Wednesday, December 15, 2021

இரத்தின சீவன் ஊலரின் புலமை?

 தமிழரின் சமயம் - புனைவுகள்

கடந்த ஐப்பசி எட்டாம் நாள் திங்கள் கிழமை (25 10 2021)

Maatram.org/?p=9699

இரத்தினசீவன் ஊலர் எழுதிய கட்டுரை.

அங்கு ஒரு பந்தி பின்வருமாறு

 Quote “1619இல் போத்துக்கேயராச்சியம் யாழ்ப்பாணத்தை இணைத்தபோது ஏற்கனவே 12,000 கிறிஸ்தவர் இருந்தனர். 1624இல் இருந்து 1626 வரை ஃப்ரான்சிஸ்கர் சபையினரால் மட்டுமே 52,000 தமிழர் ஞானஸ்நானம் பெற்றனர். இவர்களில் யாழ் இராச்சியத்தின் பிரமுகர்கள் யாவரும், இராச்சியத்தின்  மூன்று முதலியார்களும், பிராமணர்களில் பெரும்பான்மையினரும் அவர்களின் மனைவியரும் குடும்பத்தினரும் அடங்குவர் (வண. பிதா ஃபெர்னான் டி. கேரோஸ் 1688 – வண பிதா எஸ் ஜீ பெரேராவின் மொழி பெயர்ப்பு 1930, ப. 659). டிக்கிரி அபேசிங்க (1986, ப. 54) இதை உறுதிப்படுத்துகின்றார்.” Unquote.

 இப் பந்தியில் இரு நூலாசிரியர்களை ஊலர் மேற்கோள் காட்டுகிறார்.

Tikiri Abeyasinghe எழுதிய இரு நூல்கள்: 

1966 Portugese rule in Ceylon 1594-1623, Lake House. 

1986 Jaffna under Portugese 1505-1648 Lake House

 Queyroz 1687இல் எழுதி 1916இல் பதிப்பு. 1930இல் S. G. Perera மொழிபெயர்ப்பு

Queyroz, Fernão de, 1617-1688 Conquista temporal, e espiritual de Ceylaõ. (The temporal and spiritual conquest of Ceylon / by Fernaõ de Queyroz ; translated by S. G. Perera) both books by Government Printer Colombo.

இரத்தினசீவன் ஊலரின் கூற்றுக்கான அடித்தள ஆதாரம் Queyroz  எழுதியனவே.

 Fernao de Queyroz  கிருத்தவ மத போதகர் 

இயேசுவின் சபையின் (S. J.) ஊழியர் 

வரலாற்று ஆசிரியர் 

1635இல் கொச்சிக்கு வருகிறார் 

1635-1642 கோதாவில் தத்துவம் பயில்கிறார்

1647 கோவா பவுலர் கல்லூரிப் பேராசிரியர்

1659 தொடக்கம் 16 ஆண்டுகள் கோவாவின் மதமாறாதோரை வதைக்கும் (Goa Inquisition) அமைப்பின் துணைத் தலைவர்.

 Fernao de Queyroz இந்தியாவில் வாழ்ந்த காலங்கள், இலங்கையில் ஒல்லாந்தர் ஆண்ட காலங்கள்.

கத்தோலிக்க மதத்துக்கு இலங்கையில் தடை இருந்த காலங்கள். போர்த்துக்கேயர் இலங்கைக்கு வர முடியாத காலங்கள். 

Queyroz இலங்கைக்கு ஒருபொழுதும் வரவே இல்லை. ஆனாலும் கத்தோலிக்கர் இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிய வரலாற்றை எழுதுகிறார்.

 போர்த்துக்கேயர் காலத்தில் Pedro de Basto. இலங்கையில் பயணி. தன் பயணங்களில் கண்ட கேட்டவற்றைக் குறிப்புகளாக எழுதினார். இப் பயணக்குறிப்புகள் Queyroz எழுதிய நூலுக்கு அடித்தளம் அல்லது ஆதாரம்.

 Paul Peries, S. G. Prerera, Tikiri Abeyasinghe ஆகியோர் Queyroz எழுதியவற்றை ஆதாரமாகக் கொண்டு இலங்கையில் போர்த்துக்கேய வரலாற்றை எழுதினர்.

 மதம் மாற மறுத்தவர்களை வதை செய்த கோவா அமைப்பில் (Goa Inquisition) 16 ஆண்டுகள் துணைத் தலைவராக இருந்தவர் எழுதிய இலங்கை வரலாறு. இலங்கைக்கு வராதவர் எழுதிய இலங்கை வரலாறு. இலங்கையைக் கத்தோலிக்கம் கைப்பற்றியதாக எழுதிய வரலாறு.

 இந்த நூலையே இரத்தின சீவன் ஊலர் மேற்கோள் காட்டுகிறார்.

 இலங்கையைக் கத்தோலிக்கர் கைப்பற்றியதாக Queyroz எழுதினார். போர்த்துக்கேய வாசகரை நோக்கி எழுதினார். வெற்றிக்கான புனைவுகளையே எழுதினார். தமக்கு ஊதியம் தருவோர் மன நிறைவுக்காகவே எழுதினார். 

 அவர் எழுதிய நூலில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டி மேலை நாட்டுப் பல்கலைக் கழக ஆய்வாளர் பலர் எழுதினர்.

  ஒரு சில எடுத்துக்காட்டுகளை இங்கே தருகிறேன்.

 இலங்கையில் மண்ணில் எழுந்த அரசுகள் வரலாற்று நூல்கள் யாவும் மிகையான கற்பனைகளைக் கொண்டவை என Queyroz எழுதுகிறார். 

 சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மாதகல் மயில்வாகனப் புலவர் மண்ணின் மகன்.

தாதுசேனன் அவையின் மகாநாமர் மண்ணின் மகன். 

நான்காம் பராக்கிரமபாகு அவையில்  பூசாவழி எழுதிய பெருமகன் மண்ணின் மகன். அதே காலத்தில் சரசோதி மாலை எழுதிய போசராசர் மண்ணின் மகன்.

ஆறாம் பராக்கிரமபாகு அவையில் கோகில சந்தேசய என்று குயில் தூது எழுதிய முள்கிரிகல் தேரர் மண்ணின் மகன்.

புவனேகபாகு அவையின் நிக்காய சங்கிரகம் எழுதிய சங்கராசர் தருமகீர்த்தி மண்ணின் மகன். 

 இவர்கள் எழுதிய குறிப்புகளை அண்மைய தொல்லியல் சார்ந்த கல்வெட்டு மற்றும் ஆவணச் சான்றுகள் உறுதியாக்கி வருகின்றன.

 திசமகாரமகமத்துத் திரளி முறி தொடக்கம் ஆனைக்கோட்டைப் பானை ஓடு வரை, இலங்கைத்தீவு முழுவதுமான கல்வெட்டுச் சான்றுகள் செப்பேட்டுச்  சான்றுகள் ஆவணச் சான்றுகள் இலக்கியச் சான்றுகள் யாவும் Queyroz தவறான வரலாற்றை எழுதியவர் என்பதை நிறுவின.

 திருகோணமலையில் உள்ள குளக்கோட்டன் கல்வெட்டு சிங்கள மொழியில் உள்ளதாகத் தவறாக Queyroz எழுதியுள்ளார்.

 இலங்கை முழுவதும் போர்த்துக்கேயர் காலத்தில் தமிழர், தமிழையே பேசி வாழ்ந்தனர் என்றும் இவர்களுக்குப் புத்தசமய நூல்கள் அமைந்த பாளி மொழியை வாசிக்கத் தெரியாது என்றும் தவறாக Queyroz எழுதியுள்ளார்.

 Queyroz எழுதிய நூலைப் படிக்கும் புலமைசார் தேசியவாதிகள் சினம் கொள்வரே அன்றி மேற்கோளாகக் கொள்ளார்.

Queyroz எழுதிய தவறுகளையும் கற்பனைகளையும் பொருந்தாக் கூற்றுகளையும் மேற்கோளாக்கும் இரத்தின சீவன் ஊலரின் புலமை?

No comments: