Sunday, July 10, 2016

15ஆவது முறையும் ஏமாற்றினார்கள்

1925 தொடக்கம் சிங்கள தமிழ் உடன்பாடுகள் ஒவ்வொன்றையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்து துரோகம் செய்த வரலாறு சிங்களவருடையது. அந்த வரலாற்றுப் பட்டியல் பார்க்க.
1.  1925 சூன் 28ஆம் நாள் இலங்கைத் தமிழர் மகாசன சபை சார்பாக சேர். வைத்திலிங்கம் துரைசாமியும் இலங்கைத் தேசிய காங்கிரசின் ஆட்சிக்குழு சார்பாக சேர். சி. ஈ. கொரியாவும் யாழ்ப்பாணத்தில் கையெழுத்திட்ட மகேந்திரா  உடன்பாட்டை ஒருதலைப்பட்சமாக முறித்தனர் சிங்களவர்.

2.  பிரிட்டிசார் வழங்கிய அரசியமைப்பில் உள்ள சிறுபான்மையின் பாதுகாப்பு விதியான 29ஆம் பிரிவுக்கு முரணாக, 1948 இன் இலங்கைக் குடியுரிமைச் சட்டம், 1949இன் இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் இரண்டையும் இயற்றி மலையகத் தமிழர் 10 இலட்சம் பேரின் குடியுரிமையைப் பறித்தனர்.

3.  1930களில் நாட்டவையில் சிங்களமும் தமிழு ஆட்சிமொழியாக வேண்டும் எனப் பேசியவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. 1954இல் கொக்குவில் இந்துக் கல்லூரி வளாகத்தில் சிங்களத்தையும் தமிழையும் ஆட்சிமொழியாக்குவேன் எனச் சூளுரைத்தவர் பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலை. இருவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி, 1955இல் களனியில் நடாத்திய கட்சியின் ஆண்டு மாநாட்டில் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழியாக்குவோம் எனத் தீர்மானம் இயற்றிப் பிரண்டனர் இருவரும்.

4.  சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பாகப் பிரிட்டிசார் வழங்கிய அரசியமைப்பின் 29ஆவது பிரிவிற்கு முரணாகச் சிங்களம் மட்டுமே ஆட்சிமொழிச் சட்டத்தை 1956 சூன் 5ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியவர், சிறீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா.

5.  1957 சூலை 26ஆம் நாள் செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்கா எழுதிய பிரதேச சபைகள் அமைக்கும் உடன்பாட்டை, 1958 மே மாதத்தில் சிங்கள தீவிரத் தேசியவாதிகளின் அதீத தொல்லை தாங்காமல் கிழித்து எறிந்தவர் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா.

6.  ஐந்து இலட்சம் மலையகத் தமிழரின் விருப்பத்தைக் கேட்காமலேயே, 1964இன் சிறீமாவோ சாஸ்திரி உடன்பாட்டுக்கு அமைய இடந்தெரியா இந்தியாவுக்கு நாடுகடத்தியவர் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. 1948 விடுதலை ஏற்பாடுகளை மீறினார் சிறீமாவோ.

7.   1965 மாரச்சு 25ஆம் நாள் செல்வநாயகத்துடன் எட்டிய அதிகாரப் பகிர்வு உடன்பாட்டைச் சிங்களத் தீவிரத் தேசியவாதிகளின் போர்க்கோலத் தெருவலங்களுக்கு அஞ்சி (அதில் 8 ஜனவரி 1966 அன்று புத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டார்) கிழித்தெறிந்தவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த பிரதமர் டட்லி சேனநாயக்கா.

8.  தமிழர்களின் பங்களிப்பின்றி, பிரிட்டிசாரின் ஒப்புதல் இன்றி, ஒருதலைப்பட்சமாகக் குடியரசு என இலங்கையை அறிவிக்கும் அரசியலமைப்பை 1972 மே 22இல் உருவாக்கியவர் சிறீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்கா. ஒரு மொழி இரு நாடு, இரு மொழிகள் ஒரு நாடு எனச் சோசலிச வாதியாய் 1956இல் நாடாளுமன்றத்தில் பேசிய கொல்வின் ஆர் டி சில்வா, பின்னர் சிங்கள இன வெறியாளராகிப் புத்த மதத்துக்கு முதலிடம், சிங்களமே ஆட்சி மொழி என, ஆட்சியில் தமிழர் பங்குபெற முடியா அரசியலமைப்பைத் தயாரித்தார். 1948 விடுதலை ஏற்பாடுகளை மீறினார் சிறீமாவோ.

9.  ஆட்சி அதிகாரம் கொண்ட குடியரசுத் தலைவர் என்ற ஆட்சி முறையைப் புகுத்திய 1978இன் அரசியலமைப்பைத் தயாரித்தவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா. அரசு சார்ந்தோர் 1981இல் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாண நூலகத்தைக் கொளுத்தினர். 1983இல் இனக் கலவரத்தை அரசே திட்டமிட்டு நடாத்தியதால் தமிழர் பல்லாயிரக்கணக்கில் நாட்டைவிட்டு ஓடினர். 1948 விடுதலை ஏற்பாடுகளை மீறினார் செயவர்த்தனா.

10.       இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் தூதுவர் 3 சன. 1984 முதலாகக் கொழும்புக்குப் பலமுறை சென்று அரசுடனும் தமிழர் தரப்புடனும் கலந்து தயாரித்த வரைவுகளைக் குடியரசுத் தலைவர் ஜே. ஆர். ஜெயவர்த்தனா, அனைத்துக் கட்சி மாநாட்டின் பார்வைக்கு அனுப்பி அம்மாநாடு தந்த கருத்துரைகளை மண்ணுக்குள் புதைத்து (26 ஆகஸ்டு 1984), பிரதமர் இந்திராவின் அமைதி முயற்சியை முறியடித்தார்.

11.     பிரதமர் இராஜீவ் காந்தி கூட்டிய திம்புப் பேச்சுவார்த்தைகள் இலங்கை அரசின் விட்டுக்கொடுப்பின்மையால் தோல்விகண்டன (17 ஆகஸ்டு 1985). இந்தியாவை ஏமாற்றினார் செயவர்த்தனா.

12.     1986 சூன் 25இல் கொழும்பில் அனைத்துக் கட்சி மாநாடு, 18 நவம்பர் 1986இல் பங்களூருவில் இராஜீவ் – ஜெயவர்த்தனா உச்சி மாநாடு யாவும் இலங்கை அரசின் விடாப்பிடிக் கொள்கையால் தோல்வி கண்டன. இந்தியாவை ஏமாற்றினார் செயவர்த்தனா.

13.     1987 சூலை 1987இல் இராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்பாடு கொழும்பில் ஒப்பமாகியது.
13.1 இலங்கையின் வட கிழக்கு மாகாணங்கள் தமிழ்ப் பேசும் மக்களின் மரபு வழித் தாயகம் என்ற கொள்கை அந்த உடன்பாட்டில் உண்டு.
13.2 அந்த வட கிழக்கு மாகாணங்கள் ஒரே ஆட்சி அலகாக இணைந்து, ஒரே மாகாண சபையின் கீழ், ஒரே ஆளுநர், ஒரே முதல்வர், ஒரே அமைச்சரவையின் கீழ் இயங்கும் என உடன்பாடு ஏற்றுக்கொண்டது.
13.3 உடன்பாட்டு விதிகளை நடைமுறைப்படுத்த இந்திய அரசு உறுதிசெய்யும் உத்தரவாதம் அளிக்கும் என்பதையும் உடன்பாடு கூறியது.
13.4 இராஜீவ் – ஜெயவர்த்தனா உடன்பாட்டின் விளைவாக மாகாண சபைகளைக்கு அதிகாரம் பதிர்ந்தளிக்கும் இலங்கை அரசியமைப்பின் 13ஆவது திருத்தம் அமைந்தது (14 நவம்பர் 1987).
செயவர்த்தனா இந்தியாவுக்கு ஒப்பியவாறு காவல், காணி அதிகாரங்களை மாகாண சபைக்குக் கொடுக்காது ஏமாற்றினார் செயவர்த்தனா. வட கிழக்கு இணைப்பு என உடன்பாடு எழுதி, நீதிமன்றத்தை நாடி இணைப்பை உடைத்த அரசு சிங்கள அரசு இந்தியாவை ஏமாற்றியது.

14.     2002 பெப்ருவரி 22ஆம் நாள் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே புரிந்துணர்வு உடன்பாடும் போர் நிறுத்த உடன்பாடும் நோர்வே அரசின் துணையுடன், உத்தரவாதத்துடன் அமைந்தன. 2008 சனவரி 8ஆம் நாள் இந்த உடன்பாட்டையும் குடியரசுத் தலைவர் மகிந்த இராஜபக்சா ஒரு தலைப் பட்சமாக முறித்தார். போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவை வெளியேற்றினார். நோர்வேயை ஏமாற்றினார் இராஜபக்சா.

15. ஐநா தீர்மானத்தை உலக நாடுகளோடு சேர்ந்து வாக்களித்து உடன்பட்ட சிறிசேனா, ஒப்புக் கொண்டதை நடைமுறைப்படுத்தாது ஐநாவை ஏமாற்றுகிறார்.

No comments: