புரட்டாதி 11, 2050 (28.09.2019) சனி
கூர்ச்சரரும் தமிழரும்
கூர்ச்சரத்தார் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழ் மொழியையும் தமிழரையும் போற்றி வாழ்ந்த தலைவர்களைத் தந்தனர்..
தென் ஆப்பிரிக்காவில் காந்தி அடிகள் தமிழ் கற்கத் தொடங்கினார். திருக்குறள் செய்திகளைப் படித்து வியந்தார். இடால்ஸ்டாய்க்கு கடிதம் எழுதி அவரையும் திருக்குறள் படிக்கச் சொன்னார். தமிழ் மொழியை உலகுக்குக் கொண்டு சென்ற மூத்த கூர்ச்சராகக் காந்தியடிகளை நான் காண்கிறேன்.
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தை உலகுக்கு எடுத்துக் கூறிய காந்தியடிகள் தமிழகம் வந்த பொழுது தில்லையாடிக்குச் சென்று அஞ்சலித்தார்.
தமிழரான இராசகோபாலாச்சாரியார் காந்தியடிகளுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதுகிறார். நீங்கள் தமிழர் அல்லவா? ஏன் தமிழிலேயே எனக்கு கடிதம் எழுதக் கூடாது? என்று காந்தியடிகள் இராசகோபாலாச்சாரியாரிடம் கேட்கிறார்.
சர்தார் வல்லபாய்ப் பட்டேல் தமிழர்கள் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர்.
கொழும்பில் சிசி தேசாய் தூதராக இருந்த காலத்திலேயே மலையகத் தமிழரை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் முயற்சியைத் தடுத்து நிறுத்தினார். நாடற்றவர்கள் என்ற சொல்லாட்சியைத் தந்தவர் சிசி தேசாய்.
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது 1979 பிப்ரவரி 4-ஆம் நாள் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காகக் கொழும்புக்கு வந்திருந்தார்.
அவர் கொழும்புக்கு வர முன்பதாக 1978 மார்கழியில் நான் சூரத்துக்குச் சென்றிருந்தேன். காந்தியடிகளின் செயலாளர் மகாதேவ தேசாயின் மகன் நாராயண் தேசாயின் வெட்சி ஆசிரமத்தில் தங்கி இருந்தேன்.
இலங்கைத் தமிழர் துயரத்தைத் தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என்று நான் அவரைக் கேட்டேன். அவரும் காந்தி அமைதி நிலையச் செயலாளர் திரு இராதாகிருட்டிணனும் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தனர் இலங்கைத் தமிழர் துயரத்தைத் தீர்க்க இந்தியா உதவ வேண்டும் என்று பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.
கொழும்பு வந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் அப்போதைய தமிழர் தலைவர் திரு அமிர்தலிங்கத்தை அழைத்து இந்தியத் தூதரக வளாகத்தில் பேசினார். நான் செயலாளராக இருந்த தந்தை செல்வா நினைவு அறங்காவல் குழுத் தலைவர் பேராசிரியர் நேசையாவும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டார். நானும் போவதாக இருந்தது. ஆனால் எனக்கு உள்ள தனிப்பட்ட காரணங்களால் போக முடியவில்லை.
ஊடகச் சந்திப்பில் மொரார்ஜி தேசாய் ஈழத்தமிழருக்குத் துயர் நேர்ந்தால் இந்தியா உதவும் என்ற கருத்துள்ள செய்தியைக் கூறினார். அடுத்த நாள் அக்கால நாளிதழ்களில் செய்தி தலைப்பாக வந்தது.
அவ்வாறு ஆதரவுக் குரல் கொடுத்த இந்தியாவின் பிரதமர்களுல் முதலாமவர் கூர்ச்சரரான மொரார்ஜி தேசாய் அவர்கள். அவ்வாறு அவர் சொல்வதற்கு ஈழத்தமிழர் தொடர்பாக நான் வெட்சி ஆசிரமத்தில் கூறிய செய்திகளில் நீதியும் நியாயமும் இருப்பதை நாராயணன் தேசாய் வழியாக பிரதமர் தேசாய் உணர்ந்ததே காரணம் ஆகும்.
பிரதமர் மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக இருந்தார். அக்காலத்தில் ஈழத்தமிழருக்குத் துயரங்கள் நேர்ந்த பொழுது துயரங்கள் நீங்க வேண்டும் என அவர் பேசினார்.
கூர்ச்சரத்தில் இன்றும் வாழ்கின்ற ஆதிகுடிகள் தமிழ் சார்ந்த மொழியைப் பேசுகிறார்கள். மேல்தட்டினரான பட்டேல்களும் மோடிகளும் தேசாய்களும் காந்திகளும் அவர்களைப் பெரிதும் மதித்து நடக்கிறார்கள்.
எனக்கும் கூர்ச்சரர்களுக்கும் உள்ள தொடர்பு ஆழமானது. கூர்ச்ரப் பெண்கள் ஆடும் கர்பா நடனம் வீட்டுக்குள்ளேயே கலையை வளர்க்கும் நடனம்.
அரபுநாடுகளில் ஆபிரிக்காவில் தென்கிழக்காசிய நாடுகளில் நான் பணிக்காகப் பயணித்திருக்கிறேன்.
நான் சைவ உணவு பழக்கம் உடையவன். நான் போகும் நாடுகளின் நகரங்களில் முதலில் தேடுவது கூர்ச்சரர் ஒருவர் துணிக்கடையோ மளிகைக்கடையோ வைத்து இருக்கிறாரா எனவே. என் அலுவலக ஓட்டுனரிடம் கேட்பேன்.
அழைத்துச் செல்வார்கள் என் சைவ உணவுப் பழக்கத்தைச் சொல்வேன் இன்முகம் காட்டி வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் சென்று அருமையான சைவ உணவு தருவார்கள். ஏனெனில் கூர்ச்சர வணிகக் குழுவினருட்பெரும்பாலோர் சைவ உணவுக்காரர்கள்.
இலங்கைக்கு நேரு இந்திரா என வரிசையாகப் பல பிரதமர்கள் வந்திருக்கிறார்கள். ஈழத்தமிழர் நிலத்திற்கு ஓடோடி வந்தவர் பிரதமர்மோடி ஒருவரே.
அந்த வருகை மூலம் உலகுக்கு அவர் உணர்த்திய செய்தி இந்தியா ஈழத் தமிழர்களுக்குப் பின்னால் இருக்கிறது அவர்கள் மீது எவரும் கை வைக்காதீர்கள் என்பதே.
பிரதமர் மோடி தமிழ் மீது கொண்ட மதிப்பும் ஆர்வமும் கூர்ச்சரரின் இயல்பான வெளிப்பாடு.
இந்தியா முழுவதும் செல்கின்ற மோடியார் தமிழரை எங்கும் பாராட்டுவார். தமிழே இந்தியாவின் மூத்த மொழி எனப் பல மேடைகளில் சொல்லியிருக்கிறார். நாடாளுமன்றக் கூட்டங்களில் சொல்லியிருக்கிறார்.
நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையிலும் சொல்லியிருக்கிறார் எனில், இந்தியாவின் உள்ளார்ந்த உணர்வை, இந்திய மக்கள் தமிழ் மீது கொண்ட பெருமதிப்பை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார் என்பதே பொருள்.
உலகெங்கும் வாழும் தமிழர் பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி வாழ்த்த வேண்டும்
No comments:
Post a Comment