Friday, September 20, 2019

பேராசிரியர் முனைவர் பூலோகசிங்கம்


புரட்டாசி 3, 2050 (20.09.2019) வெள்ளி
பேராசிரியர் முனைவர் பூலோகசிங்கம். நாற்பத்தாறு ஆண்டுகளாக எனக்கு அருமை நண்பர்.
1998ஆம் ஆண்டு. ஆத்திரேலியா, சிட்னி, இசுராத்பீல்டு. கடைகளின் நெடு மாடம். ஓய்வு இருக்கை ஒன்றில் பேராசிரியர். பொழுது போக்கிக் கொண்டு இருக்கிறார். எனக்கு மகள் சிவகாமி அவ்வழியே கடைகளில் பொருள்கள் வாங்கிச் செல்கிறார்.
அவளுக்குப் பேராசிரியரை முன்பின் பழக்கம் இல்லை. அவரே அழைக்கிறார். ஏனம்மா, நீ சச்சியின் மகள் அல்லவா? என்று வினவுகிறார். சச்சின் முகச்சாயல் உன்னிடம் இருக்கிறதே என்கிறார்.
என் மகளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவரிடம் சென்று அன்பொழுகப் பேசி, முகவரி கேட்கிறாள். தன் கணவரை அழைத்துச் செல்கிறாள். பேராசிரியர் இல்லத்தவரோடு மகிழ்ந்து பழகுகிறாள்.
அப்பா உங்கள் நண்பரைப் பார்த்தேன் என்ற செய்தியை என்னோடு மகிழ்ந்து பகிர்கிறாள்.
பேராசிரியர் பொன் பூலோகசிங்கம் என்ற அறிஞர் பெயரை 1960களில் இருந்தே நெடுங்காலமாகவே நான் அறிவேன்.
1973 ஆவணியிலேயே முதன் முதலாக அவரைச் சந்திக்கிறேன். கொழும்பு மிலகிரிய அவென்யூவில் நடந்த அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் -இலங்கைக் கிளைக் கூட்டத்தில் அவரை சந்திக்கிறேன்.
திட்டமிட்டவாறு யாழ்ப்பாணத்திலேயே மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அணியில் நானும் பேராசிரியர் பூலோகசிங்கமும்.
எங்கள் அணியின் வலிமை மேலோங்க நான் கடுமையாக உழைத்தேன் பேராசிரியர் பூலோகசிங்கம் எனக்கு உறுதுணையாக இருந்தார்.
மாற்று அணியினரை மீறி, யாழ்ப்பாணத்தில் 1974 தை மாதத்தில் மாநாடு நடந்த பொழுது பேராசிரியர் பூலோகசிங்கம் பூரித்த நெஞ்சினர் ஆனார்.
மாநாட்டு மலரைத் தயாரிக்கும் பொறுப்பாசிரியராகப் பேராசிரியர் பூலோகசிங்கம் கடமையாற்றினார்.
அக்காலங்களில் என்னுடன் குழைந்து குழைந்து பேசுவார். சச்சி சச்சி என அவர் அழைக்கும் பொழுதெல்லாம் என் நெஞ்சம் விரிந்து மகிழும்.
பேராசிரியர் வித்தியானந்தன் மீதும் பேராசிரியர் பத்மநாதன் மீதும் அவர் கொண்டிருந்த மதிப்பும் பற்றும் அன்பும் பாசமும் கண்டு வியந்தேன்.
பேராசிரியர் பூலோகசிங்கத்தின் நினைவாற்றல் அளப்பரியது. தெரியாதவற்றைத் தேடுவதில் அவருடைய ஆர்வம் எல்லை அற்றது.
அவரோடு பேசிக் கொண்டிருந்தால் நேரம் போவதே தெரியாது.
பிற்காலத்தில் அவர் இந்துக் கலைக்களஞ்சியம் தொகுப்பாளராக இருந்தார். தகவலின் கடல் அவர் எனலாம். வெள்ளவத்தைச் சந்தைக்கு ஒட்டிய குச்சுச் சந்து ஒன்றில் அவரது வீடு. எத்தனை முறை நான் அங்கு போயிருப்பேன்.
ஆத்திரேலியாவிற்கு புலம்பெயரும் முன்பு அந்த வீட்டை விற்க விரும்பினார்.
சென்னையில் காந்தளகம் பதிப்பகத்தை நான் தொடங்கியபோது ஆறுமுகநாவலர் தொடர்பான நூலொன்றை அச்சிட்டு வெளியிட என்னிடம் தந்தார். அந்த நூலில் உள்ள செய்திகளைப் படிக்கும் தொறும் படிக்கும் தொற்றும் நான் ஆறுமுகநாவலர் பெருமையை நினைந்து நினைந்து உந்துதல் பெறுவேன்.
2008இல் ஆத்திரேலியா சிட்னி சென்றேன். அதே கடை மாடம். அங்கு சென்றேன். சச்சி என்ற குரல் கேட்டுத் திரும்பினேன். என் கண்கள் பனித்தன என் நெஞ்சம் விம்மியது கையில் பொல்லு. நெஞ்சில் கனத்த சிந்தனைகள். பொழுது போக்குக்காகக் கடை மாடம் வந்திருந்தார்.
கொழும்பு ரோயல் ஏசியாட்டிக் சொசைட்டியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பேராசிரியர் ஒருவர் தமிழரின் வரலாற்றுச் செய்தியை ஆராய்ச்சிக் கட்டுரையாகப் படித்ததை என்னிடம் கூறி வருந்தினார்.
மாற்றுச் சிந்தனையாளர் மாற்று அரசியல்வாதிகள் அந்தக் கட்டுரைச் செய்தியைப் பயன்படுத்தி, தமிழருக்கு இலங்கையில் சோழருக்கு முன்பு வரலாறு இல்லை எனக் கூறுகின்ற நிலை வந்ததே என அங்கலாய்த்தார்.
ஆத்திரேலியாவில் இருக்கிறார். ஓய்வாக இருக்கிறார். ஆனாலும் அவர் எண்ணமெல்லாம் ஈழத்திலிருந்தது. ஈழத் தமிழரின் துயரம் தோய்ந்த நிலை அவரது நெஞ்சைப் பிழிந்தது.
சில ஆண்டுகளின் பின் நான் ஆத்திரேலியா சிட்னி சென்றேன் அவர் உடல் நலமற்று மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை அறிந்து அவரைப் பார்க்கப் போனேன்.
என்னைக் கண்டதும் கேவிக் கேவி அழுதார். விக்கி விக்கிச் சொற்கள் வெளிவந்தன. சச்சி சச்சி என அவர் அழைத்தபொழுது நானும் அழுதேன். என் கூட வந்து மகளும் அழுதாள்.
ஆறுதல் கூறினேன். அடுத்த நாளும் சென்று பார்த்தேன். ஆறுதல் கூறினேன். அதற்கு அடுத்த நாளும் சென்று பார்த்தேன். ஆறுதல் கூறினேன். வேறு நான் என்ன செய்யமுடியும்?
2017 கார்த்திகையில் ஆத்திரேலியா சென்றேன். பேராசிரியர் பூலோகசிங்கம் முதியோர் இல்லத்தில் இருந்தார்.
தேவாரத்திரட்டு, திருவாசகம், அபிராமி அந்தாதி ஆகிய நூல்களைக் கையில் எடுத்துச் சென்றிருந்தேன்.
நடக்க முடியாத நிலையில் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார்.
என் கையைப் பற்றிக் கொண்டார். மட்டற்ற மகிழ்ச்சியில் கண்கள் பனித்தன. அவரால் பேச முடியவில்லை நெடுநேரம் அப்படியே இருந்தார். நானும் செய்திகளைச் சொல்ல முயன்றேன். அவருக்கு நினைவுகள் தடுமாறி இருந்தன.
கடந்த ஆறு அல்லது ஏழு ஆண்டுகளாக நோயுற்ற நிலையில் மருத்துவமனையிலும் முதியோர் இல்லத்திலும் மாறிமாறி அவர் இருந்தார். அவரது இல்லத்தார் அவரைப் பேணினர்.
மாபெரும் தமிழறிஞர். ஆனாலும் ஆத்திரேலியத் தமிழ் உலகம் அவரைத் தெரிந்துகொள்ளவில்லை. பேராசிரியர் பூலோகசிங்கத்தின் இயல்பும் தனித்து இருப்பதே.
நேற்று சிட்னியில் அவர் காலமானார். நொந்தது நெஞ்சம். நினைவுகளை மீட்டேன். பனித்த கண்களுடன் எழுதுதுகிறேன். பாசம் மீநிற்க எழுதுகிறேன்.

No comments: