Monday, August 12, 2019

சைவ வாக்காளர்


சைவ வாக்காளர் மீது திடீர்க் காதல்

மறவன்புலவு க சச்சிதானந்தன் 

சிவசேனை



முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைப்பேசியில் கோயம்புத்தூரில் வாழும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுனன் சம்பத்தை அழைத்தார்.



நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கிளிநொச்சியிலிருந்து கோயம்புத்தூருக்கு அழைத்தார். அர்ஜுன் சம்பத்துடன் பேசினார்.



மன்னன் சங்கிலியனின் 400ஆவது நினைவு நாளில் யாழ்ப்பாணம் வந்து நிகழ்ச்சியில் கலந்து கோயம்புத்தூர் திரும்பியபின் அர்ஜுன் சம்பத்தோடு தமிழ்த் தேசியத் தலைவர்களின்  தொடர்பாடல் பெருகும்.



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குகதாசனும் சத்தியலிங்கமும் இந்துத்துவப் பாரதீய சனதாக் கட்சியைச் சந்திக்கச் சென்னை, தில்லி எனச் செல்கிறார்கள்.



முன்பு தமிழ்த் தேசியத் தலைவர்கள் திராவிடக் கட்சித் தலைவர்களோடேயே பேசுவார்கள். இப்பொழுது இந்துத்துவாத் தலைவர்களோடு பேசுகிறார்கள்.



கோயம்புத்தூரில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நான் வருகிறேன் என அர்ஜுன் சம்பத்திடம் கிளிநொச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேட்டுள்ளார்.



தன் ஊருக்குப் பக்கத்தில் முறிகண்டி இந்துபுரம் சிவன் கோயில் கருவறைக்கும் தீர்த்தக் கிணற்றுக்கும் இடையே அடாத்தாகக் குடியிருக்கும் கிறித்தவரை, அக்கோயில் சிவலிங்கத்தைக் கிணற்றுள் வீசிய கிறித்தவரை ஒருநாளும் கண்டிக்காத, அந்த மக்களுக்காக ஒருநாளும் குரல் கொடுக்காத, அந்த நிலத்தைச் சிவன் கோயிலுக்கு மீட்காத சிறீதரன், கோயம்புத்தூருக்கு விநாயகர் சதுர்த்திக்குப் போக விழைகிறார்?



 மகா சிவராத்திரிக் காலத்தில் திருக்கேதீச்சரத்தில் கத்தோலிக்கரின் அட்டூழியத்தைக் கண்டு கண்கலங்காத, கண்டித்துக் கருத்துச் சொல்லாத சுமந்திரன், முருங்கன் செட்டியார்மகன் ஊரில் சைவக் குடும்பங்களைக் கிறித்தவத்துக்கு மதம் மாற்றுகின்ற சுமந்திரன், சைவர்கள் மீது திடீர்க் காதல் கொள்கிறார். நல்லூர் வருகிறார். நல்லை ஆதீனத்தில் சைவத் தலைவர்களைச் சந்திக்கிறார். உங்களுக்கு சிக்கல் என்ன? என்று கேட்கிறார். அப்பாவியாக நடிக்கிறார்.



தேர்தல் வருகிறது சைவ வாக்குகளைத் தமக்காக வேண்டும். இந்திய இந்துத்துவ அமைப்புகளோடு தொடர்பு உள்ளதாகக் காட்டிக் கொண்டால் சைவ வாக்குகள் தமக்குக் கிடைக்கும் எனத் தமிழ் தேசியத் தலைவர்கள் நம்புகிறார்கள்.



கடந்த 3 ஆண்டுகளாக வடக்கு மாகாணத்தில் உள்ள சைவ வாக்காளர்களுக்கு மீட்டும் மீட்டும் நினைவூட்டி வருகிறேன். சைவ வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் எனக் கூறி வருகிறேன். இந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என நான் கூறவில்லை. சைவ வாக்காளர்கள் சைவ வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்றே கூறி வந்தேன்.


கூட்டங்களில் பேசினேன் அறிக்கை விடுத்தேன். சுவரொட்டிகள் ஒட்டினேன். வெளியீடுகளைக் கொண்டு வந்தேன். அறப்போராட்டங்களை நடத்தினேன். உலக அரங்குகளுக்கு எடுத்துச் சென்றேன்.



போருக்குப் பின்னான சூழ்நிலையில் சைவர்கள் மீது  கிருத்தவ மத மாற்றிகள் முகமதிய மத மாற்றிகள் புத்த அடாத்தாளர்கள் நிகழ்த்தும் கொடுமைகளைப் பட்டியலிட்டு வருகிறேன்.



செட்டிகுளம் மாணிக்கம் தோட்டம் மிதியார் தோட்டம் சிதம்பரபுரம் வவுனியா வடக்கு முறிகண்டி இந்துபுரம் சிலாவத்துறை மூன்றாம்பிட்டி வெள்ளாங்குளம் மாந்தை வண்ணான்குளம் முருங்கன் பூநகரி கிளிநொச்சி வண்ணார்பண்ணை பண்டத்தரிப்பு வட்டுக்கோட்டை சுன்னாகம் மீசாலை கொடிகாமம் மட்டுவில் உடுவில் மானிப்பாய் நல்லூர் எனச் சுட்டிக் காட்டக்கூடிய ஊர்களில் சிவசேனையின் நடவடிக்கையால் மத வெறியர்களை விரட்டி இருக்கிறேன்.



மத மாற்றத்தை ஊக்குவிக்கும் நற்செய்திக் கூட்டங்களில் உரையாற்றச் சுற்றுலா நுழைவு உரிமத்தில் வந்த வெளிநாட்டவரைப் பேச விடாது காவல்துறை வழி தடுத்து இருக்கிறேன்.



மாட்டிறைச்சிச் கடைகளை மூடவேண்டும் என்ற இயக்கத்தைத் தொடங்கினேன்.  அந்த இயக்கம் அரும்பி முளைவிட்டு வடமாகாணத்தின் 8 உள்ளூராட்சி சபைகளில் மாட்டிறைச்சிக் கடைத் தடைத் தீர்மானங்கள் நிறைவேற்றி இருக்கிறார்கள். மன்னாரிலும் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் தீர்மானங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.



முகமதியர்கள் மக்காவுக்குப் புனித வழிபாட்டுப் பயணம், கிறித்தவர்கள் யெரூசலம் உரோமாபுரி எனப் புனித வழிபாட்டு பயணங்கள், கச்சத்தீவுக்கு வரும் கத்தோலிக்கர்களுக்கு நுழைவு உரிமம் இல்லை, புத்தர்கள் கயாவுக்கு புனித வழிபாட்டு பயணம், சைவர்களுக்குப் புனித வழிபாட்டுப் பயணம் இல்லையா? சிதம்பரத்துக்குக் கப்பல் விடமாட்டீர்களா என அரசுகளைக் கேட்டு இலங்கை இந்திய அரசுகளின் ஒப்புதல்களைப் பெற்றிருக்கிறேன்



சைவ வாக்காளரின் வாக்குகளைப்பெற்றுத் தேர்வான உறுப்பினர்கள் சைவர்களுக்கு எதிராகவே வட்டுக்கோட்டையில் உடுவிலில் மானிப்பாயில் திருக்கேதீச்சரத்தில் சிலாவத்துறையில் செட்டிகுளத்தில் மன்னாரில் முறிகண்டியில் நடந்து வருகிறார்கள் என்பதைக் கடந்த 3 ஆண்டுகளாக வெளிப்படுத்தித் தொட்டுக் காட்டி வருகிறேன்.



ஈழத்தில் சைவத்தமிழ் அரசனின் 400ஆவது ஆண்டு நினைவு நாள் வைகாசி தேய்பிறை எட்டாம் நாள் என வழிபட்ட நிகழ்வுகள் சைவ தமிழரின் உணர்வோடு கலந்தவை. தமிழ்த் தேசியத் தலைமைகள் பெருமளவில் கலந்து கொள்ளாத நிகழ்வு.



சிவ சேனையின் இந்த அழுத்தம் சைவர்களின் மீளெழுச்சி வடிவம் ஆகியது.



இந்தப் பின்னணியில் சைவர்கள் வலிமையுள்ளவர்கள், சைவ வாக்காளர்கள் சைவர்களுக்கே வாக்களிப்பார்கள், எனவே அர்ஜுன் சம்பத்தைத் தொடர்பு கொண்டால், அர்ஜுன் சம்பத்துடன் தொடர்பாக இருக்கிறோம் என்ற செய்தி சைவ வாக்காளர்களுக்குத் தெரிந்தால், நல்லை ஆதீனத்துக்கு வந்தோம் எனத் தெரிந்தால், சைவர்கள் தமக்கு வாக்களிப்பார்கள் என



இந்நாள்வரை கிருத்தவதுக்கும் முகம்மதியத்துக்கும் முண்டு கொடுத்துக் கொண்டிருந்த புத்தத்துக்கு எதிராகச் சைவத்தை உசுப்பிக்கொண்டிருந்த, போலித் தமிழ்த் தேசிய வாதிகள், சைவ வாக்குகளை நப்பாசையுடன் வேட்பதும் விழைவதும் அப்பட்டமான சந்தர்ப்பவாதம்.


No comments: