யாகசாலை முதுகுடுமிக் குகநாதன்
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவசேனை
"என்மனார் புலவர்"
எனக்கு முன் பல நூற்றாண்டுகளூடாகப் பல்வேறு புலவர்கள் சொன்னதை நான் இங்கு உங்களுக்கு மீட்டும் சொல்கிறேன்.
தோராயமாக 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் தொல்காப்பியர்.
வேள்வி தமிழரோடு இணைந்த வாழ்வு முறை. அவற்றை இலக்கியமாக எழுதும் இலக்கணத்தைத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.
வேள்வியில் கிடைத்த தன் பாகத்தைக் கொண்ட பார்ப்பனன் எனப் பரிபாடலின் ஐந்தாம் பாட்டுக் கூறும். சங்க இலக்கியங்களில் முன்னோடியானதே பரிபாடல்.
வேள்வி செய்து பெற்ற வெற்றியைக் கொண்டாடியவன் பாண்டியமன்னன் வழுதி. நெட்டிமையார் என்ற சங்கப் புலவர் சொல்வார், உன்னுடைய வெற்றிகள், உன்னுடைய புகழ், அளவிட முடியாதவை.
பஃறுளி ஆற்று மண்ணை எண்ணலாம். உன் புகழை எண்ண முடியாது என்று மிகைபடக் கூறுகிறார் நெட்டிமையார் புறநானூறு பதினைந்தாம் பாடலில்.
நூற்றுக்கும் அதிகமான எண்ணிக்கையில் யாகங்களை நிகழ்த்தியவன் வழுதி. புகழ்மிக்க பாண்டிய அரச பரம்பரையினன் வழுதி.
எனவே அவனுக்குப் பெயர் பல் யாக சாலை முது குடுமிப் பெருவழுதி. நெட்டிமையாரும் வேறு இரு சங்கப் புலவர்களும் இவனைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
பாண்டியர் போலவே சோழரும் யாகங்கள் நிகழ்த்தினர். இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னனைப் புறநானூறு கூறும்.
மதுரைக்காஞ்சி கலித்தொகை பதிற்றுப்பத்து ஆகிய சங்க நூல்களிலும் தமிழர் நிகழ்த்திய வேள்வியைப் பற்றிய செய்தி உண்டு.
யாக குண்டங்கள் பலவற்றை அமைத்து ஆறாக ஓடும் நெய்யைச் சொரிந்து தீந்தழல் வேள்வி நிகழ்த்துவதை விட உயிர் ஒன்றினைக் கொன்று உண்ணாமை பெரும் புண்ணியம் ஆகும் என்பார் திருவள்ளுவர். 259ஆவது குறளில்.
இன்று கும்பாபிஷேகம் என்கிறோம். குடமுழுக்கு என்கிறோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அந்நிகழ்வைக் கடவுள் மங்கலம் என்றார்கள். வேள்வி வழி கடவுள் மங்கலம் நிகழ்த்திய செய்தியைச் சிலப்பதிகாரம் கூறும்.
ஒடுக்கம் ஓகம் யோகம் யாகம் வேள்வி என்பன பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஊடாகத் தமிழர் வாழ்வோடு இணைந்த நிகழ்வுகள்.
மனமே வலிமையானது. மனத்தின் வலிமையைப் பெருக்கும், சாதனைகளைப் படைக்கும், வெற்றிகளைக் குவிக்கும். முடியாதது ஒன்றில்லை என்ற நிலையை மன ஒடுக்கம் கொண்டுவரும்.
மன ஒழுக்கத்தைக் கொண்டுவரும் வேள்விகள் யாகங்கள் தமிழருக்கு உரியன.
வேல் வில் அம்பு யானை குதிரை கேடயம் பீரங்கி துப்பாக்கி ஏவுகணை அணுகுண்டு எனப் போர்க் கருவிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இன்று நாம் எதிர்கொள்ளும் போர்க்கருவி முள்முடித் தீநுண்மி என்கின்ற கொரோனா 19.
போர்களை வெற்றிகொள்ள யாகங்கள் வேள்விகள் நிகழ்த்த வேண்டும். மனத்தை ஒடுக்கி வலிமையாக்க வேண்டும்.
இன்றைய போர்க்கருவியான முள்முடியைச் சந்திக்க சவால் கொள்ள, போராடி வெற்றிபெற தமிழரின் நீண்ட நெடிய நடைமுறையான யாகமும் வேள்வியும் துணைசெய்யும்.
முகமூடியோ துடக்காகச் சமூக இடைவெளியோ, தனிமையோ இவை புறக் காப்பு.
மனத்தை வலிமையாக்குவதே அகக் காப்பு. மனவலிமையால் உடலில் எதிர்ப்புச் சக்திகளை உருவாக்கலாம். மன வலிமை மன ஒடுக்கத்தின் விளைவு. மனம் ஒடுங்குவது வேள்வியிலும் யாகத்திலும்.
எனவே வெற்றியை விழைவோர் வேள்வியை நிகழ்த்துவர். யாகத்தை நிகழ்த்துவர்.
வேள்விகளால் வெற்றிகளை நிகழ்த்தலாம் என்ற நீண்ட நெடிய தமிழரின் பாரம்பரியத்தை உணர்ந்தவர் தான் தொக்காக் குழும முதல்வர் ஊடக வித்தகர் குகநாதன் அவர்கள்.
வரலாற்றின் ஊடாக வேள்விகளின் விளைநிலமாக மன்னாரில் திருக்கேதீச்சரம். அங்கே பாண்டியர் யாகம் நிகழ்த்தினர். அங்கே விசயன் யாகம் நிகழ்த்தினான். அங்கே சோழர் யாகம் நிகழ்த்தினர். அங்கே பல்லவர் யாகம் நிகழ்த்தினர். அங்கே யாழ்ப்பாண அரசர் யாகம் நிகழ்த்தினர்.
இந்த யாகங்கள் இவர்களுக்கு வெற்றிகளைக் குவித்தன.
ஊடக வித்தகர் குகநாதன் திருக்கேதீச்சரம் சென்றார். முள்முடித் தீநுண்மியை மனித இனம் வெற்றிகொள்ளச் சிவபெருமானை வேண்டினார்.
யாகம் நிகழ்த்தினார். முள்ளிச் செடிக்கு முத்தி கொடுத்தவர் நீங்கள். உயிர்கள் எந்த நிலையில் இருந்தாலும் முத்தி கொடுத்துத் திருவடிப்பேறு காட்டுவீர்கள்.
அவ்வாறே உலகெங்கும் பரவிய தீநுண்மிக்கும் முத்தியும் திருவடிப்பேறு கொடுங்கள்.
முன்பு அசுரர்களை வதைத்து மனிதத்தை ஆட்கொண்டீர்கள் இன்று தீநுண்மியை வதைத்து மனிதம் காப்பீர்களாக எனத் திருக்கேதீச்சரத்தில் யாகசாலை அமைத்தார்.
யாகசாலை அமைத்து யாகங்கள் நிகழ்த்திய நீண்ட நெடிய தமிழ்ப் பரம்பரை வழி வந்த பெருமகனாரே
யாகசாலை முதுகுடுமிக் குகநாதன்.
No comments:
Post a Comment