Sunday, January 02, 2022

இலங்கையின் சாணக்கியமா? ஈழத் தமிழரின் சாணக்கியமா?

இலங்கையின் சாணக்கியமா? ஈழத் தமிழரின் சாணக்கியமா?

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 
சிவ சேனை

இலங்கையின் துணைத் தூதரகம் சென்னையில் நெடுங்காலமாக இயங்கி வருகிறது.

அங்குத் துணைத் தூதராக இருப்போரின் தகைமை 1983க்கு முன் வேறு.

1983க்குப் பின் இலங்கைக்குப் பெரிய தலையிடியே தமிழ்நாடு. எனவே துணைத் தூதரின் பொறுப்பு வேறு கண்ணோட்டத்தில் அமைந்தது. 2002க்குப் பின்னர் அந்தப் பொறுப்பில் தகைமைமையும் மாறியது.

அண்மைக் காலத்தில் துணைத் தூதராக அங்கு கடமையாற்றிய இருவரும் மலையகத்தவர். தமிழ்நாட்டு அரசியலின் நாடித் துடிப்பைத் தம் முன்னோர் வழியான கண்ணோட்டத்தில் அறிந்தவர்.

இலங்கை அரசின் சாணக்கியம் இலங்கை மக்களின் நன்மை பேணுவதற்கே. துணைத் தூதராகச் சிங்களவர் ஒருவர் எனில் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் உரசல்கள் எல்லை மீறும். 

வடகிழக்கார் ஒருவரை அனுப்பினால் அவர் இலங்கை மக்களின் அரசியல் கொள்கைகளை முன்னெடுப்பாரா? 

மலையகத் தமிழராயின் இலங்கை அரசின் நன்மைகளை முழுமையாகப் பேணுவார். தமிழக அரசின் தமிழ்த் தலைவர்களுடன் எளிமையாகத் தொடர்பைப் பெறுவார். இலங்கையின் சாணக்கியம் அஃதே.

இந்தியாவின் நடுவண் அரசு இந்துத்துவக் கொள்கைகளை முன்னெடுக்கும் அரசு. 900 ஆண்டுகால அந்நிய ஆட்சியிலிருந்தும் விளைவான சீரழிவிலிருந்தும் இந்துக்கள் விடுதலை பெறுவதை விழையும் அரசு.

அதற்காகவே மராட்டிய சிவாஜி மன்னனின் வழியில்  உலகிலேயே மிகச் சிறந்த ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ள இந்துத்துவ அமைப்பை உருவாக்கினர். நூற்றாண்டை நெருங்கும் அந்த அமைப்பின் அரசியல் வெளிப்பாடே தில்லியில் இந்துத்துவ அரசு.

தில்லியின் இந்துத்துவா கொள்கையைப் பெரிதும் மதிக்கும் இலங்கையின் சாணக்கியமே இலங்கை அரசு அண்மையில் குசிநகரில் பகவத் கீதையின் 3 மொழிபெயர்ப்புகளைப் பிரதமர் மோடியிடம் கொடுத்தமை 

1975இல் அப்பொழுது நாடாளுமன்ற உறுப்பினரான வாஜ்பாயி இலங்கை வந்திருந்தார். நானும் திரு பேரின்பநாயகமும் அவரைக் காலிமுக விடுதியில் சென்று சந்தித்தோம்.

தொடர்ந்து திரு மு. திருச்செல்வம் (நீலனின் தந்தையார்) வாஜ்பாய்க்கு இரவு விருந்து ஒன்றை நடத்தினார். அந்த விருந்தில் பெரியவர் செல்வநாயகம் கலந்து கொள்ள வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம். திரு மு. திருச்செல்வம் அதை விரும்பவில்லை. இங்குள்ள இந்துக்களுக்குக் கிறித்தவரான பெரியவர் செல்வநாயகமே தலைவர் என்றால் இந்துத்துவாப் பின்னணியர் வாஜ்பாய் முகம் கோணுவார் என எம்மிடம் தெரிவித்தார்.

இலங்கையில் சிங்களவர் புத்த சமயத்தவர். தமிழர் கிருத்துவ சமயத்தவர் என்ற கண்ணோட்டம் தமிழ்நாட்டில் குன்றக்குடி அடிகளார் தொடக்கம் வடக்கே காஷ்மீர் பண்டிதர் வரை இந்தியாவெங்கும் பேசப்படுகின்ற அலசப்படுகின்ற தவறான செய்தி.

1991இல் அப்பொழுது நடுவண் அரசின் வர்த்தக அமைச்சராக இருந்த முனைவர் சுப்பிரமணியம் சாமி, கவிஞர் காசியானந்தனிடமும் என்னிடமும் கூறினார். கிறித்தவரான அன்டன் பாலசிங்கத்தை விடுதலைப்புலிகள் கட்சியில் இருந்து நீக்குங்கள். பின்னர் பிரபாகரனோடு நாங்கள் இணங்கலாம். அப்பொழுது சந்திரசேகர் பிரதமர்.

2015ல் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம். தில்லியில் இருந்தும் கட்சிப் பிரமுகர்கள் வந்திருந்தனர். 

கட்சி சாராத பாதுகாப்பு மற்றும் தூதரகப் பின்னணியில் ஓய்வு பெற்றவர்களும் புலமை சார்ந்தவர்களும் வந்திருந்தனர். 

இலங்கைத் தமிழரின் அரசியல் சிக்கலை எவ்வாறு கட்சி அணுகுவது என்பதைத் தமிழகத்தின் மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்குவதற்காகவே அந்தக் கூட்டம்.

இலங்கையிலிருந்து ஒரே ஒருவரை அழைத்திருந்தனர். தலைவர் இரா சம்பந்தனை அழைத்திருந்தனர். அவரைக் கேட்டே கூட்டத்துக்கான நாளையும் குறித்தனர். ஆனால் அவர் அன்று வரவில்லை.

1979 தொடக்கம் திரு இரா சம்பந்தனை அறிவேன். கொஞ்சம் பழகினேன். 1983க்குப் பின் மேலும் நெருங்கிப் பழகினேன். 1986 தொடக்கம் 1988 வரை அவர் என் வீட்டுக்கு வருவதும் நான் அவர் வீட்டுக்கு செல்வதும் பல்வேறு செய்திகளைப் பகிர்ந்து கொள்வதும் ஆக எங்களுக்குள் அன்னியோன்னியம் இருந்தது.

தமிழகத் தலைவர்கள் மீது அவருக்கு வாஞ்சை கிடையாது. தமிழக அரசியலை வேறுபட்ட கண்ணோட்டத்துடன் அவர் பார்ப்பார். 

தமிழக அரசியல் தலைவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கட்டும். நாங்கள் எங்கள் வேலையைபா பார்ப்போம் என்ற தொனியில் முதலமைச்சர் ஆனதும் திரு விக்னேஸ்வரன் கூறினாரே! அதே கொள்கையைத்தான் திரு சம்பந்தனும் கொண்டிருப்பார். இது என் தனிப்பட்ட மதிப்பீடு.

அந்தக் கண்ணோட்டத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அழைத்த கூட்டத்திற்குச் திரு சம்பந்தன் வரவில்லைப் போலும்! திரு சுமந்திரனை அனுப்பியிருந்தார். கூட்டத்திற்கு முதல்நாளே இச் செய்தியைத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அறிந்தனர்.

1975இல் வாஜ்பாயைச் சந்தித்த நாளிலிருந்து பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களுடன் தொடர்பாக இருந்திருக்கிறேன். 1978இல் காசியில் நடைபெற்ற விசுவ இந்து பரிஷத் மாநாட்டிற்கு திரு ஈழவேந்தன் உள்ளிட்ட எழுவரை இங்கிருந்து அனுப்பினேன்.

தமிழகப் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் அனைவரும் அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு உற்ற நண்பர்கள்.

திரு சம்பந்தன் வரமாட்டார், திரு சுமந்திரன் வருகிறார் என்று தெரிந்ததும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் என்னை அழைத்தார். அழைக்கும்வரை அவ்வாறான கூட்டம் இருக்கிறது என்பதை எனக்கு அவர்கள் சொல்லவில்லை.

நாளை நடக்கும் கூட்டத்திற்கு நீங்கள் கட்டாயம் வர வேண்டும் என்றார். என்ன கூட்டம்? என்று கேட்டேன். இலங்கைத் தமிழர் அரசியல் எதிர்காலம் தொடர்பாக அடிக்கடி எம்மிடம் பேசுவீர்களே. அது தொடர்பான கூட்டம் என்றார்.

கோயம்புத்தூரில் ஆனைகட்டியில் தவத்திரு சுவாமி தயானந்த சரசுவதி ஆச்சிரமத்தில் இருக்கிறேன். இரவு வண்டியில் நாளைக் காலை வந்தாலும் கூட்டம் தொடங்கும் நேரத்துக்கு வந்து சேர மாட்டேன் என்றேன்.

கொஞ்சம் பிந்தினாலும் பரவாயில்லை. வந்து சேருங்கள் என்றார் பாஜக தலைவர்.

அடுத்த நாள் காலை கூட்டத்திற்குச் சென்றேன். பிந்தியே சென்றேன் என்றாலும் முன்வரிசையில் ஒருவரை எழுப்பி என்னை இருக்கச் சொன்னார்கள். அருகிலே தில்லியில் இருந்து வந்த என் பாஜக நண்பர்கள் இருந்தார்கள். மேடையில் எனக்குத் தெரிந்த பேராசிரியர் சூரியநாராயணன் இருந்தார். பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை ஓய்வுநிலையாளர்களும் அங்கு இருந்தனர்.

வேறும் சிலர் அங்கிருந்தனர். மேடைக்குப் பின்னால் இருந்த வண்ணத் தட்டியின் வரிகளைப் பார்த்துக் கூட்டத்தின் நோக்கம் தெரிந்து கொண்டேன்.

கூட்டம் நடந்த இடையே ஓர் அறிவித்தல். இலங்கையில் இருந்து வந்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் பேசுவார் என. அப்பொழுதுதான் மேடையில் இருப்பவர்களுள் ஒருவர் திரு. சுமந்திரன் எனத் தெரிந்துகொண்டேன்.

திரு சுமந்திரன் வந்திருக்கிறாரே? நான் ஏன் பேச வேண்டும் எனக் கேட்டேன். நீங்கள் சொல்வதைத்தான் கேட்டுப் பழகியிருக்கிறோம். திரு சம்பந்தன் வருவதாக இருந்து. வரவில்லை. எனவே நீங்கள் பேச வேண்டும் என்றார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் சத்தியலிங்கமும் திரு குகதாசனும் சென்னைக்குச் சென்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களைச் சந்தித்த வேளை அவர்கள் தொடுத்த வினாக்கள் என் தொடர்பானவை. திரு சுமந்திரன் தொடர்பானவை. 

தமிழர் முகமதியர் மலையகத்தார் சார்ந்த கட்சிகள் கூட்டாக இந்தியப் பிரதமர் மோடிக்கு எழுதும் கடிதமும் தொடரும் சந்திப்பும் தொடர்பாக இந்தப் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

900 ஆண்டுகாலச் சிதைவுகளைச் சீராக்க முயல்கிறோம் என்ற கொள்கையில் மக்கள் ஆணை பெற்று ஆட்சியமைத்த பாரதிய ஜனதா கட்சியிடம் இலங்கை தமிழர்கள் சார்பில் எதனை யார் வழி கோரலாம் என்ற சாணக்கியம் இலங்கைத் தமிழர் தரப்புக்கு இருக்க வேண்டும்.

தமிழக அரசிடம் தொடர்புக்கு எத்தகைய சாணக்கியம் உதவும்? இந்துத்துவ அரசுடன் தொடர்புக்கு எத்தகைய சாணக்கியம் உதவும்? என்ற முன்னெடுப்பை இலங்கை அரசு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறது.

இலங்கை தமிழருக்கு நன்மை பெற விரும்பும் இலங்கை தமிழ்ச் சார்பாளர் எத்தகைய சாணக்கியத்தைக் கொள்ள வேண்டும்? 

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் எழுதியதைத் தமிழர் மறந்து விடக்கூடாது.

கடந்த காலப் பேதங்களை மறந்து இணைந்துள்ள தமிழ்க் கட்சிகள், இக்காலத்திலான பேதங்களை மறந்து திரு கஜேந்திரகுமார் திரு டக்ளஸ் தேவானந்தா திரு ஜீவன் தொண்டமான், திரு அங்கஜன் திரு பிள்ளையான் திரு கருணா திரு வியாழேந்திரன் மற்றும் விடுபட்ட மலையகத் தலைவர்களையும் இணைத்து இலங்கைத் தமிழரின்
அனைத்துக் கட்சிக் குழுவாகக் கோரிக்கையை வைப்பதே ஈழத் தமிழரின் சாணக்கியம்.

இந்தியாவின் 900 ஆண்டு கால இந்துக்களின் சிதைவுகளைச் சீரமைக்க முயலும் பாஜ கட்சியின் ஆட்சி. அச்சீரழிவிற்குக் காரணரையோ, தொடர்ந்தும் அச்சீரழிவை முன்னெடுப்போரையோ சாயலாகக் கொண்டோரையோ பின்னணியைக் கொண்டோரையோ வரவேற்குமா?

அன்று திரு மு. திருச்செல்வம், இடையில் முனைவர் சுப்பிரமணிய சுவாமி, பின்னர் தமிழக பாஜக இவர்கள் சொன்னவையே இந்துத்துவ இந்திய அரசின் சாணக்கியம்.

நேபாளத்தில் தெற்காசியக் கூட்டுநாடுகள் மாநாடு. 2015 தேர்தலுக்குச் சில வாரங்கள் முந்தைய காலம். அங்கு இராஜபக்சாவைக் கட்டித் தழுவும் பிரதமர் மோடி. தேர்தலில் நீங்களே வெல்லவேண்டும் என வாழ்த்தும் மோடி. கொழும்பு திரும்பிய இராஜபக்சா செய்த முதல் வேலை தன் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றதாக இந்தியத் தூதரக அலுவலரை நாடு கடத்தியதே. ஒப்புக்காகச் சொல்வதற்கும் நெஞ்சாரச் சொல்வதற்கும் சாணக்கியமே துணை போகும்.

900 ஆண்டு கால இந்துச் சீரழிவின் காரணருடன் செல்வோரை ஒப்புக்காக வரவேற்பவர், நெஞ்சார வரவேற்கார். இந்தியச் சாணக்கியம் அஃதே..

மரியாதைக்காகச் செய்திகளைச் சொல்லத் தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்களைச் சந்திக்கலாம். தமிழக அரசின் வழியாகத் தில்லி அரசுக்குச் செய்தியைச் சொல்ல முயல்வோம் ஆயின் இந்தியாவின் அரசியல் சூழ்நிலை ஈழத்தமிழருக்கு உதவாது. 

ஈழத் தமிழருக்கு இந்திய அரசின் வழி நன்மை பெறுவதே இலங்கைத் தமிழரின் சாணக்கியம்.

No comments: