Tuesday, October 15, 2019

சீசெல்சு இந்துக் கோயில் சங்கம்




திருவோடு காய்க்கின்ற திருநாட்டில் திருத்தொண்டாற்றத் திருவருள் கனிந்ததே!
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

திருநாடு கண்டமை

சீசெல்சு நாட்டின் முதல் கோவில், பிள்ளையார் கோவில். இன்று ஆங்கு குடமுழுக்கு மஞ்சன நீராட்டு விழா நாள். வரலாற்றில் சிறப்பிடம் பெறும் நாள். சீசெல்சு வாழ் இந்துக்களும், உலகு அனைத்தும் பரந்து வாழும் இந்துக்களும் இறைவனின் இன்னருளை வழுத்தும் நாள்.
115 தீவுகளின் கூட்டம் இந்த நாடு. தீவுகளுள் பெரியது மாஹே . தலைநகர் விக்டோரியா . தலைநகரில் தனிச் சிறப்புடைய தெரு குவின்சி தெரு. அத்தெருவை வாயிலாகக் கொண்டது நமது பிள்ளையார் கோவில்.
இந்தியத் துணைக் கண்டத்தில் இருந்து தென்மேற்கே ஏறத்தாழ 3000 கி.மீ. தொலைவில் இத்தீவுகள் உள் . இந்துப் பெருங்கடலின் மேற்குப்புறத்திலே உள்ள தீவுகள் பலவற்றுள், பூமியின் உள்ள தீவுகள் பலவற்றுள், பூமியின் நடுக்கோட்டை ஒட்டிய தீவுக்கூட்டமே சீசெல்சு.
இவ்வளவு அண்மையில் இந்தியா இருந்தாலும் இங்கு இந்திய நாட்டினர் வந்தமைக்கோ, தங்கியமைக்கோ, கடந்த 250 ஆண்டுகட்கு முன் எந்தச் சான்றும் இதுவரை கிட்டவில்லை . அரபுக்கள் வந்து சென்றமைக்குச் சான்றுகள் உள் .
கடந்த 250 ஆண்டுகட்கு முன்பு பாண்டிச்சேரிக்கும் இத்தீவுக் கூட்டங் கட்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. பிரஞ்சுக்காரர் பாண்டிச்சேரியில் கப்பல் கட்டும் தொழிலகத்தை அப்பொழுது நிறுவி , கப்பல் கட்டுவதற்குரிய மரங்களைச் சீசெல்சில் இருந்து கொண்டு சென்றனர். இதற்காக, மாதம் இருமுறை பாண்டிச்சேரித் தமிழர்கள் சீசெல்சு வருவதும், மரங்களைக் கொண்டு போவதுமாக இருந்தனர். யாரும் அங்கு தங்கவில்லை .
1770 இல் முதல் முதலாக, சீசெல்சில் குடியேறச் சென்ற 30 பேரில் 5 தமிழர்கள் இருந்தனர். இத்தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து மொரிசியசு வந்து, அங்கு தொழில் விற்பன்னர்களாக இருந்தவர்களுள் ஐவர். முதல் குடியேறிய தமிழர் ஐவரைத் தொடர்ந்து தமிழர் பலர் மொரிசியசு, இறியுனியன், பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் இருந்து சீசெல்சு வந்தனர், குடியேறினர்.
சீசெல்சின் ஆவணக் காப்பகத்தில் உள்ள பதிவேடுகளைப் புரட்டிப் பார்த்தால், பிறப்பு, திருமணம், இறப்புப் பதிவுகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பெயர்களைக் காணலாம். ஒவ்வோர் ஆண்டிலும் நடைபெற்ற பிறப்பு, இறப்பு இரண்டிலும் 20% -30% பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக உள. திருமணப் பதிவுகளில் தமிழ்ப் பெயர்கள் 5%-10% உள் . திருமணம் செய்துதான் குழந்தைகளைப் பெற வேண்டும் என்ற நியதி அன்றும் சரி இன்றும் சரி சீசெல்சில் இறுக்கமாகப் பேணப்படும் மரபு அல்ல.
இன்று சீசெல்சில் ஆயிரக்கணக்கான தமிழர் உளர். இவர்களுள் தமிழைப் பேசுபவர்கள் ஒரு பகுதியினர் தான். சீசெல்சின் பெரும் தனவணிகர்கள் தமிழர்களே . சிதம்பரம், மாயவரம், தரங்கம்பாடி, சீர்காழி, காரைக்கால் போன்ற இடங்களில் இருந்து குடியேறியவர்களே இவர்கள்.

அங்கு வந்தமை

ஐக்கிய நாடுகளின் உணவு வேளாண்மை நிறுவனம், தென்மேற்கு இந்துப் பெருங்கடலை ஒட்டியுள்ள எட்டு நாடுகளுக்கு ஆலோசனை வழங்கும் பணியை எனக்குத் தந்து, சீசெல்சில் எமது இல்லத்தை நிலைகொள்ளச் செய்தது. இதையொட்டி 1984 மாசியில் நாம் மாஹே விமான நிலையத்தில் இறங்கிய பொழுது, மேற்கண்ட பின்னணி உள்ள, நாட்டில் வாழப் போகின்றோம் என்ற விபரங்கள் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.
மறுநாள் காலை நாம் தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியே வந்து வீதியில் கால் வைத்த பொழுதே, . கண்ணில் பட்டது ஒரு குட்டிக்கடை. பலசரக்குக் கடை. மாடியில் வீடும் கீழே கடையும் உள்ள மரப் பலகைக் கட்டடத்துக்கு உள்ளே சென்றால் சிதம்பரத்தைச் சேர்ந்த நடராஜனும் மனைவியும் பிள்ளைகளும் எம்மை மகிழ்வுடன் வரவேற்றனர். உபசரித்தனர்.
வெளியே வந்து நடந்து கொண்டிருந்தேன். எதிரே ஒரு தமிழ்க் குடும்பத்தினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். நயினாதீவு கையலாயநாதன் சீசெல்சில் வழக்குரைஞராகப் பணிபுரிந்து கொண்டிருப்பவர், இன்முகம் காட்டி வரவேற்று, தன் இல்லம் அழைத்துச் சென்று உணவு தந்தார்.
கைலாயநாதன் சீசெல்சின் சமுகச் சூழலை விளக்கினார். 40க்கு மேற்பட்ட ஈழத் தமிழ்க் குடும்பங்கள், 70க்கு மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள், 100க்கு மேற்பட்ட மொரிசியசுக் குடும்பங்கள், 200க்கு மேள்பட்ட வெள்ளையர்கள் 70க்கு மேற்பட்ட தமிழகத் தமிழர் குடும்பங்கள் அங்கு தொழில் வல்லுநராய், ஆசிரியராய், பணிபுரிய அண்மைக் காலங்களில் வந்துள்ளதாகக் கூறினார்
 புத்தகக் கடை சென்று சீசெல்சு தொடர்பான வரலாறு, புவியியல், புள்ளி விபர நூல்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டேன்.
விக்டோரியாவில் நான் சென்ற வீதியெங்கும், பிள்ளை , செட்டி, படையாட்சி, நாயுடு இவர்கள் பெயர் கொண்ட வணிக நிலையங்கள்  இருந்தன. தடுக்கி விழுந்தால் தமிழர் மேல் விழவேண்டும். அப்படி அந்தச் சிறிய நகரின் கடைத் தெருவெங்கும் மற்ற இன மக்களுடன் தமிழரைக் கண்டேன் .

இளைஞரைக் கண்டமை

தமிழர்க்கான ஒரே ஓர் அமைப்புத்தான் அங்கு இருந்தது. தமிழ் ஒளிப்பட நாடாக்குழு.
சிங்கப்பூரில் இருந்து தமிழ்த் திரைப்பட ஒளிப்பட நாடாக்களை வரவழைத்து உறுப்பினர்கட்கு வாடகைக்குக் கொடுப்பது அக்குழுவின் ஒரே பணி.
அக்குழு அலுவலகம் சென்றேன். பொறுப்பாக ஓர் இளைஞர் இருந்தார். அந்தத் தீவில் என் உள்ளம் கவர்ந்த முதல் மனிதர் அந்த இளைஞர் தாம். முகம் மலர்ந்து, உள்ளம் குளிர்ந்து, சொற்கள் குழைந்து, கைகள் குவித்து, உடல் வளைத்து, வாருங்கள், அமருங்கள்' என அந்த இளைஞர் வழங்கிய அன்பு வரவேற்பில் நான் மயங்கினேன். என்னை மறந்தேன். சுபாஷ் பிள்ளை என்ற அந்த ஒல்லிய உயர்ந்த இளைஞர் என்னை மட்டுமல்ல அங்கு வரும் அனைவரையும் அவ்வாறே வரவேற்பார்.
ஒரு மாத உறுப்புரிமைப் பணம் கொடுத்துச் சேரச் சொன்னார். இரண்டு ஆண்டுகட்குரிய மொத்த உறுப்புரிமையையும் உடன் கொடுத்து உறுப்பினனானபோது நான் அவர் பாற்பட்டேன். அந்த வியப்பில் இருந்து நீங்க அவருக்குப் பல நாள்கள் சென்றன.
செல்லுமிடமெல்லாம் அவர் செய்தி சொல்ல, அடுத்த சில நாள்களாக நான் கடைத் தெருவுக்கு வந்தாலே அங்குள்ள தமிழர் என்னை 'ஒரு விதமாகப் பார்த்தனர்.
சில வாரங்கள் கழிந்தன. ஒரு நாள், ஞாயிற்றுக்கிழமை காலை , சுபாஷ் தனது நண்பர் சிவஷண்முகம்பிள்ளையுடன் எமது இல்லம் வந்தார். சீசெல்சில் தமிழர்கள், இந்துக்கள் அமைப்புகளாகச் செயற்படுவதில் உள்ள துன்பங்கள், துயரங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், மன  முறிவுகள், எனப் பல கூறி, நல்லதோர் அமைப்பை ஏற்படுத்த இருவரும் எனது ஒத்துழைப்பை நாடினர்.
மே முதல் நாள் விடுமுறை நாள், அந்நாளில் ஆர்வலர்களை அழையுங்கள், கூட்டத்துக்கு வருகிறேன், எனக் கூறி அனுப்பினேன்.

கால்கோள் கொண்டமை

மே முதல் நாள் கூட்டம் நடைபெற்றது. முப்பது பேர் வரை வந்திருந்தனர். ஏழெட்டுப் பெண்கள், ஏனையோர் ஆண்கள். கூட்டத்தை நெறிப்படுத்துமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். தலைமை தாங்கிக் கூட்டத்தை நடத்தினேன். தேவாரத்துடன் கூட்டத்தைத் தொடங்குவோம் என்றேன்.
'மாசில் வீணையும்' எனத் தொடங்கும் அப்பர் தேவாரத்தை இளைஞர் ஒருவர் இசையுடன் உருகப் பாடினார். அவர் மாயவரத்தில் சிறந்த சைவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கணக்காளராகச் சீசெல்சில் பணிபுரிபவர், பெயர் சோ. பாலசுந்தரம்.
'இந்தக் கூட்டம் நடத்த அரசு அனுமதி உண்டா ? அரசுக்கு அறிவித்தீர்களா? இப்படியான கூட்டங்கள் கூட்டுவதை அரசு விரும்புமா?' இப்படி அங்கு ஓர் அன்பர் வினா எழுப்பினார்.
கூட்டத்தில் சிறு சலசலப்பு. ஏனெனில் இஃது ஒரு சிக்கலான வினா . சீசெல்சில் அப்பொழுது அரசுச் சிந்தனைகட்குப் புறம்பான சிந்தனைகளை ஊக்குவிப்பதில்லை.
'தமிழர்கள் இந்த நாட்டைத் தாய் நாடாக நினைக்க வேண்டும். தமது வாழ்வு முறைகளை இந்த மண்ணுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இங்கு ஒரு காலும் தமிழகத்தில் ஒரு காலும் வைத்துக் கொண்டு, பொருட் தேவையை இங்கும், பண்பாட்டுத் தேவையை அங்கும் வைத்திருக்கும் நிலை மாற வேண்டும். இங்கே வாழும் தமிழரின் பண்பாட்டுத் தேவைகளை இங்கேயே நிறைவு செய்யவேண்டும். இந்த மண்ணுக்குரியவர்கள் இங்கேயே தம் அனைத்துத் தேவைகளையும் தமது முயற்சி மூலம் நிறைவு செய்து கொள்ள வேண்டும் என்பதே இந்த நாட்டு அரசின் கொள்கை. அதுவே இந்த நாட்டுத் தலைவர்களின் சிந்தனை .
'இந்த நாட்டு அரசின் சிந்தனை, இந்த நாட்டு மக்களின் சிந்தனை, இவற்றுக்கு வடிவம் கொடுக்கவே இந்தக் கூட்டம். எனவே இத்தகைய கூட்டம் கூட்டப்படுவதை அரசு விரும்பும்', என்று நான் கூறினேன்.
'அப்படியானால் இப்படியான கூட்டத்தை நடத்தலாம்' என வினாவை எழுப்பியவரே மற்றவர்கட்குக் கூறக் கூட்டம் தொடர்ந்தது.
வந்திருந்தவர்கள் நல்ல கருத்துக்கள் - பலவற்றைக் கூறினர். எல்லோரும் சோந்து கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும். அது தமிழர் மற்றும் இந்தியரின் பண்பாட்டு மையமாக வளர வேண்டும். திருமணங்கள் நடத்தக் குருக்கள் வேண்டும். வழமைக்கமைய இறந்தவர் இறுதிக்கிரியைகள் செய்யவேண்டும். இந்துமயானம் வேண்டும். புத்தாண்டு, நவராத்திரி, தீபாவளி, கந்தஷஷ்டி, பாவை நோன்பு, தைப் பொங்கல், சிவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி முதலிய சமய நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். தமிழ் மற்றும் மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும். இசை நாட்டியக் கலைகள் வளர வேண்டும், இவற்றையெல்லாம் செய்யக் கூடிய ஓர் அமைப்பு ஏற்படுத்த வேண்டும்.
கூறப்பட்ட கருத்துக்களை நோக்கங்களாகக் கொண்டு ஓர் அமைப்பு ஏற்படுத்துதல், அதற்குரிய அமைப்பு விதிகளைத் தயாரித்தல் எனத் தீர்மானிக்கப்பட்டது. அமைப்பு விதியைத் தயாரிக்க ஒரு குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
அமைப்பு விதித் தயாரிப்புக் குழு கூடினோம். விதிகளைத் தயாரித்தோம்.
10. 6. 84 இல் முதற் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவித்தோம்.
சிவசண்முகம் பிள்ளை , சுபாசுப் பிள்ளை , பாலசுந்தரம், கயிலாயநாதன், நான் ஐவருமாக, சீசெல்சில் உள்ள அத்தனை இந்துக்களின் இல்லங்களுக்கும் சென்றோம். ஒவ்வொரு குடும்பமாகப் பார்த்துப் பேசினோம். ஒத்துழைப்பைக் கேட்டோம். கூட்டத்துக்கு வருமாறு அழைத்தோம்.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார், கண்துஞ்சார் கருமமே கண்ணாயினார் என, இந்த ஐவரும் தொடக்க நாட்களில், நாள்தோறும் மாலை வேளைகளில் பல மணி நேரங்கள் அமைப்பு ஏற்படுவதற்காகத் தம்மை அர்ப்பணித்து உழைத்தனர்.

சங்கம் அமைந்தமை

10. 6. 84 அன்று நடைபெற்ற கூட்டம் ஆக்க பூர்வமானதாக அமைந்தது. அமைப்பு விதிகள் சிறு சிறு மாற்றங்களுடன் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. குடியுரிமை பெற்றவர்கட்கே வாக்களிக்கும் உறுப்புரிமை ; ஏனையவர்கட்குக் கூட்டு உறுப்புரிமை என்ற விதியில் உள்ள ஐயப்பாடுகள் அனைவரின் உள்ள நிறைவுக்கும் ஏற்பப் போக்கப்பட்டன.
அந்த அடிப்படையில் உறுப்பினர்களாக யாவரும் தம்மை அமைப்புடன் இணைத்துக் கொண்டனர். சீசெல்சு இந்துக் கோவில் சங்கம் முறையாகத் தொடங்கப்பட்டது.
அலுவலர்கள் தேர்வு நடைபெற்றது. அனைவரின் அன்பைப் பெற்றவர். மதிப்பைப் பெற்றவர். ஆற்றலால் வளர்ந்தவர். அறிவால் சிறந்தவர். அனைத்து இன மக்களிடையேயும்  பரந்த செல்வாக்கு உடையவர். அரவணைப்பதையே, அன்பைப் பரவலாக்குவதையே, இறைவனை வழிபடுவதையே வாழ்வாகக் கொண்டவர். அத்தகைய ஒருவரை; சீசெல்சு இந்துச் சமுதாயம் ஒருமனதாக அன்று தலைவராக்கிக் கொண்டது.
தீனு எனச் செல்லமாக அழைக்கப்படும் தீனதயாளன் பிள்ளை தலைவரானார். சுழன்று சுழன்று பணிபுரியும் சுபாஷ்பிள்ளை செயலாளரானார். அமைதியே உருவான ராமக்கிருஷ்ண நாயக்கர் பொருளாளரானார். பலர் குழு உறுப்பினர்களாயினர்.

சங்கம் வளர்ந்தமை

ஆவணியில் சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு விழா எடுத்து வழிபட்டதே சங்கத்தின் முதல் நிகழ்ச்சி. பெலோம்பிறே கடற்கரைக்கு  நாற்பதுக்கு மேற்பட்ட கார்களில் ஊர்வலமாகச் சென்று, மண்ணினால் புனைந்த பிள்ளையாரைக் கடலுக்குள் விட்டு, போற்றி ஒலி எழுப்பி வழிபட்ட நிகழ்ச்சியில் பக்தி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
அடியவர்கள் அருள் மழையில் நனையுமாறு, பழனியும் கயிலாயநாதனும் கடலுள் இறங்கிப் பிள்ளையாரை விட்டுக் கடலில் நனைந்தனர்.
நவராத்திரி ஒன்பது நாள்களும் சீசெல்சு இந்துக்களுக்கு விழா நாள்களாயின. நாள் தோறும் கூடினர். வழிபட்டனர். இறுதி நாள் நிகழ்வில், குஜராத்திப் பெண்களும், தமிழ்ப் பெண்களும் சேர்ந்து கும்மி அடித்துக் கோலாட்டம் ஆடி, இசை பெருக்கிக் கலைமகளைப் போற்றினர். செயலாளர் சுபாஷ் பிள்ளை , சீசெல்சுத் தொலைக் காட்சியில் உள்ள தனது நண்பர்களை அழைத்து வந்து, நிகழ்ச்சியைப் பதிவு செய்தார். அடுத்த வாரம் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சியாக இப்பதிவு வழங்கப்பட்டு, நாடு முழுவதும் பார்த்து மகிழ்ந்தது.
இந்துக்களின் முதல் நிகழ்ச்சி, இந்திய மரபினரின் முதல் நிகழ்ச்சி சீசெல்சுத் தொலைக் காட்சியில் காட்டப்பட்டது.
தீபாவளி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கந்தர் ஷஷ்டி, திருவெம்பாவை, தைப்பொங்கல், சிவராத்திரி, என விழா நாள்கள் வழிபாட்டு நாள்களாயின.
குவின்சி தெருவில் சங்கத்துக்கென  வாடகைக்கு இடம் பெறப்பட்டது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டு வழிபாடு நடைபெற்றது.
படிப்படியாகக் கலாச்சார நிகழ்ச்சிகள் வளர்ந்தன. ஜெயா பாலசுந்தரமும் சிவபாதமும் தமிழ் வகுப்புகள் நடாத்தினர். இதனால் பல சிறார்கள் தமிழ் படிக்கும் ஞாயிறு விடுமுறைக்காக ஏங்கினர்.
சங்கம் அமைப்பதில் இருந்த ஆர்வத்தை விடச் சங்கத்தை வளர்ப்பதில் இருந்த ஆர்வமே பன்மடங்காயிற்று. நடேசன், சுப்பிரமணியன், பழனி, மகாலிங்கம், கலா, வாசுகி, நாயர் தம்பதிகள், வி. சிவசுப்பிரமணியம், இரத்தினசபாபதி எனப் பலர் சங்கப் பணிகட்காகத் தொண்டாற்றினர். இங்கு பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பலர் சங்கம் வளர வேண்டும், கோவில் கட்டப்பட வேண்டும் என உளமார விழைந்தனர்.
பவன் இசைக்கச்சேரிகள் நடத்தினார். கயிலாயநாதன் கதாகாலட்சேபங்கள் செய்தார். இறியுனின் நகர மேயர் டாக்டர் அக்சேல் கிருஷ்ணன் வந்து பாராட்டினார்.
ஐம்பொன்னால் செய்யப்பட்ட வினாயகர், நடராஜர், முருகன் உருவச்சிலைகள் வழிபாட்டிற்கு வைக்கப்பட்டன. மீண்டும் கலை நிகழ்ச்சியைச் சீசெல்சு தொலைக்காட்சி ஒளி பரப்பியது.

நிலம் புகுந்தமை

கோவில் கட்ட நிலம் வாங்கவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. நான்கைந்து இடங்களைப் பார்த்தோம். திருப்பணி நிதியைத் தொடக்கினோம். வியப்பு என்னவெனில் நாம் பார்த்த இடங்கள் ஒவ்வொன்றையும் வேறு தேவைக்காக ஒதுக்கப்படும் சூழ்நிலையே ஏற்பட்டது.
திருப்பணி நிதிக்காகத் தமிழ்நாட்டு நடனமணி ராஜ் ஸ்ரீ கெளதம் சீசெல்சு வந்து நடமாடினார். தீபம் அரங்கில் இரண்டு நாட்களும் பிற இடங்களில் இரண்டு நாட்களுமாக, ராஜ்ஸ்ரீ பரதக் கலையைச் சீசெல்சு மக்கள் அனைவருக்கும் பரப்பினார்.
குவின்சி தெருவில் நிலம் விற்பனைக்கு வருகிறது. கோவிலுக்கு வாங்க வேண்டும் என, 1985 கார்த்திகையில் ஒருநாள் சிவஷண்முகம்பிள்ளை என்னிடம் கூறினார். விலையைக் கேட்ட பொழுது முடிகிற காரியமா? என மலைத்தேன். முடியும் என நம்பிக்கையூட்டினார். மகாலிங்கமும் சேர்ந்து உற்சாகப் படுத்தினார். பரோடா வங்கி முகாமையாளரிடம் கடன் கேட்டோம். தருவதாகக் கூறினார்.
அவ்வமையம் சங்கத் தலைவர் தீனதயாளன் பிள்ளை தமிழ்நாட்டில் இருந்தார். அவர் சீசெல்சு வந்ததும், குவின்சி வீதியில் சிவஷண்முகம்பிள்ளை காட்டிய நிலத்தை வாங்குவது எனச் சங்கம் தீர்மானித்தது. 27.12.85ல் நிலம் சங்கத்துக்குச் சொந்தமானது.
அருள் தொடர்ந்தமை
 1985 மார்கழியுடன் எனது ஐ.நா. ஆலோசகர் பணி அந்தப் பகுதியில் முடிவடைந்தது. நாம் சீசெல்சை விட்டுப் புறப்பட்டோம். ஊக்கமும் உற்சாகமும், ஏற்றமும் எழுச்சியும் கொண்ட தொண்டர்கள் அங்கு இருந்தனர். அயராது உழைத்தனர். இல்லந்தோறும் ஏறினர், இறங்கினர். நிதி சேர்த்தனர்.
விழாக்கள் நடத்தினர். திருக்கூட்டத்தைப் பெருக்கினர்.
கோவிலைக் கட்டி எழுப்பச் சுறுசுறுப்பாகத் தொண்டாற்றினர். சங்கத்தின் பொதுக் கூட்டங்கள் முறையாக நடந்தன. கூடுமின் தொண்டர் புறநிலாமே என்ற அழைப்பை ஏற்று மேலும் பலர் நெருங்கி வந்து பணிபுரிந்தனர்.
தமிழ்நாட்டிலுள்ள பலரின் கவனத்தை இத்திருப்பணிபால் ஈர்க்க முயன்றோம். பாலசுந்தரமும் நானும் திருப்பதி சென்றோம். சங்கத் தலைவரும் நானும் முதலமைச்சர்களைச் சந்தித்தோம். முக்கிய பிரமுகர்களையும் சந்தித்துப் பேசினோம். பல வழிகளில் முயன்றும் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில மெய்யன்பர்கள் தனிப்பட்ட தம்மால் இயன்ற தொகைகளைத் தந்தனரே அன்றி வேறொன்றும் இல்லை.
கணபதி ஸ்தபதியார் சீசெல்சு வந்ததும் வரைபடம் தந்ததும், மணியன் வந்ததும் அடிக்கல் நட்டதும், கலைக்குழுக்கள் வந்ததும் நிதி சேர்ந்ததும், அருள் பெற விரும்பிய அடியவர் கூட்டம் ஒவ்வொரு கல்லாய் அடுக்கிக் கட்டியதும், அங்கு அமைந்த அருள் தரும் மூர்த்தங்களுக்கு ஆராதனைகள் அளப்பற நடந்ததும், பாமாலை சூட்டியதும் பக்தி ஒலி பரப்பியதும் இன்னும் பலவுமாய் நடந்தவை அனைத்தும் இன்றைய குடமுழுக்கின் ஏணிப்படிகள். இத்தொண்டுகள் தெரிந்தவர் அக்குறிப்புகளை விபரமாக எழுதுவராக.
சீசெல்சில் குடிகொண்டு, தனது அடியவர்களை அருள் பாலிக்க அருள்மிகு நவசக்திப் பிள்ளையார் திருவுளம் கொண்ட பொழுதே நாம் அனைவரும் அவரின் கருவியாகச் செயற்பட்டு வருகிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பணி என அவர் விதித்தார். பிள்ளையாரின் திருவுளப் பாங்கிற்கு அமையத் தொண்டாற்றும் பேறுபெற்றோம்.
இத்திருப்பணியில் எம்மையும் தம்முடன் இனைத்துத் தொண்டாற்றிய அனைவருக்கும் இக்குடமுழுக்கு நாளில், இல்லத்தவருடன் சேர்ந்து எம் கடப்பாட்டையும் நன்றியையும் தெரிவிக்கிறோம். உள்ளத்து உவந்து உள்ளுவாருக்கு உறுதுயர் ஓட்டி , அருள் வெள்ளம் பெருக்கும் பிள்ளையார் அனைவருக்கும் ஆன்ம ஈடேற்றம் பாலிப்பாராக.


No comments: