சிவஞான சித்தியாருக்கு
சிவத்திரு சபாரத்தின சிவாச்சாரியாரின் ஆகமப் பேருரை
மறவன்புலவு
க. சச்சிதானந்தன்
மாற்றம் இயற்கை. உயிர் மாற்றமடையப் பிறவி.
உடலே பிறவிக்கான ஊடகம்.
உயிரற்றன பிறப்பதில்லை, ஆனால் மாறுவன.
பிறப்பு இல்லாத, மாற்றம் இல்லாத, ஒரே
ஒருவனே சிவபெருமான்.
பிறப்பு இறப்பு இல்லாத, மாற்றம் இல்லாத,
குறைவிலா நிறைவாகச் சிவபெருமான்.
குறைகள் நிறைந்ததாக உயிர்.
உயிரின் குறைகளைப் பெருக்க மலங்கள்.
உயிரின் குறைகளைக் குறைக்கச் சிவபெருமானின் அருள்.
தொடக்கமும் முடிவும் அற்றவர் சிவபெருமான்.
தொடக்கமும் முடிவும் அற்றது உயிர்.
தொடக்கமும் முடிவும் அற்றன மலங்கள்.
முழுமையை நோக்கிய பயணமே உயிரின் பயணம்.
பிறவி வழிப் பயணம். ‘எல்லாப் பிறப்பும் பிறந்து
இளைத்தேன்’ என்பார் மாணிக்கவாசகர்.
சிந்திக்கக் கருத்துகள் எழும். கருத்துகளை
அறிவியலாக நிறுவவே அளவையியல். தத்துவச் சிந்தனைகள், சார்ந்த கருத்துகள் சொல்வோர் சமயக்
கணக்கர்.
உலோகாயதம் புத்தம்
சாங்கியம் நையாயிகம் வைசேடிகம் மீமாஞ்சகம் என்பன வைதிக அளவைகள் என்பார், 1800 ஆண்டுகளுக்கு முன்னர், சாத்தனார் மணிமேகலையில்
(காதை 27- வரிகள் 78, 79, 80).
சைவ சமயம், கருத்தன்று. கருத்துகளில்
இருந்து தெளிந்த கொள்கை அன்று. கொள்கைகளிருந்து தேர்ந்த முடிபு அன்று. முடிபுகளுக்கும் அப்பாலான மெய்ப் பொருள்.
'இரு சுடரோடு இயமானன் ஐம் பூதம் என்று
எட்டு வகையும் உயிரும் யாக்கையுமய்க்
கட்டி நிற்போனும் கலை உருவினோனும்
படைத்து விளையாடும் பண்பினோனும்
துடைத்துத் துயர் தீர் தோற்றத்தோனும் தன்னில் வேறு தான் ஒன்று இலோனும்
அன்னோன் இறைவன் ஆகும்'
என்பதே மணிமேகலையில் காதை 27, வரிகள் 86-95இல் சாத்தனார் கூறும்
முழுமைப் பொருள்.
படைத்தல்,
காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்தொழில்களை ஆற்றுவோன் இறைவன் எனும் ஈசன்
எனும் சிவபெருமான்.
மும்மலங்களின்
தாக்கத்தைக் குறைத்தும் முழுமை நோக்கிய உயிரின் பயணத்தை ஊக்குவிக்கவுமே சிவபெருமானின்
ஐந்தொழில்கள்.
இறை எனில் முழுமை. உயிர் எனில் முழுமையற்றது.
உயிரைக் குறைகளுடையதாக்குவன மூன்று மலங்கள்.
முழுமை இலக்கு. முழுமையை நோக்கிய, இலக்கை
நோக்கிய உயிரின் பயணம். பிறவிப் பேறு அதற்கே.
கூறுவது சைவ சித்தாந்தம். பகுத்தறிவும்
அறிவியலும் சார்ந்த மெய்ப்பொருளே சைவ சித்தாந்தம்.
பன்னிரு திருமுறைகள் மெய்ப் பொருளை நோக்கியன.
சிவஞான போதம் முதலாகச் சங்கற்பநிராகரணம் ஈறான பதினான்கு நெறிகள் சைவ சித்தாந்த மெய்ப்பொருட்
திரட்டு.
12 பாடல்களில் சிவஞான போதம். அருளியவர்
மெய்கண்டார். சைவ சித்தாந்த மெய்ப்பொருட் திரட்டே சிவஞானபோதம்.
இத்திரட்டை விரித்துக் கூறுவதே சிவஞான சித்தியார்.
மெய்கண்டாரின் தலை மாணாக்கர் அருணந்தி சிவாச்சாரியார். 12 பாடல்களுக்கும் 328 பாடல்களில்
விளக்கம் தருகிறார் அருணந்தி சிவாச்சாரியார்.
சிவஞானம் சித்திக்கும் என அறுதியாகக் கூறும்
நூல் சிவஞான சித்தியார்.
புறச் சமயக் கருத்தாடல்களை மறுக்கிறது
302 பாடல்கள் கொண்ட சிவஞான சித்தியாரின் முற்பகுதி. காட்சி எல்லைக் கருத்தாடல்களாக,
அளவையியல் சார்ந்தனவாகப் புறச் சமயங்கள் அமைவதைச் சுட்டுவதே பரபக்கம்.
இறைவனுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை
விளக்குவதே சிவஞானம். இறைவன் வேறு உயிர் வேறு என்றோ, இறைவனும் உயிரும் ஒன்றே என்றோ
சொல்வோர் சிவஞானம் பெறாதோரே.
உயிருக்கு மல இருளை நீக்கும் திருவருளை
உணர்வதே சிவஞானத் தெளிவு (பரஞானம்). இத்தெளிவு சிவஞானத்தின் ஒரு பக்கம்.
அத் திருவருளைத் தெளிய உணர்த்துவன சிவாகமங்கள்
(அபர ஞானம்). சிவாகம வழித் தெளிவு சிவஞானத்தின் மறுபக்கம்.
சிவாகம வழி சிவஞானம் எனக் கூறுவதே சிவஞான
சித்தியார் சிவாகமப் பேருரை. முழுமையை நோக்கிய பயணமே உயிரின் பயணம். பிறவி வழிப்
பயணம். சிவத்திரு சபாரத்தின சிவாச்சாரியார் இப் பேருரையைத் தந்துள்ளார்.
மெய்கண்டாருக்கு
விளக்கம் தந்தவர் அருணந்தி சிவாச்சாரியார். அதே மரபில் வந்தவர் சிவத்திரு சபாரத்தின
சிவாச்சாரியார். அந்த விளக்கத்துக்கு விரித்துரையாக, அருணந்தி சிவாச்சாரியாரை ஆகமப்
பேருரையாக விரிக்கிறார் சிவத்திரு சபாரத்தின சிவாச்சரியார்.
சிவஞானத்
தெளிவு நோக்கிய உயிரின் பயணம், பிறவிகளுக்கூடான பயணம். உயிருக்கு மெய்பொருள் காட்டும்
முயற்சியில் சிவஞானத் தமிழ்ப் பேரவை
(ஆத்திரேலியா). அப்பேரவையின் இணைப்பாளர் சிவத்திரு அருச்சுனமணி.
சிவஞான சித்தியார் எழுந்ததோ காவிரிக் கரை. அந்நூலுக்கான
ஆகமப் பேருரை வெளிவருவதோ ஆத்திரேலியாவின் கிழக்குக் கரை.
சிட்னி நகரில் சைவத் திருநெறியும் செந்தமிழ்ச் செழிப்பும்
சிறக்க அயராது உழைப்பவர் சிவத்திரு அருச்சுனமணி அவர்கள். யாவருக்கும் என் வாழ்த்துகள்.
No comments:
Post a Comment