Thursday, September 19, 2019

முதுமை போற்றுதும்


வாழும் காலத்தில் மதித்துப் போற்றுவதே அறம்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
தலைவர், சிவ சேனை
மு என்ற ஓர் இனம் வாழ்ந்தது. மறைந்தது, வரலாறாயது. தொடக்க கால மனித இனம் மு இனமே என்பர் ஆய்வாளர் பலர்.
தமிழில் மு என்ற எழுத்தில் தொடங்கும் சொல் முன்னோரைக் குறிக்கும். முந்தி நிற்பதைக் குறிக்கும்.  
நெடில் ஆகி மூத்ததைக் குறிக்கும்.
முகம், முடி, முட்டை, முதல், முயற்சி, முலை, முளை, முழு, முன், மூக்கு, மூச்சு, மூட்டு, மூத்த, மூப்பு, மூள்க, எனக் குறிலாக மு அன்றி நெடிலாக மூ எனத் தொடங்கும் தமிழ்ச் சொற்களில் பெரும்பாண்மையானவை முந்தி நிற்பதைச் சுட்டுவன.
முதியோர் எனின் மூத்தோர் எனின் முந்தி நிற்பவர் என்றாகும். மு என்ற இனத்தினைச் சேர்ந்தவர் என்றாகுமோ? முன்னோர் என்ற கருத்தியலே மதிப்புக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியோர் என்றாகுமே?
டேய் கிழவா? என்ற தொடர் வழக்கு நமக்குப் புதிதல்ல. முதியோரைப் பழித்து அழைக்கும் தொடர். கிழவிக்கு வேறை வேலையில்லை என்ற தொடரும் நமக்குப் புதிதல்ல.
முதுமை மதிப்புக்குரியதா, பழிப்புக்குரியதா? பண்பட்ட உள்ளங்களுக்கு முதுமை மதிப்புக்குரியது. அறிவு குறைந்தோர்க்கு முதுமை பழிப்புக்குரியது.
முதியோர் காலைத் தொட்டு வணங்க வேண்டும் என்ற மனோ நிலை பண்பட்ட உள்ளங்களது.
முதியோரை எடுத்தெறிந்து சொல்லாலும் செயலாலும் இழிப்பது அறிவு குறைந்த நிலை.
முதியோரே எழுகின்ற தலைமுறைகளுக்கு வழிகாட்டிகள். வாழ்வியல் விழுமியங்களை விட்டுச் சென்றவர், செல்பவர், செல்லப்போகிறவர்.
காலை எழும் சூரியன் மாலையில் மறையும். பிறந்த உயிர் எதுவும் இறக்கும்.
பிறக்கும் குழந்தைகள் மகிழ்ச்சிக்குரியன. வாழும் முதியோரும் மகிழ்ச்சிக்குரியோரே. இறப்பை நோக்குபவராகையால் கூடுதல் மதிப்புக்குரியோர்.
வாழும் நாளில் முதியோரை மதிப்போம். மறைந்தபின் நினைவு நாள்களில் போற்றுவது மரபு எனினும், வாழ்பவரை வாழும் காலத்தில் மதித்துப் போற்றுவதே அறம்.
வவுனியா மாவட்டத்து முதியோர் சங்கத்தின் செய்தி இதழ், கருத்தோட்ட இதழ், மனமகிழ் இதழ், படைப்பூக்க இதழ், முதியம் பிறக்கிறது. வாழ்த்துகிறேன்.
முதியோரை வணங்குகிறேன் என் எழுபத்தெட்டு வயதிலும் இளைஞனாய்.

  


No comments: