பண்பாட்டு உள்கட்டமைப்புப் பேழை
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
வெண்பனிக்
குன்றுகள்.
அன்னம் மிதக்கும் ஏரிகள்.
அழகு மலர்த் தோட்டங்கள்,
பசும் புல் தரை வெளிகள்.
பளிங்கு மாளிகைகள்.
பண்பாட்டில்
உச்சத்தர்.
காலம் தவறாக் கடமையர்.
வங்கிகளுக்கு வங்கியாளர்.
வட்டியில் மிதக்கும் நிதியாளர்.
இருபத்திமூன்று
மாநிலத்தார்.
ஆட்சி பரம்பலுக்கு எடுத்துக்காட்டார்.
மாநில சுயாட்சியின் மாண்பினர்.
அனைத்து மொழியினரும் சம வாய்ப்பினர்.
கைக்கடிகாரத்தின்
கருவூலம்.
குவியக் கண்ணாடிகளின் பெட்டகம்.
கழி இனிப்பு கட்டிகளின் வானகம்.
தேனீக்களாய் உழைக்கும் மக்கள்.
படைக் கலனே
இல்லாத நாடு.
ஐக்கிய நாடுகள் அலுவலக வீடு.
இவ்வாறெல்லாம்
உலகெங்கும் புகழ் பெற்றது சுவிற்சர்லாந்து நாடு.
1949 மார்கழி. தமிழரசுக் கட்சியின்
முதலாவது ஆண்டு நிறைவு விழா. தந்தை செல்வா பேசுகிறார்.
இலங்கையில்
சிங்களவர், தமிழர் என இரு
நிலத்தார். இரு தேசியத்தார்.
சிங்களவருடன்
சேர்ந்து வாழ்வதெனில்
கூட்டாட்சி அரசு கேட்கிறோம் சுவிற்சர்லாந்து நாட்டில் உள்ளதைப் போன்ற கூட்டாட்சி
அரசைக் கேட்கிறோம், என்கிறார்.
ஈழத் தமிழருக்கு அரசியல்
எடுத்துக்காட்டு சுவிற்சர்லாந்து நாடு.
1983 தொடக்கம் ஏவிய இன
ஒழிப்பு விதைகள், ஈழத் தமிழரை உலகெங்கும் புலம்பெயரத்
தூண்டின. அவ்வாறு புலம் பெயர்ந்தோருள் பலர் சுவிற்சர்லாந்து
நாட்டிலும் அடைக்கலம் தேடினர்.
சுவிற்சர்லாந்தின் இருபத்தி
மூன்று மாநிலங்களிலும் குடியேறினர். ஏதிலாகளாக வாழ்வைத் தொடங்கியோர், நாட்டின் குடி மக்களாக
மாறினர்.
உலகம் முழுதும்
சென்றார் தொழில் நடத்த, அவர்
உள்ளமும் சென்றதம்மா தமிழ் நடத்த, எனக் கவிஞர் கண்ணதாசன் எழுதினார். சீர்காழி
கோவிந்தராசன் பாடினார்.
மண்ணை
மறக்கவில்லை.
மரபுகளை மறக்கவில்லை.
வாழ்வியல் நோக்கங்களை மறக்கவில்லை.
நெறிகளை மறக்கவில்லை.
தாயகத்தை மறக்கவில்லை.
போராளிகளை
மறக்கவில்லை.
பண்பாட்டு
உள்கட்டமைப்பு அமையாவிடின்,
ஈழத் தமிழர் பண்பாடு, ஆற்றில் கரைத்த உப்புப் போலச்
சுவிற்சர்லாந்தில் சுவடு தெரியாமல், கரைந்து விடக் கூடும். ஈழத் தமிழர்கள் அயல் பண்பாடுகளுள் எளிதில் கரையக் கூடும்.
சூரிச்சு நகரில் வாழும்
தொலைநோக்குத் தமிழர், தலைமைத்துவத் தமிழர் 1994ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒன்று கூடினர்.
ஆவணியில் சைவத் தமிழ்ச் சங்கம் அமைத்தனர். அருள்மிகு சிவன் கோயில் கருத்தாக்கத்தை முன்னெடுத்தனர்.
சூரிச்சில்
விதைத்த விதை, இருபத்தி மூன்று மாநிலங்களுக்கும் பரந்தது. படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திலும்
திருக்கோயில்கள் அமையத் திருவருள் கூட்டியது.
சூரிச்சுச் சைவத்
தமிழ்ச் சங்கத்தினர் கண்துஞ்சாது பசி நோக்காது கருமமே கண்ணாயினார்.
சுவிற்சர்லாந்தில் ஈழச் சூழல் முற்று
முழுதாக அமைய உழைத்தோர், பண்பாட்டு வேர்கள் ஆழ ஓடி, அகல விரிய உழைத்தோர், சைவமும் தமிழும்
கண்களாகக் கொண்டோர், இருபத்தைந்தாண்டு (1994-2019) நிறைவைக் காண்கின்றனர்.
வெண் பனிக் குன்றுகளிடையே வெண்ணீற்று
நெற்றிகள்.
அன்னம் மிதக்கும் ஏரிகள் அருகே அன்னதானத்
திருமடங்கள்.
பசும் புல் தரை வெளிகளிடை பைந்தமிழர் பெரு விழாக்கள்.
பளிங்கு மாளிகை மாடங்களில் தமிழரைப் போற்றும் பெருமக்கள்.
பண்பாட்டில்
உச்சத்தரருகே பண்பாட்டின்
பேழைகளாய்த் தமிழர்.
இருபத்தைந்து ஆண்டு காலப் பணியின்
விளைச்சலாய்ச் சுவிற்சர்லாந்தில் சைவமும் தமிழும் தலை நிமிர்ந்து நிற்கக் காரணரே சைவத்
தமிழச் சங்கத்தாரும் அருள்மிகு சிவன் கோயிலாரும்.
வாழ்க வாழ்க வளர்க வளர்க, தமிழாகச்
சைவமாகச் சுவிற்சர்லாந்தில் தொய்வின்றித் தொடர்க.
No comments:
Post a Comment