மறவன்புலோவில் உள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளேன். உற்சாகமாக உள்ளேன்.
திருக்கோயிற் திருப்பணிகள் செய்கிறேன். திருக்கோயிற் கோபுரத் தூண் அடித்தளம் இட மண் பரிசோதனை செய்விக்க வேண்டும். திருக்குளத் திருப்பணிக்கு ஒரு வாரம் ஆயிற்று, தூர் வாரி, கட்டுகள் கட்டுவித்தேன். நாகதம்பிரான் வளவில் 35 அடி உயரத்தில் தூண் எழுப்பி வருகிறேன், என் முன்னோர் நினைவாக.
தாமரைத் தொட்டி 1இல் செங்கழுநீர் மலர்கிறது நீலோற்பலம் மலர்கிறது அல்லி தேடுகிறேன். வெள்ளை மலராக. தாமரைத் தொட்டி 2இல் செந்தாமரை நன்றாக இலைகள் விரிகின்றன. தாமரைத் தொட்டி 3இல் வெள்ளைத் தாமரை இலைகள் வரவில்லை.
விரால், யப்பான் வகை மீன்கள் மூன்று தொட்டிகளிலும் வளர்கின்றன. கொசுக் குடம்பிகளை உண்கின்றன.
மாஞ்செடிகள் 2 இலை விரித்துக் கிளை பரப்புகின்றன. நெல்லி 2 செடிகள்அடர்ந்து கிளை விடுகின்றன. திருக்கோயில் திருமரமே நெல்லி.
எலுமிச்சை 2 செடிகள் வளர்கின்றன. மாதுளை 2 செடிகள் வளர்கின்றன.
கடும் காற்று வாழை இலைகளைக் கிழித்தாலும் குருத்துகள் விரிந்துகொண்டே 15 வாழைகள் வளர்கின்றன.பக்கவாட்டில் வாழைக் குட்டிகள் முளைக்கின்றன. ஒரே ஒரு வாழை குலை ஈன்றுளது. நாகதம்பிரான் வளவுக்கு முள் வேலி அடைத்து மட்டை வரிந்து 4 அடி அகல 2அடி ஆழ 15 அடி நீளக் கிட்ங்கு அகழ்ந்து,.குளத்துச் சேற்றால் கிடங்கை நிரப்பி 20 வாழைக்கன்றுகள் நட்டுள்ளேன்.
நந்தியாவட்டைகள் 3 பூத்துக் குலுங்குகின்றன.
செம்பருத்திச் செடி 10 தரும் பூக்கள் பல்வேறு வண்ணங்களில் விரிகின்றன.
மல்லிகைச் செடிகள் 3இல் மொட்டுக்களும் மலர்களும் மணம் வீசுகின்றன.
அரலிச் செடிகள் 7 வெள்ளை, தீச் சிவப்பு,.இளம் சிவப்பு, மென்சிவப்பு, மஞ்சள் என நான்கு வண்ணங்களில்.பூத்துக் குலுங்குகின்றன.
பெரும் கொடிகள் 2 மலர்கள் மஞ்சளிலும் ஊதாவிலும்.பூக்கின்றன.
காகிதப் பூச்செடிகள்.4 வெள்ளை, கபில, பட்டுச் சிவப்பு வண்ணங்களில் பூத்து வளர்கின்றன.
கொடி மரங்கள் 3 மஞ்சள் வெள்ளை வண்ணங்களில் விரிகின்றன.
அழகுக்கான ஈச்சம் பிள்ளைகள் இரண்டு 15 நாள்களுக்கு ஒருமுறை குருத்து விரிக்கின்றன.
பாதிரிச் செடி 1 இளம் சிகப்பில் அப்பப்போ பூத்துக் கண் சிமிட்டுகிறது.
இவையெல்லாம் அருள்மிகு பிள்ளையார் திருவருளால் பூத்து நாள்தோறும் காலை 0630 தொடக்கம் நகம் தேய ஆய்ந்து கூடைக்குளிட்டு, வழிபட நான் எடுத்துச் செல்ல மலர்கின்றன.
இட்லிக்கும் தோசைக்கும் மா அரைத்து வைத்துள்ளேன், அப்பப்போ சுடுவேன். பிட்டு அவிக்கிறேன்,உப்புமா கிளறுகிறேன்.
சோறு சமைக்கிறேன் சாம்பார் சமைக்கிறேன் தயிர் நிறைய வைத்திருக்கிறேன். சிவகாமி விட்டுச்சென்ற குழம்பு கூட்டு கீரை இன்னமும் உறைகுளிர் பெட்டியிலிருந்து அப்பப்போ எடுத்து சேர்த்துக் கொள்வேன்.
என்னோடு வளர்கிற நாய் வள்ளி. அதற்காகப் பாண் வாங்கி வைத்திருக்கிறேன் அப்பப்போ சோறும் தயிரும் கொடுப்பேன்.
தையல் என்றொரு உதவியாளர், அவருக்கு மகன் கயன். இருவரும் காலை 8 மணிக்கு வருவார்கள் திருக்கோயிலில் செடிகளுக்கு நீர் இறைப்பார்கள். வீட்டு வளவில் செடிகளுக்கு நீர் இறைப்பார்கள் வீட்டைச் சுத்தம் செய்வார்கள் 10 மணிக்குப் புறப்படுவார்கள்.
நாள்தோறும் திருக்கோயில் திருப்பணிக் கட்டுமானப் பணியாளர்கள் வருவார்கள்.
இலங்கை, மலேசிய நூலகங்களுக்கு நூல்கள் தமிழக அரசும் தனியாரும் நூல்களை வழங்கல், திருவள்ளுவர் சிலை கொண்டுவரல், வழிபாட்டுப் பயணக் கப்பல், கடற்றொழில் சட்டமியற்றல், உயிரப் பலித் தடைச் சட்டமியற்றல், என ஈழத் தமிழ் மக்களுக்காகப் பங்களிக்கிறேன்.
சிவசேனைப் பணிகள் செய்கிறேன். இறக்குவானை மன்னார் வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி நல்லூர் என என்னை அழைப்போருக்கு ஆலோசனை தருவதும் அவர்கள் நிலைகளை உலகுக்கு எடுத்துக் கூறுவதும் அப்பப்போ பயணங்களை மேற்கொள்வது எனக்கு விருப்பமான பணிகள். தில்லி செல்வேன், பங்களூர் செல்வேன், கோவா செல்வேன், இராசபாளையம் செல்வேன், கோலாலம்பூர் செல்வேன், சிங்கப்பூர் செல்வேன், ஆத்திரேலியா செல்வேன், அமெரிக்கா செல்வேன், கனடாவுக்கு அழைத்துள்ளார்கள்.
ஆவின அறவோராக இலங்கையில் மாடுகளைக் கொலைசெய்தல் மாட்டிறைச்சி விற்றல் தொடர்பாக நான் பங்களிக்கும் பணிகள் வெற்றிப்படிகளையே தந்துள, உண்ணாநோன்பு, ஊர்வலம், வரவேற்பு, பாராட்டு,சுவரொட்டி, செய்தி அறிக்கை எனப் பங்களிக்கிறேன்.
திருமணம் இறப்பு எனச் சொல்லி வரும் நிகழ்வுகளுக்குச் செல்வதைத் தவிர்க்கிறேன்.
காவல்துறை புலனாய்வுத்துறை பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவு என வருவோர்க்கு ஒத்துழைப்புக் கொடுக்கிறேன்.
தருமபுரம் 10 ஏக்கர், பரந்தன் 38 ஏக்கர், மறவன்புலவில் 10 ஏக்கர் என நெல்வயல்களில் இந்த ஆண்டு நெல் விளைச்சலுக்குப் பலருக்குக் குத்தகைக்குக் கொடுத்துள்ளேன்.
யாழ்ப்பாணம் அய்யனார் கோவிலடியில் உள்ள வீட்டை இரு குடும்பங்களுக்கு வாடகைக்குக் கொடுத்துள்ளேன். கொழும்புக்குச் செல்லும்பொழுது கேசவனார் வீட்டில் பராமரிப்புப் பணிகள் செய்வேன். சென்னையில் வீட்டடையும் தாத்தா நானோ வண்டியையும் பார்த்துக்கொள்கிறேன். மறவன்புலவில் வீடு,தாத்தா குட்டி யானை வண்டி பார்த்துக் கொள்கிறேன்.
மறவன்புலவில் இருந்துகொண்டே சென்னையில் காந்தளகம் கிளிநொச்சியில் காந்தளகம் எனப் புத்தக விற்பனையை ஊக்குவிக்கிறேன். தேவாரம் இணையத்தளப் பணிகள் பன்னிரு திருமுறை மொழிபெயர்ப்புப் பணிகள் இவற்றை இங்கிருந்து பார்த்துக்கொள்கிறேன்.
மின்சாரம், தொலைப்பேசி, இணையம், மின்னஞ்சல், முகநூல், கட்புலனி, அதிரலை என யாவும் மறவன்புலவில் கிடைக்கிறது. மடிகணிணி, கைப்பேசி, அச்சான், ஊடுருவி என மின் பொறிகள் தரும் துணையே துணை.
77 வயது முடிந்து 78 வயதாகிறது. கடந்த இரு ஆண்டுகளாக நாடித் துடிப்புச் சீராக இல்லை அதனால் என் உடல்நிலையில் ஏதும் மாற்றம் தெரியவில்லை. உடலில் சர்க்கரை அளவு சரியாக இருக்கிறது. இரத்த அழுத்தம் நிதானமாக இருந்தாலும் இரவில் குறைவதும் இயல்பு என மருத்துவர் கூறுவர். வாயுணவுக் குழாயினுள் செமித்த உணவு படுத்த நிலையில் மீள் வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு..
காலை ஒரு மாத்திரை மாலை மூன்று மாத்திரைகள் ஊட்ட மாத்திரைகள் என உட்கொள்கிறேன்.
குறை ஒன்றும் இல்லை இன்பமே எந்நாளும் துன்பமில்லை.
ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.
நாள்களை எப்பொழுதும் போல எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
தூங்கும்பொழுது, ஆகா இவ்வளவு பணிகள் செய்தேனே என்ற மன நினைவுடன் இறைவனை வழிபட்டுத் தூங்குவேன்.
புலர் காலை எழுந்துவிடுவேன். நாளாந்தக் கடன் முடித்து வழிபடுகையில் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் வழிபடுவேன்.
No comments:
Post a Comment