Thursday, March 14, 2019

கைதடி தங்கராசா வாழ்த்துக் கவிதை கார்த்திகை 2018

மறவன்புலவு ஐயா சச்சிதானந்தம் அவர்களின் அகவை 77 
மன மகிழ் வாழ்த்து

எழுதியவர்
கைதடி நவபுரம் மாங்கனி சங்கரன் தங்கராசா

மருதமும் நெய்தலும் மருவிய மணியாம்
மறவன்புலவு திருவிளங்கும் ஊர் அதனில் 
மறவன்புலவு தன்னை தன்நாமத் தலைஎழுத்தாய் 
மனம் மகிழ்ந்து கொண்ட இறைஅருளாளர்

வள்ளக் குளத்து வாத்தியார் கணபதியார் 
வையகம் தந்த வள்ளலிவர் சச்சி
வள்ளுவர் போல் ஞானமுடன் ஆனந்த 
வான்புகழ் கொண்ட சச்சி தானந்தர்

வண்டாடும் மலர் போன்ற வதனம் 
கொண்டா டிடும் குவலயத்தின் சான்றோர் 
திண்டாடும் மானுடர்க்கு மதி யுரைஞர் 
பண்பாடும் காப்பதில் அற முதலி 

சந்தன மேனியர் சாந்த சொரூபர் 
சச்சிதா னந்தன் அழகு நாமமுடன் 
சர்வமும் அறிந்த வித்தகர் ஞாலமதில்
சகல கலா விற்பன்னர் வாழி 

பவளம் அகவை தாண்டிய குமரன் 
பழுதறியாப் பொன் உடல் அழகர் 
எழுபத் தேழுகளிலும் ஏற்றங் களுடன்
ஏறு போல் பீடு நடையோர் வாழி

பட்டிதொட்டி யெங்கும் பலரறி பாண்டித்தியர்
பார் புகழும் பாக்கியவான் பேரறிஞர் 
பகுத்து அறிந்த மூதறிஞர் யார்இவர் 
பாட்டாளிகளின் தாயுமா னவரே வாழி

பார்எல்லாம் பறந்துசென்று பணி கொண்டே 
யார்எல்லாம் துன்புறுவார் மேன்மை பெற 
அவரெல்லாம் இன்பமுற ஈந்தே மகிழும் 
சீர்எல்லாம் செய்யும் வள்ளல் வாழி 

சைவத் திருமுறைகள் பன்மொழி தந்த 
சைவத்தின் நலம் புகழ் காவலர் 
சன்மார்க்க சீலர் ஆவினக் காவலர்
சச்சிதா னந்தப் பெருந்தகை வாழி

கார்த்திகை மைந்தன் வாழ்க வாழ்க
ஊர் போற்றும் உத்தமன் வாழ்க 
பார் புகழும் பாக்கியவான் வாழ்க 
சீர் கொண்ட வாழ்வு மேன்மையுற வாழ்க 

மின்னொளி மேனியரைப் போற்றி செய்தேன் 
மிருதுவான இயல்பினரை வணங்கி மகிழ்ந்தேன் 
மிதுனத்தின் மிருகசீரிட நட்சத்திரத்தார் வாழி
மிகைவளங்கள் கொண்டே பல்லாண்டு வாழ்க

No comments: