2052 மாசி 20 வியாழன் (04.03.2021)
கச்சத் தீவில் திருக்கச்சேச்சரநாதர் திருக்கோயில் திருப்பணி
மறவன்புலவு க சச்சிதானந்தன்
சிவ சேனை
கூகுள் வரை படத்தில் கச்சத் தீவைப் பெரிதாக்கிப் பார்த்தால் அங்கு மேற்குக் கரையில் அண்ணமார் கோயில் இந்துக் கோயில் என இடுகை இருக்கும். (படம் இணைப்பில்)
கய் > கயர் > காய், தமிழின் வேர்ச் சொற்கள். அறு சுவைகளுள் கயர் > கய்ப்புச் சுவை ஒன்று.
உப்புச் சுவை கய்க்கும் சுவை. உப்பு நீர் > உவர்நீர். கய்க்கும் நீர்.
தமிழில் நேயம் > நேசம் ஆகும். பையன்கள் > பசங்கள் ஆவார். வாயில் > வாசல் ஆகும். வயம் > வசம் ஆகும். யகர உச்சரிப்புக் காலப்போக்கில் சகர உச்சரிப்பாக மாறுவது இயல்பு.
கயர் > கசர். கயப்பு > கசப்பு. உப்புக் கயக்கும் அதே உப்புக் கசக்கும். கடல் நீர் > கச்சல் நீர். கடல் நீர் ஊறும் நிலம் கச்சல் நிலம்
ஒரு தீவில் கிணறு தோண்டக் கயர் நீர் வருமாயின் கச்சல் நீர் வரும் தீவு, கச்சல் தீவு > கச்சத் தீவு.
நாகப்பட்டினத்திலிருந்து கடாரம் நோக்கி வணிகக் கப்பல்கள் பயணிக்கின்றன. நக்காவரம் தீவுக் கூட்டங்களைக் கடக்கும் இடத்தில் நன்னீர் கிடைக்குமா? எனத் தமிழ்க் கடலாடிகள் தேடுகின்றனர். கிணறு தோண்டக் கயர் நீர் ஊறுகிறது.
எனவே அத் தீவில் நன்னீர் கிடைக்காது என்பதைத் தெரிவிக்கக் கச்சத் தீவு என்று பெயரிடுகின்றனர். பல்லாயிரம் ஆண்டுகளாக அத் தீவு கச்சத் தீவு.
நக்காவரம் தீவுக் கூட்டங்களில் தெற்கு எல்லையில் சுமாத்திராவிற்கு வடக்கே இந்திரா முனை என இன்று அழைக்கும் தீவின் பெயர் இன்றும் கச்சத் தீவு. கடலாடித் தமிழர் சூட்டிய பெயர். அட்மிராலிற்றி வரை படங்களில் (கப்பல் ஓட்டிகட்கு உதவும் பிரித்தானியத் தாயாரிப்பான வரை படங்களில்) இப் பெயரே உண்டு (Admirality Charts)
அவ்வாறே நெடுந் தீவுக்கு மேற்காக உள்ள தீவில் கிணறு தோண்டினால் உவர் நீர் அல்லது கயர் நீர் அல்லது கச்சல் நீர் வருவதால் அந்தத் தீவின் பெயர் கச்சத் தீவு.
பசுத் தீவு அல்லது நெடுந் தீவுக்கும் இராமேச்சரத்துக்கும் இடையே பயணிக்கும் வழிபடு பயணிகள், நன்னீர் கொண்டு செல்ல வேண்டும். வழியில் கச்சத் தீவு வரும் தங்கலாம். அங்கே நன்னீர் கிடைக்காது என்பதைச் சுட்டுவதே கச்சத் தீவு என்ற பெயர்.
கச்சத் தீவில் உள்ள சிவன்கோயில் திருக்கச்சேச்சரம். அருள்மிகு கயற்கண்ணி உடன் உறை கச்சேச்சரநாதர் திருக்கோயில் அமைந்த தீவு கச்சத் தீவு.
திருக்கோயில் வாயிலில் அருள்மிகு பிள்ளையார். அவரை வணங்கி உட்சென்று அருள்மிகு கயற்கண்ணி உடனுறை கச்சேச்சரநாதரை வணங்கி, சுற்று மண்டபங்களில் உள்ள அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை முருகப் பெருமானை வணங்கி, அருள்மிகு பைரவரை வணங்கி, அருள்மிகு வீரபத்திரரை வணங்கி, வெளியே வந்து நெடுந் தீவில் இருந்தோ இராமேச்சரத்தில் இருந்தோ கொண்டு சென்ற பொங்கலுக்கு உரிய பொருள்கள், நீர் முதலியவற்றால் பொங்கல் பொங்கி வழிபடுவது 10 ஆயிரம் ஆண்டுகளாக நெடுந் தீவு மற்றும் இராமேச்சரச் சைவத் தமிழரின் மரபு.
400 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலி மன்னனைத் தோற்கடிக்க மன்னார்த் தீவில் இருந்து இருமுனைத் தாக்குதலை மேற்கொண்டவன் போர்த்துக்கேயத் தளபதி பிலிப்பு டி ஒலிவரா.
முதலில் தனது கடற்படையை அனுப்பினான். நெடுந் தீவுக்குப் போர்த்துக்கேயக் கடற்படை வந்தது. அங்கே சங்கிலிக்கு உதவியாக நிலைகொண்டிருந்த மலையாளத்துக் குஞ்சலியின் கடற்படை, போர்த்துக்கேயக் கடற்படையைத் தாக்கியது.
பின்வாங்கிய போர்த்துகேயக் கடற்படை, கச்சத் தீவில் தங்கியது. அங்கே இருந்த அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயிலை முற்றுமுழுதாக உடைத்தது.
பின்வாங்கிய போர்த்துக்கேயக் கடற்படையைக் குஞ்சலி துரத்தினான். கச்சத் தீவு சென்றான். போர்த்துக்கேயக் கடற்படையை முற்றாக அழித்தான். போர்த்துக்கேய வீரர்களைச் சிறைப் பிடித்தான். நெடுந் தீவுக்குக் கொண்டு வந்தான்.
வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் யாழ்ப்பாணத்தில் சங்கிலியனைப் பிலிப்பு டி ஒலிவரா சிறைப் பிடித்ததும் நெடுந் தீவில் இருந்த குஞ்சலி வீரர் கடற்படை மலையாளத்துக்குப் புறப்பட்டது.
நெடுந் தீவு போர்த்துக்கேயர் வயமானது. துப்பாக்கி முனையில் நெடுந் தீவில் வாழ்ந்த சைவர் சிலரைப் போர்த்துகேயர் கத்தோலிக்கராக மாற்றினர்.
கத்தோலிக்கத்துக்கு மாறாத சைவர்கள் கச்சத் தீவில் உடைந்து தரைமட்டமாகிய அருள்மிகு கயற்கண்ணி உடனாய கச்சேச்சரநாதர் திருக்கோயில் இருந்த இடத்தில் அண்ணமார் (சிவனின் சூலம்) திருமேனி வைத்து வழிபட்டு வருகின்றனர். நெடுந்தீவு மீனவருக்கும் தொண்டி தொடக்கம் இராமேச்சரம் வரை வாழும் தமிழக மீனவர்களுக்கும் இடையே திருமண உறவுகள் நெடுங்கால மரபு. எனவே நேர்த்திக் கடன்களை நிறைவேற்றத் தமிழகக் கரைகளில் இருந்தும் கச்சத் தீவுக்கு மீனவர் வருவர்.
கடந்த 100 ஆண்டுகளுக்குள் நெடுந் தீவுக் கத்தோலிக்க மீனவர் அந்தோணியார் சிலையை அமைத்து வழிபடத் தொடங்கினர். சைவ வழிபடு மரபுகள் தொய்வுற, கத்தோலிக்கத் திருவிழா மரபு அண்மையக் காலத்தில் தொடங்கியது.
No comments:
Post a Comment