உன் கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. ஆனாலும்
அக்கருத்தைச் சொல்ல உனக்குள்ள உரிமையை மதிக்கிறேன். தான் தொக்கா உரிமையாளர் திரு.
குகநாதனின் வாழ்வியல் நோக்க வரிகள் இவை.
ஊடகமே வாழ்வானவர். கருத்துருவாக்கமே
கொள்கையானவர். யாழ்ப்பாணத்தில் ந. சபாரத்தினம் ஆசிரியராக இருந்த காலத்தில் ஈழநாடு
இதழில் சேர்ந்த துடிப்புள்ள இளைஞர். கோபாலரத்தினத்துடனும் பணியாற்றியவர். தன்னை
ஈழநாடு இதழாகவே ஒன்றியவர்.
புலம்பெயர்ந்து பிரான்சு சென்றதும் ஈழநாடு
அவருடன் சென்றது. ஏசுவார்கள், எரிப்பார்கள், உண்மையை எழுதுங்கள், உண்மையாகவே
எழுதுங்கள் என்ற தவத்திரு யோக சுவாமிகளின் வாக்கு இவருக்கு வழிகாட்டி.
பாரிசு ஈழநாடு இதழின் இந்தியத் தொடர்பாளராக
இருந்தேன். புதிய தொழிநுட்பம் வந்தால் திரு. குகநாதன் உடனே தனதாக்குவார். செலவைக்
கணக்கில் கொள்ளார்.
கருத்தாளர் யார்? எவர்? எந்தக் கட்சி? எந்த
இயக்கம்? இவை அவருக்குப் பொருட்டல்ல. மற்றவர் மூக்கை முட்டித் தொடாதவரை உன் விடுதலை
உன்னதே என்ற வரிகள் இவரின் செயற்பாடாயின.
சில ஆண்டுகள் அவரோடு பணிபுரியும் வாய்ப்பு எனக்கு.
நான் எழுதியனவற்றில் ஓர் எழுத்து, ஒரு சொல், ஒரு வரி மாற்றார், நீக்கார். என்
கருத்துக்கு மாற்றுக் கருத்தாளர் கொண்ட கருத்துகளை அடுத்த இதழில் வெளியிடுவார்.
பாரிசில் இவருக்கு நெருக்கடி. தமிழகம் வந்தார்.
தொக்காத் தடம் தொடங்கினார். உலகெங்கும் தமிழ் தேமதுரமானது, தேனானது. தமிழகத்திலும்
நெருக்கடி. கொழும்பு வந்தார். என்றும் தளர்வறியா மனத்தினராய் (அபிராமிப் பட்டர்)
இலங்கையில் தொக்காத் தடம் தொடங்கி யாழ்ப்பாணத்திலிருந்து நடத்துகிறார்.
ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பார் மாவோ.
குகநாதனுக்கும் அதுவே மந்திரத் தொடர். இவருக்கு மட்டுன்று, இவரோடு ஈடுகொடுத்து இணைந்து
இரவு பகலாக உழைத்துவரும் இவரது அருமைத் துணைவியார் திருமதி குகநாதனுக்கும் அதுவே
மந்திரத் தொடர்.
இலங்கைத் தமிழரின் சமயங்களுக்குத் தனித் தனித் தொக்காத்
தடங்கள் தொடங்கினார். ஓம் தொக்கா அவற்றுள் ஒன்று.
எந்தப் பணியாயினும் அப்பணியைத் திருந்தச்
செய்வார். தளராமல் தொய்யாமல், தொடக்க நாள் ஆர்வத்துடன், எந்தெந்தப் பணியை எவன்
முடிக்குமென்றாய்ந்து அதனை அவன்கண் விடுவார்.
ஓம் தொக்காத் தடமும் அவரது கருத்துருவாக்கத்
தடம். ஐந்து ஆண்டுகள் இடைவிடா ஒளிபரப்பு. தமிழரின் பண்பாட்டுப் பேழையாகத்
தொடர்கிறது.
ஐந்து ஆண்டுகள் நிறைவுற்ற இந்த நாளில் நான் இச்
சாதனையையும் சாதனையாளர் குகநாதனையும் சார்ந்த பணியாளரையும் விளம்பரதாரரையும் கண்டு
கேட்டு இன்புறும் உலகளாவிய சுவைஞர்களையும் நெஞ்சார, நிறை மனத்துடன் பாராட்டி
வாழ்த்துகிறேன்.
No comments:
Post a Comment