அரசியல் அமைப்புகளுக்கு மதிக்காத போக்கு தொடர்ச்சியாகச் சிங்களத் தலைமைக்கு இருந்து வந்துள்ளது.
1947 இல் நடைமுறைக்கு வந்த சோல்பரி அரசியல் அமைப்பின் இருபத்தொன்பதாவது பிரிவின் இரண்டாம் பந்தி 29 (2) சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருந்தது.
1948 1949 ஆண்டுகளில் நாடாளுமன்றம் இயற்றிய மலையக மக்களின் குடியுரிமை வாக்குரிமை தொடர்பான சட்டங்கள் சோல்பரி அரசியல் அமைப்புக்கு முற்றிலும் முரணானவை.
இலஞ்ச ஆணையாளர் இரணசிங்கா வழக்கில் பிரிவி கவுன்சிலில் 29 (2) பிரிவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளாலும் மாற்ற முடியாது என 1964இல் அறுதியாகக் கூறியது.
1956 இல் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி சட்டம் அரசியலமைப்பு-29 (2) பிரிவை முழுதாக மீறியது.
சிங்கள ஆட்சி மொழிச் சட்டத்திற்கு எதிராக 1962ல் கோடீஸ்வரன் வழக்காடினார்.
கோடீஸ்வரன் கூறியதை ஏற்ற மாவட்ட நீதிபதி ஓ எல டி கிறெட்சர் 29 (2) பிரிவுக்கு முற்றிலும் முரணானது சிங்கள ஆட்சி மொழி சட்டம் என தீர்ப்புக் கூறினார்.
இலங்கையின் உச்ச நீதிமன்றம் அத்தீர்ப்பை மறுதலித்தது.
கோடீஸ்வரன் லண்டனில் உள்ள பிரிவி கவுன்சிலுக்கு விண்ணப்பித்தார்.
இலங்கை உச்ச நீதிமன்றத்தின் மறுதலிப்பைப்பிரிவி கவுன்சில் ஏற்க மறுத்தது. மீண்டும் வழக்கை விசாரித்து அரசியல் அமைப்புக்குள் சிங்களம் மட்டும் ஆட்சிமொழிச் சட்டம் செல்லுபடியாகுமா என தீர்க்குமாறு பிரிவி கவுன்சில் 1969இல் இலங்கை உச்ச நீதிமன்றத்துக்கு ஆணையிட்டது.
29 (2) பிரிவை மாற்ற முடியாததால் சிங்களத் தலைமை சோல்பரி அரசியலமைப்பை முற்றுமுழுதாகக் கைவிட நடவடிக்கை எடுத்தது.
கொழும்பில் ரோயல் கல்லூரி நவரங்க அரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையாக கூடினார்கள்.
சோல்பரி அரசியல் அமைப்பை முழுதாக நீக்கினர். சட்டத் தொடர்ச்சியற்ற அரசியல் அமைப்பாக 1972ல் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கினார்கள்.
தமிழர் ஒப்புதலின்றி உருவாக்கினர்.
அதன் பின்னர் அரசியலமைப்பை மீறுவதும் அந்த மீறலை உள்ளடக்கத் திருத்தங்கள் கொண்டு வருவதும் சிங்களத் தலைமைக்கு வழமையாயின.
புகழ் பெற்ற ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சிவநாயகம், அரசியலமைப்பு நாளிதழ் போல வெளிவருகிறது. முதலாவது பதிப்பு இரண்டாவது பதிப்பு என ஏராளமான பதிப்புகளை காண்கிறது என்பார்.
நேற்றைய தினம் இங்கிலாந்தில் நோசிலில் பிரபு கூறியதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
எழுதப்படாத பிரித்தானிய அரசியலமைப்பின் விதிகளை அடிக்கடி மீறிச் செயல்படுவதுதே பிரித்தானிய நாடாளுமன்றம் என அவர் கூறியுள்ளார்.
எல்லா நாடுகளிலும் நாடாளுமன்றங்களும் அரசியல் அமைப்புகளும் ஒருங்கிணைந்து போவதில்லை. மீறல்கள் இயல்பாக நடைபெறுகின்றன.
ஏறத்தாழ 2,200 ஆண்டுகால அநுராதபுரத் தலைமுறை அரசுகள், அரண்மனைக் குத்துவெட்டுகளுக்கு ஆளாகிய அரசுகள். 194 மன்னர்கள் ஆண்டனர். இவர்களுட் பலர் தந்தை மகனைக் கொன்று ஆட்சிக்கு வருவது அரசி அரசனைக் கொன்று ஆட்சிக்கு வருவது மாமன் மச்சான் சேனைத்தலைவன் அமைச்சர் என எவரும் குறைவின்றி மற்றவரைக் கொலை செய்து ஆட்சிக்கு வருவது மகாவம்சம் கூறும் செய்தி.
சிங்கள அரசுகள் என நான் கூறாது அனுராதபுர தலைமுறை அரசு என்று கூறுவதற்கு காரணம் இலங்கையில் சிங்கள மொழியும் இனமும் உருவாகி ஏறத்தாழ 1200 ஆண்டுகளே ஆகின்றன.
1815 வரை சிங்களவரிடை மன்னர் ஆட்சி தொடர்ந்தது.
அரசியல் அமைப்புகளை ஏற்று ஆட்சி அமைக்கும் முறையை சிங்களவருக்கு வழங்கியவர்கள் ஆங்கிலேயர்களே.
ஆங்கிலேயரின் அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளின் வரலாற்றை நோக்குவோர் அவையும் முதலாவது பதிப்பு இரண்டாவது பதிப்பு எனச் சுப்பிரமணியம் சிவநாயகம் சொன்னது போன்று அடிக்கடி மாறிய அரசியல் அமைப்புகள்.
எனவே சோல்பரி அரசியல் அமைப்பைச் சிங்களத் தலைமை மீறுவது ஒன்றும் புதிய செய்தி அல்ல.
1972 குப் பின்னர் அரசியலமைப்புகள் அதற்கான திருத்தங்கள் எத்தனை முறை வந்திருக்கின்றன என்பதை நோக்கும்போது அரசியலமைப்பைச் சிங்களத் தலைமை பெரிதாக கருதுவதில்லை எனத் தெரியவரும்.
சிங்கள மக்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் தேசிய எழுச்சி முதன்மையாக தெரிகிறதே அன்றி அரசியலமைப்பு முதன்மையாகத் தெரிவதில்லை.
மைத்திரிபால சிறிசேன ரணில் விக்ரமசிங்க கூட்டாட்சியில் வந்த அரசியலமைப்புத் திருத்தங்கள் சிங்களத் தேசிய எழுச்சிக்கு ஊறாக அமையுமானால் அதை அவர்கள் தெரிந்து கொண்டே மீறுவார்கள். இது புதுமை அல்ல.
400 ஆண்டுகளாக மன்னராட்சி அற்ற தமிழ் மக்கள் ஆங்கிலேயரின் அரசியல் அமைப்புகள் சிங்கள மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் என முழுமையாக நம்பினார்கள்.
யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸின் தேர்தல் புறக்கணிப்பு ஆங்கிலேயர் அரசியலமைப்பை ஏற்கமாட்டோம் என்பதற்கான தொடக்கப் போராட்டம்.
அரசியல் அமைப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழர்களுக்கு தொடர்கதை.
சோல்பரி அரசியலமைப்பை ஏற்காமல் ஐம்பதுக்கு ஐம்பது கோரினர். கூட்டாட்சி கோரினர்.
1972ஆம் அரசியலமைப்பைத் தந்தை செல்வநாயகம் யாழ்ப்பாணத்தில் வைத்து எரித்தார்.
சிங்களவர்களோடு சேர்ந்து ஒரே அரசுக்குள் ஆட்சி அமைக்க முடியாது என 1972 முதலாகக் கூறத் தொடங்கியவர் 1976இல் தீர்மானமாகக் கூறினார்.
தமிழர் இதுவரை அரசியல் அமைப்புகளை ஏற்கவே இல்லை.
ஏற்காத அரசியல் அமைப்புக்குள் நுணுக்கமான சில புரிதல்கள். ஒரு சாரார் புரிந்துகொண்டவாறு இன்னுமொரு சாரார் புரிந்துகொள்ளவில்லை.
தமிழர்கள் என்ன சொல்கிறார்கள்.
அரசியல் அமைப்பை முறையாகச் சிங்களவர் கைக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள்.
எந்த அரசியலமைப்பை எந்தக் காலத்தில் சிங்களவர்கள் மீறவில்லை. இப்பொழுது கூறுகிறார்களே என தமிழர்கள் புலம்புவதில் பொருளில்லை.
மதிப்புடன் வாழ வேண்டும்
உரிமையுடன் வாழவேண்டும்
ஆட்சியில் முழுமையாகப் பங்கு கொள்ள வேண்டும்
தமிழர் மரபுவழித் தாயகத்தில் தமிழர் ஆட்சி
சிங்களவரின் மரபு வழித் தாயகத்தில் சிங்களவர் ஆடசி.
இருவரும் இணைந்து நடுவில் கூட்டாட்சி யைக் காணும் அரசியல் அமைப்பு.
1948ல் இருந்து நாம் கேட்டு வரும் அரசியலமைப்பு இதுவே.
அதற்கேற்ற அரசியலமைப்பு வேண்டும் இதுதானே தமிழர்களின் கோரிக்கை.
ஆங்கிலேயர் காலத்திலிருந்ததே சிங்கள தேசியத்தை இலங்கையின் ஒரே தேசியமாக மாற்றக்கூடிய அரசியலமைப்பை சிங்களத் தலைமைகள் முயன்று வருகின்றன.
அத்தகைய முயற்சியில் இன்றுள்ள அரசியல் அமைப்பில் நுணுக்கமான புரிதல்களில் சிங்களவருக்கு இடையே முரண்பாடுகள் வரும்போது அங்கு என்ன வேலை தமிழர்களுக்கு இந்த புரிதல்களுள் இந்தப் புரிதல் சரியானது என்பதை தீர்மானிப்பது தமிழர்களின் பணியா? தமிழர்களின் எதிர்காலத்தை செம்மையாக்கும் பணியா? தீர்மானிக்கும் பணியா?
புரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு நன்றியுடையேன்.
No comments:
Post a Comment