மார்கழி 9 புதன்கிழமை (22 1 2025)
மறவன்புலவு க. சச்சிதானந்தன் எழுதுகிறேன
வணக்கம்
*நாகப்பட்டினம் காங்கேயன்துறை இடையே வட மாகாண வளர்ச்சிக்கான கொடுக்கலும் வாங்கலும்*
2009 இல் தொடங்கிய என் முயற்சி. விளைவாக, 2023 அக்டோபர் 14ஆம் நாள் நாகப்பட்டினத்தில் இருந்து பயணிகளுடன் காங்கேயன்துறைக்குக் கப்பல் புறப்பட்டது. இன்று வரை தொய்வின்றிக் கப்பல் பயணிக்கிறது.
தேற்றம் ஈட்டும் தொழிலாக வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன.
இலங்கை அரசும் இந்திய அரசும் வருவாயைப் பெருக்கியுள்ளன.
இலங்கை மக்களும் இந்திய மக்களும் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் பயனைப் பெருக்குகிறார்கள்.
பயணிகளோடு பயணிகளாகக் குருவிகள் பொருள்களைக் கொண்டு வருகிறார்கள்.
2023 அக்டோபர் 10, நாகப்பட்டினம் வணிகர் சங்கத் தலைவராக இருந்த திரு சந்திரசேகரனைச் சந்தித்தேன். என்னை அழைத்துச் சென்றவர், நாகப்பட்டினம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னணியாளர் திரு தங்க கதிரவன்.
திரு சந்திரசேகரின் அறையில் சரக்கு கப்பலைத் தொடங்க வேண்டும் என அவரிடம் சொன்னேன்.
முன்னமே, தமிழக அரசின் தமிழ்நாடு கடல் சார் வாரிய மூத்த அலுவலர் கப்பித்தான் திரு அன்பரசன் அவர்களிடம் சரக்குக் கப்பல் தொடர்பாக நான் பேசிய பொழுது, அனைத்து வசதிகளையும் வாய்ப்புகளையும் உருவாக்க இந்திய மற்றும் தமிழக அரசு சார்பில் ஒத்துழைப்பதாகக் கூறியிருந்தார்.
திரு சந்திரசேகரனையும் திரு. தங்க கதிரவனையும் அழைத்துக் கொண்டு அக்காலத்தில் நாகப்பட்டினத்தில் தங்கி இருந்த திரு அன்பரசனிடம் சென்றோம். அங்கிருந்து நாகப்பட்டின ஆட்சியரிடம் சென்றோம். சரக்குக் கப்பலின் தேவைகளை இருவரிடமும் கூறி ஒப்புதல் பெற்றோம்.
ஆர்வமீதியால் திரு சந்திரசேகரனும் திரு தங்க கதிரவனும் நாகப்பட்டினத்தில் இருந்து 14 10 2023 புறப்பட்ட முதலாவது பயணிகள் கப்பலில் யாழ்ப்பாணத்திற்குப் பயணித்தனர்.
மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா முதலாக வணிகர் சங்கங்கள் ஊடாக வணிகர்கள் வரை பலரைச் சந்தித்தனர்.
நாகப்பட்டினமும் காங்கேயன்துறையும் 3-4 மீட்டர் ஆழமுள்ள துறைகள்.
சரக்குப் பெட்டகங்கள் இறக்க வசதி இல்லாத துறைகள்.
நாகப்பட்டினத்திற்கும் காங்கேயன்துறைக்கும் இடையே 300 தொன் சரக்குகளைக் கொண்டு செல்கின்ற தோணிகளையே ஓட விடலாம் என்பதைத் தெரிந்து கொண்ட திரு சந்திரசேகரன், தூத்துக்குடியில் இருந்தும் கடலூரில் இருந்தும் அத்தகைய தோணிகளைக் கொண்டு வர முயன்றார்.
அவரின் முயற்சிக்கு நானும் ஒத்துழைத்தேன் தொடர்புகளைக் கொடுத்தேன். உரியவர்களோடு பேசினேன்.
வட மாகாணத்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் பொருள்கள் கொழும்பு வழியே செல்கின்றன.
வட மாகாணத்துக்குத் தேவையான முதல் நிலை உற்பத்திப் பொருள்கள், கட்டடப் பொருள்கள், தொழில் உற்பத்திப் பொருள்கள், பல கொழும்பு வழியே இந்தியாவில் இருந்து வருகின்றன.
வட மாகாண வணிகருடன் திரு சந்திரசேகரன் பேசினார். நான் பேசினேன். கோண்டாவில் மேற்கு திரு சிறீந்திரன் பேசினார். வேறும் பலர் பேசினர்.
வட மாகாண வணிகர்களுக்கு ஆர்வம் இருந்தது ஆனால் மனத்தடைகள் இருந்தன.
கொழும்பிலிருந்து பல வசதிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுப் பொருள்களை வாங்கி வடமாகாணத்தில் விற்பனை செய்து வந்தவர்களுக்கு
(1) தாமே முதலிட்டு
(2) தாமே கிடங்குகள் அமைத்துப் பொருட்களைச் சேமித்து அவற்றைத்
(3) தாமே விற்பனை செய்ய வேண்டும் என்ற மூன்று நிலைகளையும் எதிர்கொள்ள ஆர்வம் இருக்கவில்லை.
ஒருமுறை எனது வேண்டுகோளை ஏற்ற மாண்புமிகு அமைச்சர் தேவானந்தா
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வணிகர்கள் வங்கியாளர் இந்திய தூதரகம் மற்றும் சார்ந்தவர்களை அழைத்துக் கூட்டமும் நடத்தினார்.
இந்த முயற்சி தோற்பதற்கான காரணங்கள் பலவற்றை எடுத்துக் கூறியோர் பலரே அங்கு இருந்தனர்.
சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற, வாய்ப்பாடு பிழைப்பான் நிலையை எடுக்கக்கூடிய ஓரிருவரே இருந்தனர்.
வங்கியாளரும் வழக்கம் போலத் தடங்கல்களுக்குரிய படிநிலைகளைக் கூறினரே அன்றி,
எச்சரிக்கைகளின் படிநிலைகளைக் கூறினரே அன்றி, வெற்றிக்குரிய படிநிலைகளைக் கூறவில்லை.
போரில் தோல்வியடைந்த வட மாகாணத்தின் மனோ நிலை மீண்டும் தோல்விகளையே சந்திக்காதிருக்கத் தடங்கல்களையே கருத்தாக்கியது.
தடைக்கற்களே படிக்கட்டு என்ற மனோநிலை உள்ளவர்கள் கூட்டத்தில் ஒரு சிலரே.
(1) வட மாகாண வணிகர்களின் எதிர்மறைச் சிந்தனைகள்,
(2) 3-4 மீட்டர் ஆழப் பயணச் சரக்குத் தோணிகளின் பற்றாக்குறை
இவை இரண்டும் திரு சந்திரசேகரின் அயரா முயற்சியையும் எனது விடாத தூண்டுதல்களையும்
கரைத்தன, காலத்தை கடத்தின.
ஆழமற்ற துறைகளுக்கு ஏற்பத் தோணிகளைப் புதிதாகக் கட்டலாமா என அதற்கான வரைபடங்களைத் தயாரிக்கவும் முதலீட்டாளரை ஈர்க்கவும் நாகப்பட்டினம் திரு சந்திரசேகரன் எடுத்த முயற்சிகளை நான் பாராட்ட வேண்டும்.
சரியாக ஓர் ஆண்டு காலத்துக்குப் பின்னர்
2024 அக்டோபரில் தோணிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புப் பெருகியது. கடலூர் மற்றும் அந்தமான் துறைகளில் உள்ள தோணிகளைக் கொண்டு வரலாம் என முயற்சியில் முன்னேற்றம் கண்டோம்.
வட மாகாண - இந்திய ஏற்றுமதிகளை காங்கேயன் துறை வழி அனுப்ப வேண்டும்.
கொழும்பு வழியாக முதல் நிலை உற்பத்திப் பொருள்கள் மூன்று நான்கு கைகள் மாறி வடக்கே வரும் பொழுது 40% வரை கூடிய விலையை நம் மக்கள் கொடுக்கின்றனர்.
மூன்று நான்கு கை மாறும் பொழுது வடக்கு வரும் பொழுதும் அதற்கான முதலீடு கொழும்பிலேயே. வடக்கில் அன்று.
முதலீடு இன்றியே பொருள்களை வாங்கி விற்ற பின் கடனை அடைத்துப் பழகிய வடக்கர்கள் முதலிட்டு இறக்கத் தயங்குகிறார்கள். வங்கிகளும் துணை நிற்கத் தயங்குகின்றன.
கிடங்குகளும் பற்றாக்குறையே.
சில்லறைப் பொதிகளாக வருகின்றவற்றை இறக்க ஆளணி, காங்கேயன்துறையில் இடைக்காலக் கிடங்குகள் - இவற்றால் தொடக்கத்தில் இழப்பாகுமோ என்ற அச்சம் வடக்கருக்கு.
எனினும் தடைகள் பல தாண்டிச் சரக்குக் கப்பல் சில வாரங்களின் பின் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேயன்துறைக்கு வருவது உறுதி.
முதலாவது தோணி
திரு இரகுநாத கோபாலாச்சாரியார்
+91 98457 11962
Ayya ship ready.
We proudly announces that 700-ton all-weather MS vessel, Tara Kiran, is set to commence its journey from Nagapattinam to Kankesanthurai (KKS) in the third week of February 2025.
All interested exporters and importers in Northern province Sri Lanka please contact me
Ragunath
இரண்டாவது தோனி
திரு வலதரிசர்
Valdaris
Shel Shipping and Logistics, Chennai.
+91 98940 29397
I am bringing Thoni from February 2nd week to KKS ex Nagapattinm.
If you or your friends have any cargo, just let me know.
Regards
Valdaris
இந்திய அரசும் தமிழக அரசும் நாகப்பட்டினத்தில் சரக்குக் கப்பல் தொடங்கக் கொடுக்கும் ஆதரவையும் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் வளர்ச்சியின் கூறுகளாகவே பார்க்கிறேன்.
இலங்கை அரசும் வட மாகாண அரசும் (அரசு சார்ந்த அலுவலர்கள்) பெரும்பாலான வளர்ச்சிச் செயல்திட்டங்களை எதிர்மறையாகவே பார்க்கிறார்கள், சிக்கல்கள் பல இருப்பதாகவே பார்க்கிறார்கள்.
காங்கேயன் துறைமுகத்தில் சரக்குக் கப்பல்கள் வந்திறங்குவதில் உள்ள
சிக்கல்களைத் தீர்க்க வேண்டும் என்ற கருத்துக்களை அரசு சார்ந்தோர் முன்வைக்காததால் வடக்கின் வளர்ச்சி பின்னடைவாகிறதே.
No comments:
Post a Comment