Wednesday, December 14, 2022

கலை உணர்வு எனக்கு

 கலை உணர்வு?


உள்ள உணர்வின் புற உரு. 

உள்ள ஒடுக்கத்தின்  திறன் நிலை.

உள்ள வெள்ளத்தின் வடிகால்.

புறத்தே கலை அகத்தே அழகு.

புறத்தே கலை அகத்தில் நிறைவு.


கேட்க இனிக்கும் இசைக் கலை

காண இனிக்கும் ஓவிய நடன நாடகக் கலை

உண்ணச் சுவைக்கும் அடுக்களைக் கலை

முகர நிறைக்கும் மலர்க் கலை

மெய்விதிர் விதிர்க்கும் பேரின்பச் சிற்றின்பக் கலை.


ஐம்புலன்களுக்கு விருந்தாகும் 

ஐம்பொறிகளுக்கு அயராப் பணியாகும் 

பயின்று புறந்தருதல் கலைஞர் கடனே

உயிராய் மயங்குதல் சுவைஞர் திறனே

உள்ளம் வெள்ளமாய் கலையே பள்ளமாய்


சுவைஞர் உள்ளத்தை இளக்கும்

சுவைஞர் மகிழ்ச்சியில் திளைப்பர்

உடைந்த உள்ளத்தில் மடைதிற மகிழ்ச்சி 

இறுகிய உள்ளம் இளகி இனிக்கும் 

குறுகிய உள்ளம் பரந்து விரிக்கும்


இவை தெரிந்தவர் என் தந்தைதாயர்

பண்ணோடு இசைசேர் பள்ளிக்கு அனுப்பினர்

என் குரல்நாண் குழைய மறுத்தது

என் இடைமென்சவ்வு இயங்கப் பிழைத்தது

இசைக்க முயன்றேன் கையைப் பிசைந்தேன்


உள்ளம் கைகளைத் தட்ட முயன்றேன்

தாளம் கேட்டது வேகம் பிழைத்தது

ஒழுங்கு பிழைக்க விழுந்தது சுடுசொல்

நீண்ட முயற்சியில் ஆதி தாளம்

எட்டு முறையாய்த் தட்டிப் பழகினேன்


திருக்கோ யிலினிலே வெண்சங்கு ஊதினேன்

சேமக் கலத்தை ஒழுங்கறத் தட்டினேன்

இறந்தோர் உடல்முன் சேர்ந்து பாடினேன்

பாட்டுக் காரரும் என்னைப் பழித்தனர்

தேவா ரங்கள் மனப்பாடம் ஆயின


வடக்கு வீதிக்கு எழுந்தருளிச் சுற்றுலா

மடக்குவர் ஊர்வலம் தொடக்குக குழலிசை

அடிக்குக மேளம் என்றதும் நகுமோமு 

கேட்டோர் கிறங்கினர் கிறக்கம் தொற்றுநோய்

தாளத்தில் கைகள் அசைத்தலில் தலைகள்


எப்படிப் பாடினரோ எங்கோ கேட்டது

அப்படிக் குழலில் ஊதி இசைக்க

மேளமும் தாளமும் இயைந்து ஒலிக்க 

கேட்ட பாடலைக் குழலில் கேட்டதும் 

நாட்டம் வந்தது கலையைச் சுவைக்க


நகுமோமு என்றோ ஆபேரியில் என்றோ

ஆதிதாளம் என்றோ அன்று அறியேன்

அறியாமலே அசைத்தேன் தலையைக் கிறங்கி

வடக்கு வீதியில் தொடங்கிய கிறக்கம் 

முடக்கம் இன்றி இன்றுவரை தொடர..


இந்துக் கல்லூரி விளையாட்டுத் திடல்

இலலிதா பத்மினி இராகினி நடனம்

பார்த்தேன் பரதத்தை அன்றே முதலில்

எதுவும் புரியவில்லை அலங்காரம் தவிர

ஆனாலும் அடிக்கடி ஆரவாரம் கைதட்டல்


கோடைப் புழுக்கமும் சோழகக் காற்றும்

மறவன் புலவில் வயலின் வரப்பில் 

வெள்ளை மணலில் முழு நிலவில் 

சிந்தை அறிந்து வாடி பாடுவர்

கணேச ஐயர் சுவைப்பேன் கேட்பேன் 


அருந்தும் சுவையாய் அடிக்கடி கேட்பேன் 

பிருந்தா வனமும் நந்த குமாரனும்

நகுமோமு மெட்டும் நந்த குமாரனும்

ஆழப் புதைந்ததால் அடிக்கடி முனகுவேன்

இசையின் சுவையும் இயைந்தது என்னுடன்


No comments: