Monday, August 12, 2019

யாழ்ப்பாண ஆயர்

யாழ்ப்பாண ஆயருக்குச் சிவசேனையின் வாழ்த்துகள்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் 20.07.2019

சிலாபத்துக்கு சற்றே வடமேற்கே உடைப்பு. கரையோரச் சிற்றூர். தோராயமாக  இருபதினாயிரம் சைவர்கள். பத்துக்கும் குறைவான கத்தோலிக்கக் குடும்பங்கள். அதே அளவு முகம்மதியக் குடும்பங்கள்.

புகழ் பெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோயிலின் உறைவிடம் உடைப்பு. பாண்டவர் காலம் தொடக்கம் அங்கே அக்கோயில் இருந்து வருகிறது. பாண்டவ குருகுலத்து மக்கள் அக்கோயிலின் வழிபாட்டாளர்கள்.

 உடைப்பில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றைக் கட்டினார்கள். இன்றும் அத்தேவாலயம் அங்கு இருக்கிறது.

வருவாய் குறைவு. குறைந்த அளவு எண்ணிக்கையில் கத்தோலிக்கர். எனவே தேவாலயத்தைப் பராமரிக்க வசதிக் குறைவு. பங்குத் தந்தையும் வருவது அரிது.

கட்டடம் சிதிலமடைந்தது. தளபாடங்களைக் கரையான் அரித்தது. கடல் காற்று எரித்தது.

அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் அறங்காவலர் இதைக் கண்டனர். சைவத் திருக்கோயில் வருவாயில் இருந்து ஒரு பகுதியைக் கத்தோலிக்கத் தேவாலயத்தைத் திருத்துவதற்காக ஒதுக்கினர். கட்டடத்தை திருத்தினர்.  புதிய தளவாடங்களை அமைத்தனர். தேவாலய வளாகத்தில் பூங்கா அமைத்தனர். ஞாயிற்றுக்கிழமை தோறும் பங்குத்தந்தை அங்கு வந்து செல்ல செலவைக் கொடுத்தனர்.

நான் கற்பனையாக இந்தச் செய்தியைச் சொல்ல வில்லை அங்கே எனது உழுவல் நண்பர் தமிழ் எழுத்தாளர் அறிஞர் பெருமகனார் வீர சொக்கன் இருக்கிறார். +94 75 754 5539 அவரைக் கேளுங்கள் சொல்வார்.

தெல்லிப்பளையில் சைவப் பெருமாட்டி தவத்திரு சிவத்தமிழ்ச்செல்வியாரின் நினைவு நாளில் உரையாற்றிய யாழ்ப்பாண ஆயர், கத்தோலிக்க நல்லிணக்கக் குறிகளை முன்வைத்துள்ளார்.

உடைப்பில் சைவப்பெருமக்கள் காட்டும் நல்லிணக்க எடுத்துக்காட்டு யாழ்ப்பாண ஆயரின் கவனத்துக்கு வந்ததோ அறியேன்.

யாழ்ப்பாண ஆயர் அவர்களே உங்களது நல்லிணக்கச் செய்தியை வரவேற்கிறேன், வாழ்த்துகிறேன். முன்பும் மகா சிவராத்திரி நாள் உடைப்பை ஒட்டி நீங்கள் இவ்வாறு நல்லிணக்கச் செய்தியைச் சொன்ன உடனேயே உங்களை வாழ்த்தினேன். பின்னர் நீங்கள் உங்கள் கருத்தில் இருந்து பின்வாங்கி விட்டீர்கள்.

திருக்கேதீச்சரம் தொடர்பாக யாழ்ப்பாண ஆயர் எமிலினியாசுப்பிள்ளை அறுபதுகளில் சேர் வைத்தியநாதனுக்கு நல்லிணக்க நோக்குடன் வாக்குறுதிகள் அளிப்பதும் பின்பு பின்வாங்குவதும் இயல்பாக இருந்ததை சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள் நூலாக எழுதியுள்ளார்கள்.

திருக்கேதீச்சரமும் திருக்கோணேச்சரமும் தொண்டீச்சரமும் போர்த்துகேயப் படை எடுப்பால் முற்றுமுழுதாக உடைந்த சைவக் கோயில்கள்.

கத்தோலிக்கர் திட்டமிட்டு உடைத்த கோயில்கள். அங்கிருந்த பொற்களஞ்சியங்களைக் கொள்ளையிட்ட கோயில்கள்.

உடைப்புத் திருக்கோயிலார் போல் கத்தோலிக்க ஆயர்களும் செயற்பட வேண்டும் என்று நான் கோரவில்லை

இக்கோயில்களை மீளமைக்க நிதி வழங்க வேண்டும் என்று நான் கேட்கவில்லை.

சைவப் பெருமக்கள் திரண்டு நிதி வழங்கி நிதி திரட்டி திருக்கோயில்களை மீள அமைப்பார்கள். திருப்பணி செய்வார்கள் பூசை வழிபாடுகளை ஒழுங்கு செய்வார்கள்.

கத்தோலிக்கர் செய்யக்கூடியதெல்லாம் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்தவர் கிருத்தவரான மருத்துவர் நாகநாதன் கூறியது போல், வரலாற்றுப் புகழ் வாய்ந்த பழமை வாய்ந்த திருக்கேதீச்சரம் கோயிலைச் சீரமைக்கக் கத்தோலிக்கர்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். 

திருக்கேதீச்சரத்தில் சுற்றுவட்டாரத்தில் வேறு எந்த மதக் கோயிலும் அமையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

சைவ கத்தோலிக்க மக்களின் ஒற்றுமை குலையாமல் பேண வேண்டும். காலம் கடந்து விடவில்லை ஒருதலைப்பட்சமாக நீங்களே முடிவு எடுக்கலாம். 

1. கிருத்தவர்களின் மதமாற்ற முயற்சிகளைத் தடுக்கலாம். மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டுவருவதை ஆதரவளிக்கலாம்.

2. முழுக்க முழுக்கச் சைவ ஊர்களிலே கிருத்தவத் தேவாலயங்கள் அமைப்பதையும் மதமாற்றச் சபைகளின் வீடுகளில் களியாட்டம் நிகழ்வதையும் தடுக்கலாம்.

3. தலைமன்னார், கற்குளம், கற்கடந்தகுளம், குஞ்சுக்குளம் போன்ற சைவ மக்கள் வாழும் ஊர்களின் சாலைத் தலைவாயிலில் கிருத்தவ வரவேற்பு வளைவுகளை நீக்கி விடுங்கள். தெருவோரங்களிலும் அரச காணிகளில் கிருத்தவர் கட்டி வரும் சிறிய சிறிய கிருத்தவக் கோயில்களையும் கத்தோலிக்கச் சின்னங்களையும் உடனடியாக அகற்றி விடுங்கள்.

4. சைவர்கள் கிறித்தவர்கள் இருசாராரும் ஒருவரை ஒருவர் தாக்க வேண்டும் என்ற தீயநோக்கம் கொண்ட ஒரு சிலர் இருப்பது இயல்புதான். அன்பையும் அறத்தையும் அருளையும் விதைக்கும் மதகுரு வானவர்கள் ஆதீனங்கள் இவர்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய கடமை இரு தரப்பாருக்கும் உண்டு.

5. சைவ வாக்காளர்கள் கத்தோலிக்க வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் தயக்கம் காட்டுவதில்லை. ஆனால் தேர்ந்தெடுத்த வேட்பாளர்கள் பின்னர் சைவர்களின் முதுகில் குத்துகிறார்கள். இவற்றிற்குச் சில கத்தோலிக்கக் குருமார் துணை போகிறார்கள். ஆயர் அவர்களே இக்கொடுமையைத் தடுத்து நிறுத்துங்கள்.

இந்த நோக்கங்களில் வரைவுகளில் உங்கள் முயற்சிகளுக்குச் சிவ சேனையும் இலங்கை வாழ் சைவ மக்களும் உலகம் வாழ் இந்துக்களும் உறுதுணையாக இருப்பார்கள் என்பதையும் கத்தோலிக்க மதத்தை முழுமையாக மதித்து நடப்பார்கள் என்பதையும் உடைப்புச் சைவர்களின் எடுத்துக்காட்டு இலங்கைச் சைவர்களின் வாழ்வியல் நோக்கு என்பதையும் உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

No comments: