Monday, September 13, 2021

கற்பனை சுமந்திரன் ஸ்டாலின்


தமிழக முதலமைச்சர் ஸ்டாலினைச் சுமந்திரன் சந்தித்தார்.

இலங்கைத் தமிழர்கள் அரசியல் எதிர்காலம் தொடர்பாக இன்று காலை சென்னையில் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் அவர்கள் சந்தித்தார்.

நீண்ட நாள் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் தமிழகத்தின் மூத்த ஆயர்களின் ஒருவரான பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்கள் ஆபிரகாம் சுமந்திரன் அவர்களை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்தார்கள்

சுமந்திரன்: வணக்கம் 

முதலமைச்சர்: வணக்கம் 

சுமந்திரன்: திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததால் ஈழத்தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

முதலமைச்சர்: நன்றி 

சுமந்திரன்: தமிழகத்தின் வளர்ச்சியை கண்டு பிரமித்துப் போய் இருக்கிறோம் உங்கள் தலைமையில் மேலும் வளர்ச்சி காண வேண்டும். அதற்காகவே திராவிட முன்னேற்ற கழகத்தைத் தமிழகத்தார் தேர்ந்து சட்டசபைக்கும் நாடாளுமன்றத்துக்கும் பெரும்பான்மையாக அனுப்பியிருக்கிறார்கள்.

முதலமைச்சர்: ஈழத் தமிழர்கள் மீது நாங்கள் அக்கறையுடன் இருக்கிறோம். நீங்கள் எங்களின் தொப்புள் கொடி உறவுகள். 

சுமந்திரன்: உங்கள் தந்தையார் கலைஞர் அவர்களும் அவரைத் தொடர்ந்து நீங்களும் காட்டிவரும் ஆதரவுக்கு நன்றி, தமிழக அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஈழத்தமிழர்களுக்கு உதவ வேண்டும் 

முதலமைச்சர்: 1956 சிதம்பரம் மகாநாட்டிலும் பின்பு தூத்துக்குடியில் நடந்த மாநாட்டிலும் அறிஞர் அண்ணா தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஈழத்தமிழருக்கு ஆதரவாகத் தீர்மானங்களை இயற்றினோம். அத் தீர்மானங்களை என் தந்தையார் கலைஞரே முன்மொழிந்தார் தொடர்ச்சியாக நாங்கள் ஈழத் தமிழர் மீதும் அவர்களது அரசியல் எதிர்காலம் மீதும் அக்கறையுடன் இருக்கிறோம். இப்பொழுது நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? 

சுமந்திரன்: இலங்கையில் தமிழர்கள் அரசியல் எதிர்காலத்தை இலங்கை அரசுடன் பேசித் தீர்க்க விரும்புகிறார்கள். அந்தப் பேச்சுவார்த்தையில் இந்தியாவும் அனைத்து உலகமும் தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் இலங்கை அரசுடன் பேசிக் கொண்டிருக்கிறோம். கொழும்பில் பிறந்தேன் என்பதால் எனக்குச் சிங்கள அரசியல் தலைவர்களின் மனோநிலை தெரியும். இலங்கையின் தமிழர் மரபு வழித் தாயகத்தில் வாழ்கின்றவர்கள் உணர்ச்சி வசப்படுவார்கள். எதையும் எதிர்க்கிறார்கள். இரணில் விக்கிரமசிங்க என்றாலும் இராஜபக்சக்கள் என்றாலும் நல்லவர்கள். தமிழர்களுக்கு தீங்கு விளைவிக்க மாட்டார்கள். எனவே அவர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம். 

முதலமைச்சர்: மிக்க மகிழ்ச்சி நல்ல வழியில் செல்கிறீர்கள். மேலும் உயிர் இழப்புகளைத் தவிர்க்கும் நோக்கத்தில் நீங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதையே நாங்கள் விரும்புகிறோம். உங்களுக்கு எல்லாவிதமான ஆதரவையும் தமிழகமும் தமிழகம் வழியாக இந்தியாவும் தரும். 

சுமந்திரன்: இராஜபக்சேவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கி உள்ளோம். தமிழக அரசியவாதிகள் சிலர் வட்டுக்கோட்டை 2 என்ற தலைப்பில் உணர்ச்சிவசப்பட்டு இலங்கையில் தமிழருக்கு தனியான நாடு வேண்டும் என்ற கண்ணோட்டத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். இதனால் எங்கள் பேச்சு வார்த்தை குழம்பிப் போயிருக்கிறது. நீங்கள் தலையிட்டுத் தமிழகத்தில் உள்ளவர்கள் இவ்வாறு செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இலங்கையின் மரபுவழித் தாயகத்திலுள்ள அரசியல் தலைவர்கள் உணர்ச்சிவயப்பட்டு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்பார்கள். நான் அவர்களை எதிர்த்து வருகிறேன். இதனால் சிங்கள அரசியல் தலைவர்களுக்கு என் மீது நம்பிக்கை உண்டு. 

பேராயர் எஸ்ரா சற்குணம்: பிரபாகரன் கொலைகாரன். சுமந்திரனின் பெற்றோரையும் பிரபாகரன் தண்டித்தார். பிரபாகரன் ஆதரவாளர்கள் தமிழகத்தில் இருப்பது இலங்கை அரசுக்கு தலையிடியாக உள்ளது. தமிழக முதலமைச்சராக நீங்கள் பிரபாகரன் ஆதரவாளர்களைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். 

சுமந்திரன்: போர்க் காலங்களில் இருபக்கமும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என்பதை மனித உரிமை ஆணையர் அழுத்திக் கூறியுள்ளார். அந்த அறிக்கை வரிகளை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். மனித உரிமை ஆணையத்துக்கு நாங்கள் எழுதும் கடிதங்களில் அந்த அறிக்கை வரிகளை மேற்கோள் காட்டுகிறோம். 

முதலமைச்சர்: தமிழகத்தில் நாங்கள் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்? சட்டசபையில் தீர்மானம் இயற்றவா? ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதவா? பிரதமர் மோடி அவர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யவா? தமிழகததில் அனைத்துக் கட்சிகளைக் கூட்டிப் பேசவா? சொல்லுங்கள் என் கட்சிக்காரர்களுடன் பேசுகிறேன். 

சுமந்திரன்: இலங்கை அரசுக்கு எதிராக நீங்கள் எதையும் செய்துவிட வேண்டாம் என உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை அரசோடு நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றி காண்போம். இரணில் விக்ரமசிங்கவுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுத்தோம். அவர் எங்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனாலும் அவருடைய ஆட்சி நல்லாட்சி. அதைப்போலவே இராஜபக்சக்களினுடைய ஆட்சியும் நல்லாட்சியே. அவர்கள் ஈழத்தமிழர் அரசியல் எதிர்காலத்துக்காக எதையும் செய்யாவிட்டாலும் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து நல்லாட்சி அமைக்க இருக்கிறோம். எனவே தமிழக அரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஈழத்தமிழர்கள் தொடர்பாகத் தீவிரமாகச் செயற்பட வேண்டாம். தில்லியில் அரசிடமும் கட்சிகளிடமும் இவ்வாறே கோரியுள்ளோம். 

முதலமைச்சர்: அப்படியா! உங்களுடைய இந்தவேண்டுகோள் ஈழத் தமிழர் சார்பில் இருப்பதை எனது கட்சிக்காரர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களின் உதவியுடன் இங்குள்ள மற்ற கட்சித் தலைவர்களையும் நீங்கள் சந்தித்துப் பேசுங்கள். இதே கோரிக்கைகளை அவர்கள் முன் வையுங்கள். எங்களது தலையீட்டைக் குறைத்துக் கொள்கிறோம். இராஜபக்ஷவுடன் நீங்கள் உங்களுடைய அரசியல் எதிர்காலத்தைப் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள்.

சுமந்திரன்: இதையே நான் உங்களிடம் எதிர்பார்த்தேன். முதலமைச்சர் அவர்களே என்னுடைய தலைவர் சம்பந்தன் அவர்களிடம் நீங்கள் சொன்ன செய்திகளை அப்படியே சொல்கிறேன். 

முதலமைச்சர்: என்னுடைய கட்சிக்காரர்களிடம் இதை சொல்கிறேன் மாவை சேனாதிராஜா எனக்கு நன்கு தெரிந்தவர். நலமாக இருக்கிறாரா? சிவாஜிலிங்கம் நலமாக இருக்கிறாரா? மறவன்புலவு சச்சிதானந்தன் என்னுடைய அப்பாவின் நெருங்கிய ஆலோசகர். அவர் நலமாக இருக்கிறாரா? பழைய தலைவர்கள் எல்லாம் இப்பொழுது இல்லை என்றாலும் ஆனந்தசங்கரி அவர்கள் அங்கு இருக்கிறார்கள். நலமாக இருக்கிறாரா? என் அப்பாவுக்காக சன்சோனி விசாரணைக்குழுவில் தோன்றிய பெரும் அறிஞர் ஜீ ஜீ பொன்னம்பலம். அவரின் பெயரன் கஜேந்திரகுமார் நலமா? யாவரிடமும் நான் அன்புடன் விசாரித்தேன் எனக் கூறுங்கள்.

சுமந்திரன்: நீங்கள் கேட்டவர்கள் எல்லோரும் நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார்கள் உங்களுடைய அன்பை அவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகச் சென்று தெரிவிப்பேன். என்னைச் சந்திக்க ஒப்புக் கொண்டதற்கு நன்றி. என்னை உங்களிடம் அழைத்து வந்த பேராயர் எஸ்ரா சற்குணம் அவர்களுக்கும் நன்றி.

(யாவும் கற்பனை)

No comments: