Tuesday, July 02, 2019

செல்வராசாவின் தமிழ்த் தேட்டம்


செல்வராசாவின் தமிழ்த் தேட்டம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

1.   செல்வராசா

கண்ணீரை வரவழைக்கும் காட்சிகளை விவரிக்கும் நூல் தேட்டத்தார் திரு. நடராசா செல்வராசா அவர்களின் கருத்துரையை  ஞானம் இதழில் படித்தேன்.

திரு. பாக்கியநாதன், தாம் எழுதிய நூல் ஒன்றைச் (நூலகர் கையேடு) சென்னையில் பதிப்பிக்க என்னிடம் நேரில் வந்து தந்தார். பதிப்பித்தேன். ஆனைக்கோட்டையில் இருந்து கண்டனம் பெற்றேன். தாம் பதிப்பித்த நூலைத் தம் உரிமமின்றிச் சென்னையில் பதிப்பித்தேன் என எழுதியவர் திரு. நடராசா செல்வராசா.

வரலாற்றில் இத்தகைய புலமைச் சொத்தாளர் ஒருவரை ஈழம் பெற்றிருக்கவில்லை. திரு. செல்வராசா அவர்கள் தாம் விட்டுச் செல்லும் நூல் தேட்டப் பகுதிகளால் காலங் காலமாகப் புலமையாளர் நெஞ்சங்களில் வாழ்வார். தமிழ்ப் பதிப்பாளர், எழுத்தாளர், வாசகர், ஆய்வாளர் எனப் பன்முகத்தாரின் ஒருங்கிணைப்பாளர், இத்தகைய ஒருங்கிணைப்பாளருக்கு வரலாற்றில் எடுத்துக்காட்டில்லாத முன்னோடி திரு. செல்வராசா.

2.   வளையாபதி


தமிழின் ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. இப்பொழுது அச்சில் இல்லை. அந்நூலின் ஏடுகளைத் தேடுவோருள் தஞ்சாவூரின் சேக்கிழார் அடிப்பொடி த. ந. இராமச்சந்திரன் ஒருவர்.

தவத்திரு ஆறுமுக நாவலர் தாம் பதிப்பிக்க இருந்த நூல்களின் பட்டியலைத் தமது நூல் ஒன்றில் பின்னிணைப்பாகச் சேர்த்திருந்தார். அந்தப் பட்டியலில் வளையாபதி நூலும் இருந்தது. யாழ்ப்பாணத்தில் வளையாபதி நூலின் ஏடுகள் இருந்ததாலன்றோ அவ்வாறு பட்டியலிட்டார். யாரிடமாவது ஏடுகள் இருக்குமா? தேடுங்கள் என் என்னிடம் கேட்டிருந்தார் பெரியவர் இராமச்சந்திரன்.


படத்தில் 1. சேக்கிழார் அடிப்பொடி, 2. தி. வே. கோபாலையர், 3. சச்சிதானந்தன்.

3.   மாலிக் கபூர்

தமிழகத்தின் ஏடுகளின் களஞ்சியமாக ஈழம் அமையக் கொடூரன் மாலிக் கபூர் ஓர் உந்துதல். 1309 தொடக்கம் 60 ஆண்டுகள் தமிழகத்தைப் புலமைக் காடாக்கியவன். தமிழகத்தின் புலமையாளர், கலைஞர், சிற்பிகள், மருத்துவர் இன்னோரன்னோர் ஈழத்தின் வரோதைய சிங்கை ஆரியச் சக்கரவரத்தியிடம் புகலிடம் தேடினர். தம்மிடமிருந்த ஏடுகள், கருவிகள் யாவற்றையும் கொண்டு கடல் கடந்து யாழ்ப்பாணம் வந்தனர். வேந்தனும் அவர்களுக்கு மானியம் கொடுத்துப் பேணினான். தமிழ், சிங்களம், பாரசீகம், சீனம் எனப் பன்மொழி தெரிந்தவன் ஈழ வேந்தன்.

அவ்வாறு வந்த ஏடுகளுள், ஏற்கனவே அரண்மனை நூலகத்துள் இருந்த ஏடுகளுள், வளையாபதி ஏடும் இருந்தது. ஆறுமுக நாவலரின் பார்வைக்கு வந்தது. எனவே அவர் பட்டியலிட்டார்.

4.   ஏடுகளில் கடவுள்

பூசை செய்யாமல் ஏடுகளை அவிழ்க்கார் புலவோர். கலைமகள் விழா ஏடுகளுக்குச் சிறப்பு விழா. விழா இறுதியில் இன்றும் ஏடும் எழுத்தாணியும் சிறுவருக்கு எழுதத் தொடக்கப் பயனாகும் நிலை.

புராண படனுத்துக்காகத் தொடக்கத்திலும் முடிவிலும் ஏடுகளை இறைவனாக்கி, வாகனமேற்றி வீதி உலா வருவது ஈழத்து வழமை.

புலமை, புலமைப் பேறான உரைவீச்சு, எழுத்தாற்றல், ஈழத்தின் முதற்சொத்து. கடலும் நிலமும் தரும் முதனிலை உற்பத்திகளைப் புறந்தள்ளி, செவிக்கும் கண்ணுக்கும் மூளைக்கும் உணவு தேடுவது, ஈழத்துக்குப் பூதந்தேவனார் காலத்துக்குப் பல்லாயிரம் ஆண்டுகள் முன்பிருந்தே தொடரும் நெடு மரபு.

5.   மணிமேகலை, தம்பிரான்

புலமையாளர் மணிமேகலை 1800 ஆண்டுகளுக்கு முன் புகலிடம் தேடிய புலமைத் தாயகம் ஈழம். புலமையாளர் கூழங்கைத் தம்பிரான் தருமபுரம் ஆதீன மடத்தை விட்டு 250 ஆண்டுகளுக்கு முன் வெளியேறிப் புகலிடம் தேடிய புலமைத் தாயகம் ஈழம்.

இவை இரண்டும் நெடிய புலமைப் புகலிட தேடு வரலாற்றின் தொடு புள்ளிகள். தமிழகத்தின் புலமையாளர் புகலிடமாக வரலாற்றினூடாக அமைவதற்கு ஈழத்தின் புலமை போற்றும் பண்பாடே உந்துதல்.

6.   போப்பையர், உவேசா

மானிப்பாயின் குமாரசுவாமி, தமிழகத்தின் உவேசாவுக்கு நிதி வழங்கிச் சிலப்பதிகாரத்தைப் அச்சேற்றிப் பதிப்பித்தார். ஈழத்தின் புலமைத் தேடலுக்குச் சான்று.

திருவாசகத்தை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க வண. ஜி. யூ. போப்பருக்குத் தொடக்க காலத்தில் உதவியவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம். தொடக்க மொழிபெயர்ப்புகள் இருவர் பெயரிலுமே வெளிவந்தன. ஈழத்தின் புலமைத் தேடலுக்கு மற்றுமொரு சான்று.

7.   கொழுத்தினர்

ஈழத்தின் புலமைப் பின்னணியைத் தெரிந்து சிதைக்க முயன்ற மாலிக் கபூர்களே யாழ்ப்பாண நூலகத்தைக் கொழுத்திய கொடூரர்கள். செவியுற்ற உடனேயே புலமையாளர் ஒருவர் உயிர்விட்டார் என்பதே புலமைக்கு ஈழம் கொடுத்த வரலாற்று மாண்பின் சான்று.

அழுத கண்ணீர் வற்ற முன்பு, எரிந்த நூலகத்தையும் யாழ்ப்பாணத்தையும் காட்சி வரலாறாப் பதிய, காணொலியாகப் பதிய, ஈழ அகதிகள் மறுவாழ்வுக் கழகத் திரு. கந்தசாமி அவர்களுக்கு முழுச் செலவையும் நான் கொடுத்தேன். என்னிடம் அக்காணொலி உண்டு.

https://www.youtube.com/watch?v=IinYHwRyabI&t=6s

8.   தமிழகச் சஞ்சிகைகள்

யாழ்ப்பாண நூலகம் எரிந்த சில மாதங்களுள் ஒங்கொங்கில் இருந்து மைக்ரோ பிலிம் ரீடர் micro film reader ஒன்றை இறக்குமதி செய்தேன். அந்நாளைய மாநகர முதல்வர் விசுவநாதன் ஆணையர் சி வி கே சிவஞானம் இருவரிடமும் என் பெற்றோர் சென்று கையளித்தனர்.

1986 வைகாசி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 30 அல்லது 40 தமிழகச் சஞ்சிகைகளைச் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அனுப்புவேன். அச் சஞ்சிகைகள் புகழ்பெற்ற வார மாத இதழ்கள் அல்ல. சிற்றிதழ்கள், அறிவியல் வணிகம் துறைகளில் உள்ள இதழ்கள்.

அக்காலத்தில் நூலகம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு முன்னுள்ள கட்டடம் ஒன்றில் இயங்கி வந்ததாக நினைவு.

9.   நன்கொடைகள்

சென்னையில் காந்தளகத்துக்கு வரும் புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்களை நன்கொடையாக அனுப்புமாறு என்னிடம் புத்தகங்களைத் தந்து தொடர்ச்சியாக அனுப்பி வந்துள்ளேன்.

ஒருமுறை ஆத்திரேலியத் தமிழர்கள் பெருந்தொகை நூல்களை யாழ்ப்பாண நூலகத்துக்கு என் வழி அனுப்பினர். அவற்றை நெடுங்காலம் துறைமுகத்திலேயே விட்டுவைத்த நூலகத்தார், எனது கடும் உந்துதலின் விளைவாக ஒருவாறு பொறுப்பேற்று எடுத்துச் சென்றனர்.

1986இல் இருந்து 2008 வரை வாரந்தோறும் தமிழகச் சஞ்சிகைகளை அனுப்பும் முயற்சியை நான் தளரவிடவில்லை.

2003, 2008 ஆண்டுகளில் யாழ்ப்பாணம் வந்தேன். நான் அனுப்பிய நூல்கள், சஞ்சிகைகளின் வருகைகள் பயனாளிகளுக்கு செல்கின்றனவா? என்பதை விசாரித்துச் சென்றேன்.

திரு செங்கைஆழியான் ஆணையராக இருந்த காலத்திலும் பெருந்தொகையான நூல்களைத் தமிழகத்தில் பெற்று அனுப்பி வைத்தேன்.

நல்லூரில், அகில இலங்கை இந்து மாமன்றம் அமைத்திருக்கும் இந்து சமய நூலகத்துக்கான நூல்களைத் தேர்வு செய்து அனுப்பும் பணி என்னுடையதாயிற்று. அதற்குரிய தொகையை அவர்கள் எனக்குத் தந்தனர். தஞ்சாவூரில் சேக்கிழார் அடிப்பொடி அறிஞர் இராமச்சந்திரன் போன்ற பலரிடம் இந்துசமய நூல்கள் நன்கொடையாகக் கேட்டுப் பெற்றும் அகில இலங்கை இந்து மாமன்றம் நல்லூர் நூலகத்துக்கு அனுப்பினேன்.

10.       தமிழக அரசு நன்கொடை

2012இல் இணுவிலுக்குச் சென்றேன். அண்ணா தொழிலக முதல்வர் திரு நடராசாவின் விதப்புரையில் அங்குள்ள பொது நூலகத்துக்கு ஏறத்தாழ 40,000 தலைப்புகளைத் தமிழக அரசிடமும் தனி ஆர்வலரிடமும் பெற்று அனுப்பினேன்.

கொக்குவில் பிரதேச சபை நூலகம், தச்சன்தோப்புப் பிரதேச சபை நூலகம், யாழ்ப்பாணத்தில் உள்ள 10 உயர் நிலைப் பள்ளிகள், முழங்காவிலில் ஒரு பள்ளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் எனத் தொடர்ச்சியாகத் தமிழகத்து நூல்களை அங்கிருந்து வரும் போது கொண்டுவந்து கொடுத்து வருகிறேன். மறவன்புலவில் பெண்கள் கூட்டுறவு அமைப்பு நடத்தும் நூலகத்திற்கு தொடர்ச்சியாக நூல்களைக் கொடுத்து வருகிறேன்.


2018இல் தமிழக அரசு ஓர் இலட்சம் தலைப்புகளை எனது வேண்டுகோளை ஏற்று இலங்கைக்கு அனுப்பியது. அக்காலத்தில் கல்வி இணை அமைச்சராக இருந்த மாண்புமிகு இராதாகிருட்டிணன் அவர்களிடம் பேசி அந்த நூல்களைத் துறைமுகத்தில் இருந்து எடுப்பித்தேன்.

ஐம்பதினாயிரம் தலைப்புகள் யாழ்ப்பாணப் பொது நூலகத்திற்கும் ஏனைய ஐம்பதினாயிரம் தலைப்புகள் மலையகத்திலுள்ள நூலகங்களுக்கும் கொடுக்கும் பணியை என் வேண்டுகோளை ஏற்றுச் செய்த பெருமகனார் கல்வி இணை அமைச்சர் மாண்புமிகு இராதாகிருட்டிணன் அவர்கள்.

யாழ்ப்பாணத்துக்கு வந்த தமிழகக் கல்வி அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், யாழ்ப்பாணப் பொதுநூலக விழா மேடைக்கு என்னை அழைத்து யாழ்ப்பாணத்துக்கு உரிய நூல்களை உங்களிடம் தருகிறேன் எனத் தந்தார்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் வெளியாகும் சிறந்த தலைப்புகளை இலங்கைக்கு ஒவ்வொரு படியையும் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் தொடர்ந்து முயன்று வருகிறேன்.

ஏறத்தாழ 50,000 நூல்களை தமிழகம் முழுவதும் ஆர்வலரிடம் சேகரித்த திரு வி சி சந்தோசம், கல்வி இணை அமைச்சர் திரு இராதாகிருஷ்ணன் மூலம் அவற்றை இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு கொடுக்க நான் ஒருங்கிணைத்தேன்.


11.       திருவள்ளுவர் சிலைகள்

அவ்வாறு திரு வி சி சந்தோசம் அவர்களிடம் நான் கேட்டுப் பெற்ற 8 அடி உயரத் திருவள்ளுவர் சிலைகள் 16. அவற்றை இலங்கையின் 16 மாவட்டங்களில் உள்ள நூலகங்களில் முகப்பிலும் பள்ளிகளின் முகப்பிலும் நிறுவவ ஏற்பாடு செய்ய உதவியவர் கல்வி இணை அமைச்சர் மாண்புமிகு இராதாகிருட்டிணன் அவர்கள்.

சிலை திறப்பு விழாக்களுக்கு தமிழகத்தில் இருந்து 40 தமிழறிஞர் கொண்ட குழாம் வந்து ஒவ்வொரு சிலையாகத் திறந்து வைத்தது.


12.       பல்கலைக்கழக நூலகம்

புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம் வெளியிட்ட சைவாகமங்கள் இருபத்தெட்டு கொண்ட வன்தட்டினை 20 நாள்களுக்கு முன்பு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இந்து நாகரீக பீடத் தலைவரிடம் கையளித்தேன்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் தொடங்கிப் பேராசிரியர் கயிலாசபதி தலைவராகப் பொறுப்பேற்ற முதல் மாதத்தில் வாழ்த்தச் சென்ற நான் அவரிடம் ஏறத்தாழ 200 ஆங்கில, யப்பானிய மொழி அறிவியல் நூல்களைக் கையளித்தேன். புதிய நூலகத்துக்கு கொடுங்கள் என்றேன்.

13.       பதின் கவனகம்

அட்டாவதானம், சதாவதானம் என்ற கவனகத்தில் பன்முக ஆற்றல் கொண்ட தமிழகப் பேராசிரியரை இலங்கைக்கு வரவழைத்து,  இலங்கையின் மேற்கு, நடு, கிழக்கு, வடக்குப் பிரதேசங்களில் 38 உயர்நிலைப் பள்ளிகளில் செயல்விளக்கம் அளிக்க ஒருங்கிணைத்தேன்.

சதாவதானி புலோலியூர் நா கதிரவேற்பிள்ளை வாழ்ந்த மண்ணில் அந்தக் கலை மீண்டும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இருந்தது.


14.       நமக்குள் மாலிக் கபூர்கள் 

1959 தொடக்கம் 1979 வரை நான் சேகரித்து என் அறிவுத் தேடலுக்குரியதான நூல்கள் 2000 வரை எண்ணிக்கையுள்ள தலைப்புகளாக இருந்தன. நான் எழுதிய கட்டுரைகள் சேர்த்துவைத்த ஆய்வுக் குறிப்புகள் யாவும் ஆவணங்களாக இருந்தன.

1979இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பணியை விட்டு ஐக்கிய நாடுகள் சபை ஆலோசகராகப் புறப்பட்டேன். என் பெற்றோரிடம் மறவன்புலவு வீட்டில் மிகவும் பாதுகாப்பான அறையில் அவற்றை அடுக்கி ஒழுங்குபடுத்தி விட்டுச் சென்றேன்.

மறவன்புலவைச் சேர்ந்த திரு ஆனந்தரஞ்சன் அவரது உடன்பிறப்புகள் மூவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அக்காலத்தில் இருந்தனர். வழிபாட்டுப் பயணமாக என் பெற்றோர் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு சென்ற காலத்தில், 1984இல் திரு ஆனந்தரஞ்சனும் அவரது உடன்பிறப்புகளும் மற்றும் உதவியாளர்களும் அறையை உடைத்து அத்தனை நூல்களையும் அத்தனை ஆவணங்களையும் எடுத்துச் சென்றனர். இஃது எனது தனிப்பட்ட சோக வரலாறு.

திரு ஆனந்தரஞ்சன் இப்பொழுதும் மறவன்புலவில் இருக்கிறார். அவரது உடன்பிறப்புகள் ஐரோப்பாவில் இருக்கின்றனர்.





எங்கள் ஊர் நிலதாரியும் நானுமாகச் சென்று திரு ஆனந்தரஞ்சனிடம் எங்கே நூல்கள்? எங்கே ஆவணங்கள்? எனக் கேட்டோம்.

எடுத்தோம் வைத்திருந்தோம் உயர் பாதுகாப்பு வலையக் காலத்தில் அவற்றைக் கைவிட்டோம். எங்கே அவை எனத் தெரியாது எனக் கைவிரித்து விட்டார்.

திரு கிருட்டிணானந்த சிவம் எனது அருமை நண்பர். அவரைப் போல, என்னைப் போல நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான தமிழர் வீடுகளில் இருந்த புலமைச் சொத்துக்கள் அழிவதற்குப் போரில் ஈடுபட்ட அனைவருமே காரணம்.


15.       பழ. நெடுமாறன், ஈரோடு அன்பர்

யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிந்த அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் திரு. பழ. நெடுமாறன் பல்லாயிரக் கணக்கில் தமிழகப் பதிப்பாளரிடமும் ஆர்வலரிடமும் நூல்களைச் சேகரித்தார். விடிவுக்குப்பின் நூல்களைக் கொடுக்க உள்ளாதாகக் கூறி இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்.

ஈரோடில் ஓர் அன்பர் தாம் சேர்த்து வைத்திருக்கும் அரிய நூல்களின் தொகுப்புகளை ஈழத்துக்குக் கொடுக்க ஆர்வமாக இருந்தார். இதற்காக 2003இல் கிளிநொச்சி வந்து சென்றார். அனுப்புவதில் என் உதவியைக் கோரினார். பின்னர் தொடர்பில் இல்லை. ஈரோடு அன்பரின் நூல்கள் கிளிநொச்சிக்கு வரவில்லை எனத் தெரிந்தது.

16.       மாண்புமிகு பேபி சுப்பிரமணியம்

அருள்மிகு வீரமாகாளி அம்மன் கோயிலில் இருந்த சங்கிலியனின் வீர வாள் உள்ளிட்ட தொல் பொருள்கள், யாழ்ப்பாணத்தில் பெரியார்களிடமிருந்து சேர்ந்த அரிய நூல்கள், ஆவணங்கள் யாவும் கிளிநொச்சியில் கல்வி அமைச்சர் மாண்புமிகு பேபி சுப்பிரமணியத்திடம் இருந்தன.

2003, 2008 என இருமுறை கிளிநொச்சி சென்ற காலங்களில் மாண்புமிகு பேபி சுப்பிரமணியம், தம் களஞ்சிய அறைக்கு அழைத்துச் சென்று எனக்குக் காட்டுவார். பெருமிதத்தோடு மகிழ்வார். எனக்குவேண்டிய ஆவணங்களைக் குறுந்தட்டாக்கித் தந்தார்.

அந்தோ, அந்தோ, புலமைச் சொத்தின் பெற்றி, அரும்பொருள்களின் களஞ்சியம் 2009இல் என்ன ஆனதோ?

17.       தமிழர் தகவல் நடுவம்

சென்னைத் தமிழத் தகவல் நடுவத்தின் ஆவணங்களைத் திரு. சிவநாயகம் தன் நண்பர் ஒருவரிடம் விட்டுச் சென்றார். அவை தாம்பரத்துக்கு அப்பால், காட்டாங்குளத்தூர் அருகே ஒரு வீட்டில் இருந்தன. அந்த ஆவணங்களின் படிகளைக் கொடுப்பதற்குப் பணம் கேட்டார் என்ற செய்தியையும் கூறுவர். முனைவர் அரு கோபாலன் போன்றோருக்கு மேலும் விவரங்கள் தெரியலாம்.

18.       சென்னையில் என் சேகரங்கள்

1980 தொடக்கம் ஈழத்து வெளியீடுகளைச் சென்னைக்கு வரவழைத்து விற்பனை செய்தோம். கிரியா அமைப்பின் மொழி அறக்கட்டளையினர் ஆர்வத்தோடு தொடர்ந்து வாங்குவர்.

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக் கழக நூலகத்துக்கு ஈழத்து வெளியீடுகளை ஆண்டுதோறும் விற்பனை செய்வோம்.

1991இல் இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர், சென்னையில் வாழ்வதில் தளம்பல் நிலை. 1980 தொடக்கம் நான் சேகரித்த, நான் பதிப்பித்த ஈழத்து நூல்களின் தொகுப்பு என்னிடம் நூலடுக்காக இருந்தது. ஒரு நாள் யாவற்றையும் பெட்டிகளில் கட்டி, ஒரு பகுதியை மறைமலை அடிகள் நூலகத்துக்கும் மற்றொரு பகுதியை ரோஜா முத்தையா நூலகத்துக்கும் கொடுத்தேன்.

அக்காலத்துக்குப் பின்னர் என்னிடம் சேரும் ஈழத்து வெளியீடுகளைப் பெட்டியாகக் கட்டி வைப்பேன். ரோஜா முத்தையா நூலகத்தார் மாதம் ஒருமுறை தாமே வந்து பெட்டியை எடுத்துச் செல்வர். இன்று வரை அந்த நடைமுறை சென்னையில் உண்டு.

இதற்குப் பின்னரும் என்னிடம் சேர்ந்த ஈழத்தவர் நூல்கள், ஈழம் தொடர்பான தமிழக வெளியீடுகள் 2000 தலைப்புகள் வரை என் நூலடுக்கில் உள. என் உசாத்துணையாக உள. அவற்றை இலங்கைக்குக் கொண்டுவர முடியாது. சட்டச் சிக்கல் வரலாம்.

எனக்குப் பின்னர் அவை ரோஜா முத்தையா நூலகத்துக்குச் செல்லலாம்? அறியேன்.

19.       செல்வராசா

ஞானம் இதழில் உங்கள் கருத்துரையும் தேம்பித் தேம்பி அழுது பேனாவுக்குள் கண்ணீரை விட்டு எழுதிய கட்டுரையும் ஈழப் போர்ச்சூழலில் அறிவுச்செல்வம் அகன்ற வரலாறு கூறின.

நீல நதிக் கரை ஓரம். எகிப்திய நாகரிகப் பேழையாக நூலகம். எரித்தோர் கொடூர உரோமனியர். சிந்து நதிக் கரை ஓரம். தக்சிலாப் பல்கலைக்கழக நூலகம். எரித்தோர் மங்கோலியக் கொடூரர். கங்கை நதி ஓரம். நலாந்தப் பல்கலைக்கழக நூலகம். எரித்தோர் தில்லி சுல்தான்கள். எரித்தவன் பெயரே இன்றைய நலந்தாத் தொடர்வண்டி நிலையப் பெயர்.

தமிழகமெங்கும் புலவோர் நூலகங்கள், அரச நூலகங்கள், திட்டமிட்டு எரித்தவன் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் கபூர். ஆரியச் சக்கரவரத்திகளின் நல்லூர் அரண்மனை நூலகம். எரித்தவன் போர்த்துக்கேயப் பாதிரி பிரான்சிசு சேவியரின் தூண்டுதலில் தளபதி இடி ஒலிவேரா. யாழ்ப்பாணப் பொது நூலகம். எரித்தோர் அரசு அமைச்சர் போர்வையில் வந்த இன ஒழிப்புக் கொடூரக் கும்பல்.

காலம் கொடுமையானது. இறப்பே காலமாதலன்றோ? ஆனாலும் காலத்துக்குத் தமிழைத் தேக்கத் தெரியும். அதனாலன்றோ உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று தமிழ் எனக் காலக் கண்ணாடி காட்டுகிறது.

நீங்கள் தொகுத்தவை நூல் தேட்டம். காலத்தின் கருவி நீங்கள். தமிழை வாழ்வியலாக்கும் கருவி நீங்கள். புலமைச் செறிவைப் போற்றி, ஆற்றல் மிளிர்வைக் காட்டி, திறமைத் தெளிவைப் பதிவாக்கிய வரலாற்றுக் கடமையாளர்.

அறிந்தவன் அறிவான் அரியாலைப் பனாட்டுச் சுவை என்பர். புலமைப் பேணலை நீங்கள் அறிந்தளவு வேறு யார் அறிவார்? புலமைப் பேணலை நீங்கள் முயன்றளவு வேறு யார் முயல்வார்? வரலாற்றில் வாழ்கிறீர்கள். பிறவிப் பயன் கண்டீர்கள். புகழொடு தோன்றியோரில் நூல் தேட்டம் திரு. செல்வராசா ஒருவர்.

1 comment:

T.S.Kandaswami said...

ஐயா ! எதைச் சொல்வது , எப்படிச் சொல்வது , தெரியாமல் திணறுகின்றேன் !