Sunday, July 10, 2016

169 இராகங்களில் திருக்குறள் முழுவதும்

படிக்க http://www.vallamai.com/?p=70238

பார்க்க https://youtu.be/muS_J2OZehg

சந்தம் இல்லாமல் பாடல் இல்லை. பாடுவதால் பாடல்கள், குறட்பாக்கள்.
திருக்குறள் பாடல்களுக்கு இசை அமைத்தல் எளிதல்ல என்பார் எதுகைச் சீர் தரும் சந்தத்துள் மூழ்குக, அளவெடுக்கும் நெடிலின் இசைக்குள் நனைக, தமிழ் வேர்ப் பொருளைத் தேர்க, தேனாகக் குரலில் ஏற்றுக, அலைகளாய்க் காற்றில் தவழவிடுக, திருக்குறள் இனிமையாய் இசையாகும்.
இனிமையாக இசைப்பதற்காகவே ஏழு சீர்களில் எதுகை மோனையுடன் எழுதிய பண்வழிப் பாடல்கள் அவை.
கருவிலே இசைக்குத் திருவானவர், மழலையாகத் தன் மிழலையில் பண்ணிசைத்தவர், 2 வயதிலேயே சென்னை, சங்கீத வித்துவ சபையாரின் பாராட்டுப் பெற்றவர், கித்தார் இசை மேதை இரவிசங்கர் உள்ளிட்ட உலக இசை விற்பன்னர்களின் போற்றுதலுக்கானவர், சித்திர வீணை வித்தகர் இரவிகிரண், திருக்குறள் பாடல்கள் 1330ஐயும் 169 இராககங்களில் அமைத்து உலகுக்குத் தருகிறார்,
அமெரிக்காவில் வாழும் அவரின் கொடையை இந்தியாவில் அறிமுகம் செய்ய, 04.07.2016 மாலை, சென்னை, பிரம்மகான சபையார், ஆள்வார்ப்பேட்டை நாரதகானசபை அரங்கில் விழாவாக்கினர்.
பத்மசிறீ விருதாளர் நல்லி குப்புசாமி செட்டியார் தலைமை தாங்க, பாசக இல. கணேசன் வெளியிட, பத்மபூசண விருதாளர் சுதா இரகுநாதன் மதிப்புரைக்க, சென்னையின் கலையுலகமே விழாவில் திரண்டது, இரவிகிரணை வாழ்த்தியது.
இளங் கலைஞர் பங்கேற்றனர். திருக்குறளைப் பாடினர், அரங்கத்துக்கு அணி சேர்த்தனர். காயத்திரி கிரிசர் தொடக்கம் சின்மயா உடன்பிறப்புகள் வரை, இரவி கிரண் தொடுத்த பண்களில் இசை எடுத்தனர், அவையோர் செவி மடுத்தனர், மயங்கினர்.
பரதத்தில் திருக்குறளைத் தந்து நால்வர் ஆடினர். சொற்கட்டோ, ஒத்திசையோ இல்லை. தாள இலயத்தில் குரலிசைக்குப் பதம் பிடித்தனர் பரதத்தார். வரிகளை மீட்டும் தராததால் பதங்களின் வண்ணத்தை வரைந்தாரில்லை. கை வழி கண்கள் செல்ல, கண்கள் வழி கழுத்தசைய, கன்னங்கள் உணர்வு காட்ட, கால்கள் தாள இலயத்தில் அடியெடுக்க, அரங்கம் முழுவதையும் ஆடல் களமாக்கினர் நால்வரும்.
வான் சிறப்புப் பதிகம் பத்தையும் நால்வருமாய்ப் பரதமாக்கையில் மேகம் கறுத்தது. நீர்க்கம்பிகள் ஒளியில் தெறித்தன. நான் குடை விரிக்க முயன்றேன். அரங்கத்தில் மழை பொழிந்ததோ என மயங்கினேன். தர்பார் இராகம் மடைதிறக்க, ஆதி தாளம் வரப்புடையாத ஓடையானது.
நன்மைக்கு ஒரு பதம், தீமைக்கு வேறொன்று. நாடுதலுக்கு ஒன்று, நலம்புரிந்த தன்மைக்கு ஒன்று, ஆள்வதற்கு ஒன்று. இதனைக்கும் இவனுக்கும் அண்மை காட்டியவர், அதனைக்கும் அவனுக்கும் சேய்மை காட்டினார். அதற்குரியனாகச் செயல் எனக் கண்கள் பேசின. பிரம்ம கான சபைச் செயலாளர் இரவியின் மகள் தீப்தி, விரைந்து மாற்றி வந்த உடல் மொழியால் தெரிந்து வினையாடல் குறள் பத்தையும் விளக்கினார். கீரவணி இராகத்தில் விரிந்தவர் ஆதி தாளத்தில் ஒடுங்கினார்.
உன்னால் முடியும் தம்பி..என உற்சாகமூட்டித் தொடங்கினார். மனத் தளர்ச்சியில் அவரே தளர்ந்தார். சுதாகரித்து முயற்சிக்கு மீண்டார். முடிக்காத பணிக்கான முயற்சி வீண் என்றார். பேடியின் கையில் வாள் காட்டினார். ஊக்கமின்மைக்குச் சான்று காட்டினார். மடி சொல்கையில் கைவைத்துத் தலை சாய்ந்தவர், மாமுகடிக்கு எள்ளும் கொள்ளும் வெடிக்கும் பதம் காட்டினார். தெய்வத்தைக் கும்பிட்டுக் காட்டியவர் ஊழையும் காட்டினார். வினையின் உறுதி காட்டுகையில் முகமும் கைகளும் பேசின. கலைமாமணி சசிரேகா பாலசுப்பிரமணியன் ஆள்வினையுடைமையின் பத்துப் பாடல்களுக்கும் பதம் பிடித்தார். கமாசு இராக இசையை மிசிரச்சாப்புத் தாளம் கட்டுக்குள் வைத்ததால் சசிரேகா அளந்து அடியெடுத்து ஆடினார்.
மோப்பக் குழைந்து அனிச்சமானவர், மென்மை தவழந்து மலரினும் மெல்லியளானார். விரல்களில் மலரைக் காட்டியவர், கண்களிலும் காட்டினார், காதலன் சொன்னதாக. முத்துப் பல்வரிசையை விரல் வழி காட்டினார். மூங்கிலனைய தோளைக் கண்களால் சுட்டினார். மாந்தளிர் மேனிக்குக் கைகளை நழுவினார், மூக்கில் விரல் குவித்து மணந்து மயக்கமூட்டும் நறுமணம் காட்டினார். வேல் விழிக்கு மையெழுதினார், காதலியைக் காட்ட. கண்களை விரித்தவர், காதலியின் முகம் போல நிலவே நீ ஒளிர் என்றார். அனிச்சக் காம்பை முள்ளாக நீக்க காலை மடித்து வண்ணம் காட்டினார். சிருங்காரச் சுவைக்கு யுவகலா பாரதி சிறீதேவியின் பரதமோ எனுமாறு நலம்புனைந்துரைத்தலின் பத்துப் பாடல்களின் நளினகாந்தி இராக இனிமையை ஆதி தாளம் வழிநடத்தியதே.
கட்டை விரல் சுட்டு விரலுடன் சேர்ந்து உப்புக் கிள்ளி ஊடலுக்கும் கூடலுக்கும் இடைவெளியை அந்த அளவுக்கு மேல் நீட்டாதீர் என்றார். ஊடலுக்கு முகம் சுளித்தவர் கூடலுக்கு நாணியே தழுவிய கையினரானர். பெரும் பிணக்கைக் கடுமுகமாக்கினார். சிறு பிணக்கைக் கண்களுள் புதைத்தார். நிழல் நீரில் குளிர்மை காட்டினார், ஊடலில் அன்பை அளவிட்டார். ஊடலை நீட்டிக்க வேண்டாமெனக் கையசைத்தார். அடங்கா ஆசை கூடலுக்கே என ஏங்கினார். ஒருவன் ஒருத்தியின் அன்புப் பெருக்கத்துக்குப் புலவி கட்டாயம் என வள்ளுவர் கூறும் புலவியின் பத்துப் பாடல்கள், திலங்கு இராகத்தில், கண்டசாப்பு தாளத்தில் நடனமாமணி பிரியா முரளிக்குப் புகலிடம் தந்ததால், ஊடாத அரங்கத்தை வாடாது காத்தார்.
பரதத்தினை அடுத்து, இளங்கலைஞர் திருக்குறளைப் பதிகம் பதிகமாக இசைத்தனர், நிகழ்ச்சியின் நிறைவுவரை.







No comments: