Wednesday, December 22, 2021

பன்முக ஆற்றலர் சண்முகநாதனார்

 மார்கழி 7, புதன் (22.12.21)

பன்முக ஆற்றலர் சண்முகநாதனார்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்




முறைக்கத் தெரியாதவர்.

சிரிக்கத் தெரியாதவர்.

சாந்தம் தவிர வேறு எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தத் தெரியாதவர்.
பொறுமையைத் தவிர வேறு எதையும் தெரியாதவர்.

அகத்திலே அன்புப் பெருக்கானவர்.
அகத்திலே இரக்கக் குழைவானவர்.

பதவிகளை விரும்பாதவர், நாடாதவர்.
பொருள் ஈட்டுவதில் நாட்டம் இல்லாதவர்.

காலம் தவறாத கண்ணியர்.
திறமை குறையாத திண்ணியர்.
தேவைக்குக் கூடுதலாக ஒரு சொல் கூட அவர் வாயிலிருந்து வராது.
அளந்து பேசுவார். அவை அறிந்து பேசுவார்

கலைஞருக்கு நிழலாகத் தொடர்வது எளிதானதல்ல.
நிறைகளின் களஞ்சியம் கலைஞர்.
குறைகள் இல்லாதவர் அல்லர் கலைஞர்.

நினைவாற்றலில் கலைஞரைப் போன்று நான் வேறு எவரையும் சந்தித்ததில்லை.

கலைஞரோடு நிழலாகப் பயணித்த சண்முகநாதனார் கலைஞரின் நிறைகளில் பல கைவரப் பெற்றவர்.

கலைஞர் எள் கேட்பார் செக்குக்காக.
நல்லெண்ணெய்யோடு கலைஞர் முன் நிற்பார் சண்முகநாதனார்.

கலைஞர் என் மீது காட்டும் அன்புக்கு நிகரான அன்பைச் சண்முகநாதனாரும் என்மீது காட்டுவார்.

கலைஞரோடு பழகத் தொடங்கிய 1977ஆம் ஆண்டிலிருந்து சண்முகநாதனாரோடும் பழகத் தொடங்கினேன்.

அண்மையில் சில ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நான் இருக்கும் பொழுதும் என்னை அழைத்துப் பேசுபவர், நலம் விசாரிப்பவர் சண்முகநாதனார்.

அண்மையில் நான் சந்தித்தேன்.
முரசொலி தொடர்பான பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன் என்றார்.

கலைஞர் வாழ்ந்த காலத்தில் காலையில் எத்தனை மணிக்கு வருவேனோ அதே நேரத்தில் கலைஞர் இல்லம் அவர் இல்லை என்றாலும் வந்து விடுவேன் என்றார்.

அதேயளவு நேரத்தைத் கலைஞர் இல்லத்திலேயே அவர் இல்லாத காலத்திலும் செலவிடுகிறேன் என என்னிடம் சொன்னார்.

அவர் நீண்ட காலம் வாழ்வார் நினைவுகளை மீட்டு எழுதுவார் என்று எண்ணியிருந்தேன் 

கலைஞர் சொல்லாத செய்திகள் எல்லாம் உங்கள் நினைவில் இருக்கின்றன.‌ எழுதி வையுங்கள். இப்பொழுது இல்லை என்றாலும் பிற்காலத்தில் அவை வெளிவரும் பொழுது வரலாறு செம்மையாகும் என்பேன்.

அப்பொழுதும் முகத்தில் எவ்வித சலனமும் இல்லாமல் சாந்தமாக என்னை பார்த்தார்.

அவர் மறைவுச் செய்தி அதிர்ச்சி.
திடீரென வெற்றிடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

அவரை இழந்து வாடும் அனைவருக்கும் 
சிறப்பாக அவரோடு இணையாகப் பணிபுரிந்த என் கெழுதகை நண்பர் இராசமாணிக்கனார் உள்ளிட்ட அனைவருக்கும் 
அவரது குடும்பத்தாருக்கும் 
நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 
உங்கள் அனைவரின் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்

No comments: