வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் போற்றுகிறேன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
திருக்கடவூர், தமிழிசைக்கு உயிர் கொடுத்து உடலாக உலவவிடும் ஊர்.
பன்னிரு திருமுறை காட்டும் 23-24 பண்களையும் 1800 ஆண்டுகளுக்கும் கூடுதலாக வழிவழியாகக் கொண்டும் கொடுத்தும் இசைந்த; இசைத்த ஊர்.
தமிழ் மொழியின் வேர்கள் அறிந்த ஊர். சொற்களின் வேர்களை அறிவோர், வேரின் சார்புகளை அறிவோர், சொல்லின் பொருள் அறிவோர், இடம் காலம் சார் பொருள் அறிவோர், அந்த அறிவுடன் இசையின் நுண்மா நுழைபுல அறிவும் சேரத் தமிழாக வாழ்கின்ற பெருமக்களின் ஊரே திருக்கடவூர்.
காலனையே காலால் கடிந்த பெருமானாரும் தளர்வு அறியா மனம் தரும் அபிராமித் தாயாரும் கோலோச்சி அருள் பெருக்கி மண்ணில் நல்ல வண்ணம் வாழ உயிர்களை அழைத்துச் செல்லும் ஊர் திருக்கடவூர்.
ஏழு சுரங்களுக்குள் பண்ணிசைப் பாடல்களைத் தொகுத்துத் தந்த தந்தையார் பெற்ற பெருமகனார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.
தருமபுரம் ஆதீனம் தவத்திரு சந்நிதானம் அவர்களின் முழுமையான வாழ்த்தையும் ஆசியையும் பெற்ற பெருமகனார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.
திருக்கடவூரில், இரண்டாயிரத்துக்கும் கூடுதலான ஆண்டு கால இசை மரபின்; தமிழ் மரபின் தனிப்பெரும் கொடையே ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.
சுரக்கட்டும் சொற்கட்டும் கை வர, கற்பனைப் பெருக்கின் வளமும் கைகூட, அரன் அருள் நோக்கு வழிகாட்ட, தமிழோடு இசை பாடிப் பண்ணினால் நீட்டிப் பதிகங்களைப் பாடிப் பாடித் தானும் உருகுவார்; கேட்போர் நெஞ்சத்தையும் உருக்குவார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.
பனி உறை குளிரில் புலர் எழு காலையில் பாவை பாடி இங்கிலாந்து முழுவதும் பண்ணும் பண்பாடும் பரப்புவார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.
மருத்துவர் சிறீதரன் என் அருமை நண்பர். என் அயலவராக வாழ்ந்தவர். மருத்துவராகப் படித்து உயர்ந்து இங்கிலாந்தில் வாழ்பவர். இங்கிலாந்தில் வாழ்ந்தாலும் இங்கு நம் சூழலில் வாழ்வது போல் அங்கும் வாழ்பவர்.
யாழ்ப்பாணம் திருக்கடவூரை அழைத்தது போல, மருத்துவர் சிறீதரனும் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனாரை அழைக்கிறார்.
இசைந்த மருந்து பிணி நீக்கும். இசையே மருந்து ஆனால் பிறவிப் பிணியும் நீங்கும். மருத்துவர் ஸ்ரீதரன் இதை அறிவார். எனவே பண்ணோடு இசைபாடப் பயிற்றுவிக்க; பிணி நீக்க அழைக்கிறார்.
பாலூட்ட எழுந்த ஞானத் தமிழையும் கானமிழ்த இசையையும் ஊட்டி விடுக என அழைக்கிறார் மருத்துவர்சிறீதரன். ஒப்புக்கொள்கிறார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.
பந்தாட்டப் புகழ்பூத்த விம்பிள்டனில், மேற்குலகில் முதல் நிலைத்த அருள்மிகு பிள்ளையார் கோயிலில் கடந்த வாரம் முதலாகப் பண்ணிசை வகுப்புகள் நடத்துகிறார் ஓதுவாமூர்த்தி சாமி தண்டபாணி தேசிகனார்.
வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் போற்றுகிறேன்.
No comments:
Post a Comment