Sunday, July 24, 2022

தென்னாவரம் Dondra Head

 தென்னாவரம் எனும் தொண்டீச்சரம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருக்கோணேச்சரம், திருக்கேதீச்சரம், முன்னேச்சரம், தொண்டீச்சரம், நகுலேச்சரம் ஆய சிவன் கோயில்கள் இராவணன் காலத்துக்கும் முந்தையன. இதனாலன்றோ இலங்கையைச் சிவபூமி என்பார் திருமந் திரத்தில் திருமூலர்.

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்

சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ

டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே. (தி10913010)

இலங்கையின் மறு பெயர் நாக நாடு. நாகர் வாழும் நாடு நாக நாடு. தமிழர்களே ஆதி நாகர்கள். அம்மெய்யன் நாகனார், இளநாகனார், இனி சந்த நாகனார், எழுவுப்பன்றி நாகனார், நன்னாகனார், பொன்னாகன், வெண்ணாகனார், முப்பேர் நாகனார், முரஞ்சியூர் முடிநாகரையனார், விரிச்சியூர் நன்னாகனார், வெள்ளைக்குடி நாகனார் போன்ற பெயர்களைக் கொண்டவர். சிவ வழிபாட்டினர்.

நாக மன்னனும் தென்னாவரமும்

திருவள்ளுவருக்கு முன் 600இல் வாழ்ந்த சிவ நாகன் மூத்தவன், நாகநாட்டின் அரசன். திருக்கேதீச்சரமும் திருக்கோணேச்சரமும் இவனின் வழிபடு கோயில்கள். தவ நாகன் இரண்டாமவன் களனி நாட்டின் அரசன். முன்னேச்சரமும் சிவனொளி பாதமலையும் இவனது வழிபடு கோயில்கள். மால நாகன் இளையவன் உரோகணத்து அரசன். தென்னாவரம் என்ற தொண்டீச்சரமும் கதிர்காமமும் இவனின் வழிபடு கோயில்கள்.

இளவரசர்களாக இருந்த காலத்தில் சிவ நாகனும் தவ நாகனும் உரோகணம் சென்றனர். கதிர்காமத்தில் தைப்பூச நாளில் காவடி ஆடினர். மாணிக்க நதிக் கரையில் இயக்கவள்ளி, இயக்கமணி என உடன்பிறப்புகளான இரு அழகான பெண்களைக் கண்டனர். சிவ நாகனுக்கு மனைவியானாள் இயக்கிவள்ளி. தவ நாகனுக்கு மனைவியானாள் இயக்கிமணி.

உரோகணத்தில் இருந்து திரும்பும் வழியில் குவையாக இரத்தினங்களைப் பரிசளித்தான் மால நாகன். அவ் இர்த்தினக் கற்களை இழைத்துத் தங்க அரியணை இனக்குவித்தான் சிவ நாகன்.

இந்தத் தங்க அரியணையே சிவ நாகனின் மகன் மகா நாகன் (மகாவமிசம் கூறும் மகோதரன்) வைத்திருந்தான். மகா நாகனின் தங்கை மகன் குல நாகன் (குலோதரன் என மாகாவமிசம் கூறும்) விரும்பினான். அதற்காப் போர் நடந்த நிகழ்ச்சியை முதலில் கூறியது சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலை, பின்னர் கூறியது மகாவமிசம்.

வீரராகவனும் தென்னாவரமும்

மதுரையைச் சேர்ந்தவன் வீரவராயன் செட்டியார். இலங்கைக்கு அடிக்கடி வரும் வெண்கலப் பொருள் வணிகன். திருவள்ளுவருக்குப் பின் 278இல் தன் வீரர்களுடன் மாதோட்டத் துறைமுகத்துள் வந்திறங்கினான். திருக்கேதீச்சரம் சென்றான். பாலாவியில் நீராடினான். கௌரியம்பாள் உடனுறை திருக்கேதீச்சர நாதரை வழிபட்டனர். 

மருதமடு வந்தனர் அடியார் திருக்கூட்டமாக. மதுரைப் புகழ் கண்ணகிக்கு கோயில் கயவாகு கட்டியிருந்தான். வழிபட்டனர்.

வணிகத்துக்காக அநுராதபுரத்தை நோக்கிப் பயணமாயினர். ஏராளமான வெண்கலச் சட்டிகள், கலைப் பொருள்களை விற்றனர்.

அவனும் வீரர்களும் தங்கிய ஊரே இன்றைய வெண்கலச் செட்டிகுளம். சிவனின் அடியவனான வீரவராயன் செட்டியார், திபி. 320இல் வௌவாலையில் குளம் தோண்டிக் கேணியாக்கினான். அருகே சிவன் கோயில் கட்டினான்.

தெற்கே உரோகணத்துச் தென்னாவரம் தொண்டீச்சரர் கோயில் அடியவனாதலால் வௌவாலைச் சிவன் கோயிலுக்கும் சந்திரசேக ரீச்சரம் எனப் பெயரிட்டு வழிபட்டு வந்தான்.

பல்லவரும் தென்னாவரமும்

பல்லவன் நரசிம்ம வர்மன், இலங்கையின் தென்முனையில் தொண்டீச்சரம் என்ற தென்னாவரம் கோயிலை தமிழகத்தில் தான் அமைத்த மாமல்லபுரம் சிற்பப் பாணியில் மீளக் கட்டினான்.

மாமல்லபுரம் போன்ற சிற்பக் கலையுடன் பல்லவன் சிம்ம விட்டுணு காலத்திலும் நரசிம்ம வர்மன் காலத்திலும் கட்டுவித்த திருக்கோயில் தென்னாவரம்.

சோழரும் தென்னாவரமும்

விசயாலயன் தொடங்கிய சோழ மீழெழுச்சி வரலாற்றில் அவன் பரம்பரையினர் எவரும் இலங்கைக்கு வரவில்லை. 

அந்தப் பரம்பரையின் முதலாவது இலங்கைப் பயணி இராசாதிராசன்.

திருப்பதிகம் பாடப்பெற்ற திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் மற்றும் இலங்கையில் உள்ள முன்னேச்சரம், தென்னாவரமான தொண்டீச்சரம், கதிர்காமம், சனநாதமங்கல வானவன்மாதேச்சரம், கந்தளாய் இராசராசேச்சரம், இரவிகுலமாணிக்கேச்சரம், உத்தம சோழீச்சரம், விக்கிரமசீலமேகவீச்சரம் ஆகிய திருக்கோயில்களில் வழிபட விரும்பியவன் இராசாதிராசன். முதலாம் இராசேந்திரனின் மூத்த மகன்.

யாழ்ப்பாண அரசும் தென்னாவரமும்

கிரேக்கப் பயணி கொசுமாசு இந்திக்கோபிளியுத்தசு திபி. 600 ஆண்டளவில் தென்னாவரம் வந்தார். யாழ்ப்பாண மன்னரின் ஆட்சியில் தென்னாவரம் இருந்ததைத் குறிப்பிடுகிறார். (6th century Greek merchant Cosmas Indicopleustes)

சேனனும் தென்னாவரமும்

மாணிக்கவாசகர் காலத்தில் முதலாம் சேனன் ஆட்சியில் சந்தனத் திருமால் சிலாவடிவம் தென்னாவரம் கோயிலுக்கு வந்து சேர்ந்ததைக் கேகாலை மாவட்ட ஓலை ஏடுகளில் கண்டறிந்தவர் அரிசர் (Harry Charles Purvis Bell).

பாண்டியரின் இலங்கை மன்னர் காலத் தென்னாவரம்

பாண்டியர் வழிவந்த தமிழ்ச் சைவ அரசர்களான இரண்டாம் பராக்கிரமபாகு, ஆறாம் பராக்கிரமபாகு, யாவரும் இத் திருக்கோயிலைப் போற்றினர், வழிபட்டனர்,

பின்னர் வந்த ஆறாம் விசயபாகு, ஏழாம் விசயபாகு, சீனப் பயணி செங்கோ திருப்பணி செய்தனர். நிவந்தங்கள், பரிசுகள் வழங்கினர்.

நான்காம் பராக்கிரமபாகுவின் அரசவைப் புலவர் போசராசர். தென்னாவரத்தவர். சரசுவதி மாலை என்ற நூலைத் தமிழில் பின் சிங்களத்தில் எழுதி அரசவையில் அரங்கேற்றினார். தென்னாவரத்தில் இவருக்குப் பெருந்தோட்டம் பரிசு.

ஆறாம் பராக்கிராமபாகு காலத்தில் அரசவையில் தமிழ்ப் புலவர் நல்லுருத்தினார். தென்னாவரம் அவரது ஊர். புராண நாமாவழிய என்ற சிங்கள நூலை எழுதினார். புலவருக்குத் தன் மகளைத் திருமணம் செய்தவித்தார் ஆறாம் பராக்கிரமபாகு.

இவன் பற்றுற்றாவும் தென்னாவரமும்

திருவள்ளுவருக்குப் பின் 1375இல் புத்தளத்தில் காற்றுத் தள்ளக் கரையிறங்கியவர் இவன் பற்றுற்றா (Ibn Batuta). இவர் மொரொக்கோ நாட்டுப் பயணி. 

புத்தளத்தில் முத்துக் குளிப்புக்காக முகாமிட்டிருந்த வரோதைய சிங்கை ஆரியச் சக்கரவர்த்தியைச் சந்தித்தார். பாரசீக மொழியில் இருவரும் உரையாடினர். 

தெற்கே தென்னாவரம் என்ற தொண்டடீச்சரம் கோயில், மலைகளுள் சிவனொளிபாதமலை யாவையும் காண விழைந்தார் இவன் பற்றுற்றா. அரசக் கணையாழி ஒன்றைக் கொடுத்தான் வரோதையன். அதுவே கடவுச் சீட்டாயிற்று. மல்லன் ஒருவனையும் துணைக்கு அனுப்பினான்.

தொண்டீச்சரம் சென்ற  இவன் பற்றுற்றா அங்கே இந்திர விழா நடைபெற்றதையும் ஓராயிரம் மகளிர் விழாவில் நாட்டியமாடியதைக் கண்டதாகவும் தன் பயணக்குறிப்புகளில் எழுதினார்.  

நூற்றுக்கும் கூடுதலான கப்பல்கள், முத்து, பவளம், யானைத் தந்தம், ஏலம், கறுவா, கராம்பு, மிளகு, நெய்த பட்டு, கலைப் பொருள்கள் யாவையும் ஏற்றிக்கொண்டு புத்தளம் துறைமுகத்தில் பாய்விரித்தன. அரபுக் கடல் நோக்கின. இவ்வணிகத்தின் உடைமையாளர் ஆரியச் சக்கரவர்த்தி என இவன் பற்றுற்றா தன் பயண நூலில் எழுதுகிறார்.

சீனரும் தென்னாவரமும்

திருவள்ளுவருக்குப் பின் 1445இல் சீன அரசின் சார்பாளர் செங்கோ தென்னாவரம் வந்தார். பொன், மணி, முத்து, பட்டு என, விலையுயர்ந்த சீனப் பொருள்களைக் கோயிலுக்கு அன்பளித்தார். சீன, பாரசீக, தமிழ் மொழிகளில் கல்வெட்டுப் பொறித்தார். தென்னவராய நாயனார் எனச் சந்திரசேகரரைக் கல்வெட்டில் குறித்தார். இம் மும்மொழிக் கல்வெட்டு இன்றும் கொழும்பு அருங்காட்சியகத்தில் உண்டு.

தொன்மைக்குத் தொன்மை

தென்னாவரம் திருக்கோயில் கொண்ட இலங்கை முழுவதும் சிவபூமி. மன்னார், மாதோட்டம், திருக்கேதீச்சரம் போன்றே சந்திரசேகரீச்சரமும் பழமையான திருக்கோயில். இலங்கையின் தென் முனையில் அமைந்தது. புனிதமான தொன்மையான பஞ்ச ஈச்சரங்களுள் ஒன்று.

திருவள்ளுவர் காலத்தைய கிரேக்கக் குறிப்புகள், பல்லவர் பங்களிப்புடன் திருப்பணி, தொடர்ச்சியாகத் தெற்கத்தைய அரசர்களின் நிவந்தங்கள், தென்னாவரம் திருக்கோயிலின் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் அடித்தளம்.

சைவரான நாகர், பல்லவர், சேரர், சோழர், பாண்டிய அரசர், புத்தரான சிங்களர், சீனர் எனப் பல தலைமுறைகளுக்கு ஊடாகப் போற்றிப் பரவிய வரலாற்றுக்கு முந்தைய காலச் சைவக் கோயில் தென்னாவரம்.

போர்த்துக்கேயரும் தென்னாவரமும்

தெற்கே தொண்டீச்சரம் என்ற தென்னாவரம் சிவன்கோயிலை, திருவள்ளுவருக்குப் பின் 1619 மாசியில் முற்றாகத் தகர்த்தனர். இடித்துத் தள்ளிய கத்தோலிக்கன், தளபதி தோமை சொயிசா என்ற போர்த்துக்கேயன்.

ஈவிரக்கமின்றி, வரலாற்றுக் கண்ணோட்டமின்றிக் காட்டுமிராண்டியாய்க் கத்தோலிக்கத் தளபதி தோமை சொயிசா இடித்துத் தள்ளினான். 

சைவரும் புத்தரும் கண்ணீர் வடித்தனர். அக்கோயில் இருந்த இடத்தில் கிருத்தவ உலூசியா தேவாலயம் ஒன்றைக் கட்டினர்.

இன்று வரை தென்னாவரம் சிவன் கோயிலை மீளமைக்கவில்லை. தென்னாவரம் சிவன்கோயில் திருப்பணிச் சங்கம் அமைத்துத் திருக்கோயிலை மீள அமைப்போமாக. பாண்டியரும் பல்லவரும் சோழரும் ஈழத்தவரும் சிங்களவரும் திருப்பணிகள் செய்து நிவந்தங்கள் வழங்கிப் பராமரித்து வழிபட்ட சிவன்கோயிலை மீளமைப்பது சைவர் கடனாகும்.

 

No comments: