Wednesday, October 14, 2020

குருந்துக் குன்றில் புத்தர் சிலையா?

 புரட்டாதி 5, 2051 திங்கள் (21 09 2020)

குருந்துக் குன்றில் புத்தர் சிலையா?
சிங்கள புத்த மேலாதிக்கமா?
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சிவ சேனை
குருந்தம், மலரா?, இலையா?, கிளையா?, நெடு மரமா?
சங்க இலக்கியத்தின் குறிஞ்சிப்பாட்டில் கபிலர் 99 மலர்களை வரிசையாக்குவார். (குறிஞ்சி 69) அந்த மலர்களில் ஒன்று குருந்தம்
யாழ்ப்பாணம் சுன்னாகம் வரதபண்டிதரின் பிள்ளையார் கதையில், குருந்து மல்லிகை கோங்கொடு பிச்சி என மலர்களின் வரிசை.
சங்க இலக்கியத்திலிருந்து இன்றைய இலக்கியங்கள் வரை குருந்தம் வராத தமிழ் இலக்கியம் எஃது? (நற்றிைண: 166:1-3, 266:2, அகநாநூறு: 97:16-17, 237:3-5, 304:8-10, 317:10-11, ஐங்குறுநூறு: 257:1-2, 344, 369:3-5, குறுந்தொகை: 341:1-2)
குருந்தமே தமிழ், தமிழே குருந்தம்.
குருந்தம் மேவிய சீர் ஆதியே என மாணிக்கவாசகர் கூறுவார்.
குருந்த மரத்தின் நிழலில் ஞான வகுப்பு நடத்தியவர் சிவன்.
பன்னிரு திருமுறைகள் முழுவதும் குருந்தத்தையும் சிவனையும் கொண்டு கூட்டுகின்றன. திருஞானசம்பந்தர் ( 0145005, 01099010, 01114001, 01133002, 02039010, 02052001, 02064004, 02071001, 02110001, 03045005) குறிப்பிடுவார், அப்பர் இசைத்திடுவார், (04039009) சுந்தரர் (07099002), மாணிக்கவாசகர் (0812901-10), சேந்தனார், திருமூலர் (10924053), நம்பியாண்டார் நம்பி (11033027, 11034009, 11037094), சேக்கிழார் என ஒவ்வொருவராலும் ஒவ்வொரு திருமுறையிலும் சிவனோடு குருந்தம் இணையும்.
குருந்தம் சிவனாகும், சிவனே குருந்தம் ஆகும்.
தமிழோடும் சைவத்தோடும் இரண்டறக் கலந்தது குருந்தம்,
வேறற இணைந்தது குருந்தம், பின்னிப் பிணைந்தது குருந்தம் (தாவரப் பெயர் Atalantia missionis).
குருந்த மரங்கள் நிறைந்த குன்று,
குருந்த மரங்கள் நிறைந்த குளம்,
குருந்தக் குன்று, குருந்த மலை, குருந்தக் குளம்.
தமிழ்க் குன்று, சைவக் குன்று, குருந்தக் குன்று.
தமிழ் மலை, சைவ மலை, குருந்த மலை.
தமிழ்க் குளம், சைவக் குளம், குருந்தக் குளம்.
இலங்கை வடக்கு மாகாணம், கிழக்குக் கரையோரத்தில் முல்லைத்தீவு. தெற்கே கடற்கரை ஓரமாகத் 10 கிமீ. நெய்தலார் அலம்பில். அங்கிருந்து மேற்கே ஐந்து கிமீ. மருதத்தார் குமிழமுனை.
.
அங்கிருந்து மருத வயல்கள் ஊடாக முல்லை நிலம் நோக்கிய 15 கிமீ. பயணம்
தமிழ் கண்டேன் சைவம் கண்டேன் குருந்தம் கண்டேன்.
வளரும் கன்று ஆயினென், நீளும் கிளை ஆயினென், குருந்தம் முறியாது வளையும். முறிக்க முடியாத அளவு வளையும்
அப்பர் பெருமான் குருந்தம தொசித்த (வளைத்த) என அழகாக அதைச் சொல்வார். பூக்களைக் குணா குரவு எனும் சங்க இலக்கியம். கிளை விரித்து இலை சடைத்த குருந்த மரம் தரும் நிழல் என்பார் மாணிக்கவாசகர்
சிவப்புப் பரு மணற் குன்று. சிறு கல் தடையின்றி உருண்டோடும் சாய்வு. சருகுகள் மிண்டி, மர வேர்கள் குறுக்கோடி, சாய்வு நிறைத்து நெடு மரங்களாகக் குருந்த மரங்கள்.
சிவப்புப் பருமணலில் சருகுப் போர்வையில் கால் சறுக்கினாலும் கைகள் பிடிக்க வளையும் குருந்தக் கிளைகள் உதவக் குன்றில் ஏறினோம்.
வண்டுகள் மொய்க்கும் மலர்கள். பூச்சிகள் புழுக்கள் நிறைந்த சருகுகள். பாம்புக நெளியும் இலைக் குவியல்கள். கரையான் புற்றுகளுள் நாக்கு நீட்டும் பாம்புகள், துள்ளும் மான்கள், துவளும் மரைகள், ஊழையிடும் நரிகள், நாக்குநீள் ஓநாய்கள், பிளிறும் யானைகள் நிறைந்த காடு, அடர்ந்த காடு.
10 மீ. அப்பால் இலைகள் சடைத்துக் குவிந்த இருட் காடு. புதராகும் செடிகள், மரங்களில் படரும் கொடிகள், நெடு மரங்கள் நிறைந்த காடு வழியெங்கும்.
இடிபாடுகள் கண்டோம். சித்தர் அமைத்த குளங்கள் கண்டோம். மழை நீர்த் தேக்கக் கிணறுகள் கண்டோம். திருக்கோயிற் சுவர்கள் கண்டோம். சிவனார் பீடங்கள் கண்டோம்.
சிவனின் சின்னம் சூலம். முறித்த தடயம் கண்டோம். இடிந்த தண்ணீர்ப் பந்தற் கட்டடம் கண்டோம். அண்மையில் அடியவர் பொங்கிய அடுப்புகள் கண்டோம்.
தொல்லியல் துறைேயா, படைத் துறையோ அமைக்கவுள்ள காவல் அரணின் அடித்தளக் குழிகள் நான்கு கண்டோம்.
குருந்துக் குளத்துக்காக 2 கிமீ. நீள அணையைப் புதிதாகக் கட்டியிருந்தது கண்டோம்.
தமிழ் கண்டேன் சைவம் கண்டேன் குருந்தம் கண்டேன்.
Chinniah Ratnavadivel, Dhivakar Venkataraman மற்றும் 14 பேர்
2 கருத்துக்கள்
4 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments: