பட்டுத் தெளியட்டும்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
“இஞ்சேரும்… நான் வந்திட்டன்…. இஞ்சேரும்..”
ஈருருளி மணியை அடித்து அழைத்தார், பண்டிதர் சிங்கராயர்.
வழமையாக மணி கேட்டவுடன் கணவரைப் புன்னகை வீசி வரவேற்பவர் சிந்தியா. சில நாள்களாகவே சிந்தியாவின் போக்கில் ஒரு மாற்றம்.
நண்பகல் உணவுக்கு வருபவர் படலையில் நின்று மணியடிப்பார். சிந்தியா சிரித்த முகத்துடன் வருவார். சில நாள்களாக அவள் வருவதில்லை.
“இஞ்சேரும்… இஞ்சேரும்” என்று கூப்பிட்டாலும் வருவதில்லை. மணி அடித்தாலும் வருவதில்லை.
ஈருருளியை மதிலோடு சாய்த்தார். காலைக் கழுவினார். வாயில் வழி முன்னறைக்குள் புகுந்தார்.
“இஞ்சேரும்… இஞ்சேரும்…” என்று கூப்பிட்டாj.
“ஓ.. வாறன்..” அடுப்படிப் பின் படிக்கட்டில் குந்தி இருந்தவாறே சிந்தியா குரல் கொடுத்தாள். ஆனால் வரவில்லை.
இவர் அவளிடம் போனார். வானத்தை வெறுத்துப் பார்த்தவாறு சிந்தியா
இருந்தாள். இவர் போனதைக் கவனிக்காத மாதிரியே இருந்தாள்.
“இஞ்சேரும்…” இவர் அழைத்தார்.
சிந்தியா முகத்தைத் திருப்பினாள். கணவரைப் பார்த்தாள். வெறுப்பும் அருவருப்பும் முகத்தில் கொப்பளித்தன. அவள் பேசவில்லை.
“சாப்பாட்டை எடுமன்… சாப்பிட்டுட்டுப் போவேணுமல்லே…”
“போங்கோ வாறன்..” சிந்தியாவின் குரலில் கடுப்புத் தொனித்தது.
மேசையில் இருந்த பொருள்களை ஒதுக்கினார். கதிரையை இழுத்துப் போட்டார். இருந்தார்.
தட்டில் சோறு. மேலே உறைப்புக் குழம்பு. கொஞ்சம் பொரியல். வைத்த சிந்தியா மீண்டும் அடுப்படிப் பின் படிக்கட்டுக்குக் குந்தப் போனாள்.
சாப்பிடும்போது விக்கலெடுக்கத் தண்ணீர கேட்டார். சிந்தியா வரவில்லை. தானே போய்த் தண்ணீர் வார்த்துக் குடித்தார். சாப்பிட்டு முடிந்ததும் முன் விறாந்தைக் கதிரையில் சாய்ந்தார் சிங்கராயர்.
கண் அயரமுன் எழுந்தார். “இஞ்சேரும்… நான் வாறன்…” என்றார்.
சிந்தியாவிடமிருந்து பதிலே வரவில்லை. “நான் போட்டு வாறனப்பா..” சொன்னவர் ஈருருளியை எடுத்துப் படலை வழி பள்ளிக்குப் பயணமானார்.
“ஒருவேளை அவளுக்குத் தெரிஞ்சு போச்சோ….” நினைத்தவாறே ஈருருளியை ஓட்டினார்.
கொஞ்ச நேரத்தில் படலையைத் திறந்து வீட்டுக்கு உள்ளே வந்தவள் சரிக்கா. சிங்கராயரின் அக்கா. நேரே சமையலறை போனாள்.சிந்தியாவைப் பார்த்தாள். “மச்சாள் விட்டுக் கொடுக்காதேங்கோ…. உவன் தம்பிக்குப் பாடம் படிப்பிக்கவேணும். உப்பிடியும் செய்யிறதோ?”
சிந்தியா சலனமற்ற முகத்துடன் சரிக்காவைப் பார்த்தாள். பதிலேதும் சொல்லவில்லை.
“இரண்டு முருங்கைக்காய் ஆய வந்தனான்…” எனச் சமையலறைக்குப் பின்பக்கம் போன சரிக்கா, பின்வளவுப் பொட்டுக்குள்ளாலை அடுத்த வீட்டுக்குப் போனாள்.
கொஞ்ச நேரம் கழித்து அதே பொட்டுக்குள்ளாலை வந்தவள் பிரியா. சிங்கராயரின் தங்கை.
கிணற்றடியில் குந்தி இருந்து கிடுகு பின்னிக் கொண்டிருந்த சிந்தியாவைக் கண்டாள். “மச்சாள்… நீங்கள் கடுமையான உழைப்பாளி. எந்த நேரமும் ஏதோ ஒண்டிலை இருப்பியள்..”
சிந்தியாவின் முகத்தில் ஒரு கீற்றுப் புன்னகை. மீண்டும் அதே வாட்டம்.
“மச்சாள் யோசிக்கிறியள்.. யோசியாதேங்கோ… அண்ணரைத் திருத்ததவேணும்… அது உங்களாலை முடியும்… ஆனா எதுக்கும் விட்டுக் கொடுக்காதேயுங்கோ….. உவருக்குப் பாடம் படிப்பிக்கவேணும்…” பிரியா சொன்னாள்.
பள்ளிக்குப் போன சிங்கராயர், பத்தாம் வகுப்புக்குப் படிப்பித்து முடித்ததும் அறைக்கு வந்தார். தண்ணீர் குடித்தார். கதிரையில் இருக்கப் போனவர், மாணவி ஒருத்தி வந்ததைக் கண்டார். “என்ன பிள்ளை…?” எனக் கேட்டார்.
“சின்மயி ஆசிரியை வெளியாலை நிக்கிறா…, நீங்கள் இருக்கிறியளோ.. எண்டு பாத்து வரச் சொன்னவ…” மாணவி சொன்னாள்.
“சரி வாறன் எண்டு சொல்லும்… போம்…” என்றார் சிங்கராயர்.
சிங்கராயர் வெளியே வந்தார். பெயரைப் போல உயரம் குறைந்தவள், மேனியோ பொன் மஞ்சள். “என்ன… எப்படி…?” சின்மயியிடம் கேட்டார்.
“பின்னேரம் வாறியளே… ஏதும் வேலையோ…” சின்மயி கேட்டாள்.
“சரி போம் வாறன்…” சிங்கராயர் சொன்னார்.
சின்மயியும் சிங்கராயரும் குலாவும் செய்தி காதுக்கெட்டிய பின்னரேயே சிந்தியாவின் அன்புப் போக்கு சிங்கராயர் மீது அக்கினிப் போக்காக மாறியது.
சிந்தியாவுக்காகச் சிங்கராயர் வைத்திருந்த அட்டியல் சின்மயியின் கழுத்துக்குப் போனதைச் சிந்தியா தெரிந்ததும் “ஆ…. அட்டியல் தானே.. அவர் போகவில்லையே, என்னோடேயே இருக்கிறார்”. சிந்தியா கண்டுகொள்ளவில்லை.
சிங்கராயருக்கும் சிந்தியாவுக்கும் ஒரே மகள் அமிழ்து. திருமணத்தின்போது சீதனமாகக் கொடுப்பதாகச் சொன்ன காணியைக் கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் சிங்கராயர். அவருக்குக் கொடுக்க மனமில்லை.
சிந்தியா பலமுறை சொல்லிவிட்டாள். அமிழ்துவுக்குரியதை அமிழ்துக்குக் கொடுத்திடுங்கோ. “ஓம்.. ஓம்” என்று சொல்லுறதோடை சரி. சிங்கராயர் இழுத்தடித்தார்.
மகளுக்கும் தாய்க்கும் தொப்புள் கொடி உறவு. பாசம் என்ற பாசம். ஒருமுறை அமிழ்துக்கும் கணவன் கரனுக்கும் இடையே ஏதோ சிக்கல். சிந்தியா போய் கரனைப் பேசிப்போட்டாள். அதற்குப் பிறகு அமிழ்துக்குத் தாயோடை பிடிப்புக் குறைந்தது. கரனும் கொஞ்சம் கோவக்காரன்.
‘சீதனக் காணியை அப்பா தராவிட்டாலும் அம்மா வாங்கித் தந்திருக்க வேண்டாமா’ என்ற சினமும் அமிழ்துவுக்கு.
சின்மயியும் சிங்கராயரை விடுவதாயில்லை. சிந்தியாவும் செய்வதறியாது திகைத்திருந்தாள்.
இந்த நேரத்தில் சிங்கராயருக்கு நெஞ்சுவலி வந்தது. மருத்துவர்களும் கைவிட்டு விடுவார்களோ என்ற நேரம்.
இதுதான் சாட்டு என்று சின்மயி மாயமானாள். வேறு பள்ளிக்கு மாற்றலாய்ப் போனாளாம்.
சிங்கராயருக்குச் சிந்தியாவை விட்டால் வேறு யாரும் இல்லை. அக்காள் சரிக்கா, தங்கை பிரியா இருவரும் சிந்தியா பக்கம்.
மனிதாபிமானத்துடன் சிந்தியா நடந்துகொண்டாள். தேவையான மருத்துவம் செய்வித்தாள். தேவையான சத்துணவு கொடுத்தாள். இரவெல்லாம் கண்விழித்துச் சிங்கராயரைப் பார்த்தாள். ஆனாலும் சிந்தியாவின் மனத்தில் சிங்கராயர் மீதான அருவருப்புக் குறையவில்லை.
“அப்பாவுக்கு ஏதும் ஆகமுன் சீதனக் காணியை எழுதித் தாங்கோ” என அமிழ்து அம்மாவை நெருக்கினாள்.
‘பனையாலை ஏறி விழுந்தவன். மாடாக ஏறி மிதிக்கலாமோ?’ இதுவே சிந்தியாவின் கண்ணோட்டம். “இவ்வளவு நாளும் பொறுத்தனி இன்னும் கொஞ்ச நாள் பொறு….” அமிழ்துவிடம் சிந்தியா கூறினாள்.
சிங்கராயருக்கு சேடம் இழுக்கும் காலம் வரலாம் என மருத்துவர்கள் சொன்னதையும் சிந்தியா கவனத்தில் கொண்டாள்.
‘தேற வேண்டும், நோயிலிருந்து மீள வேண்டும். நடமாட வேண்டும்’ என்பது சிந்தியாவின் விருப்பம்.
‘உந்தாளை நம்பேலாது. அமிழ்துக்குக் காணியும் எழுத மாட்டார். சின்மயியை நாடாமல் இருக்கவும் மாட்டார்’. சிந்தியாவின் ஆழ் மனது எச்சரித்தது.
‘அட்டியலைச் சின்மயிக்குக் கொடுத்தது போலக் காப்புகளைக் கொடுத்தாலும் கொடுக்கக் கூடியவர் கணவர்’. சிந்தியாவின் எண்ண ஓட்டம்.
‘கண்கண்ட தெய்வமான கணவன் பிழைக்கவும் வேண்டும். தாலிப் பாக்கியம் தொடரவேண்டும். கண்டகண்ட சின்மயிகளோடு போகவும் கூடாது.
‘அமிழ்துவுக்கு என்னோடே அவ்வளவு பிடிப்பில்லை. அவள் என்ரை தொப்புள் கொடி. அவளுக்குத் தாற எண்ட சீதனக் காணியை எழுதிக் கொடுக்கவேண்டும்.’
(சிங்கராயர் = சிங்களவர், அமிழ்து = தமிழர், சிந்தியா = இந்தியா,
சின்மயி = சீனா, சரிக்கா = அமெரிக்கா, பிரியா = பிரித்தானியா, அட்டியல் = அம்பாந்தோட்டை,
சீதனக் காணி = வட கிழக்கு)
No comments:
Post a Comment