(1)
உழவுந்து கடனில். மாதாந்தக் கட்டணம் கட்ட முடியவில்லை. பழுது அடைந்த நிலை.
வருவாய்க் குறைவு. வறுமை வாட்டியது. வீட்டுக் கொட்டிலில் ஒழுக்கு.
வள்ளைக்குளம் வந்தார். பிள்ளையாரை வழிபட்டார். வெள்ளிக்கிழமைகளில் தோரணம்
மாவிலை கட்டினார். கற்களை நீக்கித் திருவீதியைத் திருத்தினார். புல் வெட்டினார்.
முட்களை அகற்றினார். பிள்ளையாரே உன்னிடம் அடைக்கலம் என்றார்.
சில வாரங்கள் கழிந்தன. பழுதுற்ற உழவுந்தைத் திருத்துநரிடம் எடுத்துச்
சென்றார். கடனுக்குத் திருத்தினார். வயலில் உழுதார். பொருள்களைச் சுமந்தார்.
வருவாய் பெருகியது.
திருத்துநர் கடனை அடைத்தார். மாதாந்தக் கடனை மீட்கத் தொடங்கினார். ஓர் ஆண்டு
உழைப்பு. கடன்கள் தீர்ந்தன. உழவுந்து அவருக்கே உரித்தாயது.
வள்ளைக்குளப் பிள்ளையார் கோவிலுக்கு நாள்தோறும் பால் கொடுக்கத் தொடங்கினார்.
ஒழுகிய கொட்டில் கலைந்தது. அரசு வீடு கொடுத்தது.
பட்டி பெருகியது. பசு மாடுகள்
கன்றுகளை ஈன்றன. கூட்டுறவுச் சங்கத்துக்கு நாள்தோறும் பால் விற்கத் தொடங்கினார்.
பிள்ளையார் கோவிலுக்கும் இடைவிடாது வந்தார்,
வழிபட்டார். தொண்டாற்றினார்.
பூசனைகள் செய்தார். வள்ளைக்குளப் பிள்ளையாரின் அருளைப் போற்றினார்.
முத்துலிங்கத்தார் பெற்ற அருள் இன்பத்தை யார் அறிவார்?
(2)
பணிக்குப் போனார். துன்புறுத்தினர். வேறு பணிகளுக்குப் போனார். ஒத்துவரவில்லை.
வள்ளைக்குளப் பிள்ளையார் கோயிலுக்கு வந்தார். பணியில் சேர்ந்தார்.
கோயில் கழுவினார். தோட்டத்துக்கு நீர் இறைத்தார். பூசகருக்கு உதவினார்.
பூப்பறித்துச் சாற்றினார். நாள்தோறும் நினைந்து நினைந்து
உருகி உருகி வழிபட்டார்.
வயது ஏறுகிறதே? வாழ்வு அமைய வேண்டாமா? தாயார் பிள்ளையாரிடம் கேட்டார்.
நாச்சிக்குடா சென்று வா. நங்கையைக் கண்டு வா. நல்வாழ்வு பெற்று வா. பிள்ளையார்
அருள் பெற்றார் கயன். தொண்டாற்றி அருள் மழையில் நனைபவர். இல்லறத்தில் அன்பு
மழையில் நனைகிறார்.
(3)
பிள்ளையார் திருவீதியில் தொண்டு. பூசனையில் வழிபாடு. பொங்கல் விழாவில்
பங்களிப்பு. மாவிலை தோரண அலங்காரம். குலையுடன் வாழையை நிமிர்த்திய வண்ணம்.
வெள்ளிக்கிழமையில் பண்ணோடு இசை பாடல். தேர்வுக்குப் போகுமுன்
வேண்டுதல்.
மழையில் நனைந்தனர். வெயிலில் காய்ந்தனர். கடுங் காற்றில் களைத்தனர். தொலைவு
நடந்தனர். தனியார் உந்தில் ஏறினர். சட்டைகள் கசங்கின. முன்னுக்கும் பின்னுக்கும்
இடி தாங்கமுடியவில்லை. வண்டியில் ஏறிப் பேருந்து நிறுத்தத்தில் இறங்கும் வரை
நெருக்கத்தில் புழுக்கத்தில் அவதியுற்ற மாணவர்கள்.
வீட்டு வாயிலுக்கு வராதா? சிறு தெருவில் பேருந்துப் பயணமா? குளக்கரைகளில் புதையுமா? வயலுள் இறங்குமா? மரக்கிளைகள் முட்டாதா?
பிள்ளையார் அருளினார். தொண்டாற்றிய மாணவருக்குப் பள்ளி நேரம் வந்தாலே வீட்டு வாயிலில்
அரசுப் பேருந்து. ஏறியோர் இறங்குவதோ பள்ளி வாயிலில்.
பள்ளி நேரம் முடிந்தது பள்ளிவாயிலுக்குப் பேருந்து வந்தது. வீட்டு வாயிலில்
இறக்கியது.
பிள்ளையாரிடம் போனார்கள், அரசுப் பேருந்துடன் வந்தார்கள்.
மகிழ்ந்தனர் பெற்றோர்.
(4)
அப்பாவிகள் காவலரிடம் சிக்கினாரா? தடுப்புக்குள் புகுந்தனரா? துன்பத்தில் கலங்கினரா? உற்றார் பிள்ளையாரிடம் வந்தனர், வேண்டினர். தடுப்பு நீங்கியது. கலக்கம் பறந்தது.
வேண்ட முழுவதும் தருகின்ற பிள்ளையாரே வள்ளைக்குளப் பிள்ளையார்.
(5)
ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மறவன்புலவு அடியவரின்
வேண்டுதல்களுக்குச் செவி சாய்ப்பவர் வள்ளைக்குளப் பிள்ளையார்.
பொருள் தேடிக் கணவர் அயலூர் செல்கிறார். ஒரு நாள் இரு நாள்கள் எனப் பல நாள்கள்
கழிகின்றன. வாரங்கள் ஓடுகின்றன. கணவர் திரும்பவில்லை. வழி தெரியவில்லை.
வள்ளைக்குளப் பிள்ளையாரிடம் மனைவி வருகிறார். கணவர் வந்தபின் உண்பேன் என்கிறார்.
குளக்கரையில் தவம் இருக்கிறார். அருள் வேட்கிறார். நோன்பின் பெற்றியால் கணவர்
திரும்புகிறார்.
பொருளீட்டலில் கலங்கிய நாள்களைக் கணவர் கூறுகிறார். எனினும் மிகையான
செல்வத்துடன் மறவன்புலவு திரும்புகிறார்.
பொருள் ஈட்டலே அருள் வேட்கவே என்கிறார் மனைவி. இருவரின் திருப்பணியால்
திருக்கோயில் மண்டபங்கள் எழுகின்றன. ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த
நிகழ்வு.
வள்ளைக்குளப் பிள்ளையாரின் அருள் பெருக்கும் நிகழ்வுகள் நூற்றாண்டுகளாகத்
தொடர்கின்றன மறவன்புலவில்.
(6)
அண்மைக் காலப் போர். அதன் விளைவான அழிவுகள்.
1999 மார்கழி திருவம்பாவை நான்காம் நாள். படையினர் வருகின்றனர் ஊரை
விட்டு வெளியேற இரு மணி நேரக் காலக்கெடு. வெறிச்சோடியது மறவன்புலவு.
மக்கள் கையில் கிடைத்ததை அள்ளிக்கொண்டு சாரிசாரியாக அகன்றனர், அயலிடங்களுக்கு ஏதிலிகளாய்.
2009 ஆவணிச் சதுர்த்தி நாள். மக்களை மீள அழைத்தனர் படையினர்.
பத்து ஆண்டுகள் தொடர்ச்சியாக மக்களே இல்லாத காடாக மாறியிருந்தது மறவன்புலவு.
போரினால் வீடுகள் உடைந்தன. வயல்கள் சிதைந்தன. கோரைப் புற்கள் வளர்ந்தன.
கால்நடைகள் கட்டாக் காலிகள் ஆயின. வாய்க்கால்கள் தூர்ந்தன. குளங்கள் மண்மேவின.
கோயில்கள் முற்றாக இடிந்தன.
பிள்ளையார் கோயிலும் இடிந்தது. ஓடுகளைக் காணவில்லை. கூரை மரங்களோ வளைகளோ
கிடைக்கவில்லை. துப்பாக்கிச் சூடுகளும் பீரங்கி வேட்டுகளும் சுவர்களில் காயங்கள் ஆயின. சுவர்கள் இடிந்தன ஆலம் விழுதுகள் வளர்ந்து
சுவர்களை மூடின. பற்றைச் செடிகளுள் பாழடைந்த மண்டபங்களாயின கோயில்கள்.
நாகங்களும் விரியன்களும் சாரைகளும் புடையன்களும் உடும்புகளும் ஊர்வன அனைத்தும் கோயில் வளாகங்களுள் நிறைந்தன.
(7)
மக்கள் மீண்டனர். மகிழ்ச்சி மீளவில்லை. அருள்மிகு வள்ளைக்கும்
வீரகத்திப் பிள்ளையார் கோயிலை மீளக் கட்டி எழுப்பும் திருப்பணி நடைபெறுகிறது.
மரபுகளை மீட்கும் ஆர்வலர் உதவுவீர்களாக. அடையாளங்களைப் பேண விழைவோர்
ஆதரவு நல்குவீர்களாக. இலங்கை சிவபூமி. மறவன்புலவு மாண்புறு சிவபூமி.
சைவ அடியவர்கள் மட்டுமே வாழ்கின்ற சிவபூமி. திருக்கோயில் திருப்பணிக்கு நன்கொடைகள்
வழங்கிச் சிவபூமியைப் பேணுக.
காசோலைகளாக, வரைவோலைகளாக, அருள்மிகு வள்ளைக்குளம்
வீரகத்திப் பிள்ளையார் கோயில் பெயருக்கு மறவன்புலவு,
சாவகச்சேரி முகவரிக்கு
நன்கொடைகளை அனுப்பலாம்.
நேரே வங்கிக்கும் நன்கொடைகளை அனுப்பலாம். Sampath
Bank PLC, Chavakachcheri, Sri Lanka, Account No. 116 961 000 901, Swift Code:
BSAMLKLX, Name: Arulmiku Vallakkulam Veerakathy Pillaiyaar Koil.