Thursday, May 09, 2019

அகமதிய முகமதியரை வரவேற்று விருந்தோம்புவோம்


ஈழநாட்டுக்குத் தஞ்சம் கேட்டு வந்த முதல் பெண், தமிழச்சியான மணிமேகலை. அரசிளங்குமரன் உதயகுமாரனின் காதல் வலை வீச்சிலிருந்து தப்பினாள். ஆறு ஐந்து யோசனைத் தென் திசை மருங்கில் சென்று திரை உடுத்த நாக நாட்டின் யாழ்ப்பாணம் வந்தாள் (பொஆ 170).

யாழ்ப்பாணம் அவளை வரவேற்றது. ஈழத் தமிழ்ப் பெண், இலக்குமி என்பாள், கடவுள் கோலத்துத் தீவதிலகை எனவும் அழைப்பர். செவ்வனம் தோன்றினாள். மணிமேகலையை விருந்தோம்பிக் காத்தாள். 

மணிமேகலையின் ஈடுபாடு புத்த சமயம். பெருந்தவ முனிவனாம் புத்தர் யாழ்ப்பாணத்தில் இருந்து அறம் உரைத்திருந்த ஒளி ஆசனமாம் இரத்தின அரியணையை மணிமேகலைக்குத் தீவதிலகை காட்டினாள். மணிமேகலை தொழுதாள்.

வற்றாது உணவு வழங்கும் அமுதசுரபி எனும் மாபெரும் பாத்திரம் கோமுகித் தடாகத்திலிருந்து மணிமேகலை யாழ்ப்பாணத்திலேதான் பெற்றாள்.

ஏதிலிகளை வரவேற்பதை, விருந்தோம்புவதை, வாழ இடம் கொடுத்துப் பாதுகாப்பதை ஈழத்தமிழ் மக்கள் மரபாகவே போற்றி வருகிறார்கள். மரபணுக்களுள் புதைந்த பண்பாடாகப் ோற்றுவர். 

சேர சோழ பாண்டிய அரசுகளின் அரண்மனைக் குத்துவெட்டுகள் நடந்த காலங்களில் தமிழக இளவரசர்கள் பாதுகாப்புத் தேடிக் கடலைக் கடந்து ஈழத்துக்கு வந்து, நாக நாட்டு அரசர்கள் பாதுகாப்பில் மறைந்து வாழ்ந்து மீண்டிருக்கிறார்கள்.

வட கடலிலும் தென் கடலிலும் கடலட்டை, சங்கு, முத்து எனத் தேடி வந்தவர் சீனர் (பொஆ. 250). அவர்களை வரவேற்றுக் காத்தவர் சைவத் தமிழரான ஈழத்தவர். மண்கும்பானில் அவர்களின் தொல்லியல் தடயங்களை அண்மையில் கண்டனர்.

700 ஆண்டுகளுக்கு முன் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் கபூர் தெற்கு நோக்கிப் படையெடுத்ததால் (பொஆ 1309) தென்னிந்தியாவில் அரசுகள் குலைந்தன.

அறுபது ஆண்டுகள் தொடர்ந்த அந்நியப் படையெடுப்பின் தாக்கத்தைத் தாங்கொணாத புலமையாளர், அறிஞர், தொழில்நுட்ப வல்லுநர், கலை நிபுணர், சிற்பிகள், தச்சர்கள், இசைஞர்கள், மருத்துவர்கள் எனப் பலர் தத்தம் ஏடுகளுடனும் கருவிகளுடனும் ஈழத்தை நோக்கி ஏதிலிகளாய் வந்தனர்.

சிங்கை ஆரிய வரோதையச் சக்கரவர்த்தி அவ் ஏதிலிகளுக்குப் புகலிடம் கொடுத்தான். 

அக்காலத்தில் சைவத்தையும் தமிழையும் பேணிப் போற்றிப் பாதுகாத்த ஒரே ஒரு அரசனாக ஆரியச் சக்கரவர்த்தி வரோதையன் விளங்கினான்.

பாதுகாப்பைத் தேடி வந்த புலமையாளர்களுக்குப் புகலிடம் கொடுத்து பெரும்பேற்றைத் தேடிக் கொண்டான்.

மாலை தீவில் இருந்து கப்பலில் புற்ப்பட்டார் இபன் பட்டுட்டா. (பொஆ. 1344) இவர் மரைக்காயர். மொறொக்கோ நாட்டவர். உலகம் சுற்றுபவர்.

கடல் கொந்தளித்தது. கடும் காற்று வீசியது. கப்பல் உடைந்தது. இலங்கையின் புத்தளம் அருகே கரைசேர்ந்தது.

இபன் பட்டுட்டா இறங்கினார். கரையோரம் எங்கும் ஆரவாரம். புத்தளத்தில் மன்னர் ஒருவர் முகாமிட்டுளார். முத்துக் குளிப்புக்கு வந்துள்ளார். மன்னரிடம் அழைத்துச் சென்றனர் அரசகாவலர்.

மன்னர் இபன் பட்டுட்டாவை உடன் விடுவித்தார், வரவேற்றார், பாரசீக மொழியில் உரையாடினார். விருந்தோம்பினார். பரிசில்கள் வழங்கினார். 

தன் மேதிரத்தைக் கொடுத்தார். வழிகாட்டி ஒருவரைத் துணைக்கு அனுப்பினார். இபன் பட்டுட்டா இலங்கையைச் சுற்றிப் பார்க்க அந்த மோதிரமே கடவுச் சீட்டு.

அந்த மன்னர் யார் தெரியுமா? ஆரியச் சக்கரவரத்தி வரோதைய சிங்கை ஆரியன். இதை இபன் பட்டுட்டா தன் பயண நூலில் விரிவாகக் குறிப்பிடுவார்.

சைவத் தமிழருக்கு ஏதிலிகளை வரவேற்று விருந்தோம்பும் பண்பு மரபணுக்களில் புதைந்தது.

போர்த்துக்கேய ஒல்லாந்த ஆங்கிலேயர் காலத்தில் தமிழ் நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடிய காலங்கள் (பொஆ. 1750 – 1850) உண்டு.

அக்காலங்களில் ஏராளமான தமிழக மக்கள் ஈழம் நோக்கி வந்தனர். ஏதிலிகளாய் வாழ்வு ஆதாரம் தேடினர். ஈழம் அவர்களுக்கு புகலிடம் கொடுத்தது.

ஆங்கிலேயர் காலத்தில் அகமதிய முகமதியர்கள் (பொஆ. 1910) வணிகத்துக்காக யாழ்ப்பாணம் வந்தனர். வணிக நிறுவனங்களை அமைத்தனர்.

ஆங்கிலப் படையுடன் வந்த ஆபிரிக்கக் காப்பிலிகள் (பொஆ. 1938) மேற்குக் கரையில் தங்கினர். இன்றும் நாச்சிக் குடாவில் வாழும் அவர்களின் எச்சங்களைச் சைவத் தமிழர் பொன்போலக் காப்பர்.

பஞ்சாபியர் வந்தனர். சிந்தியர் வந்தனர். மலையாளிகள் வந்தனர். தெலுங்கர் வந்தனர். இவர்கள் யாவரும் யாழ்ப்பாணத்தில் சிறு தொழிலில் அல்லது வணிகத்தில் ஈடுபட்டனர். நகர சுத்தித் தொழிலும் செய்தனர்.

விடுதலைக்குப் பின்னும் இவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கினர். இப்பிரகாம் ஜபர்ஜி, தயராம், பனாரஸ் சில்க் ஹவுஸ் என வட நாட்டவர் வணிக நிறுவனங்கள்.

யாழ்ப்பாணத்தின் சந்திக்குச் சந்தி மலையாளிகளின் கொச்சியான் தேனீர்க் கடைகள் புகழ்பெற்று விளங்கின. மரம் அரியும் காலைகளில் மலையாளிகள் குவிந்தனர்.

விடுதலைக்குப்பின் யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்குக் குவிந்த தமிழக ஆசிரியப் பெருமக்கள் பலர்.

கே. ஆர். சீனிவாச அய்யங்கார் புகழ்பெற்ற அறிஞர். வல்வெட்டித்துறையில் ஆசிரியராக இருந்தார். மகாகவி பாரதியாரின் மைத்துனர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தார். மகளிர் கல்லூரிகளின் முதல்வர்கள், கணிதம், அறிவியல், ஓவியம், கலை, சிற்பம், கற்பிக்கும் ஆசிரியர்கள் தமிழகத்திலிருந்து புலமையாளர் யாழ்ப்பாணத்தில் வந்து பணிபுரிந்த காலங்கள் உண்டு.

திருக்குவளை தவில் நாதசுரக் கலைஞர் நாச்சிமார்கோயிலடியில் பல தலைமுறைகளாகத் தங்கி வாழ்வர். யாழ்ப்பாணத்தின் இசைச் சூழல் இவர்களால் மேன்மையுற்றது.

 முகமதியர்கள் கடந்த 150 ஆண்டுகளாக வே யாழ்ப்பாணத்தில் பெருமளவு வாழ்கின்றனர். ஐம்பதுகளில் அபுசாலி துணை முதல்வராக மாநகர சபையில் இருந்தார். காதர் முதல்வராக இருந்தார்.

வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் முகமதிய மாணவர்களின் தொகை, இந்து மாணவர்கள் தொகைக்குச் சமமாக இருந்தது. அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் முகமதிய மாணவர்கள் பயின்ற காட்சிகள், இணக்கமாக இருந்து வாழ்ந்த காட்சிகள், அனைவரின் நெஞ்சிலும் நிழலாடும்.

சிங்களவர் வெதுப்பகங்கள் நடத்தினர். வீடு வீடாகக் கூவி விற்றனர். நகைக் கடைகள் நடத்தினர். சிங்கள மாவித்தியாலயத்தில் அவர்களின் குழந்தைகள் பயின்றனர். ஆரிய குளம் என்றாலே சிங்களச் சமூகத்தின் நடுவமாகாதா? நாக விகாரை வழிபாட்டிடமாகாதா?

1970 களின் பின்னர் யாழ்ப்பாணத்தவரின் கண்ணோட்டம் மாறியது. வெளிநாட்டவர் என்றாலே ஐயமுற்றனர். சிங்களவர் மீது வெகுண்டனர்.

எடுத்துக்காட்டுக்கு சொல்வதென்றால் யாழ்ப்பாணத்திற்கு அமைதியைப் பரப்ப வந்த யப்பானியப் புத்தத் துறவி ஒருவர் போர்க்காலம் தொடங்க முன்பே சுட்டுக் கொல்லப்பட்டார்.

போர்க் காலத்தில் பல்லாயிரவராய் முகமதியர்கள் ஒரே நாளில் வெளியேறினர். 

சிங்கள மகா வித்தியாலயத்தை மூடினர்.

யாழ்ப்பாணத்தின் பன்முகத்தன்மை வாடியது. பாதுகாப்பின்மையே ஈழத் தமிழரின் மனக் கோலமானது. அந்நியர் எவரும் ஐயத்துக்கு உரியவாரானார்.

இந்த வாரம் பாகித்தானிய ஆப்கானித்தானிய ஏதிலிகளை வடக்கே அனுப்பக் கூடும் என்ற செய்தி பரவியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பார்க்கிறார்கள்.

ஆங்கிலேயத் திருச் சபையினர், பாகித்தானிய ஆப்கானித்தானிய கிறித்தவர்களை யாழப்பாணத்துக்கு அழைத்தமை வரவேற்பதற்குரிய மனிதநேயம். மனித நேயத்தின் பிறப்பிடமாக இயேசுவைச் சுட்டுவார் இராசன் ஊலர் தன் கட்டுரையில். விவிலிய வரிகளை மேற்கோள் காட்டுவார்.

சைவத் தமிழரின் மரபணுக்களில் புதைந்தது மனிதநேயம். அதனாலன்றோ, மணிமேகலையே வரவேற்ற ஈழம், மாலிக்காபூர்ப் படையெடுப்பால் ஏதிலிகளானவரை வரவேற்ற ஈழம், பாகித்தானிய ஆப்கானித்தானிய ஏதிலிகளை வரவேற்கும், விருந்தோம்பும் பாதுகாக்கும்.

ஏறத்தாழ ஆயிரத்து 1,700 ஏதிலியர். அவர்களுள் சில நூறு கிருத்தவர்கள். ஏனையோர் அகமதிய முகமதியர்.

யாழ்ப்பாணத் தெருக்களில் அகமதிய முகமதியர்கள் வணிகம் செய்த காலங்களில், வெள்ளைப் போர்வை உடையுடன் முகத் திரையுடன் அவ்வீட்டுப் பெண்கள் மகிழ்வாகப் பாதுகாப்பாக நடந்து திரிந்தனர்.

அகமதி முகமதியர்கள் எங்கிருந்தாலும் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் வாழ்பவர். அவர்களுடைய கருத்தை மற்றவர்கள் மீது திணிக்காதவர்கள். சிறந்த வணிகர். அவர்கள் சமூக முகமே வாடிக்கையாளரை முகம் கோணாமல் பார்ப்பதுதான். அகமதிய முகமதியர் அயலாரை நேசித்தனர். அயலாரின் முகம் கோணாமல் நடந்து கொண்டனர்.

இத்தகைய முகமதியர்கள் தான் இப்பொழுது ஏதிலிகளாகப் பாகித்தானில் இருந்தும் ஆப்கானித்தானில் இருந்தும் இலங்கை வந்திருக்கிறார்கள்.

சைவத்துக்கும் தமிழுக்கும் அவர்களால் பாதிப்பு ஏதும் வராது. சைவத் தமிழர் விருந்தோம்பலில் மேன்மையானவர்.

அகமதிய முகமதியர்களை வரவேற்றுப் பாதுகாத்து அவர்கள் நாடு திரும்பும் வரை அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் கிடைக்க வழி செய்வது ஈழத் தமிழர் கடமை.




No comments: