(வித்தியானந்தன் நூற்றாண்டு ஆண்டுக் கட்டுரை)
வியாசர் விருந்து, பாரதியார் கவிதைகள் எனத் தமிழ் நூல்களைத் தந்தையார் வாங்கித் தருவார். 12, 13 வயது மாணவனாக யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நான். அக்காலத்தில் தமிழர் சால்பு என்ற நூல் ஒன்றையும் தந்தையார் கொண்டு வந்தார்.
நீதிநூற்கொத்து வழியாக ஔவையாரை அறிந்தேன். திருக்குறள் வழி திருவள்ளுவரை அறிந்தேன். தமிழர் சால்பு நூல் வழியாகச் சங்கத் தமிழ்ப் புலவர்களுக்கு அறிமுகமானேன். தமிழர் சால்பு நூலை ஆக்கிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் எனக்கு அறிமுகமானார் 1955இல்.
இடையில் அவர் தொடர்பாகப் பல செய்திகளை இதழ்களில் படிப்பேன். மன்னாரில் மட்டக்களப்பில் நாட்டார் நாடகங்களை, கூத்துகளை அவர் ஊக்குவித்து வந்தார் எனச் செய்தித் தாள்களில் படிப்பேன்.
சென்னைப் பல்கலைக்கழக இளநிலை, முதுநிலைப் பட்டங்கள் பெறுவதற்காக நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்தேன்.
படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரி. தமிழர் சால்பு நூலில் பெற்ற அடித்தளமே பச்சையப்பன் கல்லூரியில் உதவியது.
பேராசிரியர் மு. வரதராசன் தொடக்கம் பெரும் பேராசிரியர்கள் அ. மு. பரமசிவானந்தம், அன்பு கணபதி, முருகேசன், சி. பாலசுப்பிரமணியன், பரமசிவன் ஆகியோரிடம் தமிழ் இலக்கிய மாணவனானேன். பேராசிரியர்கள் யோன்சன், வேங்கடகிருட்டினன் வழி ஆங்கில இலங்கியங்களைச் சுவைத்தேன்.
இலங்கை திரும்பிய பின்னர் பேராசிரியர் வித்தியானந்தன் பெயரைச் செய்தித்தாள்களில் அடிக்கடி காண்பேன். படித்து விவரம் அறிவேன்.
1968இல் சென்னை இரண்டாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நேரில் அவரையும் துணைவியாரையும் கண்டேன். தொலைவில் இருந்து பார்த்தேனே அன்றி நேரில் எனக்கு அறிமுகமாகவில்லை.
மு. தளையசிங்கம், மு பொன்னம்பலம், எஸ். பொன்னுத்துரை, சு. வித்தியானந்தன் ஆகியோரை நற்போக்கு இலக்கியலார் என்றன இதழ்கள். தினகரன் ஆசிரியர் க. கைலாசபதி, வானொலி புகழ் கா. சிவத்தம்பி, பிரேம்ஜி, இடானியல், டொமினிக் ஜீவா ஆகியோரை முற்போக்கு இலக்கியலார் என்றன இதழ்கள்.
கோட்பாடுகளின் திணிப்பால் பாலைவனம் ஆகிய முற்போக்குத் தமிழ் இலக்கியம் என முற்போக்காளரைச் சாடினர் நற்போக்காளர். அரைத்த மாவையே அரைக்கின்ற பிற்போக்காளர் என நற்போக்காளரைச் சாடினர் முற்போக்காளர்.
விபுலானந்த அடிகளாரிடமும் பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடமும் தமிழ் பயின்றவர் சு. வித்தியானந்தன். சு.வித்தியானந்தனின் மாணவரே க. கைலாசபதி, கா. சிவத்தம்பி இருவரும்.
சு. வித்தியானந்தன் அரசியலில் தமிழ்த் தேசியம் சார்ந்தும் தமிழரசுக் கட்சி சார்ந்தும் கருத்துகளை வெளியிடுவார். இடதுசாரிக் கோட்பாடுகளை முன்வைத்த இலக்கியப் பார்வை கைலாசபதிக்கும் சிவத்தம்பிக்கும்.
1971ஆம் ஆண்டு தேர்தலால் சிறீமாவோ தலைமையிலான இடதுசாரிச் சிந்தனை ஆட்சி, கொழும்பில். கைலாசபதி, சிவத்தம்பி, பிரேம்ஜி, இடானியல், இலட்சுமண ஐயர் யாவரும் அக்காலத்தில் ஸ்ரீமாவோ அரசை ஆதரித்தனர். அமைச்சரவையில் அஞ்சல் துறை அமைச்சராகத் தமிழர் குமாரசூரியர்.
நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்காக இலங்கை கிளையினர் நீதியரசர் எச். டபிள்யு. தம்பையா தலைமையில் கூடி ஆராய்ந்து வந்தனர். கொழும்பு பம்பலப்பிட்டி மிலாகிரியா அவனியூவில் கூட்டங்கள் நடைபெறும்.
அனைத்துலகத் தமிழராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையில் 1968 முதல் நானும் உறுப்பினர். என்னை உறுப்பினராகச் சேர்த்தவர் திருமதி புனிதம் திருச்செல்வம். இரண்டாம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிக்குப் பின்னர் உறுப்பினரானேன். எனினும் மிலாகிரிய அவெனியூக் கூட்ட நிகழ்ச்சிகளுக்கு நான் போவதில்லை.
1967 தொடக்கம் கொழும்பில் கடற்றொழில் ஆய்வு நிலையத்தில் அறிவியல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தேன். திரு. ஜேம்ஸ் இரத்தினம் எனக்கு அருமை நண்பர். ஒரு நாள் தொலைப்பேசியில் அழைத்தார். மிலாகிரிய அவென்யூக் கூட்டத்துக்கு வருமாறு அழைத்தார்.
நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நடத்துவதா? யாழ்ப்பாணத்தில் நடத்துவதா? இது தொடர்பாக வாக்கெடுப்பு நிகழ்வதாகக் கூறினார். கூட்டத்திற்குச் சென்றேன்.
அங்கு பேராசிரியர் சு. வித்தியானந்தன் இருந்தார். அப்பொழுதும் அவர் எனக்கு நேரடியாக அறிமுகம் இல்லை.
நீதியரசர் எச். டபிள்யு. தம்பையா தலைமையில் ஓரணி. கொழும்பில் நடத்துவதை ஆதரிக்கும் அணி. யாழ்ப்பாணத்தில் நடத்த வேண்டும் எனக் கருதுகின்ற மற்றோர் அணி. சு. வித்தியானந்தன் அந்த அணியில் இருந்தார். மிலாகிரிய அவென்யூ, பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபம் எனத் தொடர்ந்து இரண்டு மூன்று கூட்டங்கள்.
யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த முன்வராவிட்டால் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள், சரசுவதி மண்டபக் கூட்டத்தில் நீதியரசர் தம்பையாவிடம் நான் கேட்டேன். என்னுடைய கோரிக்கைக்குப் பலரின் ஆதரவு இருந்ததால் நீதியரசர் தம்பையா பதவி விலகினார். கொழும்பில் மாநாட்டை நடத்த வேண்டும் என அரசு சார்ந்தோர் (முனைவர் கோபாலபிள்ளை மகாதேவா தவிர்ந்த) அனைவரும் தம்பையாவோடு சேர்ந்து கொண்டார்கள். கூட்டங்களுக்கு வருவதைத் தவிர்த்துக் கொண்டார்கள்.
அடுத்து என்ன?
பேராசிரியர் சி. பத்மநாபனும் நானும் யாழ்ப்பாணத்தில் வடக்கே வளலாய் ஆச்சிரமத்துக்குச் சென்றோம். அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரிடம் கேட்டோம். அடுத்த தலைவராக யார்?
பேராசிரியர் சு. வித்தியானந்தனே அடுத்த தலைவர் என்றார் அடிகளார்.
கொள்ளுப்பிட்டியில் வழக்குரைஞர் அம்பலவாணர் இல்லத்தில் அடுத்த கூட்டம். அங்கே தலைவர் தெரிவு. அந்நாள் வரை பேராசிரியர் சு. வித்தியானந்தனுடன் நேரில் பேசியதாக எனக்கு நினைவே இல்லை. கொழும்பில் கூட்டங்களில் பார்த்திருக்கிறேன்.
பேராசிரியர் சி. பத்மநாதன் ஏற்கனவே அடிகளாரின் செய்தியைச் சு. வித்தியானந்தனிடம் தெரிவித்திருந்தார். கூட்டத்திற்கு வந்தவர்களுக்கும் அந்தச் செய்தியை நாங்கள் ஏற்கனவே பல்வேறு வழிகளில் சொல்லி இருந்தோம்.
வழக்குரைஞர் அம்பலவாணர் வீட்டு முன் மண்டபத் தூண்கள் ஒவ்வொன்றும் உருளை வடிவின. நான்கு அல்லது ஐந்து அடி சுற்றளவு உள்ளன. கூட்டம் தொடங்கும் முன்பு பேராசிரியர் வித்தியானந்தனை அன்புடன் அழைத்தேன். உருளைத் தூண்களில் ஒன்றின் மறைவிற்கு அழைத்துச் சென்றேன்.
அவர் தலைவராக வரக்கூடாது எனச் சிலர் அவரைப் பற்றி என்னிடம் கூறிய செய்திகளை அவரிடம் சொன்னேன். இன்னும் 4 - 5 மாதங்கள் தானே ஐயா. இந்தக் குறைகள் உங்களிடம் இருக்காது என்று எனக்குத் தெரியும். ஆனாலும் மற்றவர்களுக்காக இதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள் என்றேன்.
என் கண்களைப் பார்த்தார். கனிவோடு பார்த்தார். சரி என்றார்.
அடுத்த சில மாதங்கள் நானும் அவரும், இணை பிரியாது, கருத்தொத்து, சொல்லால், செயலால், இயல்பினால் ஒரு கணமேனும் முரண்படாது மாநாட்டுப் பணிகளில் ஈடுபட்டோம். யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய குழுவின் தலைவர் சு. வித்தியானந்தன்.
தலைவராய்ப் பொறாமை அற்ற பொறுமைசாலி.
தலைவராகி அன்பால் அரவணைப்பவர்.
தலைவரின் நெஞ்சுறுதி, அஞ்சாமை நிறைந்தவர்.
தலைவராதலால் இதனை இதனால் இவன் முடிக்கும் என முன்கூட்டியே திட்டமிடுபவர்.
தலைவராதலால் களைப்பின்றிப் பயணித்தவர். மடியற்ற சோர்விலர்.
தலைவருக்குரிய சாணக்கியரானவர். தலைவருக்குரிய வெல்லும் சொல் வேறு கேட்காச் சொல்வலர்.
அவருடன் பணியாற்றிய சில மாதங்களில் இவை யாவின் மறு உருவமாக அவரைக் கண்டேன்.
அவருடைய தலைமையால் 'அப்பி பலமு' வீறாப்புச் சொன்ன பாதுகாப்புத் துணை அமைச்சரே பணிந்தார். அருளம்பலம், தியாகராசா, குமாரசூரியர், துரையப்பா, கைலாசபதி, சிவத்தம்பி என ஆட்சி அதிகாரப் பின்னணி கொண்ட அனைவரும் வெட்கினர், விலகினர்.
தடைகளுக்கு மேல் தடை எனக் கொக்கரித்து ஓலமிட்டது சிறீமாவோ அரசு. மாநாடு தொடங்குவதற்கு முதல் நாள் தடையைத் தானாகவே முன்வந்து நீக்கியது. காரணம் பேராசிரியர் சு. வித்தியானந்தனின் தலைமையே.
மாநாடு தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் முகாமிடத் தொடங்கினேன். மாநாட்டுக் குழுவின் முகவராக யாழ்ப்பாண அலுவலகத்தை நடத்தினேன்.
பேராசிரியர் வித்தியானந்தன் கண்டியில் இருப்பார். கொழும்பில் இருப்பார். யாழ்ப்பாணத்தில் இருப்பார். எந்த நாள் எங்கு இருப்பார் எனச் சொல்ல முடியாதவாறு கடுமையாக உழைத்தார். சோர்வின்றிப் பயணித்தார்.
மாநாட்டுக் குழுக் கூட்டங்களில் பல்வேறு கருத்துகள் வரும். இவ்வாறே நடக்கும் என முடிவாகப் பேராசிரியர் வித்தியானந்தன் சொல்வார். குழுவினர் ஏற்றுக் கொள்வோம்.
அரசுத் தடைகளை மீறி யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்துவோம் என்ற உறுதியே, ஊசலற்ற ஈடாடா உறுதியே பேராசிரியர் வித்தியானந்தன். இந்த உறுதியே, இந்த விடாப்பிடியே, இந்தக் கடுமையே உணர்வுத் தமிழ் நெஞ்சங்களின் பூரிப்பு. தமிழ் இளைஞர் உள்ளங்களின் ஆர்ப்பரிப்பு. தமிழ்த் தேசிய மனங்களுக்கு மலர்ச்சி.
மாநாட்டு காலத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே யாழ்ப்பாணம் வந்துவிட்டேன். என்னைக் கண்டால் நெருப்பைக் கண்ட மாதிரி விலகினர் அரசு அலுவலர்கள்.
என்னைக் கண்டதுமே அண்ணனைக் கண்டது போல், தம்பியைக் கண்டது போல், தந்தையைக் கண்டது போல், நெருங்கிய உறவைக் கண்டது போல், சொந்தம் கொண்டாடின முன்பின் அறிமுகம் இல்லாத தமிழ் நெஞ்சங்கள். என்ன வேண்டுமானாலும் கேளுங்கள் வருகிறோம் தருகிறோம் என்றன அந்த நெஞ்சங்கள்.
நிதிப் பற்றாக் குறையில் இருந்த அலுவலகத்தில் இலட்சக்கணக்கான ரூபாய்களைக் கேட்காமலே கொண்டு வந்து குவித்த வணிகர்.
பருப்பு அரிசி என உணவுத் தட்டுப்பாட்டுக் காலம். அரசின் உரிமம் இல்லாது எடுத்துச் செல்ல முடியாத காலம். உரிமம் பெற அரசு அலுவலகங்களுக்குப் போனேன். என்னைப் பார்த்த உடனேயே எழுந்து விலகிச் சென்ற என் நண்பர்களால் அதிர்ந்தேன்.
அரிசியா? பருப்பா? என்ன வேண்டுமானாலும் தருவோம். அலையாதீர்கள் என முன்வந்த வேளாண் பெருமக்களின் நெஞ்சுக்குள் கனிவும் இனிமையும் பெருமையும் பொலிவும் இருந்தன.
மகிழுந்துகளைத் தந்தவர் பலர். மாநாட்டு ஊர்திகளை வடிவமைத்தவர் நூற்றுக்கணக்கானோர். தொண்டர்களாகியோர் யாவரும் 16 தொடக்கம் 25 வயதான இளைஞர் பட்டாளம். மாநாட்டுப் பேராளரை மகிழ்விப்போம் என வந்த கலைஞர் கூட்டம். கண்காட்சியில் எங்கள் அரிய தொன்மப் பொருள்களையும் வையுங்கள் என வரிசையாக வந்த வடகிழக்கு மக்கள். கண்காட்சியைக் காணக் காத்திருந்த நீண்ட வரிசை.
ஆராய்ச்சிக் களத்தில் வித்தியானந்தன். பேராளர்கள் வரவேற்பில் வித்தியானந்தன். தலைமை உரையை எழுதியதும் என்னிடம் காட்டினார். கருத்துச் சொன்னேன்.
கண்காட்சிக் களத்தில் வித்தியானந்தன். ஊர்திக் களத்தில், ஊர்வலக் களத்தில் வித்தியானந்தன். இசையில் நடனத்தில் நாட்டியத்தில் கூத்தில் வல்ல அவரே கலை நிகழ்ச்சிகளின் களத்தில்.
வீரசிங்கம் மண்டபத்தில் இறுதி நாள் இரவு மேடையில் வித்தியானந்தன். மக்களோடு மக்களாக, தொண்டர்களோடு தொண்டராக, கண்ணீர்ப் புகை மயக்கத்தில் வீழ்ந்து படுத்திருக்கிறார்.
இடுக்கட் பட்டிருக்கினும் இரந்து யாரையும் விடுக்கற் பிரான் என்று வினவுவோம் அல்லோம் என்ற மன உறுதி வித்தியானந்தனுக்கு. நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்ற நெஞ்சுறுதி அவருக்கு.
மாநாட்டுக் காலங்களில் வித்தியானந்தனும் துணைவியாரும் அவரின் மக்களும் என் மீது காட்டிய அன்பு, பாசம், நெருக்கம், நம்பிக்கை அளவிட முடியாதன.
நான் கொழும்பு சென்றேன். பணிக்குச் சென்றேன். கொழும்புக்கு வரும் பொழுது கிருலப்பனையில் என் வீட்டுக்கு வித்தியானந்தன் வருவார். துணைவியாரோடும் மக்களோடும் வருவார்.
மாநாட்டில் என் பங்களிப்பு பற்றி அவரே தாமாகப் பாராட்டுக் கடிதம் ஒன்றை எழுதினார். தன் கைப்பட எழுதினார். தந்தார்.
1977இல் பதினொன்றரை ஆண்டு கால அரசுப் பணியை ஒரே நாளில் துறந்தேன்; ஓய்வூதியத்தை மறந்தேன். வெறும் கையோடு யாழ்ப்பாணம் வந்தேன். ஓய்வூதியம், சலுகைகள், சமூக நிலை என்பன சார்ந்த அரசு பதவியை நான் துறந்ததில் என் இல்லத்தவர்க்கு உடன்பாடு இல்லை.
வருவாய்க்காகக் கைக்கடிகார வணிகம், அச்சு வணிகம், தமிழ்நூல் பதிப்பு வணிகம் பார்த்துக் கொண்டிருந்தேன், தந்தையாரோடு சேர்ந்து.
அக்காலத்தில் வித்தியானந்தன் என் வீடு தேடி வந்தார். அப்பொழுது அவர் துணை வேந்தர். பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேருமாறு வலியுறுத்தினார். விலங்கியல் துறையில் வெற்றிடம் வருகின்றது, விண்ணப்பியுங்கள் என்றார்.
விண்ணப்பித்தேன். இந்தியப் பட்டதாரி நான். இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இலங்கைப் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை. நேர்முகத் தேர்வில் என்னைத் தேர்ந்தெடுக்க மறுத்தனர்.
மீண்டும் விண்ணப்பிக்குமாறு வித்தியானந்தன் சொன்னார். அடுத்த நேர்முகத் தேர்வுக்கு வித்தியோதயப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீரக்கோன் வந்திருந்தார்.
சச்சிதானந்தன் விலகியதால் கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்துக்கு இழப்பு. ஈடாக்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவரைச் சேருங்கள் என்றார் தெரிவுக் குழுவிடம் வீரக்கோன்.
1977 இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தேன். செங்கடல் நாடுகளில் ஐநா ஆலோசகர் பணி ஏற்று, 1979 நடுப்பகுதியில் பல்கலைக்கழகப் பணியிலிருந்து விலகினேன்.
பல்கலைக்கழகப் பணிக்காலத்தில் தேசிய அறிவியல் கழக புலமை நிதித் தொகை பெற்றேன். முதுநிலை ஆய்வு மாணவிக்கு வழிகாட்டினேன். பின்னாளில் அம்மாணவியே விலங்கியற் துறைத் தலைவரானார். எனக்கு மகிழ்ச்சி. என் மீது வித்தியானந்தன் வைத்திருந்த நம்பிக்கையை நான் வீணாக்கவில்லை. வித்தியானந்தனு
நினைவுகளை மீட்டு எழுத ஊக்கிய பேராசிரியர் சு. வித்தியானந்தன் நூற்றாண்டு நினைவுக் குழுவினருக்கு நன்றி.
No comments:
Post a Comment