Thursday, December 16, 2021

இரத்தினசீவன் ஊலரும் தூய தோமாவும்

தமிழர் சமயம் – புனைவுகள்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

கடந்த ஐப்பசி எட்டாம் நாள் திங்கள் கிழமை (25 10 2021)

Maatram.org/?p=9699

இரத்தினசீவன் ஊலர் எழுதிய கட்டுரை.

அங்கு ஒரு பந்தி பின்வருமாறு:

quote ….2000 வருடங்களுக்கு முன்பிருந்து இலங்கையிலும் கிறித்தவம் நாட்டப்பட்டிருந்தது…….

…….இவ்வீழ்ச்சி தமிழ் நாட்டில் பரிதோமாவால் முதலாம் நூற்றாண்டில் தமிழர் மத்தியில் நிலைநாட்டப்பட்ட திருச்சபை 1300 அளவில் எஞ்சிய ஆலயம் ஒரு முஸ்லிம் துறவியிடம் மெழுகுவர்த்தி எரிக்க ஒப்படைக்கப்பட்டது போல்….. unquote

புலமைச் சோலை ஒருபுறம்.

புலமைப் பாலை மறுபுறம்.

காய்ப்பு, துவர்ப்பு, விருப்பு, வெறுப்பு, பாசம், பற்று அற்றவர் புலமைச் சோலையர்.

பொய், புரட்டு, மயக்கம், மாயை போன்றனவே புலமைப் பாலையரின் பின்புலம்.

எவ்வழியிலாவது சமூக சமய அரசியல் மேம்பாட்டை நாடுவோர், பொய்மைகளை மெய்மையாக்கும் புலமைப் பாலையரே. 

இயேசு பிரானின் 12 சீடர்களுள் தூய தோமர் ஒருவர். “இயேசுபிரானுடன் யூதேயா செல்வோம். அங்கு அவருக்கு ஏதும் நடந்தால் அவரோடு நாமும் சேர்ந்து மடிவோம்” என்ற வரிகளின் சொந்தக்காரர் தூய தோமர். (யோவான் 11.16)

தூய தோமர் பெயரில் இரண்டு நூல்கள். விவிலியத்துக்குப் பிந்தையன. 1. தோமரின் நற்செய்தி (Gospel of Thomas); 2. தோமரின் வினை (Acts of Thomas).

இவை இரண்டையும் கிறித்தவ பீடங்கள் ஏற்பதில்லை. இவை கிறித்தவத்துக்கு உகந்தவை அல்ல; கிருத்தவ நெறிக்குத் தகாதவை என உரோம கத்தோலிக்க திருச்சபையின் Trent அவை தீர்மானித்தது.

புலமைச் சோலையர் உரோம கத்தோலிக்க திருச்சபையின் கூற்றினை ஒப்புவர். 

புலமைப் பாலையர் உரோம கத்தோலிக்க திருச்சபையின் கூற்றை ஏற்கார். எவ் வழியிலேனும் தம் சமூக தம் சமய தம் அரசியல் மேம்பாட்டிற்காக இந்த நூல்களின் உள்ளடக்கத்தைத் திரித்தும் மாற்றியும் எடுத்துச் சொல்வர்.

இயேசுபிரான் மறைவுக்குப் பின்னான முதல் நூற்றாண்டில் கிறித்துவ சமயப் பரம்பலை எழுதிய தூய உலூக்கர் Act of Apostlesஇல் இந்தியாவிற்குக் கிறித்தவம் பரவியதாக எங்கும் எழுதவில்லை.

இரட்டை ஆறுகள் பாயும் மெசபத்தோமியா. வடக்கே சிரியப் பேரரசு. கிழக்கே காந்தாரம். மேற்கே கிரேக்கம். தெற்கே அரேபியப் பாலைவனம்.

கிறித்துவத்தைச் சிரியப் பேரரசுக்கு எடுத்துச் சென்றவர் தூய தோமர்.  சிரியப் பேரரசுக்கு உள்ளிட்ட இரட்டை ஆறுகள் பாயும் இன்றைய ஈராக்கின் மோசுல் நகரில் தூய தோமரின் கல்லறை இருக்கிறது.

இன்றைய ஈராக்கின் மோசுல் நகரில் தூய தோமர் தேவாலயத்தின் கல்லறை வளாகத்துள் தூய தோமரின் கல்லறையை 1964ஆம் ஆண்டில் கண்டறிந்தவர் பேராயர் சக்கா. Archbishop Mor Severious Zakia.

இயேசு பிரானின் இறப்பின் பின்னர் கிறித்தவர்களை யெருசலத்தில் வதைக்கத் தொடங்கினர். அவரது நேரடிப் சீடர்கள் யெருசலேத்தை விட்டு வெளியேறினர்.

தூய தோமர் வடக்கே சென்றார். சிரியப் பேரரசு எல்லைக்குள் நுழைந்தார். பட்டுப் பாதையின் வழி கிழக்கே சென்றார். பாரசீகப் பேரரசின் எல்லைக்குள் நுழைந்தார்.

சிரியாவிலும் பாரசீகத்திலும் கிறித்தவத்தைப் பரப்புவதில் தூய தோமர் கடுமையாக உழைத்தார். கிறித்தவ தேவாலயங்களைக் கட்டினார்.

தூய தோமருக்குச் சீடர் பட்டாளம் குவிந்தது. பாரசீகம் எங்கும் தேவாலயங்களைக் கட்டினர். கிறித்தவத்தைப் பரப்பினர்.

குண்டோப அரசனின் Gundoferus ஆட்சி. தூய தோமரின் பரப்புதல் நடவடிக்கையால் சினம் அடைந்தான் அரசன். தூய தோமரை அரசன் வெட்டிக் கொன்றான். அங்கேயே அவரது உடலைப் புதைத்தான். 

தூய தோமருடன் மோசூல் நகரில் இருந்து வந்த சீடர்கள், இரவோடு இரவாக அவரது உடலை எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் சென்றனர். மோசுல் நகரில் புதைத்தனர். அங்கே அவர் நினைவாகத் தேவாலயம் கட்டினர்.

இயேசு பிரான் இறந்த பின் அடுத்த 40 ஆண்டுகளில் நிகழ்ந்தவை இவை.

தூய தோமர் இந்தியா வந்தார். தென்மேற்குக் கரையிலே பரப்புரைத்தார். பின்னர் கிழக்கே சோழமண்டலக் கரைக்கு வந்தார். மயிலாப்பூரில் இறந்தார் என்பன கட்டுக்கதைகள்.

நான் சொல்லவில்லை. பேராசிரியர் ஆபிரகாம் இயேசுரத்தினம் சொல்கிறார். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் படித்தவர். கள்ளிக்கோட்டைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மலபார் கிறித்தவக் கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர் பேராசிரியர் இயேசுரத்தினம். 

பார்க்க Abraham Yesuratnam - Kerala Christianity and Assyrian Church. இணையத்தில் இத்தலைப்பைத் தேடினால் முழுப் புத்தகமும் கட்டணமின்றிக் கிடைக்கும். படிக்கலாம்.

தூய தோமரும் தூய தாட்டியசும் பாரசீகத்தில் இயேசுபிரான் இறந்து 35 ஆண்டுகளுக்குப் பின்பு முதலாவது தேவாலயத்தை அமைத்தனர். 

கிறித்தவன் என்ற புதிய பெயர்ச் சொல் அக்காலத்தில் அதே பிரதேசத்தில் தான் முதல் முதல் முளைத்தது.

இயேசு பிரான் இறந்து 300 ஆண்டுகளின் பின்னரே கிறித்தவம் இந்தியாவுக்குள் நுழைந்தது. பாரசீகத்திலிருந்து பரப்புனர் மேற்குக் கரையோரம் வந்தனர். சேரமான் பெருமான் (நாயனார் அல்லர்) எனும் அரசன் அவர்களை ஆதரித்தான் என்ற செய்தியையும் படித்திருக்கிறோம்.

இதற்குச் சில நூற்றாண்டுகளின் பின் அநுராதபுரத்தில் பாரசீகக் கிறித்தவர்களும் வந்திருக்கலாம். அநுராதபுரத்தில் சிலுவையின் கற் செதுக்க வடிவமே இலங்கையில் மிகப் பழமையான கிறித்துவ அடையாளம்.  இவர்கள் Nestorianism வகையறாக்கள் என்பதைச் சிலுவையின் வடிவமைப்பால் தெரிந்து கொள்ளலாம்.

கிறித்து பிறந்து 400 ஆண்டுகளுக்குப் பின்பே பாரசீகத்தில் எபேசு Epesus சபை தொடங்கியது. Nestorianism தொடக்கம் அங்கேயே.

இந்தப் பின்னணியில் இரத்தினசீவன் ஊலரின் கருத்துரையைப் பார்க்க. எவ்வழியிலேனும் தமிழர் தொடக்கத்திலிருந்தே இயேசு பிரானின் கிறித்தவர் என்பதை நிறுவுவதே ஊலரின் நோக்கம்.

தமிழரிடையே கிறித்தவம் நெறியாக, கைக்கொள்ளும் மதமாக,  கிபி 500 க்கு முன்பு வரவே இல்லை.

தொல்காப்பியத்தில் சைவர் வணங்கும் கடவுளே ஐந்து நிலத்துக்கும் ஐந்து தெய்வங்கள். கிருத்தவக் கடவுளையோ அல்லாவையோ சங்க இலக்கியங்களில் சங்கம் மருவிய இலக்கியங்களில் பக்தி இலக்கியங்களில் காணவே முடியாது.

இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் தமிழர் கிறித்தவர்களாக இருந்திருந்தால் ஏதாவது ஒரு பதிவு எங்காவது ஓர் இலக்கியத்தில் ஒரு கல்வெட்டில் ஒரு செப்பேட்டில் ஒரு பானை ஓட்டில் இருந்து இருக்குமே! 

இரத்தினசீவன் ஊலர் இத்தகைய பதிவுகளைக் காட்டுவராக. காட்டியபின் தமிழர்கள் கிறித்துவர்களாக இருந்தார்கள் என்ற கூற்றுக்கு வருவாராக.

போர்த்துக்கேயர் வந்த பின்பே கிறித்தவ மத மாற்றிகளின் வதை முகாம்களால்  இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தமிழர்களிடையே பரவியது.

இரத்தினசீவன் ஊலர் இதை உணர்வாராக. எவ்வாறாவது கூறி, எதையாவது சொல்லி, எப்படியும் எழுதித் தம் சமூக சமய அரசியல் மேம்பாட்டை நாடுவோர், பொய்மைகளை மெய்மையாக்கும் புலமைப் பாலையரே.

 

No comments: