மாசி 6, செவ்வாய் (18.02.2025)
அருந்ததியார் இசை வாழும்.
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
காற்றோடு இசை கலந்தது. காதில் இனித்தது. மெய் சிலிர்த்தது. எனக்குத் தெரிந்த பாடல் வரிகள். 70 ஆண்டுகளாகத் தொடர்ந்து நான் படித்து வரும் வரிகள். பிள்ளையார் கதையின் 745 வரிகள்.
நான் படிக்கும் பொழுது எனக்குத் தெரிந்த முறையில் அவற்றை இசைத்துப் படித்திருக்கிறேன். வேறு இசையில் கேட்டுப் பழக்கம் இல்லை.
பத்தாண்டுகளுக்கு முன், கார்த்திகை மாதத்தில் ஒருநாள். மாலை நேரம். யாழ்ப்பாணம் காங்கேயன்துறை வீதி. சிவதொண்டன் நிலையத்துக்கு எதிரே அச்சகத்தின் முதல் மாடியில் நான்.
எனக்குத் தெரிந்த வரிகள். குரல் எடுத்து, இசை சேர்த்து, இனிமை குழைத்து, அருள் அருவி புனல்வது போல் இசை மழையாக அந்த வரிகள் என் காதுகளுள். காற்றில் மிதந்து, காதுள் புகுந்து, மெய் சிலிர்த்து, விதிர்விதிர்த்து உள்ளத்தை ஒடுக்கிய அருள் இசை.
இசை வந்த தெற்குத் திசை நோக்கி நடந்தேன். பிரப்பங்குளம் சந்தி, அருள்மிகு பன்றிக்கோட்டுப் பிள்ளையார் கோயில். அங்கே ஒலிபரப்பாகிய அந்த இசை. வாயிலில் இருந்தவரிடம் கேட்டேன். பிரப்பங்குளம் சாலையில் வாழும் அம்மையார் ஒருவரின் குறுந்தட்டு என்றார்.
அம்மையாரிடம் சென்றேன். குறுந்தட்டைத் தந்தார். பார்த்ததும் வியந்தேன். திருமதி அருந்ததி சிறீரங்கநாதனின் குரலிசையில் பிள்ளையார் கதை. குறுந்தட்டைக் கேட்டு வாங்கினேன். அருகில் உள்ள ஒலியகத்தில் படி எடுத்தேன். அம்மையாரின் குறுந்தட்டை மீளக் கொடுத்து வந்தேன்.
கொழும்பில் நண்பரிடம் பேசினேன். அருந்ததியாரின் தொலைப்பேசி எண்ணைப் பெற்றேன் அவரை அழைத்தேன்.
பாராட்டினேன். பிள்ளையார் கதைக்கு இசை வடிவம் கொடுத்த பெருமகள் என்றேன். இன்னமும் நன்றாய் இசைத்திருக்க வேண்டும் என்றார். இதுவே பாரிய அருள் பணி. தொடர்ந்தும் அருள் பணியில் ஈடுபடுங்கள் என வாழ்த்தினேன்.
அருந்ததியாரும் நானும் நன்கு அறிமுகமானவர்கள். 57 ஆண்டுகளுக்கு முன் அவரை முதல் முதலாகச் சந்தித்தேன்.
கொழும்பு வெள்ளவத்தை இராஜசிங்கன் வீதியில் அவருடைய இல்லம். அவருடைய வீட்டுப் பின்பக்கக் காணியில் அவருடைய அக்காவின் இல்லம். அங்கே நான் வாழ்ந்த ஓர் அறை.
கீழே பயிற்சிக் கூடம், நடனாலயம். மாடியில் வீடு. குரல் இசை, வீணை இசை, பரதம் என மூன்றையும் பயிற்பிப்பவர் திருமதி ஜெயலட்சுமி கந்தையா. பணி முடிந்து நான் மாலையில் அறை திரும்பும் போது மாணவிகள் சூழ அமர்ந்திருப்பார்.
மோகனத்தையும் ஆதி தாளத்தையும் சொற்கட்டுகளையும் கட்டைத் தட்டுகளையும் விரல் மீட்டும் நாண் அமுத ஓசையையும் கேட்டவாறே மாலை 7 மணி வரை நான் அறைக்குள் இருப்பேன்.
ஒவ்வொருவராகப் பெற்றோர் மாணவிகளை அழைத்துச் செல்லும் வரை திருமதி ஜெயலட்சுமி நடனாலயத்தில். அவருடைய அருமைக் கணவர் பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் கந்தையா. மறவன்புலவில் எனக்கு அண்ணர் முறையானவர்.
அக்காலத்தில் மாலை வேளைகளில் மாடி ஏறி மேலே வந்து தமக்கையாருடனும் என் அண்ணருடனும் என்னுடனும் உரையாடிச் செல்பவர் அருந்ததியார். 57 ஆண்டுகளுக்கு முன்பு அவ்வாறே அருந்ததியார் எனக்கு அறிமுகம்.
65 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் எனக்கு அறிமுகமானவர் ஜெயலட்சுமியார். பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் முதுகலை இறுதி ஆண்டில் எனக்கு அண்ணர் கந்தையா.
என்னையும் துன்னாலை சிதம்பரநாதனையும் பச்சையப்பன் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்த்தவர் கந்தையனார். கொழும்பு இராஜசிங்க வீதியில் எதிரெதிர் வீடுகளில் இருந்த ஜெயலட்சுமியையும் கமலினியையும் தேனாம்பேட்டை முகமதிய மகளிர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் சேர்த்தவர் கந்தையனார்.
ஜெயலட்சுமிக்கு கமலினிக்கும் உதவிகள் தேவை எனில் கந்தையனாரை அழைப்பார்கள். அவர் தனியே போக மாட்டார். என்னையும் அழைத்துக் கொண்டே தேனாம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதிக்குச் செல்வார். அவ்வாறே ஜெயலட்சுமியாருக்கும் எனக்கும் அறிமுகம்.
பட்டப் படிப்பு நிறைவில் கந்தையனார் கொழும்பு சென்று விட்டார். அடுத்த மூன்று ஆண்டுகள் ஜெயலட்சுமியாருக்கும் கமலினியாருக்கும் அவர் சார்பில் ஏதாவது கொடுக்கவோ செய்தி சொல்லவோ தேனாம்பேட்டை மகளிர் கல்லூரி விடுதிக்குச் செல்வேன்.
61 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேரக் கொழும்பு சென்றதும் பம்பலப்பிட்டியில் கந்தையனார் அவர்களுடைய அறையில் ஓராண்டு காலம் தங்கி இருந்தேன். அக்காலத்தில் ஜெயலட்சுமியாரின் பரதநாட்டிய அரங்கேற்றம், கந்தையனார் - ஜெயலட்சுமியார் திருமணம் என நிகழ்ச்சிகளில் அருந்ததியரைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அறிமுகமாகவில்லை.
ஜெயலட்சுமியாருக்கு நான்கு உடன் பிறப்புகள். நால்வரும் பெண்கள். ஜெயலட்சுமியார் நான்காவது பெண். மூத்தவர் அம்பிகாவார். கடைக்குட்டி அருந்ததியார். ஐவருமே இசை மாமணிகள்.
மூத்தவர் அம்பிகாவார். சிறுவயதில் இருந்து வெள்ளவத்தை இராமகிருட்டிண மிசன் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர். பின்னர் கொழும்பில் அனைத்து இசை அரங்குகளிலும் அவரே முதன்மையானவரானார். பிற்காலத்தில் இலண்டன் சென்றவர். என் மீது அளவற்ற அன்பு காட்டுபவர்.
ஜெயலட்சுமியாரை அடுத்து என்னோடு நன்றாகப் பழகியவர் திருமதி ஞானா குலேந்திரனார். தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைத் துறைத் தலைவராக ஞானாவார் பணியாற்றியவர். தமிழக முதலமைச்சர் செயலலிதாவின் அன்பையும் பாராட்டையும் பெற்றவர். அக்காலங்களில் குலேந்திரன் இல்லத்தார் அனைவருடனும் அன்பாகவும் பாசத்துடனும் நாம் பழகினோம்.
புவியியல் பேராசிரியராகிக் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தரானவர் திருமதி யோகா இராசநாயகம். ஜெயலட்சுமியாருக்கு நேரே மூத்தவர்.
வைத்துச் சிரிச்சு சிரிச்சுக் குடிக்கும் சுருட்டு (வைசிசிகு) எனப் பாடசாலை மாணவனாக இருந்த காலத்தில் நான் அறிந்த சுருட்டுத் தயாரிப்பாளர் குமாரசுவாமி. யாழ்ப்பாணம், கந்தர் மடம், பலாலி வீதியின் இரு பக்கமும் நெருங்கி வாழ்ந்த புகழ்பெற்ற குடும்பங்களில் ஒருவர். அவர்களுள் இன்னொருவர் பிற்காலத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி முதல்வரான இருந்த திரு சி.சபாரத்தினம் அவர்கள். எனக்கு பத்தாம் வகுப்பில் கணித ஆசிரியர்.
கந்தர் மடம் வைசிசிகு உறவுகளுக்கு மறவன்புலவில் நெல் வயற் காணிகள் இருந்தன. அறுவடை காலங்களில் அக்குடும்பத்தார் மறவன்புலவுக்கு வந்து போவார்கள்.
என் முன்னோர் அறங்காவலராக இருந்த மறவன்புலவு அருள்மிகு வள்ளைக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோயில் 20 அடி உயர மணிக்கூட்டுக் கோபுரத்தை வைசிசிகு இல்லத்தார் கட்டிக் கொடுத்ததான குறிப்புகளை நான் படித்திருக்கிறேன்.
வைசிசிகு உறவு முறையில் வந்தவரே அருந்ததியர்.
அதன் தொடர்ச்சியோ என்னவோ, அருள்மிகு பிள்ளையாரின் விழைவோ என்னவோ?
கடந்த 10 ஆண்டுகளாகக் கார்த்திகைக் கார்த்திகை கழிந்த பின்னாளில் தொடங்கும் பிள்ளையார் கதை நோன்பு 21 நாள்களும் புலர் காலையில் அருள்மிகு பிள்ளையார் கோயில் ஒலிபரப்பியில் அருந்ததியாரின் இசையே அருள் மழையாகும்.
பிள்ளையார் கதை வரிகள் வரம்பு கட்டிய வயல் வெள்ளத்தில் நெற்பயிர்களின் குடலைகள் அரும்பும் காலத்தில் அருந்ததியாரின் இசையோடு தவழ்ந்து குடலைகளை வளர்த்து நெற்கதிர்களாக்கும்.
மறவன்புலவு மக்களின் இருள் நீக்கி அருள் பெருக்கும் வெள்ளமாக அருந்ததியாரின் பிள்ளையார் கதை வரிகளின் இசை, வெடவெடக்கும் குளிர் நிறைந்த புலர் காலையில், வாடைக் காற்றில் மெல்லெனத் தவழ்ந்து கேட்கும் ஒவ்வொருவரின் உள்ளத்தையும் ஒடுக்கும், உய்விக்கும்.
உலகெங்கும் தமிழிசையைக் கொண்டு சென்றார். கிழக்கு ஆப்பிரிக்காவில் அவர் கணவரோடு வாழ்ந்த காலத்தில் அங்கும் தமிழிசையைப் பரப்பினார். கண்டிய நடனத்துக்குத் தமிழ் இசைக் கூறுகளுடன் இசையமைத்தார். இலங்கை வானொலியில் உயர் அலுவலர். பாராட்டிய பல இசை அமைப்புகளும் இலங்கை அரசும் பட்டங்களை அவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.
கலாசூரி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மாசி 5 திங்களன்று காலமானார் என்ற செய்தி அறிந்ததும் நெகிழ்ந்தேன். அருந்ததியார் வாழ்கின்றார். இசைக்கு இறப்பு உண்டோ?
No comments:
Post a Comment