர்பான இந்திய அணுகுமுறையை ஓரளவு மாற்றியமைத்த பணி. மறைவில் இருந்த காலத்திலும் பிரபாகரன் எம்முடன் ஒத்துழைத்த பணி.

மொரிசியசுப் பேராளர்களுக்கும் நேபாளப் பேராளர்களுக்கும் மு. திருச்செல்வம் வெவ்வேறாக விருந்தளித்தார். இந்துக்களின் குறைகளைப் பட்டியலிட்டு அந்தந்த நாடுகளின் ஆதரவைக் கேட்டோம். 

சிங்கப்பூர் அரசின் ஆதரவு

1963 தொடக்கம் இலங்கை இந்து இயக்கங்களில் இருந்து வருகிறேன்.

1963ஆம் ஆண்டு, கார்த்திகையில் காரைநகரைச் சேர்ந்த திரு. கதிரவேலு, எழுதுமட்டுவாளைச் சேர்ந்த திரு. அ. தில்லைநாதன், ஏழாலையைச் சேர்ந்த திரு. கந்தசாமி, மானிப்பாயைச் சேர்ந்த திரு. சீவரத்தினம் கொழும்புத்துறையைச் சேர்ந்த திரு. மா. கனகேந்திரன் என்ற ஈழவேந்தன், இலங்கை வானொலியில் பமியாற்றிய மயிலிட்டி அருள் தியாகராசா, புண்ணியமூர்த்தி, ஆகியோருடன் கொழும்பில் அறிமுகமானேன்.

கொழும்பு, பம்பலப்பிட்டி, மெல்போர்ண் அவனியு 29ஆம் எண் இல்லத்தில் முனைவர் ஆ. கந்தையா அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்தேன். அக்காலத்தில் அங்கு வரும் திரு. கதிரவேலு என்னை அழைத்தார். கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தில் உறுப்பினராக்கினார். இந்து இளைஞன் இதழில் எழுதச் சொன்னார். தொடர்ந்து எழுதினேன். அதனால் இவர்கள் அறிமுகமாயினர்.

இலங்கை முழுவதும் பரந்த இந்து இளைஞர் அமைப்புகளை ஒரே குடையின் கீழ்க் கொணர்க, பணிகளை ஒருங்கிணைக்க என்ற அழைப்புத் தொனியில், பேராறு பெருங்கழகம் என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை, மேற்கூறியோரையும் சார்ந்தோரையும் என்பால் ஈர்த்தது.

1966ஆம் ஆண்டு ஐப்பசியில் அமைச்சர் மாண்புமிகு மு. திருச்செல்வம் அவர்களின் தனிச் செயலாளராகக் கொழும்பு வந்தேன். தந்தை செல்வநாயகம், திரு. மு. திருச்செல்வம் இருவரது இல்லங்களுக்கும் வருவோர்களுள் ஒருவராக ஐ. தி. சம்பந்தனை மீண்டும் சந்திக்கத் தொடங்கினேன். 1971இன்பின் திருமணமாகி, வெள்ளவத்தை, 344/1 காலி வீதி, மாடியில் குடியிருந்தார். நான் அங்கு அவரிடம் செல்வேன்.

1967 தை தொடக்கம் கொழும்பு, கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணி. கொழும்பின் வடக்கே கதிர்காமத் தொண்டர் சபை, விவேகானந்த சபை, நடுவே கொம்பனித் தெரு சைவ முன்னேற்றச் சங்கம், தெற்கே அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீச்சர ஆலயத் திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வாலிபர் சங்கம், சைவ மங்கையர் கழகம், கொழும்புத் தமிழச் சங்கம், வெள்ளவத்தை இராமக்கிருட்டிண மிசன் என எங்கும் ஐ. தி. சம்பந்தனின் தொண்டு துலங்கும், என்பணி பெருகும், என் குரல் ஒலிக்கும். அந்த அமைப்புகள் வேறு, ஐ. தி. சம்பந்தன் வேறு நான் வேறு எனவாகா.

1971இன் பிற்பகுதியில் கொழும்பில் இலங்கை இந்து இளைஞர் பேரவையைத் தொடக்க கே. சி. நித்தியானந்தா, ஐ. தி. சம்பந்தன் இருவரும் எனக்குப் பெரிதும் உதவினர். இலங்கையில் உள்ள அனைத்து இந்து இளைஞர் அமைப்புகளையும் ஒரே அணியாக இணைத்தேன்.

சிங்கப்பூர் மேனாள் பிரதமர் லீ குவான் யூ பின்வருமாறு 2009இல் சிங்களப் படையின் வெற்றியைக் கூறுகையில், “Sri Lanka is not a happy, united country. Yes, they have beaten the Tamil Tigers this time, but the Sinhalese who are less capable are putting down a minority of Jaffna Tamils who are more capable. They were squeezing them out. That’s why the Tamils rebelled. But I do not see them ethnic cleansing all two million-plus Jaffna Tamils. The Jaffna Tamils have been in Sri Lanka as long as the Sinhalese.”
1970களில் இருந்து தொடர்ச்சியாக லீ குவான் யூ இத்தகைய கருத்துகளைக் கூறி வந்தவர்.

இலங்கைத் தமிழர் தொடர்பான அரசியல் கருத்துருவாக்கத்தை லீ குவான் யூக்குக் கொடுத்தவர் அவரது வெளியுறவு அமைச்சராக இருந்த சின்னத்தம்பி இராசரத்தினம்.

1973 தொடக்க காலத்தில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் சின்னத்தம்பி இராசரத்தினம் கொழும்பு வந்தார். இந்துவான அவர் வரப்போகிறார் என்ற செய்தி வந்ததும், அவரை இந்துக்கள் வரவேற்க வேண்டும் என்ற கருத்தை நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றச் செயலாளர் இ. பேரின்பநாயகத்திடம் சொன்னேன். அவர் உடன்பட்டார். 

விமான நிலையத்தில் வரவேற்றோம். விமானத்தில் இருந்து இறங்கியதும், நிறைகுடம், குத்துவிளக்கு, தவில், நாகசுரம், பூமாலைகள் என இந்து முறைப்படி வரவேற்றோம். 20க்கும் கூடுதலானோர் வேட்டி, சட்டை, சால்வையுடன் வரவேற்றோம். அக்கால வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் இலட்சுமன் செயக்கொடி அரசு சார்பில் வரவேற்க வந்திருந்தார். அவருக்கு வியப்பு. வரவேற்புக்குப் பின் இராசரத்தினத்துடன் இலங்கை இந்துக்கள் தொடர்பான நிலையை விளக்கினோம். 

1973 ஆவணியில் சிங்கப்பூரில் அவரை மீண்டும் சந்தித்தேன். அவரது அறையில் என்னோடு மிக விவரமாகப் பேசினார். பிரதமரிடம் எடுத்துச் சொல்வதாகச் சொன்னார்.

சிங்கப்பூரில் நிகழ்ந்ததைப் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கதிரவேற்பிள்ளைக்குக் கூறினேன். திரு. கதிரைவேற்பிள்ளை தொலைப்பேசியில் இராசரத்தினத்துடன் பேசுவார். நெடுங்காலம் இருவரும் தொடர்பாக இருந்தனர். 

நானும் இராசரத்தினத்துடன் பேசிக்கொண்டு இருந்தேன். 

லீ குவான் யூ இலங்கைத் தமிழருக்கு ஆதரவான நிலையை எடுத்தமைக்கு 1973இல் என் வேண்டுகோளை ஏற்ற நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றம் கட்டுநாயக்கா விமான நிலைத்தில் இந்து முறையாக இராசரத்தினத்தை வரவேற்றுத் தொடங்கிய உறவே தலையாய காரணம்.

சைவக் கொள்கை இதுவா?

கார்த்திகை 13, 2047 (28.11.2016) திங்கள்கிழமை
மின்தமிழ் உரையாடலில் இடையிடை கலந்துகொள்வேன். 26.11இலும் 28.11இலும் நான் பங்ளித்த வரிகளை முகநூலாருடனும் பகிர்கிறேன். என் தெளிவுக் குறைவைப் பொருட்டற்க.
26.11இன் குறிப்பு
........இறைவன் ஈசன் என
நின்ற சைவ வாதி நேர் படுதலும்
பரசும் நின் தெய்வம் எப்படித்து என
இரு சுடரோடு இயமானன் ஐம்பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமாய்க்
கட்டிநிற்போனும் கலையுருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தானும்
தன்னில் வேறு தான் ஒன்றிலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்
மணிமேகலை காதை 27, வரிகள் 86-95
ஆகிய வரிகளே சைவ சித்தாந்தக் கொள்கையைத் தமிழில் தந்த தொடக்க வரிகளாக இன்று வரை அறியப்பட்டுள.
இதற்கு முன்பும் சைவ சித்தாந்தக் கொள்கை விளக்கும் நூல்கள் இருந்திருக்கவேண்டும். தேடவேண்டும்.
பின்னர் காரைக்காலம்மையார் கூறியன நமக்குக் கிடைக்கின்றன.
மணிமேகலை காலத்திலும் காரைக்காலம்மையார் காலத்திலும் சைவ சித்தாந்தக் கருத்துகள் கூர்மையின் உச்சத்தில் இருந்தன.
இறை என்றால் முழுமை.
உயிர் என்றால் முழுமையற்றது.
உயிரைக் குறைகளுடையதாக்குவன மூன்று மலங்கள்.
இறை, உயிர், மலம் மூன்றும் தொடக்கமற்றன, முடிவுமற்றன.
முழுமை இலக்கு.
முழுமையை நோக்கிய, இலக்கை நோக்கிய உயிரின் பயணம்
பிறவிப் பேறு அதற்கே.
கால வரிசையில்
மணிமேகலைக் காப்பியம் கூறும் கொள்கை,
காரைக்காலம்மையார் கூறிய கொள்கை
பின் வந்த நாயன்மார் கூறிய கொள்கை
மெய்கண்ட சாத்திரம் கூறும் கொள்கை.
அது
சைவ சித்தாந்தக் கொள்கை.
பகுத்தறிவும் அறிவியலும் சார்ந்த கொள்கை.
28.11இன் குறிப்பு
சலனங்கள் இயற்கை.
உயிர்கள் முழுமையை நோக்கிப் பயணிக்கக் குறைகள் படிப்படியாக அகல வேண்டும்.
இந்தப் பயணத்தில் உச்சிக்கு வரக்கூடியன குறைகளை நன்றாகக் குறைத்துத் தெளிவன.
தெளிந்த நிலை ஞானம்.
ஞானம் அல்லது தெளிந்த நிலை தலைகீழான பட்டைக்கூம்பு (பிரமிடு).
சில உயிர்களுக்குப் புள்ளி அளவு
சில உயிர்களுக்கு நிறை அளவு.
புள்ளி அளவிலிருந்து நிறை அளவிற்கு ஞானத்தை வளர்க்க, குறைகளைக் குறைத்துவர, தெளிவூட்டல் தேவை.
காலத்துக்குக் காலம் இத்தெளிவூட்டலுக்குரிய தளங்கள் வேறுவேறாகும்.
அத்தளங்களுக்கேற்ப அவ்வக்காலங்களில் எழுவன இலக்கியங்கள்.
அக்காலத்துக்கு ஏற்றதாக எழுந்தாலும் அவற்றைப் பேணியதால் அக்காலத்துக்குப் பின்னும் அத்தகையோருக்கு அவை பயன்படுவன.
காப்பியங்கள், கதைகள், புராணங்கள், சாத்திரங்கள், நீதிநூல்கள் யாவும் காலத்துக்கேற்ப அமைந்து காலத்தைக் கடந்தும் பயன்படுவன.
பட்டைக் கூம்பின் உயரத்திற்குச் செல்வோர் தாம் பயனுற்றவை பட்டைக் கூம்பின் கீழுள்ளவருக்கும் பயன்பட விட்டுச் செல்வர்.
எனவே சலனங்கள் இயற்கை.
சலனங்களுக்கு அப்பால் தெளிவும் தேர்தலும் இயற்கை.
இவை தொடர்ச்சியானவை.
முழுமையைப் போல (இறை)
உயிர்களைப் போல (உயிர்)
குறைக்கான கராணிகளைப் போல (மலம்)
அவற்றைச் சார்ந்ததால்
தொடக்கமும் முடிவும் அற்றவை.

Saturday, November 26, 2016

மதமாற்றத்துக்குத் தடை

கார்த்திகை 10, 2047 (25.11.2016) வெள்ளிக்கிழமை
பாகித்தான், சிந்து மாகாணம், மதம் மாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சட்டத்தை மாகாண அவையில் நிறைவேற்றி உள்ளனர்.
இந்தியாவில் மத்தியப் பிரதேசம், குசராத்து, ஒடிசா, இமாசலப் பிரதேசம், சத்திர்கார், மாராட்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் மதம் மாற்றத் தடைச் சட்டங்கள் உள. 1950இல் நடுவண் அரசு வெளியிட்ட ஆணை ஒன்றும் மதம் மாற்றத் தடுப்பு நடவடிக்கையாகவே கொள்ளவேண்டும்.
நேபாளத்திலும் அத்தகைய முயற்சிகள் 2015 அரசியமைப்பில் சேர்ந்தன. A new Nepalese legislation currently includes a clause that states: "No one shall behave, act or undertake activities that breach public order or break public peace/peace in the community; and no one shall attempt to change or convert someone from one religion to another, or disturb / jeopardize the religion of others, and such acts / activities shall be punishable by law."
பாகித்தானில் உள்ள இந்துக்களுக்கு இந்தச் சட்டம் பாதுகாப்பைக் கொடுக்கிறது எனச் சட்ட சபை உறுப்பினர் நந்த குமார் குல்கர்ணி கூறியுள்ளார்.
ஒருவர் மற்றொருவரை மதம் மாற்ற முயன்றால் 5 ஆண்டு சிறைத் தண்டனை.
18 வயதுக்குள் எவரும் மதம் மாறவே முடியாது.
மதம் மாற விழையும் ஒருவர் அவ்வாறு விழைந்து 21 நாள்கள் காத்திருந்தே மதம் மாற முடியும்.
திருமணம் காரணமாகக் கட்டாய மதம் மாற்றுவது தண்டனைக்குரிய குற்றம். ஐந்து ஆண்டுகள் சிறை.
எவரும் நீதிமன்றத்தில் முறையிடலாம். முறையிட்ட 7 நாள்களுக்குள் விசாரிக்க வேண்டும். 90 நாள்களுக்குள் தீரப்பு வழங்கவேண்டும்.
Nand Kumar Goklani, the legislator who tabled the bill, said, “Every other day, reports pouring in suggest that minor girls belonging to non-Muslim communities are forced to change their religions…This bill aims to end this inhumane practice.”

Sunday, November 13, 2016

ஏனிந்தக் கொலைவெறி?

கரவெட்டி, தச்சன்தோப்பில் விழா. ஊடகத்தார் உச்சிமேல் உவக்கும் வீரகத்தி தனபாலசிங்கத்தாருக்கு ஊரவர் பாரட்டிய விழா. நிகழ்வு இறுதி வரை நின்றேன். மணி 0800 ஆயிருக்கும். புறப்பட்டேன்.
நெல்லியடிச் சந்தியில் எரிபொருள் நிரப்பினேன். வண்டியை ஓட்டியவாறு சிறிது தூரம் சென்றிருப்பேன். என வலது பக்கத்தில் ஊதல் ஒலி. என் மீது பாயும் கையொளி. ஈருருளியுந்தில் காவலர் இருவர். வண்டியை ஓரமிடக் கைகாட்டினர். ஓரமானேன்.
சிங்களத்தில் ஏதோ கேட்டனர். சிரித்தேன். சிங்களம் தெரியாதென்றேன். ஏன் நிப்பாட்டேல்லை? நாங்க மறிச்சம். நிப்பாட்டாமல் போறாய்? என்றார் வண்டியை ஓட்டியவர். ஒளி தெறிக்கும் அங்கியுடன் நின்றார். மற்றவர் இளைஞர். ஒளி தெறிக்கும் அங்கியற்றவர்.
எங்கே மறித்தீர்கள்? என் வினா.
நெல்லியடிக் காவல் நிலையமருகே. அவர்கள் பதில்.
நான் பார்க்கவில்லை என் பதில்.
தெருவைப் பார்த்து வண்டி ஓட்டுவதில்லையா? கையொளி பாய்ச்சினோம், ஊதினோம் ஏன் நிற்கவில்லை? அவர்கள் வினா.
நான் பார்க்கவில்லையே! சட்டத்தை மீறும் நோக்கம் எனக்கில்லை.  ஊதல் கேட்கவில்லை. கையொளிக்கு நிற்கவேண்டும் என எனக்குத் தெரியாது. இப்பொழுது நிறுத்தச் சொன்னதும் நிற்கவில்லையா? என் பதில்.
எடு ஆவணங்களை. இஃது அவர்கள் ஆணை.
எடுத்தேன், கொடுத்தேன். பார்த்தனர். யாவும் செம்மையாக இருந்தன.
மறித்தபோது நிற்காததற்குத் தண்டம் கட்டு. இது அவர்கள் இருவருமாய்.
நான் சட்டத்தை மீறவில்லை. ஆவணங்கள் முறையாக உள. இருக்கைப் பட்டி கட்டியுள்ளேன். முன் பின் விளக்குகள் எரிகின்றன. மறித்ததை அறியேன். பின்னர் மறித்தபொழுது நின்றேன். நீங்கள் குறை காணும் நோக்குடன் வந்திருக்கிறீர்கள். காவலர் பயணிகளுக்கு உதவவேண்டும், தொந்தரவு கொடுக்கக் கூடாது. சட்டத்தை மீறும் நோக்கம் எனக்கு இல்லை. நான் சொன்னேன்.
அவர்களுள் ஒருவர் ஆவணங்களைத் திருப்பித் தர முயல, இளைஞரான மற்றவர் இடை மறித்தார். நாங்க மறித்த போது நிற்கவில்லை. தண்டம் கேள்.
சட்டத்தை மீறவில்லை. தண்டம் தரேன். தெருவில் பயணிகளைத் தொந்தரவு செய்ய வந்தீர்களா? போக்குவரத்துக்கு உதவ வந்தீர்களா? காவலர் உடை அணிந்தாலே சட்டத்தைக் கையில் எடுக்கலாமா? என் வயதென்ன? உங்கள் வயதென்ன? தொந்தரவு செய்யாதீர்கள், நான் விரைந்து வீடு திரும்ப வேண்டும். என் பதில்.
ஒருவரை ஒருவர் பார்த்தனர். என் ஆவணங்களைத் திருப்பித் தந்தனர். மறித்தால் நிற்கவேண்டும், சரியா? இளைஞர் மிரட்டும் தொனியில் கூறினார்.
நான் சட்டத்தை மதித்து நடப்பேன். சட்டத்தை மீறுவதானால் சொல்லிவிட்டு மீறுவேன். என்னை மிரட்டக்கூடாது. என் பதில்.
என் பயணத்தைத் தொடர்ந்தேன்.
நள்ளிரவை நெருங்கும் நேரம். தாவடிச் சந்தி. காவலர் மறிக்கின்றனர். ஈருருளியுந்துச் சத்தத்துக்கு ஓட்டிக்கு ஊதல் கேட்க வாய்ப்பில்லை. தலைமூடி காதை மறைத்தது. கையொளிச் சைகையை வெள்ளை வண்டிக் கடத்தாலாரும் இருட்டில் காட்டலாம். மாணவர் இருவரும் காவலர் மறித்ததைத் தெரியாமலே வண்டியை ஓட்டினர்.
தாவடிக் காவலர் சினங்கொண்டனர். நெல்லியடிக் காவலர் போல் சினமுற்றனர். குளப்பிட்டிக் காவலருக்கு அலைவரிசைச் செய்தி அனுப்பினர். மறித்தோம் நிற்கவில்லை, பொடியள் வருகிறார்கள். மறியுங்கோ என்று செய்தி சொல்லியிருக்கலாம். கொஞ்சம் கூடுதலாக பயங்கரவாதிகள் போலத் தெரிகிறது என்றும் சொல்லியிருக்கலாம்.
குளப்பிட்டிக் காவலர் சுறுசுறுப்பாயினர். கையில் சன்னம் ஏற்றிய துப்பாக்கி இருந்து. தாவடியில் இருந்து வரும் ஈருருளியுந்து அவர்களின் இலக்கு. ஒளி பாய்ச்சி வரும் ஈருருளியுந்தைக் கண்டனர். ஆகா.. தாவடிக்காரன் சொன்னது சரி. உவங்கள் பயங்கரவாதிகள் போலத்தான் தெரியுது. வேகமாக வாறாங்கள்.
குளப்பிட்டிச் சந்தி. ஆடியபாதம் வீதியால் திருநெல்வேலிப் பக்கம் திரும்புமுன்னே துப்பாக்கியைக் காவலர் விரல்கள் இயக்கின. ஓட்டுநரின் நெஞ்சில் குண்டுகள் தைத்தன, ஆறு குண்டுகள் இமைப்பொழுதில் பாய்ந்தன. ஒரு குண்டு மார்பைத் துளைத்து முதுகு வழி வெளியேறியது. பின்னால் இருந்தவர் நெஞ்சுள் புகுந்து தங்கியது.
இப்படித்தான் நடந்திருக்கவேண்டும். இவ்வாறு என் எண்ண ஓட்டம் தொடர்ந்தது.
காவலர் தாவடியில் மறித்ததை மாணவர் அறியார். நேரம் பிந்தியதால் வீடுதி சென்று தூங்கும் அவசரம் அவர்களுக்கு. மனம் மறுநாள் பாடங்களோடு கலந்திருக்கவேண்டும். தெருவால் வழமை போல வந்தனர்.
சட்டமீறல் என்றால், தப்பி ஓட முயன்றால் காவலர் நடவடிக்கை எடுக்கலாம். என்னைப் போல அவர்களுக்கும் வீதி தெரிந்தது. காவலர் தெரியவில்லை. சட்டத்தை மீற அவர்கள் முயலவே இல்லை.
மாணவர் ஆடியபாதம் வீதிக்குத் திரும்பி வேகத்தை முடுக்கினால், காவலரிடம் இருந்த வண்டியில் துரத்தியிருக்கலாம். நெல்லியடியில் என்னைத் துரத்தி வந்தது போல.
ஆடியபாதம் வீதிக்குத் திரும்பியபின் சுட்டிருந்தால் முதலில் பின்னால் இருந்தவர் பட்டிருப்பார். முதுகில் காயங்கள் இருந்திருக்கும். ஓட்டுநர் நெஞ்சிலல்லவா சன்னங்கள் பாய்ந்தன. குளப்பிட்டிச் சந்தியில் அல்லவா வண்டியுடன் காவலர் நின்றுகொண்டிருந்தனர்? 
அப்பாவி மாணவர் இருவர். தம் நிலத்தில், தம் மக்களிடை, படைக் கருவி இல்லாமல், படிப்பு நோக்குடன் பல்கலை விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
உலகெங்கும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இவ்வாறுதான் இயல்பாக இரவு தாண்டமுன் விடுதிக்கும் திரும்பும் நோக்குடன் செல்வர்.
நெல்லியடியில் என்னை மறித்த காவலர் என்னிடம் வினவிய மொழி சிங்களம். மொழி தெரியவில்லை என நான் சொன்ன பின்பு, கொச்சையும் குதறலுமாய்த் தமிழைப் பேசினர். அச்சுறுத்தினர், மிரட்டினர். படைக் கருவி கடத்துபவனாகவோ, கொலைசெய்து தப்பிப்பவனாகவோ, கொள்ளையடித்துத் தப்பிப்பவனாகவோ, கற்பளித்துத் தப்பிப்பவனாகவோ, கேரளக் கஞ்சா கடத்துபவனாகவோ என்னைப் பார்த்தனர், ஐயம்கொண்டனர்.
ஒவ்வொரு தமிழனையும் அவ்வாறே பார்க்கும் பார்வை, வட மாகாணம், கிழக்கு மாகாணம், மலையகம் முழுவதும் உள்ள சிங்களக் காவலருக்கு உண்டோ என ஐயுறவேண்டி உளது.
நள்ளிரவைத் தாண்டமுன் விடுதி போகும் மாணவர். இரவலாக ஈருருளியுந்தை வாங்கி விரையும் மாணவர். வறுமைக் கோட்டின் கீழுள்ள பெற்றோரின் மக்களான மாணவர். மூன்றாமாண்டு மாணவர். இதோ வெளியேறுவோம். வேலைவாய்ப்புச் சந்தைக்குள் புகுந்து மிதப்போம். வருவாய் பெருக்குவோம். பெற்றாரின் கடனை மீட்போம். உடன் பிறப்புகளைக் கரை சேர்ப்பபோம் என்ற கனவுகளை நனவுகளாக்கக் காத்திருந்த மாணவர்.
தமிழர் கனவுகளைக் கலைப்பதே காக்கி உடையின் அறம். தமிழர் எண்ணிக்கையைக் குறைப்பதே காக்கி உடையின் அறம். அச்சத்தோடு வாழுங்கள், அடிமைகளாகத் தொடருங்கள், வெருட்டுவோம், மிரட்டுவோம், அடிப்போம் உதைப்போம், உயிர் போகச் சுடுவோம்; இவையே காவலர்ச் சீருடைக்கு அறம் என்ற மேலாதிக்க உணர்வுடன் தமிழரைப் பார்க்கும் காவலர்.

பொல்லா ஆட்சியாயிலென் நல்லாட்சியாயிலென், மேலாதிக்கத்தின் நீட்சியாகத் தமிழரிடை நிலைகொண்ட சிங்களக் காவலர், நெல்லியடியில் என்னை மறித்தனர். குளப்பிட்டிச் சந்தியில் மாணவர்களைச் சுட்டனர். ஏனிந்தக் கொலைவெறி?

Monday, November 07, 2016

இராஜீவ் காந்தியுடன் பேசினோம்

06.11.2016 ஞாயிறு
சென்னை, இந்து தமிழ் நாளிதழ்.
"பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி, தன்னையும், முரசொலி மாறனையும் கடைசிக் கட்டத்தில் அழைத்துப் பேசியதாகவும், அப்போது, “விடுதலைப்புலிகள் என்ன கோரிக்கை வைத்திருக்கிறார்களோ அதைப் பெற்றுத்தருவதற்காக சகல அதிகாரத்தையும் பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன். இந்தியா முழு வாக்குறுதி தருகிறது” என்று ராஜீவ் சொன்னதாகவும் கலைஞர் எழுதியிருக்கிறார்.
"அது உண்மைதான். ஏனென்றால், இதே விஷயத்தை ராஜீவ் என்னிடமும் சொல்லியிருக்கிறார். இந்த விவரங்கள் எங்கள் கூட்டணியில் உள்ள ஒரு தலைவருக்கும் தெரிந்திருக்கலாம்.
"முரசொலி மாறன் இப்போது இல்லை. நான் கேட்டவன் மட்டுமே. கலைஞர்தான் கலந்துகொண்டவர்."
பொதுவுடைமைக் கட்சியின் திரு. தா. பாண்டியன் அவர்கள் கூறியதாக 6.11 தி இந்து தமிழ் நாளிதழில் செய்தி. http://m.tamil.thehindu.com/…/%E0%AE%95%…/article9311731.ece
தில்லியில் 05 மார்ச்சு 1991 சந்திப்பில் கவிஞர் காசி ஆனந்தனிடம் இதையே இராஜீவ் காந்தி தெரிவித்தார்.
இராஜீவ் இல்லம் வரை கவிஞருடன் சென்றேன், சந்திப்பின் பின் வந்த கவிஞர் மகிழ்வுடன் இச்செய்தியை என்னிடம் பகிர்ந்தார்.
உடனே இலண்டனுக்குக் கவிஞர் தொலைப்பேசியில் பேசினார் கிட்டுவிடமும் நேரடியாகத் தெரிவித்தார்.
மீண்டும் தன்னைச் சந்திக்க மார்ச்சு 28 அன்று வருமாறு இராஜீவ் கவிஞரிடம் சொல்லியிருந்தார்.
இராஜீவ் கேட்ட வினாக்களுக்கான பதில் பிரபாகரனிடமிருந்து வராததால் மார்ச்சு 28 சந்திப்பு நடைபெறவில்லை.
இராஜீவ் - காசி ஆனந்தன் சந்திப்பை ஏற்பாடு செய்த இந்து நாளிதழ் ஆசிரியர் குழுமத்தைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதிக்கும் உடனே கவிஞர் பேச்சின் முழு விவரத்தையும் தெரிவித்தார். 1991 மே 23 அல்லது 24 இந்து இதழில் இச்சந்திப்பில் நிகழ்ந்ததைப் பதிந்துள்ளார். விவரம் அவரே எழுதியுள்ளார்.
அச்சந்திப்பு நிகழேவேயில்லை என அப்பொழுது பிரணாப் முகர்ஜி மறுத்திருந்தார். எனினும் மாலினி விடாது நிகழ்ந்ததை உறுதி செய்தார். 1991 மே 19க்குப் பிந்தைய இந்து இதழ்கள் பார்க்க.
அவர் எழுதும் வரை அச்சந்திப்பு இராஜீவின் வேண்டுகோளுக்கமைய மிகவும் இரகசியமாக இருந்தது,
கவிஞர் காசி ஆனந்தன் இராஜீவுக்கு எழுதிய கடிதத்தைத் தயாரிப்பதில் உதவினேன். தமிழீழமே தீர்வு என அக்கடிதத்தில் கூறியிருந்தார்.
என்னையும் சந்திப்புக்கு அழைத்துச் சென்றார் கவிஞர். விடுதலைப்புலிகள் தரப்பில் அவர் சந்திக்கப் போனார். நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இல்லை. எனவே சந்திக்க வரமாட்டேன் என மறுத்துவிட்டேன். இராஜீவ் இல்ல வரவேற்பறையில் காத்து இருந்தேன்.
இராஜீவின் உதவியாளர் ஜோர்ஜ் உடன் நான் தொடர்பில் இருந்தேன். மாலினியுடன் தொடர்பில் இருந்தேன். இணைப்பாளராக இருந்தேனே அன்றிப் பங்காளனாக அல்ல.
இச்சந்திப்புத் தொடர்பாக மல்லிகையில் புலனாய்வுக்குழு பலமுறை என்னைத் துருவித் துருவி விசாரித்தது. காரத்திகேயன் மற்றும் இரகோத்தமனின் நூலில் விவரங்கள் உள.
ஜெயின் ஆணைக்குழு முன் கவிஞர் தில்லியில் 1997 கடைசியில் சாட்சியம் அளித்தார். அப்பொழுதும் அவருடன் நான் தில்லி சென்றிருந்தேன்.
சென்னையில் 2000 ஏப்பிரல் 5இல் என் வீட்டையும் காந்தளகத்தையும் முற்றுகையிட்ட எம்டிஎம்ஏ (Multi-Disciplinary Monitoring Agency) குழு, என்னிடம் ஆவணங்களைக் கைப்பற்றி நீதிமன்றில் ஒப்படைத்தது. என் கடவுச் சீட்டு அந்த ஆவணங்களுள் ஒன்று.
கடந்த 16 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் நீதி மன்றத்தில் கடவுச்சீட்டைக் கேட்பேன்.ஒவ்வொரு முறையும் எம்டிஎம்ஏ (Multi-Disciplinary Monitoring Agency) வழக்குரைஞர் கொடுக்கக் கூடாது எனக் கடுமையாக வாதிடுவார். எனக்காக நானே வாதாடுவேன். நீதிபதி என் வாதங்களை ஏற்பார். கடும் நிபந்தனைகளுடன் கடவுச் சீட்டைத் தருவார். உரிய காலக்கெடுவுக்குள் இந்தியா திரும்பியதும் நீதிமன்றில் கடவுச் சீட்டை ஒப்படைப்பேன்.
கவிஞரோ தன் தாயின் இறப்புக்குக்கூட மட்டக்களப்புக்குப் போகமுடியவில்லை. அவருக்கு அநுமதி வழங்க எம்டிஎம்ஏ மறுத்தது. கவிஞர் நீதிமன்றத்தை நாடவில்லை.