Thursday, October 17, 2019

எங்கட சிவாசிலிங்கத்தையே


(குட்டிக் கதை)
எங்கடை சொந்தக்கார மலடன்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்

பாட்டி:
உது எந்த ஊர் மோனை?
பெயர்த்தி:
அறுகு வெளி ஆச்சி.

பாட்டி:
எல்லாப்பக்கமும் கடலாய்க் கிடக்கு?
பெயர்த்தி:
இங்கை ஆக்கள் குறைவு. .

பாட்டி:
கோயில் ஒண்டு தெரியுது? .
பெயர்த்தி:
அது கண்ணகை அம்மன் கோயில். .

பாட்டி:
நாலஞ்சு வீடுகள் தெரியுது போல மோனை? .
பெயர்த்தி:
ஓமணை இங்கை நாலு வீடுகள் மட்டும் தான் இருக்குது. .

பாட்டி:
இந்த வடிவான ஊரிலை வடிவான வீடுகள். .
பெயர்த்தி:
ஓமணை. இருபாலையார் தான் நெடுங்காலமாய் இஞ்சை இருக்கினம். அவைன்ரைதான் முழு ஊரும். .

பாட்டி:
ஓ… .
பெயர்த்தி:
கேகாலையார் பிறகு வந்தேறினவை. கொஞ்சக் காணியைக் கேட்டு வாங்கினவை.

பாட்டி:
அதென்ன பெரிசா ஒரு வீடு?
பெயர்த்தி:
கொஞ்சக் காலத்துக்கு முந்தி மேற்கிலேயிருந்து கீரிமலையார் வந்தவை. அடாத்தைக் காணியைப் பிடிச்சவை. வந்த உடனையே கண்ணகி கோயிலை இடிச்சு தங்களுக்கு வீடு கட்டினவை.

பாட்டி:
உதென்ன குச்சுக் குச்சாய் வீடும் சந்தும்?
பெயர்த்தி:
கிட்டடிலை வந்தவை. முகமாலையார் கடலாலை வந்து இறங்கினவை. கொஞ்சக் காணி இருபாலையாரிடம் விலைக்கு வாங்கினவை.

பாட்டி:
உனக்கு எல்லாம் நல்லாய்த் தெரியுது? நாங்கள் கொட்டிலுக்குள்ளை இருந்ததாலை நாட்டு நடப்பு அறியேல்லை. .
பெயர்த்தி:
வடக்கிலை தெரியிறது இருபாலையார் வீடு. இடிஞ்சு கொட்டிண்டு கிடக்கு. காவோலையாலை கூரை போட்டுக்கொண்டு இருக்கினம். அவை வீட்டைத் திருத்தாமை கண்ணகி கோயிலை மீளக் கட்டினவை.

பாட்டி:
அப்ப அந்தப் பெரிய வீடு?
பெயர்த்தி:
மேற்கிலை தெரியிறது கீரிமலையார் வீடு. வெளி நாட்டிலை இருந்து எக்கச்சக்கமாக் காசு வருகுதணை. கோயிலை இடிச்ச கல்லோடை சேத்து வடிவாய்க் கட்டி வைச்சிருக்கினம்! .

பாட்டி:
என்ன மோனை சொல்லுறை? உதுகள் எப்படி அறிஞ்சனீ? .
பெயர்த்தி:
கேளணை. கிழக்கிலே கொஞ்ச நாளைக்கு முந்தி வந்த முகமாலையார் சின்னச் சின்ன அறையளோடை வீட்டைக் கட்டி வச்சிருக்கினம். அவைக்குக் கன பிள்ளையள்.

பாட்டி:
அங்காலை நாய் குலைக்குதே? ஏன்? .
பெயர்த்தி:
பொறணை சொல்லுறன். தெற்கே தான் கேகாலையாற்றை வீடு. பெரிய வளவு. வீடும் பெரிசு. கடி நாய்கள் கனக்க. வாசலிலை காவல்காரன் துவக்கோடை நிக்கிறான்.

பாட்டி:
நல்ல சாதி சனம் போலை?  சந்தோசமாய் இருக்குதுகள். .
பெயர்த்தி:
சும்மா தொலுக்கரியாதை ஆச்சி. ருசியான கதை சொல்லுறன். குறுக்காலை பேசாமல் கேட்டியானால் சொல்லுறன். .

பாட்டி:
சொல்லு மோனை கேட்கிறன்.
பெயர்த்தி:
பாரணை அங்கையும் அவைக்கே பிரச்சனைதான். இருபாலையார் வீட்டில வடிவான மோள். படிப்பிலை கெட்டிக்காரி. அவளுக்கு கலியாணம் பேசுகினம்.
கேகாலையார் வீட்டில ஒரு இளந்தாரி. எந்த நேரமும் நித்திரையிலை இருப்பான்.
இருபாலைப் பிள்ளையை வீட்டுக்கு வேலைக்கு வரட்டாம். வீட்டிலை கஷ்டம் தானே, வேலைக்கு வந்தாக் காசு தாறம்.  வேலைக்கு வா, எனக் கேகாலையார் கேக்கினம். 
ளந்தாரி ஒண்டை வச்சிருக்கிறியள். கலியாணம் பண்ணிக் கூட்டிக்கொண்டு போங்கோ. அவளை அனுப்புறோம் எண்டவையாம் இருபாலையார்.
வேலைக்கு அனுப்புங்கோ எண்டு கேகாலையார் கேக்ககலியாணம் பண்ணுங்கோ எண்டு இருபாலையார் சொல்ல, பெரிய பிரச்சனையாப் போச்சு. அடி பிடி எண்டு எந்த நாளும் சண்டை. 

பாட்டி:
கலியாணஞ் செய்யிறதுதானே, குமருகளை வைச்சுக்கொண்டு எத்தினை நாள்? .
பெயர்த்தி:
நீ குறுக்கை பேசாதை ஆச்சி. சொல்லிமுடியும் வரை என்னைக் குழப்பாதை.

பாட்டி:
சரி மோனை.
பெயர்த்தி:
இருபாலையார் வீட்டுக்கு இடைக்கிடை ஒரு சொந்தக்காரப் பொடியன் வந்துபோறவன். ரோட்டாலை போகேக்கை க்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரியிலை கிடந்தவன். இடுப்பில சரியான அடியாம். ஒப்பரேஷன் செய்தவையாம். அவன் பிள்ளை பெறேலாத அடியாம்.

கேகலையார் அடிக்க வந்தாச் சொந்தக்காரப் பெடியன் இருபாலையார் வீட்டுக்காரருக்காகச் சத்தம் போடுவான்.

அடிபிடி எண்டு வந்தால் கீரிமலையாற்றை தேப்பன் கேகாலையாருக்கு உதவி. இருபாலையாரை ஒரு வழி பண்ணு எண்டு தேப்பன் கேகாலையாரை உசுப்புவான்.

கீரிமலையாற்றை தாய், இருபாலையார் வீட்டை வருவாள். விடாதே பிடி என இருபாலையாரை உசுப்பேத்துவாள்.

சண்டயைச் சாக்காட்டி, முகமாலையார் கொஞ்சக் காணியை பிடிக்க எல்லை வேலியை அரக்குவினம். எல்லாற்றை காணிக்குள்ளையும் கொஞ்சம் கொஞ்சமாய் அரக்கி அரக்கி எடுப்பினம். அவைக்கு பிள்ளையள் கனக்க.

கல்யாணம் பண்ணித் தரலாம் எண்டு இருபாலையார் சொல்ல, அடிமையாய் வா எண்டு கேகாலையார் கேக், இழுபறியாகப் போய்க் கொண்டே இருக்குது.

இருபாலையாற்றை வீட்டை ஒருநாள் கேகாலையார் உடைச்சுப் போட்டினம். காவலுக்கு நிண்டவனும் ஒருநாள் சுட்டுப் போட்டான். வெளியாட்களைக் கொண்டந்தும் இருபாலையாரை அடிச்சினம்.

வடிவான பிள்ளை ஆனால் கல்யாணம் தள்ளிக் கொண்டே போகுது.

சொந்தக்காரப் பொடியனும் ஒரு நாள் சொன்னான், நான் கட்டுறன். உங்கட பிள்ளையை எனக்குத் தாங்கோ.

வேலைக்காரியா வா. அடிமைப் பெண்ணாய் இரு,ண்டு கேக்கினம் கேகாலையார். கல்யாணம் வேண்டாம், வேண்டவே வேண்டாம்,ண்டு அவை சொல்லுகினம்.

சொந்தக்காரப் பொடியனோ நான் உன்னைக் கட்டுறேன் எண்டு சொல்லுறான்.

கேகாலையான் இளந்தாரி. ஆனால் சோம்பேறி. ஆள்விட்டு அடிப்பான் துவக்கால் சுடுவிப்பான். கடி நாய்களை அவிழ்த்து விடுவான்.

சொந்தக்காரப் பொடியனோ மலடன். ஆனால் கடும் உழைப்பாளி. ஆபத்து வந்தால் உதவிக்கு வருகிறவன். சத்தம் போடுறவன் அவன்.

இருபாலையாரின் வடிவான பொம்பிளையோ, தேப்பன் தாயிடம் போனாள். சொந்தக்காரனைத் தான் கட்டிக் கொள்வேன் எண்டாள்.

மலடன் எண்டாலும் பரவாயில்லை. உழைப்பான், சாப்பாடு தருவான்,டுப்புத் தருவான், வீட்டைத் திருத்துவான், ஆபத்திலிருந்து காப்பான். ஆனபடியா, அவனைத் தான் நான் கட்டுவேன் எண்டாள். .

பாட்டி:
மோனை, உவன்
எங்கட சிவாசிலிங்கத்தையே சொல்றாய்? அவனே அந்தச் சொந்தக்காரப் பொடியன்?



No comments: