Sunday, May 21, 2023

கல்வி ஆர்வலர் இராதாகிருட்டிணன்

 அப்பாலுக்கு அப்பால் கல்வி







மறவன்புலவு க சச்சிதானந்தன்


மணல் விரல் ஏடு எழுத்தாணி எழுதுகோல் தாள் பாடநூல் பாடத்திட்டம் வகுப்பு ஒழுங்கு பாடசாலை ஒழுங்கு இவற்றுக்கு அப்பாலும் கல்வி.


வகுப்பறைக்கு அப்பால் கல்வி. விளையாட்டுத் திடலுக்கு அப்பால் கல்வி. பாடசாலைக்கு அப்பால் கல்வி. அப்பாலுக்கும் அப்பால் கல்வி.


திருக்குறள் தந்தவர் திருவள்ளுவர். அவருக்குச் சிலைகள். சென்னையில் தொழிலதிபர் செவாலியார் விஜி சந்தோஷம் 16 சிலைகளை அன்பளிப்பாக இலங்கைக்குத் தந்தார். 16 மாவட்டங்களுக்கு எடுத்துச் சென்று நிறுவும் பணி என்னதாயிற்று.


மன்னார் மாவட்டத்தில் எங்கு வைக்கலாம்? மன்னாரில் கேட்டேன். ஆதரவு இல்லை.


அப்பாலுக்கும் அப்பாலான கல்வி ஆர்வலர், கல்வி அலுவலரிடம் கேட்டேன்.


வாருங்கள், மன்னார் சித்தி விநாயகர் இந்து கல்லூரியில் அமைப்போம். அழைத்துச் சென்றார். முதல்வரைச் சந்தித்தோம். என்றைக்கும் மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் திருவள்ளுவர் சிலை.


திருக்குறளை தந்தவர் இவரா? தமிழ்ப் பெருமகன் இவரா? 1330 குறள்களும் இவராலா? வியப்புடன் சாரி சாரியாக ஆண்டாண்டு காலங்களூடாக அக் கல்லூரி மாணவர்கள் பார்க்கும் வியக்கும் உவக்கும் நிலைக்குக் காரணர், அப்பாலுக்கும் அப்பால் கல்வி ஆர்வலர், கல்வி அலுவலர்.


ஒரே நேரத்தில் ஒரு பணி, இரு பணிகள், மூன்று பணிகள், அல்ல அல்ல பல பணிகள். 


புலோலி மேற்கில் வாழ்ந்தவர் 100 பணிகள் செய்தவர் என்பதால் சதாவதானம் பட்டம் பெற்றவர், கவனகர், தமிழ்நாடும் ஈழமும் போற்றிய அறிஞர் நா. கதிரைவேற்பிள்ளை.


போர்க்கால அழிவுகளோடு கவனகர் கலையும் தொய்ந்தது மறைந்தது.


தமிழ்நாட்டில் தமிழறிஞர் பன்முகக் கவனகர் பேராசிரியர் கலைச்செழியன்.


இலங்கைக்கு அழைத்து வந்தேன். அப்பாலுக்கும் அப்பால் கல்வி ஆர்வலர் கல்வி அலுவலரிடம் சொன்னேன்.


பல்லாயிரக்கணக்கான மாணவர் பயன்பெறுமாறு தன் ஆட்சி எல்லைக்குள் அமைந்த பல்வேறு பாடசாலைகளுக்குக் கலைச்செழியனை அனுப்பினார். கவனகர் நிகழ்ச்சிகள் நடத்தினார். கதிர்வேற்பிள்ளை விட்டுச் சென்ற இடத்தை நிரப்பப் புத்துயிர் ஊட்டினார்.


கலைச்செழியனைத் தன் இல்லத்துக்கு அழைத்தார். விருந்தோம்பினார்.


அப்பாலுக்கும் அப்பால் கல்விக்கு நான் எடுத்த சிறு முயற்சிக்குப் பேருதவியாக இருந்தவர் கல்வி அலுவலர்.


உள்ளூரவர் புலம்பெயரார் அந்நியர் என யார் என்னாது எவருக்கும் எந்த முயற்சிக்கும் ஈழத் தமிழ் மாணவர்களின் அப்பாலுக்கு அப்பால் கல்விக்காக அணி நின்றவர் இக்கல்வி அலுவலர்.


கவிதைகள் புனைவார். கதைகள் வரைவார். கட்டுரைகள் எழுதுவார். ஓவியங்கள் வரைவார். முகப்பாக்குவார். தமிழ் உலகத்துக்கு அவர் ஆக்கிய நூல்கள் பற்பல.


புறத்திலே கல்விப் பணி. அகத்திலேயும் கல்விப் பணி. இல்லாளும் கல்லூரி முதல்வர். மக்களோ முதல் நிலைப் புலமைத் திறனர்.


மரபு வழிக் கல்வி. மரபுசாராக் கல்வி. அப்பாலுக்கு அப்பாலும் கல்வி.  அனைத்துமே அறிவு வளர்ச்சிக்கு ஆக்கங்கள்.


இத்தகைய ஆக்கங்களுக்கும் புலமைக்கும் திறனுக்கும் முயற்சிக்கும் உரிய கல்வி அலுவலர். எப்பொழுதும் புன்சிரிப்புடன் பணியாற்றும் பெருமகனார். திரு. இராதாகிருஷ்ணன் அவர்களை நான் அறிந்தேன் என்பதே என்பதே வாழ்வில் நான் பெற்ற பேறு.


இதை எழுதும் பொழுது எனக்கு 81 வயது. நான் இன்னும் ஓயவில்லை, ஓய்வு பெறவில்லை. 


திரு இராதாகிருஷ்ணன் அவர்களே, நீங்கள் ஓய்வு பெறவில்லை.


உங்களின் இந்த வயதுக்குப் பின்பே உற்சாகம் உங்கள் உடைமையாகும். ஊக்கம் உங்கள் உள்ளம் ஆகும். உங்கள் வாழ்க்கை மேன்மேலும் அனைவருக்கும் பயனுற வாழ்க பல்லாண்டு, வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் பாராட்டுகிறேன்.

No comments: