Thursday, March 14, 2019

சென்னையில் தை, மாசி 2019

21.01.2019 சென்னை வந்தேன். இரண்டு மாத காலமே சென்னையிலிருந்தேன்.  முழுமையாக முயற்சியின் விளை நிலமாக எனக்கு இருந்த காலமே இரு மாதங்கள்.
சென்னை அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சரம் கோயில்,
மதுரை அருள்மிகு மீனாட்சி உடனுறை சுந்தரேசுவரர் கோயில்
இராசபாளையம் அருள்மிகு மாப்பிள்ளைப் பிள்ளையார் கோயில்
பிடதி அருள்மிகு பார்வதி உடனுறை பரமேச்சரன் கோயில்
வழிபட்ட திருக்கோயில்கள்.
நாள் தோறும் காலையும் மாலையும் நினைக்கும் பொழுதுகளிலும் உண்ணும் பொழுதுகளிலும் தூங்கும் போதிலும் அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையாருக்கு நன்றி சொல்லிக் கொள்வேன்.
மகிழ்ச்சி, உற்சாகம், ஆற்றல், திறமை இடையறா உழைப்பு இவை என்னிடம் சிறிதளவேனும் உள்ளதெனில்அவரின் அருள் அன்றி வேறென்ன?
சிவகாமியை மகளாகத் தந்தவர் பிள்ளையார். கேசவனை ருமகனாகத் தந்தவரும் பிள்ளையார். அரன்நாநமக்குப் பிள்ளையார் தந்த புகழ் அல்லவா. 
பிள்ளையார் எனக்குத் தந்த மச்சி, கயல்விழி, முருகவேள், பிஞ்ஞகன் புறத்தே முரணாக உள்ளவராகக் காட்டுவர்.அவர்கள் மனத்தின் ஆழத்தில், உள்ளத்தின் அடியில், என் மீது அன்புப் பெருக்கம் என் மீது உண்டுஅந்த அன்புப் பெருக்கத்தை நினைப்பேன். முரணை நான் கருத்தில் கொள்வதே இல்லை.
21.1.2019இல் சென்னை வந்திறங்கிய முதல் ஒரு வாரம் என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. எந்த நேரமும் தூங்கினேன். தூங்குவது, உண்பது, தூங்குவது, உண்பது, என மாறி மாறி ஒரு வார காலம் கழிந்தது. நான் தொடர்ந்து உற்சாகமாகப் பணிபுரியும் நாள் வருமோ என்ற ஐயம் எனக்கு வந்தது.
அனைத்து மருத்துவப் பரிசோதனைகளுக்கும் ஆளானேன். மருத்துவரிடம் கலந்தாலோசித்தேன். எனக்கு எவ்விதமான நோய் அறிகுறியும் இல்லை என்றார் மருத்துவர். வழமையாக வயதுக்குரிய இயல்புகள் இருப்பதாக மருத்துவர் கூறினார்.
சிட்னியில் மருத்துவப் பரிசோதனையில் வயிற்றில் கிருமிகள் இருந்தால் அத்தகைய தூக்கம் வரும் எனமருத்துவர் சொன்னதை நினைவில் கொண்டேன். மீண்டும் மருத்துவரிடம் சென்றேன். வயிற்றில் கிருமிகளை அழிக்கும் மருந்துகளைக் கேட்டு வாங்கினேன். ஒரு வாரத்திற்கு பின்பு நான் வழமையாக, வழமையை விட உற்சாகமாகப் பணிபுரியத் தொடங்கினேன்.
அருள்மிகு வள்ளைக்குளப் பிள்ளையார் திருக்கோயில் திருப்பணி என் மனத்தில் மீநின்றது. நிதி திரட்டவேண்டும், அடித்தளக் கட்டு வரைபடம், பொருள் பட்டியல் காணவேண்டும். கோயில் மணி, கற்சிலைகள் செய்யவேண்டும்.
மதுரையில் 17 கல்வி நிறுவனங்களையும் இருபத்தொரு ஆலைகளையும் சொந்தமாக வைத்திருக்கும் திரு.கருமுத்து கண்ணன் அவர்கள், அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் கோயில் மணியையும் நடராஜர் சிலையையும் செய்து தருவதாக ஒப்புக்கொண்டார். மதுரையிலும் கும்பகோணத்திலும் சிற்பிகளிடம் விலைக்கூறு பெற்றேன். கொடுத்துள்ளேன்.
இராஜபாளையத்தில் பஞ்சு வணிகர் திரு இராதாகிருஷ்ணன் இராஜா அவர்கள்அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் கோயிலுக்காகத் திருஞானசம்பந்தர் திருநாவுக்கரசர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் தனித்தனியாக மூன்றரை அடி உயரக் கற்சிலை வடிவங்களைச் செய்து தர ஒப்புக் கொண்டுள்ளார். மதுரைச் சிற்பக் கலைக்கூடத்தில் விலைக்கூறு பெற்று அனுப்பினேன்.
அருள்மிகு வீரகத்திப் பிள்ளையார் கோயில் கருவறை அடித்தத்துக்காக raft foundation அடித்தளக் கட்டுமான வரைபடத்தையும் கட்டுமானப் பொருள்களின் பட்டியலையும் சென்னையில் கட்டடக் கலைஞர் திரு. நாராயணசாமிஅவர்கள் தயாரித்துத் தந்தார்.
இராஜபாளையத்தில் இராம்கோ நிறுவனர் இராமசுப்பிரமணிய இராஜா 2016இல் அருள்மிகு வீரகத்தி பிள்ளையார் கோயிலுக்காக 3500 சீமெந்துப் பைகள் நன்கொடையாகத் தந்தார். 2017இல் அவர் மறைந்தார். 2.3.19 அன்றுஇராஜபாளையத்தில் அவர் நினைவிடத்துக்குச் சென்றேன். அஞ்சலித்தேன்.
3500 பைகளில் 2016இல் 200 பைகள் தந்தனர். 2019 தையில் 560 சிமெந்துப் பைகளைத் தந்தனர். சென்னையில் இராம்கோ நிறிவனம் சென்று மூத்த அலுவலர்களைச் சந்தித்து வந்தேன். அவர்கள் பணி தொடரத் தொடரச் சீமெந்து தருவார்கள்.
www.vallakulam.com மின்னம்பல தளத்தில் தரவுகள் ஏற்ற முடியாது தவிப்பேன். சேலம் திரு. முரளி என் மென்பொருளாளர். அவரிடம் சொல்லியுள்ளேன். முன்பு அவர் இணக்கித் தந்தவர். என் மகன் பிஞ்ஞகன் கருத்துக்கமைய www.vallakulam.com மின்னம்பல தளத்தை இயக்கிவருகிறேன்.  
அடுக்குத் தீபம், திருமுடி, தும்பை என்பன அருள்மிகு வீரகத்தி பிள்ளையார் கோயிலுக்காக நேற்று வாங்கி வந்தேன். 6,000 ரூபாய் செலவில்.
தேவாரம் தளப் www.thevaaram.org பணிகளில் கடந்த 2 மாதங்களாக ஈடுபட்டேன்.
தெலுங்கில் இதுவரை 12 ஆயிரம் பாடல்களை மொழி பெயர்ப்பிர்த்துள்ளேன். அவற்றை மாதிரிப்புத்தகங்களாக்கினேன். திருமலை திருப்பதி தேவத்தானத்தில் கொடுப்பேன். மொழிபெயர்ப்பாளருக்குக் கூலி வாங்கிக் கொடுக்கவேண்டும். திருப்பதி போகவேண்டும். திருக்கோவையார், 11ஆம் திருமுறை, திருமந்திரம் புத்தகமாக்கியபின் இந்த வாரத்தில் திருப்பதி போவேன்?
கோலாலம்பூரில் திருவாசகம் லாய் மொழிபெயர்ப்பில் ஏறத்தாழ 20 மொழிபெயர்ப்பாளர் பங்கேற்பர்.வர்களை ஊக்குவித்தேன். ஏறத்தாழ 400 பாடல்கள் மொழிபெயர்த்துத் தந்துள்ளர். எஞ்சியதை இந்த வாரம் தருவார்கள் போலும். தந்ததும் பக்கமாக்கிப் புத்தகமாக்க வேண்டும். சிவபுராணம் பகுதியை மட்டும் புத்தகமாக்கித் தருமபுரம் ஆதீனம் மற்றும் நிதி நன்கொடை தரும் புரவலர்களுக்கு அனுப்பினேன்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கவுகாத்தியில் திருமதி மாயா என்பவர் திருவாசகத்தை அசாம் மொழிக்கு மொழி பெயர்த்து தருவதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவரோடு தொடர்பு கொண்டு ஆவன செய்து வருகிறேன்.
மியன்மார் மொழியில் ஏற்கனவே வெளிவந்த திருவெம்பாவை இருபது பாடல்கள் கொண்ட நூலை மீண்டும் அச்சடிக்கவும் மியன்மார் மொழிபெயர்ப்பை தேவாரம் தளத்தில் சேர்ப்பதற்காக என் முயற்சி கடந்த இரு மாததத்தில்.
தேவாரம் தளத்தில் கிருமிகள் நுழைந்து உள்ளதாகத் தளப் பொறுப்பாளர் anusisoft தெரிவித்தார். சேலத்தில் மென்பொருளாளர் திரு. முரளி அவர்கள் வழியாக அந்தத் தளத்தின் தரவுப் பகுதியை MySQL முற்று முழுதாக மீளமைத்தேன். கூலியாகத் தேவாரம் தள நிதியிலிருந்து ரூ. 25,000 ரூபா கொடுத்தேன்.
www.muruganpaadal.com மின்னம்பல தளம் பாதிப் பணி முடிந்தது. மேலும் பணிக்கு நிதி தேவை. உரியவர்களிடம் பேசினேன்.
முன்பு நான் வெளியிட்ட உலகம் முழுவதும் தமிழர் என்ற வரைபடம் மற்றும் தகவல்கள் கொண்ட நூலை முழுமையாக இற்றைப்படுத்தி இக்காலத்து செய்திகளை உள்ளடக்கித் தயாரித்து காந்தளகத்தில் கொடுத்துள்ளேன். அப்பணிக்கு எனக்குக் கூலி தருவர்.
காந்தளகத்தில் கணக்குகளை சரிபார்த்தேன். இருப்பு, 31.3 வரை கணக்கு முடித்தல், பதிப்பு முயற்சிகளை ஊக்குவித்தல், சசிகுமார் பணிகள், சசிரேகா பணிகள், புத்தகக் காட்சிப் பணிகள் என யாவற்றையும் கண்காணிக்கப்பகல் நேரத்தில் காந்தளகம் ஒரு வார காலம் சென்று வந்தேன்.
முன்பு அச்சிட்ட முறை முழுமையாக மாறியது. முன்புள்ள அச்சுமுன் தயாரிப்பு முறை மாறியுள்ளது. முந்தைய பதிப்புகளின் அச்சுமுன் தயார்நிலைகள் களஞ்சியத்தில் குவிந்துள. அவற்றை இன்றைய பதிப்பாக்கத்துக்கு மாற்றவேண்டும் உதவியாளரைத் தேடினேன், கிடைக்கவில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைச் சைவர்களின் நிலையை எடுத்துக் கூறிய பொழுது, என்னைவாழ்த்தியோர், நகைத்தோர், பாராட்டியோர் எனப் பலர் இருந்தார்கள். 
இலங்கையின் மூத்த ஊடகர்கள், மூத்த அரசியலார், சென்னைக்குத் தொலைபேசியில் அழைத்து, ஐயா நீங்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சொன்னதை இப்போது நாங்கள் நேரடியாக காண்கின்றோமே எனப்பாராட்டுகிறார்கள். என்னைப் பார்த்து நகைத்தவர்கள் முழுமையாக என் பக்கம் வந்துள்ளர்.
இலங்கை நிலைமை தொடர்பாக, நான் வெளியிடும் அறிக்கைகள், கூறும் கருத்துகள் எழுதும் கட்டுரைகள் சென்னையில் யாழ்ப்பாணத்தில் கொழும்பில் கோலாலம்பூரில் செய்தி ஊடகங்களில் வெளியாகின்றனஉலகம் முழுவதும் உள்ள மின் ஊடகங்களில் அவை வெளியாகின்றன.
சென்னையில் தொலைக்காட்சிப் பேட்டிகளுக்காககப் போய் வந்தேன். இலங்கையில் இருந்து தொலைக்காட்சிகள் குரல்வெட்டுக் கேட்பர். பேசுவேன். 
என் கருத்துக்கு மிகவும் மதிப்புக் கொடுத்து அவற்றை வெளியிடுகிறார்கள். மாற்றுக் கருத்துச் சொல்கிறார்கள்.சிலர் மோசமாகத் திட்டுகிறார்கள். சிலர் அளவுக்கு மீறிப் பாராட்டுகிறார்கள்.
இவற்றை எல்லாம் நீங்களும் ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.
பங்களூர், பிடதி, தில்லி, மதுரை என என் பயணங்கள் இலங்கை நிலை தொடர்பான பயணங்களே.
பெங்களூர் பிடதி தில்லி மதுரை என நான் சென்ற இடங்களில் தங்கிய விடுதிகள் மிக சிறந்த விடுதிகள் மிக நல்ல வசதியுடன் தங்கினேன்.
மதுரைக்குத் தொடர் வண்டியில் சென்று மீண்டேன் பெங்களூருக்கும் தில்லிக்கும் விமானத்தில் சென்று மீண்டேன்.
பெருமளவு வீட்டில் சமைத்து சாப்பிட்டேன். தோசை, இட்லி, சப்பாத்தி, உப்புமா, ரவை இட்லி, பிட்டு, கூட்டு, பொரியல், சாம்பார், தயிர், தினை, சாமை, வரகு, அரிசி என வகைவகையாகச் சமைத்துச் சாப்பிட்டேன்.
என்றாலும் நண்பர்களுக்காக உணவகங்கள் செல்வேன். சென்னையில் மதுரையில், இராசபாளயத்தில்,தில்லியில், பெங்களூரில்  நல்ல உணவகங்களில் உணவு கொண்டேன்.
வடக்கே தில்லியில் பாராட்டினார்
தெற்கே மதுரையில் பாராட்டினர்
சென்னையில் அடையாறு பாராட்டு விழா
சென்னையில் அசோக் நகர் பாராட்டு விழா
என்னை ஊக்குவிக்கும் உற்சாகிக்கும் அறிஞர்கள் ஆர்வலர்கள் ஆற்றலர்கள் அரசியலாளர்கள் சைவ சமயப் பணியாளர்கள் நடுவே நான் மகிழ்ந்து மகிழ்ந்து நெஞ்சம் நிறைந்து நிறைந்து  நீடித்துப் பணிபுரிய வேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன்.
அண்ணா கண்ணனின் இல்ல விழா சென்றிருந்தேன். உறவுகள், பதிப்பாளர் அன்பர்கள் திருமண விழாக்களுக்குப் போயிருந்தேன்.
 திருமுறை இசை விழா சென்றிருந்தேன். நடன நிகழ்ச்சி பார்த்தேன். பேச்சு நிகழ்ச்சிகளுக்குப் போயிருந்தேன்.
என்னைத்தேடி வீட்டுக்கு அறிஞர்கள் வந்திருந்தார்கள். உணவுக்கு அழைத்துச் சென்றேன். வெளிநாட்டில் இருந்து பலர் வந்திருந்தார்கள். பாராட்டினார்கள். உதவி வேண்டுமா என்று கேட்டு உற்சாகிக்கிறார்கள்.
தொலைபேசி, கைபேசி, இணையம், மின்னஞ்சல், புலனம் என்கின்ற என்னாப்பு, வைபர், முகநூல் எனச் சமூக ஊடகங்களில் நான் பயணிக்கிறேன்.
வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க, துணிகள் துவைக்க, பெட்டிபோட, சமையல் சட்டிகள் கழுவ, என் தாயாரை மிகக் கவனமாகப் பேணிய சோதி அம்மையார் நாள்தோறும் இரு மணி நேரம் வந்து போவார்கள்.
என் மனம் இங்கில்லை. மறவன்புலவில் திருப்பணி. விட்டகுறை தொடரவேண்டும். இராம்கோ நிறுவனத்தார் தந்த 560 சீமெந்துப் பைகள் கெட முன் கட்டவேண்டும்.
நாளாந்தப் பூசனை, சிறப்பு நாள் வழிபாடு எனத் திருக்கோயில் கடமைகள், பூசகர் சம்பளம் யாவும் என் கவனத்தை ஈர்ப்பன.
சந்தனக் கன்றுகள், தாமரைத் தொட்டிகள், மல்லிகை, செவ்வரத்தை, நந்தியாவட்டை, நித்திய கல்யாணி, நெல்லி, வெற்றிலை, எலுமிச்சை, கறிவேப்பிலை, கொடிப் பூச் செடிகள், மாதுளைகள், வாழைகள், அரளிகள் கோயிலுள் என்னைத் தேடுவன.
வள்ளைக்குளம் நிரம்பியுளது. குளிக்க அழைக்கிறது. கோயில் காணிகளான நித்திலபுலம், இணி, தோப்பு வளவு வேலிகள் திருத்த, புதிதாக அமைக்க என்னைத் தேடுகின்றன. 
தையல், கயன், தோட்டக்காரர் சம்பளங்கள் என் வரவைக் காத்திருப்பன. வள்ளி என்னைக் கண்டால் பாய்ந்து தழுவக் காத்திருக்கிறது.
4700 கத்தரிக் கன்றுகள், 300 பூசனிக் கன்றுகள் பூத்தனவாம், காய்த்தனவாம். எனக்காகக் காத்திருப்பன.
மறவன்புலவில் 10 ஏக்கர், தருமபுரம் உழவனூரில் 10 ஏக்கர், பரந்தனில் 39 ஏக்கர், நெல் விதைப்பித்தேன், அறுவடை முடிந்தது. கணக்குகள் என்க்காகக் காத்திருக்கின்றன.
ஐயனார்கோயிலடி வீட்டில் குடியிருப்பவர் விட்டுச் செல்ல மறுக்கிரார். வாடகையும் தருவதில்லை. பார்க்கிறேன்.
21.3.2019 புறப்படுகிறேன். காலை கொழும்பு செல்வேன். தொடர்வண்டியில் பயணித்து மாலையே மறவன்புலவு செல்வேன். பங்குனியின் வியர்வை சொட்டும் வெயில் எனக்காகக்  காத்திருக்கிறது. வைகாசி விசாகத்தில் சோழகம் பிறக்கும் வரை காற்றற்ற சூழலில் வயல்வெளி வெயிலின் சூட்டில் உள்ளம் கொக்கரிக்கும். உடல் வியர்த்தளிக்கும்.
இதற்கிடையே இன்று 14.3.19 ஓர் அழைப்பு. கங்கை நதிக் கரை வருக. அரித்துவாரம் வருக. ஆச்சிரமத்தில் தங்குக என அழைப்பு. 18.3.2019 அரித்துவாரத்திலும் இருடிகேசத்திலும் கங்கைக் குளியலிலும் போலும். யார் அறிவார் இறைவன் கட்டளைகளை?

No comments: